சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
வம்பறா வரிவண்டுச் சருக்கம்

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
12.280   திருஞான சம்பந்த சுவாமிகள்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

12.280 திருஞான சம்பந்த சுவாமிகள்   ( )
வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்.
[1]
சென்னிவளர் மதியணிந்த
சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
நெருங்குகழு மலமூதூர்.
[2]
அப்பதிதான் அந்தணர்தம்
கிடைகள்அரு மறைமுறையே
செப்பும்ஒலி வளர்பூகச்
செழுஞ்சோலை புறஞ்சூழ
ஒப்பில்நகர் ஓங்குதலால்
உகக்கடைநாள் அன்றியே
எப்பொழுதுங் கடல்மேலே
மிதப்பதென இசைந்துளதால்.
[3]
அரிஅயனே முதல்அமரர்
அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம்
மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ
பொங்கோதம் கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ்
வடம்போல வயங்குமால்.
[4]
வளம்பயிலும் புறம்பணைப்பால்
வாசப்பா சடைமிடைந்த
தளம்பொலியும் புனற்செந்தா
மரைச்செவ்வித் தடமலரால்
களம்பயில்நீர்க் கடன்மலர்வ
தொருபரிதி யெனக்கருதி
இளம்பரிதி பலமலர்ந்தாற்
போல்பஉள இலஞ்சிபல.
[5]
உளங்கொள்மறை வேதியர்தம்
ஓமதூ மத்திரவும்
கிளர்ந்ததிரு நீற்றொளியில்
கெழுமியநண் பகலுமலர்ந்
தளந்தறியாப் பல்லூழி
யாற்றுதலால் அகலிடத்து
விளங்கியஅம் மூதூர்க்கு
வேறிரவும் பகலும்மிகை.
[6]
பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.
[7]
வேலையழற் கதிர்படிந்த
வியன்கங்குல் வெண்மதியம்
சோலைதொறும் நுழைந்துபுறப்
படும்பொழுது துதைந்தமலர்ப்
பாலணைந்து மதுத்தோய்ந்து
தாதளைந்து பயின்றந்தி
மாலையெழுஞ் செவ்வொளிய
மதியம்போல் வதியுமால்.
[8]
காமர்திருப் பதியதன்கண்
வேதியர்போற் கடிகமழும்
தாமரையும் புல்லிதழும்
தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் துகளணிந்து
துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையால்
செழுஞ்சாமம் பாடுமால்.
[9]
புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.
[10]
வேள்விபுரி சடங்கதனை
விளையாட்டுப் பண்ணைதொறும்
பூழியுற வகுத்தமைத்துப்
பொன்புனைகிண் கிணியொலிப்ப
ஆழிமணிச் சிறுதேரூர்ந்து
அவ்விரதப் பொடியாடும்
வாழிவளர் மறைச்சிறார்
நெருங்கியுள மணிமறுகு.
[11]
விடுசுடர்நீள் மணிமறுகின்
வெண்சுதைமா ளிகைமேகம்
தொடுகுடுமி நாசிதொறும்
தொடுத்தகொடி சூழ்கங்குல்
உடுஎனும்நாண் மலர்அலர
உறுபகலிற் பலநிறத்தால்
நெடுவிசும்பு தளிர்ப்பதென
நெருங்கியுள மருங்கெல்லாம்.
[12]
மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.
[13]
பிரமபுரம் வேணுபுரம்
புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்
பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
[14]
அப்பதியின் அந்தணர்தங்
குடிமுதல்வர் ஆசில்மறை
கைப்படுத்த சீலத்துக்
கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார்
சிவபாத விருதயர்என்று
இப்புவிவா ழத்தவஞ்செய்
இயல்பினார் உளரானார்.
[15]
மற்றவர்தந் திருமனையார்
வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும்
பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார்
எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால்
கணவனார் கருத்தமைந்தார்.
[16]
மரபிரண்டும் சைவநெறி
வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார்
அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு
பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை
வியப்பெய்த மேவுநாள்.
[17]
மேதினிமேற் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம்
அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம்
போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத
இருதயர்தாம் இடருழந்தார்.
[18]
மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.
[19]
பெருத்தெழும்அன் பாற்பெரிய
நாச்சியா ருடன்புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார்
சேவடிக்கீழ் வழிபட்டுக்
கருத்துமுடிந் திடப்பரவும்
காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பெரும்பே
றுலகுய்ய உளதாக.
[20]
ஆளுடையா ளுடன்தோணி
அமர்ந்தபிரான் அருள்போற்றி
மூளுமகிழ்ச் சியில்தங்கள்
முதன்மறைநூல் முறைச்சடங்கு
நாளுடைய ஈரைந்து
திங்களினும் நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து
பெரிதின்பங் கிளர்வுறுநாள்.
[21]
அருக்கன்முதற் கோளனைத்தும்
அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமுந் தழைத்தோங்க.
[22]
தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆ குதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.
[23]
திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.
[24]
தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.
[25]
அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.
[26]
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரி னோரும்அயல் எய்தும்இடை யின்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவியறி யாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.
[27]
சிவனருள் எனப்பெருகு சித்தமகிழ் தன்மை
இவண்இது நமக்குவர எய்தியதென் என்பார்
கவுணியர் குலத்திலொரு காதலன் உதித்தான்
அவன்வரு நிமித்தம்இது என்றதி சயித்தார்.
[28]
பூமுகை அவிழ்ந்துமணம் மேவுபொழில் எங்கும்
தேமருவு தாதொடு துதைந்ததிசை யெல்லாம்
தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி
மாமலய மாருதமும் வந்தசையு மன்றே.
[29]
மேலையிமை யோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலைமலர் போலமலர் மாமழை சொரிந்தே
ஞாலமிசை வந்துவளர் காழிநகர் மேவும்
சீலமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.
[30]
பூதகண நாதர்புவி வாழஅருள் செய்த
நாதனரு ளின்பெருமை கண்டுநலம் உய்ப்பார்
ஓதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஓவா
வேதமொழி யால்ஒளி விளங்கியெழு மெங்கும்.
[31]
பயன்தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்
தயங்குபுன லுந்தெளிவு தண்மையுடன் நண்ணும்
வயங்கொளி விசும்புமலி னங்கழியு மாறா
நயம்புரிவ புள்ளொலிகள் நல்லதிசை யெல்லாம்.
[32]
அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.
[33]
இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்
தருங்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்
பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே
அருந்திரு மகப்பெற வணைந்தஅணி செய்வார்.
[34]
காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.
[35]
மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.
[36]
சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிரைப்பார் .

[37]
செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.
[38]
ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.
[39]
ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர்
நாயகன் அருட்பெருமை கூறுநலம் எய்தத்
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்
மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
[40]
நாமகர ணத்தழகு நாள்பெற நிறுத்திச்
சேமவுத யப்பரிதி யில்திகழ் பிரானைத்
தாமரை மிசைத்தனி முதற்குழவி யென்னத்
தூமணி நிரைத்தணிசெய் தொட்டில்அமர் வித்தார்.
[41]
பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால்
அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத்
தரும் இறைவி யார்பரமர் தாள்பரவும் அன்பே
திருமுலை சுரந்தமுது செய்தருளு வித்தார்.
[42]
ஆறுலவு செய்யசடை ஐயர்அரு ளாலே
பேறுலகி னுக்கென வரும்பெரி யவர்க்கு
வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்.
[43]
தாயர்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவிசினிலும்
தூயசுடர்த் தொட்டிலினும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு
நலம்பலபா ராட்டினார்.
[44]
வருமுறைமைப் பருவத்தின்
வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலையெடுப்ப
ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார்போல்
திருமுகமண் டலமசையச்
செங்கீரை யாடினார்.
[45]
நாமறியோம் பரசமயம்
உலகிலெதிர் நாடாது
போமகல என்றங்கை
தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற்
கொத்துவதுங் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்.
[46]
விதிதவறு படும்வேற்றுச்
சமயங்க ளிடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு
நிறைந்தகடி வார்கங்கை
நதிதவழுஞ் சடைமுடியார்
ஞானம்அளித் திடவுரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில்
மருங்குதவழ்ந் தருளினார்.
[47]
சூழவரும் பெருஞ்சுற்றத்
தோகையரும் தாதியரும்
காழியர்தஞ் சீராட்டே
கவுணியர்கற் பகமேஎன்
றேழிசையும் பலகலையும்
எவ்வுலகும் தனித்தனியே
வாழவரும் அவர்தம்மை
வருகவரு கெனவழைப்ப.
[48]
திருநகையால் அழைத்தவர்தம் செழுமுகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர்மேற் செலவுகைத்தும்
உருகிமனங் கரைந்தலைய உடன்அணைந்து தழுவியும்முன்
பெருகியஇன் புறஅளித்தார் பெரும்புகலிப் பிள்ளையார்

[49]
வளர்பருவ முறையாண்டு
வருவதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி
உடனலையச் செந்நின்று
கிளர்ஒலிகிண் கிணியெடுப்பக்
கீழ்மைநெறிச் சமயங்கள்
தளர்நடையிட் டறத்தாமும்
தளர்நடையிட் டருளினார்.
[50]
தாதியர்தங் கைப்பற்றித்
தளர்நடையின் அசைவொழிந்து
சோதியணி மணிச்சதங்கை
தொடுத்தவடம் புடைசூழ்ந்த
பாதமலர் நிலம்பொருந்தப்
பருவமுறை ஆண்டொன்றின்
மீதணைய நடந்தருளி
விளையாடத் தொடங்கினார்.
[51]
சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச்
செழுமணற்சிற் றில்கள்இழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழும்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப
வந்துவளர்ந் தருளினார்.
[52]
மங்கையோ டுடனாகி
வளர்தோணி வீற்றிருந்த
திங்கள்சேர் சடையார்தம்
திருவருட்குச் செய்தவத்தின்
அங்குரம்போல் வளர்ந்தருளி
அருமறையோ டுலகுய்ய
எங்கள்பிரான் ஈராண்டின்
மேல்ஓராண் டெய்துதலும்.
[53]
நாவாண்ட பலகலையும்
நாமகளும் நலஞ்சிறப்பப்
பூவாண்ட திருமகளும்
புண்ணியமும் பொலிவெய்தச்
சேவாண்ட கொடியவர்தம்
சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகுய்ய
நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.
[54]
பண்டுதிரு வடிமறவாப்
பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர்
வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார்
தொடர்ந்தபிரி வுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போல்அழுவார் குறிப்பயலாய்.
[55]
மேதகைய இந்நாளில்
வேறொருநாள் வேதவிதி
நீதிமுறைச் சடங்குநெறி
முடிப்பதற்கு நீராடத்
தாதையார் போம்பொழுது
தம்பெருமான் அருள்கூடச்
சோதிமணி மனைமுன்றில்
தொடர்ந்தழுது பின்சென்றார்.
[56]
பின்சென்ற பிள்ளையார்
தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனையொழிந்து
முனிவார்போல் விலக்குதலும்
மின்செய்பொலங் கிண்கிணிக்கால்
கொட்டியவர் மீளாமை
உன்செய்கை இதுவாகில்
போதுஎன்றுஅங் குடன்சென்றார்.
[57]
கடையுகத்தில் தனிவெள்ளம்
பலவிரிக்குங் கருப்பம்போல்
இடையறாப் பெருந்தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடையுயர்த்தார் திருத்தோணிப்
பற்றுவிடா மேன்மையதாம்
தடமதனில் துறையணைந்தார்
தருமத்தின் தலைநின்றார்.
[58]
பிள்ளையார் தமைக்கரையில்
வைத்துத்தாம் பிரிவஞ்சித்
தெள்ளுநீர்ப் புகமாட்டார்
தேவியொடுந் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை
எதிர்வணங்கி மணிவாவி
உள்ளிழிந்து புனல்புக்கார்
உலகுய்ய மகப்பெற்றார்.
[59]
நீராடித் தருப்பித்து
நியமங்கள் பலசெய்வார்
சீராடும் திருமகனார்
காண்பதன்முன் செய்ததற்பின்
ஆராத விருப்பினால்
அகமருடம் படியநீர்
பேராது மூழ்கினார்
பெருங்காவல் பெற்றாராய்.
[60]
மறைமுனிவர் மூழ்குதலும்
மற்றவர்தம் மைக்காணா
திறைதரியார் எனும்நிலைமை
தலைக்கீடா ஈசர்கழல்
முறைபுரிந்த முன்னுணர்வு
மூளஅழத் தொடங்கினார்
நிறைபுனல்வா விக்கரையில்
நின்றருளும் பிள்ளையார்.
[61]
கண்மலர்கள் நீர்ததும்பக்
கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய்
மணியதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக
எவ்வுயிரும் குதூகலிப்பப்
புண்ணியக்கன் றனையவர்தாம்
பொருமிஅழு தருளினார்.
[62]
மெய்ம்மேற்கண் துளிபனிப்ப
வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ
சாரும்பிள் ளைமைதானோ
செம்மேனி வெண்ணீற்றார்
திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மேஅப் பாஎன்றென்று
அழைத்தருளி அழுதருள.
[63]
அந்நிலையில் திருத்தோணி
வீற்றிருந்தார் அருள்நோக்கால்
முன்நிலைமைத் திருத்தொண்டு
முன்னியவர்க் கருள்புரிவான்
பொன்மலைவல் லியுந்தாமும்
பொருவிடைமே லெழுந்தருளிச்
சென்னியிளம் பிறைதிகழச்
செழும்பொய்கை மருங்கணைந்தார்.
[64]
திருமறைநூல் வேதியர்க்கும்
தேவியர்க்கும் தாங்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோதான்
தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானங்
கொடுப்பதனுக் குடனிருந்த
அருமறையா ளுடையவளை
அளித்தருள அருள்செய்வார்.
[65]
அழுகின்ற பிள்ளையார்
தமைநோக்கி அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத்
திறையவர்தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப்
பார்த்தருளித் துணைமுலைகள்
பொழிகின்ற பாலடிசில்
பொன்வள்ளத் தூட்டென்ன.
[66]
ஆரணமும் உலகேழும்
ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு
கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்தருளி.
[67]
எண்ணரிய சிவஞானத்
தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கணனார் அருள்புரிந்தார்.
[68]
யாவருக்குந் தந்தைதாய்
எனுமிவர்இப் படியளித்தார்
ஆவதனா லாளுடைய
பிள்ளையா ராய்அகில
தேவருக்கும் முனிவருக்குந்
தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
சம்பந்த ராயினார்.
[69]
சிவனடியே சிந்திக்குந்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும்
பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்.
[70]
எப்பொருளும் ஆக்குவான்
ஈசநே எனுமுணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார்
அடியார்கள் எனுமறிவும்
இப்படியா லிதுவன்றித்
தம்மிசைவு கொண்டியலும்
துப்புரவில் லார்துணிவு
துகளாகச் சூழந்தெழுந்தார்.
[71]
சீர்மறையோர் சிவபாத
இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும்
நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற
பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில்
உண்டதுநீ எனவெகுளா.
[72]
எச்சில்மயங் கிடவுனக்கீ
திட்டாரைக் காட்டென்று
கைச்சிறியது ஒருமாறு
கொண்டோச்சக் காலெடுத்தே
அச்சிறிய பெருந்தகையார்
ஆனந்தக் கண்துளிபெய்
துச்சியின் மேல் எடுத்தருளும்
ஒருதிருக்கை விரற்சுட்டி.
[73]
விண்ணிறைந்த பெருகொளியால்
விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த அருமறைகள்
பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினால்
நின்றாரை எதிர்காட்டி
உண்ணிறைந்து பொழிந்தெழுந்த
உயர்ஞானத் திருமொழியால்.
[74]
எல்லையிலா மறைமுதல்மெய்
யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழாலிம்
மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத்
தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத்
திருச்செவியைச் சிறப்பித்து.
[75]
செம்மைபெற எடுத்ததிருத்
தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்க
ளுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான்
இவனன்றே எனவிசைத்தார்.
[76]
மண்ணுலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த
ஆக்கப்பா டருள்செய்தார்.
[77]
தொழுவார்க்கே அருளுவது
சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே
மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும்
பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும்
துதித்துய்ந்த படிவிரித்தார்.
[78]
வேதகா ரணராய
வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார்
தம்மிலே நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர்
புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தார்
எங்கள்பிரான் சம்பந்தர்.
[79]
திருப்பதிகம் நிறைவித்துத்
திருக்கடைக்காப் புச்சாத்தி
இருக்குமொழிப் பிள்ளையார்
எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாள
னார்அருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப்
பிரசமலர் மழைபொழிந்தார்.
[80]
வந்தெழும்மங் கலமான
வானதுந் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள்
கானவொலிக் கடல்முழக்கும்
இந்திரனே முதல்தேவர்
எடுத்தேத்தும் இசைமுழக்கும்
அந்தமில்பல் கணநாதர்
அரஎனுமோ சையின்அடங்க.
[81]
மறைகள் கிளர்ந்தொலி வளர
முழங்கிட வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி
சிந்திட நீள்வானத்
துறையென வந்துல கடைய
நிறைந்திட ஓவாமெய்ப்
பொறைபெரு குந்தவ முனிவர்
எனுங்கடல் புடைசூழ.
[82]
அணைவுற வந்தெழும் அறிவு
தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள்
இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர் பொருவிடை
தங்கிய புணர்பாகத்
துணையொ டணைந்தனர் சுருதி
தொடர்ந்த பெருந்தோணி.
[83]
அண்ணல் அணைந்தமை கண்டு
தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு
போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து
விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி
கோயிலின் உட்புக்கார்.
[84]
ஈறில் பெருந்தவம் முன்செய்து
தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த வெருட்சி
வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொரு
ளான குறிப்போர்வார்.
[85]
தாணு வினைத்தனி கண்டு
தொடர்ந்தவர் தம்மைப்போல்
காணுதல் பெற்றில ரேனும்
நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு
ளாதல் துணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகு
காதலர் பின்சென்றார்.
[86]
அப்பொழுது அங்கண் அணைந்தது
கண்டவர் அல்லாதார்
முப்புரி நூன்மறை யோர்கள்
உரோம முகிழ்ப்பெய்தி
இப்படி யொப்பதொர் அற்புதம்
எங்குள தென்றென்றே
துப்புறழ் வேணியர் கோயிலின்
வாயில் புறஞ்சூழ.
[87]
பொங்கொளி மால்விடை மீது
புகுந்தணி பொற்றோணி
தங்கி இருந்த பெருந்திரு
வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யானுமை
யோடும் இருந்தான்என்
றங்கெதிர் நின்று புகன்றனர்
ஞானத் தமுதுண்டார்.
[88]
இன்னிசை ஏழும் இசைந்த
செழுந்தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடு தொழும்பருள்
பெற்ற தொடக்கோடும்
பன்மறை வேதியர் காண
விருப்பொடு பால்நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின்
நின்று புறப்பட்டார்.
[89]
பேணிய அற்புத நீடருள்
பெற்ற பிரான்முன்னே
நீணிலை யில்திகழ் கோபுர
வாயிலின் நேரெய்தி
வாணில வில்திகழ் வேணியர்
தொண்டர்கள் வாழ்வெய்துந்
தோணி புரத்தவர் தாமெதிர்
கொண்டு துதிக்கின்றார்.
[90]
காழியர் தவமே கவுணியர்
தனமே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை
யமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை
வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு
வருள்பெற் றனையென்பார்.
[91]
மறைவளர் திருவே வைதிக
நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர்
புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின்
ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடன்அருள்
தரஎய் தினையென்பார்.
[92]
புண்ணிய முதலே புனைமணி
அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே கலைவளர்
மதியே கவின்மேவும்
பண்ணியல் கதியே பருவம
தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்
அருள்பெற் றனையென்பார்.
[93]
என்றினைய பலகூறி இருக்குமொழி
அந்தணரும் ஏனை யோரும்
நின்றுதுதி செய்தவர்தாள் நீள்முடிக்கண்
மேல்ஏந்தி நிரந்த போது
சென்றணைந்த தாதையார் சிவபாத
இருதயர்தாம் தெய்வ ஞானக்
கன்றினைமுன் புக்கெடுத்துப் பியலின்மேற்
கொண்டுகளி கூர்ந்து செல்ல.
[94]
மாமறையோர் குழாத்தினுடன் மல்குதிருத்
தொண்டர்குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில்
எறிந்தார்க்குந் தன்மை யாலே
பூமறுகு சிவானந்தப் பெருக்காறு
போத அதன்மீது பொங்கும்
காமர்நுரைக் குமிழியெழுந் திழிவனபோல்
[95]
நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகைமேல் நெருங்கி அங்கண்
மாடுநிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடுமலி நறுமலருஞ் சுண்ணமும்வெண்
பொரியினொடுந் தூவி நிற்பார்
கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள்
புடைபெயருங் கொள்கைத் தாக.
[96]
மங்கலதூ ரியந்துவைப்பார் மறைச்சாமம்
பாடுவார் மருங்கு வேதிப்
பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும்
பமும்நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்குதிரு மலிவீதிச் சண்பைநகர்
வலஞ்செய்து சாருங் காலை.
[97]
தந்திருமா ளிகையின்கண் எழுந்தருளிப்
புகும்பொழுது சங்க நாதம்
அந்தரதுந் துபிமுதலா அளவில்பெரு
கொலிதழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரான்
உடன்அமர்ந்த துணைவி யாகும்
பைந்தொடியாள் திருமுலையின் பாலறா
மதுரமொழிப் பவள வாயார்.
[98]
தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி
அன்றிரவு தொல்லை நாத
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி
மன்னிவீற் றிருந்தார் செய்ய
காமருசே வடிக்கமலங் கருத்திலுற
இடையறாக் காதல் கொண்டு
நாமநெடுங் கதிர்உதிப்ப நண்ணினார்
திருத்தோணி நம்பர் கோயில்.
[99]
காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக்
கலந்துவீற் றிருந்த தங்கள்
தாதையா ரையும்வெளியே தாங்கரிய
மெய்ஞ்ஞானந் தம்பால் வந்து
போதமுலை சுரந்தளித்த புண்ணியத்தா
யாரையும்முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக்
காஇறைஞ்ச விருப்பிற் சென்றார்.
[100]
பெருக்குஓலிட் டலைபிறங்கும் காவிரிநீர்
பிரசமலர் தரளம் சிந்த
வரிக்கோல வண்டாட மாதரார்
குடைந்தாடும் மணிநீர் வாவித்
திருக்கோலக் காவெய்தித் தேவர்பிரான்
கோயில்வலஞ் செய்து முன்னின்
றிருக்கோலிட் டறிவரிய திருப்பாதம்
ஏத்துவதற் கெடுத்துக் கொள்வார்.
[101]
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின்
விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
திங்கள்பரித் தருளு வானை
மைந்நிறைந்த மிடற்றானை மடையில்வா
ளைகள்பாய என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம்
கவுணியர்கோன் பாடுங் காலை.
[102]
கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும்
கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்
எழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்தபா
டலுக்கிசைந்த அளவால் ஒத்த
வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர்
கைத்தலத்து வந்த தன்றே.
[103]
காழிவரும் பெருந்தகையார் கையில்வருந்
திருத்தாளக் கருவி கண்டு
வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி
மனங்களிப்ப மதுர வாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசைவண்
தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்
கடைக்காப்புச் சாத்தி நின்றார்.
[104]
உம்பருல கதிசயிப்ப ஓங்கியநா
தத்தளவின் உண்மை நோக்கித்
தும்புருநா ரதர்முதலாம் சுருதியிசைத்
துறையுள்ளோர் துதித்து மண்மேல்
வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ
வந்தருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி மீண்டருளிச்
சண்பைநகர் சாரச் செல்வார்.
[105]
செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்
துடன்நடந்து செல்லும் போது
தங்கள்குலத் தாதையார் தரியாது
தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தந் தோளி ன்மிசை எழுந்தருளி
அணைந்தார்சூழ்ந் தமர ரேத்தும்
திங்களணி மணிமாடத் திருத்தோணி
புரத்தோணிச் சிகரக் கோயில்.
[106]
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்
கொண்டருளித் திருமுன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்
டளையாக்கி அவற்று ளொன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்
தமைப்பாட மேவுகாதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றியெடுத்
தருளினார் பூவார் கொன்றை.
[107]
எடுத்ததிருப் பதிகத்தின் இசைதிருத்தா
ளத்தினால் இசைய வொத்தி
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுற
வணங்கிப்போந் தலைநீர்ப் பொன்னி
மடுத்தவயற் பூந்தரா யவர்வாழ
மழவிளங்கோ லத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவிலா
நிறைஞானக் கொண்ட லார்தாம்.
[108]
அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமைமுன்னம் அளித்த தாயார்
முன்னுதிக்க முயன்றதவத் திருநன்னி
பள்ளிமுதன் மறையோர் எல்லாம்
மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலதூ
ரியந்துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னிமதிற் சண்பைநகர் வந்தணைந்து
கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.
[109]
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்
பெற்றபெரு வார்த்தை யாலே
எங்கணும்நீள் பதிமருங்கில் இருபிறப்பா
ளரும்அல்லா ஏனை யோரும்
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங்கொண்டு புகலி யார்தம்
சிங்கஇள வேற்றின்பால் வந்தணைந்து
கழல்பணியுஞ் சிறப்பின் மிக்கார்.
[110]
வந்ததிருத் தொண்டர்கட்கும் மல்குசெழு
மறையவர்க்கும் மற்று ளோர்க்கும்
சிந்தைமகிழ் வுறமலர்ந்து திருவமுது
முதலான சிறப்பின் செய்கை
தந்தம்அள வினில்விரும்புந் தகைமையினால்
கடனாற்றுஞ் சண்பை மூதூர்
எந்தைபிரான் சிவலோகம் எனவிளங்கி
எவ்வுலகும் ஏத்து நாளில்.
[111]
செழுந்தரளப் பொன்னிசூழ் திருநன்னி
பள்ளியுள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்தணியுஞ் சடையாரை யெங்கள்பதி
யினிற்கும்பிட் டருள அங்கே
எழுந்தருள வேண்டும்என இசைந்தருளித்
தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை யாலிறைஞ்சி அருள்பெற்றுப்
பிறபதியும் தொழமுன் செல்வார்.
[112]
தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல்
சீறடிகள் தரையின்மீது
போதுவதும் பிறரொருவர் பொறுப்பதுவும்
பொறாஅன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத்
தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர்கழல் தம்முடிமேற் கொண்டகருத்
துடன்போந்தார் ஞான முண்டார்.
[113]
தேனலருங் கொன்றையினார் திருநன்னி
பள்ளியினைச் சாரச் செல்வார்
வானணையும் மலர்ச்சோலை தோன்றுவதெப்
பதியென்ன மகிழ்ச்சி யெய்திப்
பானல்வயல் திருநன்னி பள்ளியெனத்
தாதையார் பணிப்பக் கேட்டு
ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொல்
தொடைமாலை நவில லுற்றார்.
[114]
காரைகள் கூகை முல்லை
எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித்
திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரியோர் பாகர் வைகும்
நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை
நமதெனும் பெருமை வைத்தார்.
[115]
ஆதியார் கோயில் வாயில்
அணைந்துபுக் கன்பு கூர
நீதியாற் பணிந்து போற்றி
நீடிய அருள்முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து
பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண் டங்க மர்ந்தார்
கவுணியர் தலைவ னார்தாம்.
[116]
அம்பிகை அளித்த ஞானம்
அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை
எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கு மெய்ம்மை
உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார்
தலைசைஅந் தணர்க ளெல்லாம்.
[117]
காவணம் எங்கும் இட்டுக்
கமுகொடு கதலி நாட்டிப்
பூவணத் தாமந் தூக்கிப்
பூரண கும்ப மேந்தி
ஆவண வீதி எல்லாம்
அலங்கரித் தண்ண லாரை
மாவண மலர்மென் சோலை
வளம்பதி கொண்டு புக்கார்.
[118]
திருமறை யோர்கள் சூழ்ந்து
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெருமறை ஓசை மல்கப்
பெருந்திருக் கோயில் எய்தி
அருமறைப் பொருளா னாரைப்
பணிந்தணி நற்சங் கத்தில்
தருமுறை நெறியக் கோயில்
சார்ந்தமை அருளிச் செய்தார்.
[119]
கறையணி கண்டர் கோயில்
காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து
திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும்
கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு
தொழுதற்கு நினைந்து செல்வார்.
[120]
பன்னகப் பூணி னாரைப்
பல்லவ னீச்ச ரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித்
திருந்திசைப் பதிகம் பாடிப்
பொன்னிசூழ் புகாரில்நீடு
புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த்தொண்ட ரெல்லாம்
மகிழ்ந்தெதிர் கொள்ளப் புக்கார்.
[121]
வானள வுயர்ந்த வாயில்
உள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தம்
திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் திரித்தார் தம்மைப்
போற்றுவார் மண்பு கார்என்
றூனெலாம் உருக ஏத்தி
உச்சிமேற் குவித்தார் செங்கை.
[122]
சீரினில் திகழ்ந்த பாடல்
திருக்கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர்
போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏரிசைப் பதிகம் பாடி
ஏத்திப்போந் திறைவர் வெண்கா
டாருமெய்க் காத லோடும்
பணிவதற் கணைந்தா ரன்றே.
[123]
பொன்னிதழ்க் கொன்றை வன்னி
புனலிள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
திருத்தொண்டர் எதிரே சென்றங்
கின்னதன் மையர்க ளானார்
எனவொணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை யாளும்
மன்னரைக் கொண்டு புக்கார்.
[124]
முத்தமிழ் விரகர் தாமும்
முதல்வர்கோ புரத்து முன்னர்ச்
சித்தநீ டுவகை யோடும்
சென்றுதாழ்ந் தெழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப்
பரமர்கோ யிலைச்சூழ் வந்து
நித்தனார் தம்முன் பெய்தி
நிலமுறத் தொழுது வீழ்ந்தார்.
[125]
மெய்ப்பொரு ளாயி னாரை
வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை
கண்காட்டு நுதன்முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம்
சேரும்முக் குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார்
உளமகிழந் தேத்தி வாழ்ந்தார்.
[126]
அருமையாற் புறம்பு போந்து
வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச்
செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும்
வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து
ஞானசம் பந்தர் சார்ந்தார்.
[127]
தோணிவீற் றிருந்தார் தம்மைத்
தொழுதுமுன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி
அருட்பெரு வாழ்வு கூரச்
சேணுயர் மாட மோங்குந்
திருப்பதி அதனிற் செய்ய
வேணியார் தம்மை நாளும்
போற்றிய விருப்பின் மிக்கார்.
[128]
வைகுமந் நாளிற் கீழ்பால்
மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழில் குருகா வூரும்
திருமுல்லை வாயில் உள்ளிட்
டெய்திய பதிக ளெல்லாம்
இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப்
பாடினார் தமிழ்ச்சொல் மாலை.
[129]
அவ்வகை மருங்கு சூழ்ந்த
பதிகளில் அரனார் பொற்றாள்
மெய்வகை ஞானம் உண்ட
வேதியர் விரவிப் போற்றி
உய்வகை மண்ணு ளோருக்கு
உதவிய பதிகம் பாடி
எவ்வகை யோரும் ஏத்த
இறைவரை ஏத்து நாளில்.
[130]
திருநீல கண்டத்துப்
பெரும்பாணர் தெள்ளமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு
மதங்கசூ ளாமணியார்
ஒருநீர்மையுடன் உடைய
பிள்ளையார் கழல்வணங்கத்
தருநீர்மை யாழ்கொண்டு
சண்பையிலே வந்தணைந்தார்.
[131]
பெரும்பாணர் வரவறிந்து
பிள்ளையார் எதிர்கொள்ளச்
சுரும்பார்செங் கமலமலர்த்
துணைப்பாதந் தொழுதெழுந்து
விரும்பார்வத் தொடும்ஏத்தி
மெய்ம்மொழிக ளால்துதித்து
வரும்பான்மை தருவாழ்வு
வந்தெய்த மகிழ்சிறந்தார்.
[132]
அளவிலா மகிழ்ச்சியினார்
தமைநோக்கி ஐயர்நீர்
உளமகிழ இங்கணைந்த
உறுதியுடை யோமென்றே
இளநிலா நகைமுகிழ்ப்ப
இசைத்தவரை உடன்கொண்டு
களநிலவு நஞ்சணிந்தார்
பாலணையுங் கவுணியனார்.
[133]
கோயிலினிற் புறமுன்றிற்
கொடுபுக்குக் கும்பிடுவித்
தேயுமிசை யாழ்உங்கள்
இறைவருக்கிங் கியற்றும்என
ஆயபுகழ்ப் பிள்ளையார்
அருள்பெற்ற அதற்கிறைஞ்சி
மேயதொடைத் தந்திரியாழ்
வீக்கிஇசை விரிக்கின்றார்.
[134]
தானநிலைக் கோல்வடித்துப்
படிமுறைமைத் தகுதியினால்
ஆனஇசை ஆராய்வுற்
றங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியா
ருடன்பாடி வாசிக்க
ஞானபோ னகர்மகிழ்ந்தார்
நான்மறையோர் அதிசயத்தார்.
[135]
யாழிலெழும் ஓசையுடன்
இருவர்மிடற் றிசையொன்றி
வாழிதிருத் தோணியுளார்
மருங்கணையும் மாட்சியினைத்
தாழுமிரு சிறைப்பறவை
படிந்ததனி விசும்பிடைநின்
றேழிசை நூற் கந்தருவர்
விஞ்சையரும் எடுத்திசைத்தார்.
[136]
எண்ணருஞ்சீர்த் திருத்தோணி
எம்பெருமான் கழல்பரவிப்
பண்ணமையா ழிசைகூடப்
பெரும்பாணர் பாடியபின்
கண்ணுதலார் அருளினால்
காழியர்கோன் கொடுபோந்து
நண்ணிஉறை யிடஞ்சமைத்து
நல்விருந்து சிறந்தளிப்ப.
[137]
பிள்ளையார் அருள்பெற்ற
பெரும்பாணர் பிறையணிந்த
வெள்ளநீர்ச் சடையாரை
அவர்மொழிந்த மெய்ப்பதிகம்
உள்ளபடி கேட்டலுமே
யுருகுபெரு மகிழ்ச்சியராய்த்
தெள்ளமிர்தம் அருந்தினர்போற்
சிந்தைகளிப் புறத்தொழுதார்.
[138]
காழியார் தவப்பயனாம்
கவுணியர்தம் தோன்றலார்
ஆழிவிட முண்டவர்தம்
அடிபோற்றும் பதிகஇசை
யாழின்முறை மையின்இட்டே
எவ்வுயிரு மகிழ்வித்தார்
ஏழிசையும் பணிகொண்ட
நீலகண்ட யாழ்ப்பாணர்.
[139]
சிறியமறைக் களிறளித்த
திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர்
பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக
இசையாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப்
பெறவேண்டும் எனத்தொழுதார்.
[140]
மற்றதற்குப் பிள்ளையார்
மனமகிழ்வுற் றிசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான்
அருளிதுவே யெனப்பேணிச்
சொற்றமிழ்மா லையின்இசைகள்
சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாட் போலென்றும்
அகலாநண் புடன்அமர்ந்தார்.
[141]
சிரபுரத்தில் அமர்ந்தருளுந்
திருஞான சம்பந்தர்
பரவுதிருத் தில்லைநடம்
பயில்வாரைப் பணிந்தேத்த
விரவியெழும் பெருங்காதல்
வெள்ளத்தை உள்ளத்தில்
தரஇசையுங் குறிப்பறியத்
தவமுனிவர்க்கு அருள்செய்தார்.
[142]
பிள்ளையார் அருள்செய்யப்
பெருந்தவத்தாற் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும்உடன்
செல்வதற்கு மனங்களிப்ப
வெள்ளிமால் வரையென்னத்
திருத்தோணி வீற்றிருந்த
புள்ளிமா னுரியாரைத்
தொழுதருளாற் புறப்பட்டார்.
[143]
தாவில்யாழ்ப் பாணரொடும்
தாதையார் தம்மோடும்
மேவியசீ ரடியார்கள்
புடைவரவெங் குருவேந்தர்
பூவின்மே லயன்போற்றும்
புகலியினைக் கடந்துபோய்த்
தேவர்கள்தம் பெருந்தேவர்
திருத்தில்லை வழிச்செல்வார்.
[144]
நள்ளி ருட்கண்நின் றாடுவார்
உறைபதி நடுவுகண் டனபோற்றி
முள்ளு டைப்புற வெள்ளிதழ்க்
கேதகை முகிழ்விரி மணஞ்சூழப்
புள்ளு டைத்தடம் பழனமும்
படுகரும் புடைகழிந் திடப்போந்து
கொள்ளி டத்திரு நதிக்கரை
அணைந்தனர் கவுணியர் குலதீபர்.
[145]
வண்டி ரைத்தெழு செழுமலர்ப்
பிறங்கலும் மணியும் ஆரமும்உந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும்
வருபுனல் தாழ்ந்துசே வடிதாழத்
தெண்டி ரைக்கடற்பவளமும்
பணிலமும் செழுமணித் திரள்முத்தும்
கொண்டு இரட்டிவந்து ஓதமங்கு
எதிர்கொளக் கொள்ளிடங் கடந்தேறி.
[146]
பல்கு தொண்டர்தங் குழாத்தொடும்
உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர்
போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதலனைத்
துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை
பணிந்தனர் ஞானஆ ரமுதுண்டார்.
[147]
செங்கண் ஏற்றவர் தில்லையே
நோக்கிஇத் திருந்துல கினிற்கெல்லாம்
மங்க லந்தரு மழவிளம்
போதகம் வரும்இரு மருங்கெங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை
எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித்
தலர்முகங் காட்டின புனற்பொய்கை.
[148]
கலவ மென்மயில் இனங்களித்
தழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்
துலவி முன்பணிந் தெதிர்கொளச்
கிளர்ந்தெழுந் துடன்வருஞ் சுரும்பார்ப்ப
இலகு செந்தளிர் ஒளிநிறந்
திகழ்தர இருகுழை புடையாட
மலர்மு கம்பொலிந் தசையமென்
கொம்பர்நின் றாடுவ மலர்ச்சோலை.
[149]
இழைத்த டங்கொங்கை இமயமா
மலைக்கொடி இன்னமு தெனஞானம்
குழைத்த ளித்திட அமுதுசெய்
தருளிய குருளையார் வரக்கண்டு
மழைத்த மந்தமா ருதத்தினால்
நறுமலர் வண்ணநுண் துகள்தூவித்
தழைத்த பொங்கெழில் முகஞ்செய்து
வணங்கின தடம்பணை வயற்சாலி.
[150]
ஞாலம் உய்ந்திட ஞானமுண்
டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம்
படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும்
பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந்
தாடின புறம்பணை நறும்பூகம்.
[151]
பவந்த விர்ப்பவர் தில்லைசூழ்
எல்லையில் மறையவர் பயில்வேள்விச்
சிவந்த ரும்பய னுடையஆ
குதிகளின் செழும்புகைப் பரப்பாலே
தவந்த ழைப்பவந் தருளிய
பிள்ளையார் தாமணை வுறமுன்னே
நிவந்த நீலநுண் துகில்விதா
னித்தது போன்றது நெடுவானம்.
[152]
கரும்பு செந்நெல்பைங் கமுகொடு
கலந்துயர் கழனியம் பணைநீங்கி
அரும்பு மென்மலர் தளிர்பல
மூலமென் றனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந்
தணைந்தனர் மாடமா ளிகையோங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில்
தென்திரு வாயில் நேரணித்தாக.
[153]
பொங்கு கொங்கையிற் கறந்தமெய்ஞ்
ஞானமாம் போனகம் பொற்குன்ற
மங்கை செங்கையா லூட்டவுண்
டருளிய மதலையார் வந்தார்என்
றங்கண்வாழ் பெருந்திருத் தில்லை
அந்தண ரன்பர்களுடன் ஈண்டி
எங்கும்மங்கல அணிமிக அலங்கரித்
தெதிர் கொள அணைவார்கள்.
[154]
வேத நாதமும் மங்கல
முழக்கமும் விசும்பிடை நிறைந்தோங்கச்
சீத வாசநீர் நிறைகுடந்
தீபங்கள் திசையெலாம் நிறைந்தாரச்
சோதி மாமணி வாயிலின் புறஞ்சென்று
சோபன வாக்கமுஞ் சொல்லிக்
கோதி லாதவர் ஞானசம்
பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்.
[155]
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு
மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக்
கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.
[156]
மலர்ந்த பேரொளி குளிர்தரச்
சிவமணங் கமழ்ந்துவான் துகள்மாறிச்
சிலம்ப லம்புசே வடியவர்
பயில்வுறுஞ் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்தஞ் சிந்தையில்
திகழ்திரு வீதிகண் களிசெய்யப்
புலங்கொள் மைந்தனார் எழுநிலைக்
கோபுரம் பணிந்தெழுந் தனர்போற்றி.
[157]
நீடு நீள்நிலைக் கோபுரத்
துள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை
வலங்கொண்டு வானுற வளர்திங்கள்
சூடு கின்றபே ரம்பலம்
தொழுதுபோந் தருமறை தொடர்ந்தேத்த
ஆடு கின்றவர் முன்புற
அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
[158]
நந்தி யெம்பிரான் முதற்கண
நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்த மில்லவர் அணுகிமுன்
தொழுதிரு அணுக்கனாந் திருவாயில்
சிந்தை யார்வமும் பெருகிடச்
சென்னியிற் சிறியசெங் கையேற
உய்ந்து வாழ்திரு நயனங்கள்
களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார்.
[159]
அண்ண லார்தமக் களித்தமெய்ஞ்
ஞானமே யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும்
ஆனந்த வொருபெருந் திருக்கூத்தும்
கண்ணில் முன்புறக் கண்டுகும்
பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர்
போற்றுவார் புனிதரா டியபொற்பு.
[160]
உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும்
எளிவர அருளினை எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே
ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்திற்
புணரு மின்னிசை பாடினர்
ஆடினர் பொழிந்தனர் விழிமாரி.
[161]
ஊழி முதல்வர்க்
குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ்
அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க
எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார்
கற்றாங் கெரியோம்பி.
[162]
பண்ணார் பதிகத்
திருக்கடைக்காப் புப்பரவி
உண்ணாடும் என்பும்
உயிருங் கரைந்துருக்கும்
விண்ணா யகன்கூத்து
வெட்டவெளி யேதிளைத்துக்
கண்ணா ரமுதுண்டார்
காலம் பெறஅழுதார்.
[163]
முன்மால் அயன்அறியா
மூர்த்தியார் முன்னின்று
சொன்மாலை யாற்காலம்
எல்லாந் துதித்திறைஞ்சிப்
பன்மா மறைவெள்ளம்
சூழ்ந்து பரவுகின்ற
பொன்மா ளிகையைவலங்
கொண்டு புறம்போந்தார்.
[164]
செல்வத் திருமுன்றில்
தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில்
வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி
நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு
வார்சண்பை ஆண்டகையார்.
[165]
செய்ய சடையார்
திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம்
பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம்
அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்
கும்பிட் டணைவுறுநாள்.
[166]
கைம்மான் மறியார்
கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம்
பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித்
திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்
டருந்தமிழும் பாடினார்.
[167]
பாடும் பதிகஇசை
யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த
நாளும்நடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை
அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க
ராம்பே றதிசயிப்பார்.
[168]
ஆங்கவர்தஞ் சீலத்
தளவின் மையும்நினைந்தே
ஓங்கியெழுங் காதல்
ஒழியாத உள்ளத்தார்
தேங்கமழுஞ் சோலைத்
திருவேட் களங்கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப்
புக்கணையும் போழ்தின்கண்.
[169]
அண்டத் திறைவர்
அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று
மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக்
கணநாத ராய்தோன்றக்
கண்டஅப் பரிசுபெரும்
பாணர்க்கும் காட்டினார்.
[170]
செல்வம் பிரிவறியாத்
தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை
இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன்
தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி
மருங்கணைய வந்தார்கள்.
[171]
பொங்கி யெழுங்காதல்
புலனாகப் பூசுரர்தம்
சிங்கம் அனையார்
திருமுடியின் மேற்குவித்த
பங்கயத்தின் செவ்வி
பழித்து வனப்போங்கும்
செங்கை யொடுஞ்சென்று
திருவாயி லுட்புக்கார்.
[172]
ஒன்றிய சிந்தை
உருக உயர்மேருக்
குன்றனைய பேரம்
பலமருங்கு கும்பிட்டு
மன்றுள் நிறைந்தாடும்
மாணிக்கக் கூத்தர்எதிர்
சென்றணைந்து தாழ்ந்தார்
திருக்களிற் றுப்படிக்கீழ்.
[173]
ஆடி னாய்நறு நெய்யொடு
பால்தயிர் என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி
கத்தினிற் பரவிய பாட்டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை
யோர்தமைக் கண்டஅந் நிலையெல்லாம்
கூடு மாறுகோத்து அவர்தொழு
தேத்துசிற் றம்பலம் எனக்கூறி.
[174]
இன்ன தன்மையில் இன்னிசைப்
பதிகமும் திருக்கடைக் காப்பேற்றி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில்
திளைத்தெதிர் வந்துமுன் நின்றாடும்
பின்னு வார்சடைக் கூத்தர்பே
ரருள்பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலஞ் சூழ்ந்துதாழ்ந்
தெழுந்துபோந் தணைந்தனர் புறமுன்றில்.
[175]
அப்பு றத்திடை வணங்கிஅங்
கருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழு தெழுந்துடன்
போதரப் போற்றிய புகழ்ப்பாணர்
நற்ப தந்தொழு தடியனேன்
பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட
வேண்டும்என் றுரைசெய அதுநேர்வார்.
[176]
பொங்கு தெண்திரைப் புனிதநீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப்போந்து
தங்கு தந்தையா ருடன்பரி
சனங்களும் தவமுனி வருஞ்செல்லச்
செங்கை யாழ்திரு நீலகண்
டப்பெரும் பாணனா ருடன்சேர
மங்கை யார்புகழ் மதங்கசூ
ளாமணி யார்உடன் வரவந்தார்.
[177]
இருந்த டங்களும் பழனமும்
கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீலகண்
டப்பெரும் பாணனார் வணங்கிக்கார்
நெருங்கு சோலைசூழ் இப்பதி
அடியனேன் பதியென நெடிதின்புற்
றருங்க லைச்சிறு மழஇளங்
களிறனார் அங்கணைந் தருள்செய்வார்.
[178]
ஐயர் நீரவ தரித்திட
இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்
தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலி
னுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.
[179]
அங்கு நின்றெழுந் தருளிமற்
றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாமினி துறையுநற்
பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர்
பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுது
குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.
[180]
மொய்கொள் மாமணி கொழித்துமுத்
தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண்
பதிகத்தை இசையொடும் புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவருந்
தேவருந் திசையெலாம் நெருங்கப்புக்
கையர் சேவடி பணியுமப்
பொருப்பினில் ஆதர வுடன்சென்றார்.
[181]
வான நாயகர் திருமுது
குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக்
குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங்
கோயிலை நண்ணியங் குள்புக்குத்
தேன லம்புதண் கொன்றையார்
சேவடி திளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.
[182]
தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந்
தெழும்எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி
அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத்
தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை
விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
[183]
ஆங்கு நாதரைப் பணிந்துபெண்
ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள்
அமர்கின்ற வொருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு
பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்
எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.
[184]
கருவ ரைப்பிற் புகாதவர் கைதொழும்
ஒருவ ரைத்தொழு துள்ள முவந்துபோய்ப்
பெருவ ரத்தினிற் பெற்றவர் தம்முடன்
திருவ ரத்துறை சேர்தும்என் றேகுவார்.
[185]
முந்தை நாள்கள் ஒரோவொரு கால்முது
தந்தை யார்பியல் மேலிருப் பார்தவிர்ந்
தந்த ணாளர் அவரரு கேசெலச்
சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.
[186]
ஆதி யார்தம் அரத்துறை நோக் கியே
காத லால்அணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.
[187]
மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.
[188]
பாச மற்றில ராயினும் பார்மிசை
ஆசை சங்கரற் காயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு வானவர்
ஈச னைத்தொழு தேதொழு தேகினார்.
[189]
இந்த மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி யானவர்
சிந்தை ஆரமு தாகிய செஞ்சடைத்
தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந்து ஏகினார்.
[190]
மாறன் பாடி யெனும்பதி வந்துற
ஆறு செல்வருத் தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்
ஏறு மஞ்செழுத் தோதிஅங் கெய்திட.
[191]
உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக்
கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.
[192]
அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்ற மூர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.
[193]
இந்நி லைக்கண் எழில்வளர் பூந்தராய்
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை
அன்ன மாடுந் துறைநீர் அரத்துறைச்
சென்னி யாற்றர் திருவுளஞ் செய்தனர்.
[194]
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.
[195]
நீடு வாழ்பதி யாகும்நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குற் கனவிற் குலமறை
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபின்.
[196]
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.
[197]
அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்தற் புதமுறுஞ்
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில்வந் தெய்தினர்.
[198]
ஆங்கு மற்ற அருளடி யாருடன்
ஓங்கு கோயிலுள் ளார்க்கும்உண் டாயிட
ஈங்கி தென்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.
[199]
சால மிக்க வியப்புறு தன்மையின்
பால ராதலும் பள்ளி யெழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படுஞ்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
[200]
திங்கள் நீர்மைச் செழுந்திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க வூதும் பொருவருஞ் சின்னமும்
அங்கண் நாதர் அருளினாற் கண்டனர்.
[201]
கண்ட பின்னவர் கைதலை மேற்குவித்
தெண்டி சைக்கும் விளக்கிவை யாம்எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுந்
தண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
[202]
சங்கு துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்தெழ
அங்க ணன்அரு ளால்அவை கொண்டுடன்
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.
[203]
மாசில் வாய்மைநெல் வாயில் மறையவர்
ஆசில் சீர்ச்சண்பை ஆண்டகை யார்க்கெதிர்
தேசு டைச்சிவி கைமுத லாயின
ஈசர் இன்னரு ளால்தாங்கி ஏகினார்.
[204]
இத்த லைஇவர் இன்னணம் ஏகினார்
அத்த லைச்சண்பை நாதர்க்கும் அவ்விரா
முத்த நற்சிவி கைமுத லாயின
உய்த்த ளிக்கும் படிமுன் உணர்த்துவார்.
[205]
அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ள லார்நாம் மகிழ்ந்தளிக் கும்மவை
கொள்ள லாகும்கொண் டுய்த்தல் செய் வாய்என
உள்ள வாறருள் செய்ய வுணர்ந்தபின்.
[206]
சண்பை யாளியார் தாங்கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம்
விண்பு லப்பட வீங்கிருள் நீங்கலும்.
[207]
மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றிவெண் ணீறணி
கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித்
தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்.
[208]
போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவன்.
[209]
ஆய போழ்தின் அரவெனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோ
டேய அந்தணர் தாமெதிர் தோன்றினார்.
[210]
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
[211]
என்று தங்களுக் கீச ரருள்செய்த
தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று ளார்அருள் என்று வணங்கினார்.
[212]
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை யுன்னும் பரிசுதந் தாள்பவர்
செம்மை நித்தில யானச் சிறப்பருள்
எம்மை யாளுவப் பானின் றளித்ததே.
[213]
எந்தை ஈசன் எனஎடுத்து இவ்வருள்
வந்த வாறுமற்று இவ்வண மோஎன்று
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
[214]
பொடிய ணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம்மரு ளேயிது வாமெனப்
படியி லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
[215]
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.
[216]
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள்
ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும்
ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும்
ஆர்த்தன குழுமி
வண்ட றாப்பொலி மலர்மழை
ஆர்த்தது வானம்.
[217]
வளையும் ஆர்த்தன வயிர்களும்
ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன திளைஞரும்
ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின்
ஆர்கவின் முத்தின்
விளையு மாக்கதிர் வெண்குடை
ஆர்த்தது மிசையே.
[218]
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர்
நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றொளி யுடன்பொலி
புகலிகா வலனார்
அல்கு வெள்வளை அலைத்தெழு
மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி
உதித்தென வந்தார்.
[219]
நீடுதொண்டர்கள் மறையவர்
ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டெழு மகிழ்ச்சியின்
மலர்க்கைமேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர்
அளவில் ஆனந்தம்
கூடு கின்றகண் பொழிபுனல்
வெள்ளத்தில் குளித்தார்.
[220]
செய்ய பொன்புனை வெண்தர
ளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந்
தான்என ஊத.
[221]
சுற்று மாமறைச் சுருதியின்
பெருகொலி நடுவே
தெற்றி னார்புர மெரித்தவர்
தருதிருச் சின்னம்
முற்று மானவன் ஞானமே
முலைசுரந் தூட்டப்
பெற்ற பாலறா வாயன்வந்
தான்எனப் பிடிக்க.
[222]
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும்
போதுவார் முன்னே
இணைந்த நித்திலத் திலங்கொளி
நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதற்கலை
அகிலமும் ஓதா
துணர்ந்த முத்தமிழ் விரகன்வந்
தானென ஊத.
[223]
தெருளும் மெய்க்கலை விளங்கவும்
பாருளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுதுசொன்
மறையளிப் பவர்தாம்
பொருளும் ஞானமும் போகமும்
போற்றியென் பாருக்
கருளும் அங்கணர் திருவரத்
துறையைவந் தணைந்தார்.
[224]
வந்து கோபுர மணிநெடு
வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார்.
[225]
மன்னுகோயிலை வலங்கொண்டு
திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந்
தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்
னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை
போற்றி என் றெழுந்தார்.
[226]
சூடி னார்கர கமலங்கள்
சொரிந்திழி கண்ணீர்
ஆடி னார்திரு மேனியில்
அரத்துறை விரும்பி
நீடி னார்திரு அருட்பெருங்
கருணையே நிகழப்
பாடி னார்திருப் பதிகம்ஏ
ழிசையொடும் பயில.
[227]
இசைவி ளங்கிட இயல்பினில்
பாடிநின் றேத்தி
மிசைவி ளங்குநீர் வேணியார்
அருளினால் மீண்டு
திசைவி ளங்கிடத் திருவருள்
பெற்றவர் சிலநாள்
அசைவில் சீர்த்தொண்டர் தம்முடன்
அப்பதி அமர்ந்தார்.
[228]
தேவர் தம்பிரான் திருவரத்
துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார்
நெல்வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன்
தொழுதுபின் சண்பைக்
காவ லார்அருள் பெற்றுடன்
கலந்துமீண் டணைந்தார்.
[229]
விளங்கு வேணுபு ரத்திருத்
தோணிவீற் றிருந்த
களங்கொள் கண்டர்தங்
காதலி யாருடன்கூட
உளங்கொ ளப்புகுந் துணர்வினில்
வெளிப்பட உருகி
வளங்கொள் பூம்புனற் புகலிமேற்
செலமனம் வைத்தார்.
[230]
அண்ண லார்திரு வரத்துறை
அடிகளை வணங்கி
நண்ணு பேரரு ளால்விடை
கொண்டுபோய் நடங்கொண்
டுண்ணி றைந்தபூங் கழலினை
உச்சிமேற் கொண்டே
வெண்ணி லாமலர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.
[231]
சிவிகை முத்தினிற் பெருகொளி
திசையெலாம் விளக்கக்
கவிகை வெண்மதிக் குளிரொளி
கதிர்செய்வான் கலப்பக்
குவிகை மேற்கொண்டு மறையவர்
குணலையிட் டாடப்
புவிகைம் மாறின்றிப் போற்றவந்
தருளினார் போந்தார்.
[232]
மறைமு ழங்கின தழங்கின
வண்தமிழ் வயிரின்
குறைந ரன்றன முரன்றன
வளைக்குலங் காளம்
முறையி யம்பின இயம்பல
ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின
போற்றிசை அரவம்.
[233]
உடைய பிள்ளையார் வருமெல்லை
யுள்ளஅப் பதியோர்
புடையி ரண்டினுங் கொடியொடு
பூந்துகில் விதானம்
நடைசெய் காவணம் தோரணம்
பூகநற் கதலி
மிடையு மாலைகள் நிறைகுடம்
விளக்கொடு நிரைத்தார்.
[234]
அனைய செய்கையால் எதிர்கொளும்
பதிகளா னவற்றின்
வினைத ரும்பவந் தீர்ப்பவர்
கோயில்கள் மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்தடி
பணிந்துபோந் தணைந்தார்
பனைநெ டுங்கைமா வுரித்தவர்
மகிழ்பெரும் பழுவூர்.
[235]
அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
[236]
மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.
[237]
பாவின திசைவழி பாடி அங்ககன்
றியாவருந் தொழுதுட னேத்த எய்தினார்
மூவுல குய்யநஞ் சுண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.
[238]
அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.
[239]
விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அசைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்
திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.
[240]
புறம்பயத் திறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்
நிறம்பயி லிசையுடன் பாடி நீடிய
அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.
[241]
அத்திருப் பதிபணிந் தகன்று போய்அனல்
கைத்தலத் தவர்பதி பிறவுங் கைதொழு
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்.
[242]
திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழ வொலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.
[243]
ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.
[244]
மாமறை யாளர்வண் புகலிப் பிள்ளையார்
தாம்எழுந் தருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில்வந் தருளக் கண்டன
ராமகிழ் வுடன்பணிந் தாடி ஆர்த்தனர்.
[245]
களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலருஞ் சிந்தினர்
துளித்தனர் கண்மழை சுருதி யாயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர்முன் பெய்தினார்.
[246]
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடைவ லங்கொடு
செங்கைகள் சென்னிமேற் குவித்துச் சென்றுபுக்
கங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
[247]
வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.
[248]
இன்னிசை வண்டமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதியுளோர் நயக்க வைகிய
பின்னர்வெண் பிறையணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.
[249]
ஆங்கணி சொல்மலர் மாலை சாத்திஅப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்த்
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந் துற்றனர்.
[250]
மற்றநற் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந் தலர்ந்த செந்தமிழ்ச்
சொற்றொடை பாடிஅங் ககன்று சூழ்மதில்
பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.
[251]
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
[252]
நம்பரை நலந்திகழ் நாரை யூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்
றெம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
[253]
அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.
[254]
பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.
[255]
மண்ணுலகு செய்ததவப் பயனா யுள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கியகா ளம்சின்னம் எங்கும்ஊதக்
கண்வளர்மென் கரும்புமிடை கதிர்செஞ் சாலி
கதலிகமு குடன்ஓங்குங் கழனி நாட்டுத்
தெண்ணிலவு சூடியதம் பெருமான் வைகுந்
திருப்பிரம புரஞ்சாரச் செல்லும் போது.
[256]
பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத் தருமறையோர் பெருகு காதல்
உள்ளமகிழ் சிறந்தோங்கத் தோணி மேவும்
உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர
வெள்ளமறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடைமகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்
செழுங்கொடிகள் நிறைத்தெதிர்கொள் சிறப்பிற் செல்வார்.
[257]
ஆரணங்கள் மதுரவொலி எழுந்து பொங்க
அரசிலையுந் தருப்பையும்பெய் தணிந்த வாசப்
பூரணகும் பங்கள்நிறை கரகம்ஏந்திப்
புதுமலரும் நறுந்துகளும் பொரியுந் தூவி
வாரணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுதுண்ட வள்ள லாரைச்
சீரணங்கு மணிமுத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடைநிழற் கீழ்ச்சென்று கண்டார்.
[258]
கண்டபொழு தேகைகள் தலைமேற் கொண்டு
கண்களிப்ப மனங்களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இருவிசும்பின் வெளிதூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ்நா யகரும்இழிந் தெதிரே சென்று
வணங்கியவ ருடன்கூடி மகிழ்ந்து புக்கார்.
[259]
திங்களணி மணிமாடம் மிடைந்தவீதி
சென்றணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்
மங்கலவாழ்த் திசையிரண்டு மருங்கும் மல்க
வானவர்நா யகர்கோயில் மருங்கு சார்ந்து
துங்கநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்துதிருத் தோணிமிசை மேவி னார்கள்
தங்கள்திரு முன்புதாழ்ந் தெழுந்து நின்று
தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.
[260]
பரவுதிருப் பதிகஇசை பாடி நீடும்
பரங்கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி
வீழ்ந்தெழுந்து புறம்போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்டயாழ்ப் பாணர் பின்னே
வரஅவரை வளம்பெருகு மனையிற் போக
அருள்செய்து தந்திருமா ளிகையின் வந்தார்.
[261]
மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.
[262]
செல்வநெடு மாளிகையில் அமர்ந்து நாளுந்
திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவ மெய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
[263]
ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகியல்பின் உபநயன முறைமை யாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறைமுனிவ ரெதிரே நின்று
வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.
[264]
சுருதியா யிரம்ஓதி அங்க மான
தொல்கலைகள் எடுத்தியம்புந் தோன்ற லாரைப்
பரிதிஆ யிரகோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மை
கருதிஆ தரவோடும் வியப்புற் றேத்துங்
கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வருதியா னப்பொருள்என் றிறைஞ்சித் தாமுன்
வல்லமறை கேட்டையந் தீர்ந்து வாழ்ந்தார்.
[265]
மந்திரங்க ளானவெலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்து மேயென்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
[266]
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள்தலைமேற் கொண்டு தாழ்ந்து
சித்தமகிழ் வொடுசிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்தஇசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டுபோந்து
பத்தருடன் இனிதமரும் பண்பு கூடப்
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலும் நாளில்.
[267]
பந்தணை மெல்விர லாளும்
பரமரும் பாய்விடை மீது
வந்துபொன் வள்ளத் தளித்த
வரம்பில்ஞா னத்தமு துண்ட
செந்தமிழ் ஞானசம் பந்தர்
திறங்கேட்டி றைஞ்சுதற் காக
அந்தணர் பூந்தராய் தன்னில்
அணைந்தனர் நாவுக் கரையர்.
[268]
வாக்கின் பெருவிறல் மன்னர்
வந்தணைந் தாரெனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ்
புகலிப் பெருந்தகை யாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்
றன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப் போடும்
எதிர்கொள எய்தும் பொழுதில்.
[269]
சிந்தை இடையறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும்
கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும்
வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத்
தரசும் எதிர்வந் தணைய.
[270]
கண்ட கவுணியக் கன்றும்
கருத்திற் பரவுமெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்
கரசும் எதிர்வந் திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக
மதுர மொழியருள் செய்தார்.
[271]
பேரிசை நாவுக் கரசைப்
பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்
பொற்கோயி லுள்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
அவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்ட ரைக்கொண்டு
திருமா ளிகையினில் சேர்ந்தார்.
[272]
அணையுந் திருந்தொண்டர் தம்மோ
டாண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திருவமு தாக்கி
இயல்பால் அமுதுசெய் வித்துப்
புணரும் பெருகன்பு நண்பும்
பொங்கிய காதலில் கும்பிட்
[273]
அந்நாள் சிலநாள்கள் செல்ல
அருள்திரு நாவுக் கரசர்
மின்னார் சடையண்ணல் எங்கும்
மேவிடங் கும்பிட வேண்டிப்
பொன்மார்பின் முந்நூல் புனைந்த
புகலிப் பிரானிசை வோடும்
பின்னாக வெய்த விறைஞ்சிப்
பிரியாத நண்பொடும் போந்தார்.
[274]
வாக்கின் தனிமன்னர் ஏக
மாறாத் திருவுளத் தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
புகலியில் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத்
திருத்தோணி வீற்றிருந் தாரைத்
தூக்கின் தமிழ்மாலை பாடித்
தொழுதங் குறைகின்ற நாளில்.
[275]
செந்தமிழ் மாலை விகற்பச்
செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று
வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம்
தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை
ஈரடி ஈரடி வைப்பு.
[276]
நாலடி மேல்வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப்
பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப்
பாடினார் ஞானசம் பந்தர்.
[277]
இன்னிசை பாடின எல்லாம்
யாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசைவடி வான
மதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய ஏழிசை பற்றிப்
பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தா ளம்பெற்றார்
புகலியிற் போற்றி யிருந்தார்.
[278]
அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.
[279]
பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத்தாதை யாரும்
அருமையால் உம்மைப் பயந்த
அதனாற் பிரிந்துறை வாற்றேன்
இருமைக்கும் இன்ப மளிக்கும்
யாகமும் யான்செய வேண்டும்
ஒருமையால் இன்னஞ் சிலநாள்
உடன்எய் துவேன்என் றுரைத்தார்.
[280]
ஆண்டகை யாரும் இசைந்தங்
கம்பொற் றிருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப்
பணிவுற்று நீடருள் பெற்றே
ஈண்டு புகழ்த்தாதை யார்பின்
எய்திட யாழ்ப்பாண ரோடும்
காண்தகு காழி தொழுது
காதலி னால்புறம் போந்தார்.
[281]
அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்துடன் போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா
விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகைமேல் கொண்டு
மொய்யொளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது
நிறைமதி போல நிழற்ற.
[282]
சின்னந் தனிக்காளந் தாரை
சிரபுரத் தாண்டகை வந்தார்
என்னுந் தகைமை விளங்க
ஏற்ற திருப்பெயர் சாற்ற
முன்எம் மருங்கும் நிரந்த
முரசுடைப் பல்லிய மார்ப்ப
மன்னுந் திருத்தொண்ட ரானார்
வந்தெதிர் கொண்டு வணங்க.
[283]
சங்க நாதங்கள் ஒலிப்பத்
தழங்குபொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும்
மல்க மறைமுன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார்
திருப்பதி எங்கும்முன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார்.
[284]
திருமறைச் சண்பைய ராளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப் பாலணைந் தேத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி
உயர்தமிழ் மாலை கொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால்
குடதிசை நோக்கி வருவார்.
[285]
போற்றிய காதல் பெருகப்
புள்ளிருக் குந்திரு வேளூர்
நாற்றடந் தோளுடை மூன்று
நயனப்பிரான் கோயில் நண்ணி
ஏற்றஅன் பெய்தவ ணங்கி
இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி
அஞ்சொற் பதிக மணிந்தார்.
[286]
நீடு திருநின்றி யூரின்
நிமலர்தம் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடுசீர் நீடூர் வணங்கி
நம்பர்திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந்தமிழ் பாடிஅ மர்ந்தார்.
[287]
அங்குநின் றேகிஅப் பாங்கில்
அரனார் மகிழ்கோயி லான
எங்கணுஞ் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறைபழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ்மாலை சாத்தித்
திருக்குறுக் கைப்பதி சார்ந்தார்.
[288]
திருக்குறுக் கைப்பதி மன்னித்
திருவீரட் டானத் தமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
போந்தன்னி யூர்சென்று போற்றிப்
பருக்கை வரையுரித் தார்தம்
பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைத்தார்
வேதம் தமிழால் விரித்தார்.
[289]
அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும்
சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர்
எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி
ஓங்குவேள் விக்குடி யுற்றார்.
[290]
செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனற்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடி காவிற்சென் றடைந்தார்.
[291]
திருக்கோடி காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை
எருக்கோ டிதழியும் பாம்பும்
இசைந்தணிந் தானைவெள் ளேனப்
பருக்கோடு அணிந்த பிரானைப்
பணிந்துசொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும்
கஞ்சனூர் கைதொழச் சென்றார்.
[292]
கஞ்சனூ ராண்டதங் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சிமுன் போந்து
மஞ்சணை மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி
அங்ககன் றன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
திருமங் கலக்குடி சேர்ந்தார்.
[293]
வெங்கண் விடைமேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடுந்
தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்க ணமர்வார்தம் முன்னே
அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந்
திருந்துதே வன்குடி சேர்ந்தார்.
[294]
திருந்துதே வன்குடி மன்னும்
சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகி
மற்றும் இவர்வேட மாம்என்
றருந்தமிழ் மாலை புனைந்தார்
அளவில்ஞா னத்தமு துண்டார்.
[295]
மொய்திகழ் சோலையம் மூதூர்
முன்னகன் றந்நெறி செல்வார்
செய்தரு சாலிக ரும்பு
தெங்குபைம் பூகத்தி டைபோய்
மைதிகழ் கண்டர்தங் கோயில்
மருங்குள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம் பந்தர்
இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
[296]
இன்னம்பர் மன்னும்பி ரானை
இறைஞ்சி இடைமடக் கான
பன்னுந்த மிழ்த்தொடை மாலைப்
பாடல்பு னைந்து பரவிப்
பொன்னங்க ழலிணை போற்றிப்
புறம்போந்த ணைந்து புகுந்தார்
மன்னுந்த டங்கரைப் பொன்னி
வடகுரங் காடு துறையில்.
[297]
வடகுரங் காடு துறையில்
வாலியார் தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில்
அறியச் சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து
புறத்துள்ள தானங்கள் போற்றி
படைகொண்ட மூவிலை வேலார்
பழனத் திருப்பதி சார்ந்தார்.
[298]
பழனத்து மேவிய முக்கண்
பரமேட்டி யார்பயில் கோயில்
உடைபுக் கிறைஞ்சிநின் றேத்தி
உருகிய சிந்தைய ராகி
விழைசொற் பதிகம் விளம்பி
விருப்புடன் மேவி யகல்வார்
அழனக்க பங்கய வாவி
ஐயாறு சென்றடை கின்றார்.
[299]
மாடநிரை மணிவீதித் திருவையாற்
றினில்வாழு மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ
னகர்வந்து நண்ணி னாரென்
றாடலொடு பாடலறா அணிமூதூர்
அடையஅலங் காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா னத்து நீங்கி.
[300]
வந்தணைந்து திருத்தொண்டர் மருங்குவர
மானேந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை
முன்னிறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்துபுலன் நிலைகலங்கும்இடத்தஞ்சல்
என்பார்தம் ஐயா றென்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை
போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
[301]
மணிவீதி இடங்கடந்து மாலயனுக்
கரியபிரான் மன்னுங் கோயில்
அணிநீடு கோபுரத்தை அணைந்திறைஞ்சி
உள்ளெய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினொடும் தம்பெருமான்
கோயில்வலங் கொண்டு தாழ்ந்து
பணிசூடும் அவர்முன்பு பணிந்துவீழ்ந்
தெழுந்தன்பாற் பரவு கின்றார்.
[302]
கோடல்கோங் கங்குளிர்கூ விளம்என்னுந்
திருப்பதிகக் குலவு மாலை
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு
வுள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம்
ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண்பொழிநீர் பரந்து பாய.
[303]
பலமுறையும் பணிந்தெழுந்து புறம்போந்து
பரவுதிருத் தொண்ட ரோடு
நிலவுதிருப் பதியதன் கண்நிகழுநாள்
நிகரிலா நெடுநீர்க் கங்கை
அலையுமதி முடியார்தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து போற்றிக்
குலவுதமிழ்த் தொடைபுனைந்து மீண்டணைந்து
பெருகார்வங் கூரு நாளில்.
[304]
குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டங்
கருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேலணைவார் பரமர்திரு
நெய்த்தானப் பதியில் நண்ணி
அடையுமனம் உறவணங்கி அருந்தமிழ்மா
லைகள்பாடி அங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகமிடை
மழபாடி போற்றச் சென்றார்.
[305]
செங்கைமான் மறியார்தந் திருமழபா
டிப்புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழலென்னுந் திருப்பதிகம்
எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி
தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார் எனத்தொழுது
போற்றிசைத்தே கோயில் புக்கார்.
[306]
மழபாடி வயிரமணித் தூணமர்ந்து
மகிழ்கோயில் வலங்கொண் டெய்திச்
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
சென்றுதாழ்ந் தெழுந்து நின்று
தொழுதாடிப் பாடிநறுஞ் சொல்மாலைத்
தொடையணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
கும்பிட்டங் குறைந்தார் சின்னாள்.
[307]
அதன்மருங்கு கடந்தருளால் திருக்கானூர்
பணிந்தேத்தி ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பிலா லந்துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதநிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார்
பலபதியும் பணிந்து பாடி
மதகரட வரையுரித்தார் வடகரைமாந்
துறையணைந்தார் மணிநூல் மார்பர்.
[308]
சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும்
திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந் தணிநெடுமா ளிகைவலஞ்செய்
துள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்
தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின்
சொல்மாலை நிகழப் பாடி.
[309]
அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம்
பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும்
வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா
மம்பணிய நண்ணும் போதில்.
[310]
அந்நகரிற் கொல்லிமழ வன்பயந்த
அரும்பெறல்ஆர் அமுத மென்சொல்
கன்னிஇள மடப்பிணையாங் காமருகோ
மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னுபெரும் பிணியாகும் முயலகன்வந்
தணைவுறமெய் வருத்த மெய்தித்
தன்னுடைய பெருஞ்சுற்றம் புலம்பெய்தத்
தானும்மனந் தளர்வு கொள்வான்.
[311]
மற்றுவே றொருபரிசால் தவிராமை
மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்
ஆதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச்
சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தங் கோயிலினுள் கொடுபுகுந்து
திருமுன்பே இட்டு வைத்தான்.
[312]
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக வெய்தச்
செவ்வியமெய்ஞ்ஞானமுணர் திருஞான
சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகுந் துயர்நீங்கப் பணிமாறுந்
தனிக்காளத் தெழுந்த வோசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா மெல்லியலை
விட்டெதிரே விரைந்து செல்வான்.
[313]
மாநகரம் அலங்கரிமின் மகரதோ
ரணம்நாட்டும் மணிநீர் வாசத்
தூநறும்பூ ரணகும்பம் சோதிமணி
விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனையணி பிறவுமெலாம் எழில்பெருக
இயற்றும்என ஏவித் தானும்
வானவர்நா யகர்மகனார் வருமுன்பு
தொழுதணைந்தான் மழவர் கோமான்.
[314]
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேனென்
றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின்
சிவிகை யின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந் துடன்சென்று குலப்பதியின்
மணிவீதி கொண்டு புக்கான்.
[315]
மங்கலதூ ரியம்முழங்கு மணிவீதி
கடந்துமதிச் சடையார் கோயிற்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப்
புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந் தருளுமுறை இழிந்தருளி
அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு
முன்வணங்கச் சாருங் காலை.
[316]
கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன்
சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
என்இதுவென் றருள்செய்ய மழவன்தான்
எதிர்இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருவிலரும்
பிணிபொருந்தப் புனிதர் கோயில்
முன்னணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்த
[317]
அணிகிளர் தாரவன் சொன்னமாற்றம்
அருளொடுங் கேட்டுஅந் நிலையின்நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய
பரம்பொரு ளாயினா ரைப்பணிந்து
மணிவளர் கண்டரோ மங்கையைவாட
மயல்செய்வ தோஇவர் மாண்பதென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத்
தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.
[318]
பன்னு தமிழ்மறை யாம்பதிகம்
பாடித் திருக்கடைக் காப்புச்சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றிநிற்க
மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக்
கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடியென ஒல்கிவந்து
பொருவலித் தாதை புடையணைந்தாள்.
[319]
வன்பிணி நீங்கு மகளைக்கண்ட
மழவன் பெருகு மகிழ்ச்சிபொங்கத்
தன்தனிப் பாவையும் தானுங்கூடச்
சண்பையர் காவலர் தாளில்வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார்
உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.
[320]
நீடு திருவாச் சிராமம்மன்னும்
நேரிழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கமர்ந்து
கும்பிடும் கொள்கைமேற் கொண்டுபோந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும்
அணைந்து பணிந்தடி போற்றியேகிச்
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
[321]
பண்பயில் வண்டினம் பாடுஞ்சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து
மண்பர வுந்தமிழ் மாலைபாடி
வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ்
சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர்வந்து
தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.
[322]
செங்கட் குறவரைத் தேவர்போற்றுந்
திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவுங்
கங்கைச் சடையார் கழல்பணிந்து
கலந்த இசைப்பதி கம்புனைந்து
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும்
புறத்துள்ள தானங்க ளெல்லாம்போற்றிக்
கொங்கிற் குடபுலஞ் சென்றணைந்தார்
கோதின் மெய்ஞ் ஞானக் கொழுந்தனையார்.
[323]
அண்டர்பிரான் ஆலயங்கள்
அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித்
தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார்
மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக்
கொடிமாடச் செங்குன்றூர்.
[324]
அந்நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனமகிழ்ந்து
பன்னெடுந்தோ ரணமுதலாப்
பயிலணிகள் பலஅமைத்து
முன்னுறவந் தெதிர்கொண்டு
பணிந்தேத்தி மொய்கரங்கள்
சென்னியுறக் கொண்டணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில்.
[325]
தம்பெருமான் கோயிலினுள்
எழுந்தருளித் தமிழ்விரகர்
நம்பரவர் திருமுன்பு
தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க
இம்பரும்உம் பருமேத்த
இன்னிசைவண் டமிழ்பாடிக்
கும்பிடும்ஆ தரவுடன்அக்
கோநகரில் இனிதமர்ந்தார்.
[326]
அப்பாலைக் குடபுலத்தில்
ஆறணிந்தார்அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித்
திருநணா வினைஇறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப்
பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர்
வந்தணைந்து வைகினார்.
[327]
ஆங்குடைய பிள்ளையார்
அமர்ந்துறையும் நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள்
சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம்
வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும்
பனிப்பருவ மெய்தியதால்.
[328]
அளிக்குலங்கள் சுளித்தகல
அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல்
லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி
தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம்
போர்த்தனைய குன்றுகளும்.
[329]
மொய்பனிகூர் குளிர்வாடை
முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளும்
குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
வெய்யவனும் கரநிமிர்க்க
மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவும்
அடங்குவது மாகுமால்.
[330]
நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால்
புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார்
துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும்
மணிமார்பும் அடங்குவன.
[331]
அரிசனமும் குங்குமமும்
அரைத்தமைப்பார் அயலெல்லாம்
பரியஅகிற் குறைபிளந்து
புகைப்பார்கள் பாங்கெல்லாம்
எரியுமிழ்பேழ் வாய்த்தோணி
இரும்பீர்ப்பார் இடையெல்லாம்
விரிமலர்மென் புறவணிந்த
மீப்புலத்து வைப்பெல்லாம்.
[332]
அந்நாளில் கொடிமாடச்
செங்குன்றூர் அமர்ந்திருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையா
ருடன்மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில்
பயின்றதனால் பனித்தகுளிர்
முன்னான பிணிவந்து
மூள்வதுபோல் முடுகுதலும்.
[333]
அந்நிலைமை ஆளுடைய
பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலும்
முதல்வனார் அருள்தொழுதே
இந்நிலத்தின் இயல்பெனினும்
நமக்கெய்தப் பெறாஎன்று
சென்னிமதி யணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார்.
[334]
அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா திருநீல
கண்டம் எனச்செப்பினார்.
[335]
ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக்
காப்புத் தொடுத்தணிய
மேயஅப் பொற்பதி வாழ்பவர்க்
கேயன்றி மேவும்அந்நாள்
தீய பனிப்பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்ததன்றே.
[336]
அப்பதி யின்கண் அமர்ந்து
சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி
மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக்
கொடுமுடி சென்றணைந்தார்.
[337]
பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக்
கொடுமுடி யார்தம்பாதம்
மருவி வணங்கி வளத்தமிழ்
மாலை மகிழ்ந்துசாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக்
கூடல் விடையவர்தம்
பொருவில்தா னம்பலபோற்றிக்
குணதிசைப் போதுகின்றார்.
[338]
செல்வக் கருவூர்த் திருவா
னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை
பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத்
தானம் பலபணிவார்.
[339]
பன்னெடுங் குன்றும் படர்நெடுங்
கானும் பலபதியும்
அந்நிலைத் தானங்க ளாயின
எல்லாம் அமர்ந்திறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன்னியல் வேணிப் புனிதர்
பராய்த்துறை யுட்புகுந்தார்.
[340]
நீடும் பராய்த்துறை நெற்றித்
தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக்
கோதில் தமிழ்ச்சொல்மாலை
பாடுங் கவுணியர் கண்பனி
மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித்
தொழுது நின்றார்.
[341]
தொழுது புறம்பணைந் தங்குநின்
றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச்
செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற்
குடிமலை சேரவந்தார்.
[342]
கற்குடி மாமலை மேலெழுந்த
கனகக் கொழுந்தினைக் கால்வளையப்
பொற்றிரள் மேருச் சிலைவளைத்த
போர்விடை யாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞானசம் பந்தர் புலங்கள்ஐ ந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பணைந்தார்.
[343]
செம்மணி வாரி அருவிதூங்கும்
சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும்
கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.
[344]
விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
பரவிநின் றேத்தினர் பான்மையினால்.
[345]
நாரணன் நான்முகன் காணாவுண்மை
வெண்ணாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை
செல்வத் திருவாரூர் மேயபண்பும்
ஆரணத் துட்பொரு ளாயினாரை
ஆனைக்கா வின்கட் புகழ்ந்துபாடி
ஏரணியும் பொழில் சூழ்ந்தசண்பை
ஏந்தலார் எல்லையில் இன்பமுற்றார்.
[346]
கைதொழு தேத்திப் புறத்தணைந்து
காமர் பதியதன் கட்சிலநாள்
வைகி வணங்கி மகிழ்ந்தணைவார்
மன்னுந் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே
இன்தமிழ் மாலைகொண் டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு
மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.
[347]
ஏறுயர்த் தார்திருப் பாற்றுறையும்
எறும்பியூர் மாமலை யேமுதலா
வேறுபதி கள்பல வும்போற்றி
விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ
ஈறில்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
எண்திசை யோரும் தொழுதிறைஞ்ச
நீறணிசெம் பவளப் பொருப்பில்
நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.
[348]
நெடுங்களத் தாதியை அன்பால்நின்பால்
நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்என்னும்
இன்னிசை மாலைகொண் டேத்தியேகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள்
அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கை வரையுரித் தார்மகிழ்ந்த
காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.
[349]
சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச்
செஞ்சடை நம்பர்தங் கோயில்எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து
மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக்
கண்ணுத லாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள்வைப்பார்
வாருமன் னும்முலை பாடிவாழ்ந்தார்.
[350]
அங்கப் பதிநின் றெழுந்தருளி
அணிதிரு வாலம் பொழில்வணங்கிப்
பொங்கு புனற்பொன்னிப் பூந்துருத்திப்
பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள எப்பதி யும்தொழுது
செங்கயல் பாய்வயல் ஓடைசூழ்ந்த
திருக்கண்டி யூர்தொழச் சென்றணைந்தார்.
[351]
கண்டியூர் வீரட்டர் கோயிவெய்திக்
கலந்தடி யாருடன் காதல்பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்திறைஞ்சிக்
குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம்
அடியார் பெருமையிற் கேட்டருளி.
[352]
வினவி எடுத்த திருப்பதிகம்
மேவு திருக்கடைக் காப்புத்தன்னில்
அனைய நினைவரி யோன்செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்ததன்மை
புனைவுறு பாடலில் போற்றிசெய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனைபுனற் பொன்னித் திரைவலங்கொள்
சோற்றுத் துறைதொழச் சென்றடைவார்.
[353]
அப்பர்சோற் றுத்துறை சென்றடை வோம்என்
றொப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.
[354]
தொல்லை நீள்திருச் சோற்றுத் துறையுறை
செல்வர் கோயில் வலங்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்கநஞ் சுண்ட பிரானடி
எல்லை யில்அன்பு கூர இறைஞ்சினார்.
[355]
இறைஞ்சி ஏத்தி எழுந்துநின் றின்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்
குறைந்து வந்தடி யாருட னெய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.
[356]
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.
[357]
எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.
[358]
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்.
[359]
பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.
[360]
மொய்தருஞ் சோலைசூழ் முளரிமுள் ளடவிபோய்
மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்தசங் கரர்திருச் சக்கரப் பள்ளிமுன்
பெய்தவந் தருளினார் இயலிசைத் தலைவனார்.
[361]
சக்கரப் பள்ளியார் தந்தனிக் கோயிலுள்
புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.
[362]
தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் னிடையகன்
றலைபுனற் பணைகளின் அருகுபோய் அருமறைப்
புலனுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
[363]
மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.
[364]
காவின்மேல் முகிலெழுங் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
[365]
மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.
[366]
நித்திலச் சிவிகைமேல் நின்றிழிந் தருளியே
மொய்த்தஅந் தணர்குழாம் முன்செலப் பின்செலும்
பத்தரும் பரிசனங் களுமுடன் பரவவே
அத்தர்தங் கோபுரந் தொழுதணைந் தருளினார்.
[367]
வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருகுசீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமே லேறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.
[368]
பரவுசொற் பதிகமுன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்
தரவுடைச் சடையர்பே ரருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதியமர்ந் தருளியே மேவினார்.
[369]
அன்ன தன்மையில் அப்பதி
யினில் அமர்ந் தருளி
மின்னு செஞ்சடை விமலர்தாள்
விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை
யவர்தொழ நயந்தார்.
[370]
நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற
அகன்றுபோந் தங்கண்
மாடு முள்ளன வணங்கியே
பரவிவந் தணைந்தார்
தேடும் மால்அயற் கரியவர்
திருக்கரு காவூர்.
[371]
வந்து பந்தர்மா தவிமணங்
கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர்
அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந்தமிழ்ப் பதிகம்.
[372]
பதிக இன்னிசை பாடிப்போய்ப்
பிறபதி பலவும்
நதிய ணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
[373]
மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள்
தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப்
பாற்சென்று பணிவார்.
[374]
பழுதில் சீர்த்திருப் பரிதிநன் [375]
பொங்கு காதலிற் போற்றிஅங்
கருளுடன் போந்து
பங்க யத்தடம் பணைப்பதி
பலவுமுன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்தொலி
எடுக்கவந் தணைந்தார்
அங்க ணர்க்கிட மாகிய
பழம்பதி ஆவூர்.
[376]
பணியும் அப்பதிப் பசுபதீச்
சரத்தினி திருந்த
மணியை உள்புக்கு வழிபடும்
விருப்பினால் வணங்கித்
தணிவில் காதலில் தண்டமிழ்
மாலைகள் சாத்தி
அணிவி ளங்கிய திருநலூர்
மீண்டும்வந் தணைந்தார்.
[377]
மறை விளங்கும்அப் பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறைய ணிந்தவர் அருள்பெறப்
பிரசமென் மலர்வண்
டறைந றும்பொழில் திருவலஞ்
சுழியில்வந் தணைந்தார்.
[378]
மதிபு னைந்தவர் வலஞ்சுழி
மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ்
விரகர்த முன்வந்
தெதிர்கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர்செல மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை
சூழ்ந்தெனக் கலந்தார்.
[379]
கலந்த அன்பர்கள் தொழுதெழக்
கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கம லக்கரம்
குவித்துடன் அணைவார்
வலஞ்சு ழிப்பெரு மான்மகிழ்
கோயில்வந் தெய்திப்
பொலங்கொள் நீள்சுடர்க் கோபுரம்
இறைஞ்சியுட் புகுந்தார்.
[380]
மருவலார்புரம் முனிந்தவர்
திருமுன்றில் வலங்கொண்
டுருகும் அன்புடன்உச்சிமேல்
அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி யுடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந்
தெழுந்தனர் பெரியோர்.
[381]
ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.
[382]
புலங்கொள் இன்தமிழ் போற்றினர்
புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப்
பதியினி லிருந்து
நலங்கொள் காதலின் நாதர்தாள்
நாள்தொறும் பரவி
வலஞ்சு ழிப்பெருமான் தொண்டர்தம்
முடன் மகிழ்ந்தார்.
[383]
மகிழ்ந்த தன்தலை வாழும்அந்
நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர்
ஓரையுட் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்ஏழ்
கடல்நீர்மை குன்ற
வெகுண்டு வெங்கதிர்பரப்பலின்
முதிர்ந்தது வேனில்.
[384]
தண்பு னற்குறிர் கால்நறுஞ்
சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாசமென்
மலர்பொதி பனிநீர்
நண்பு டைத்துணை நகைமணி
முத்தணி நாளும்
உண்ப மாதுரி யச்சுவை
உலகுளோர் விரும்ப.
[385]
அறல்மலியுங் கான்யாற்றின்
நீர்நசையால் அணையுமான்
பெறலரிய புனலென்று
பேய்த்தேரின் பின்தொடரும்
உறையுணவு கொள்ளும்புள்
தேம்பஅயல் இரைதேரும்
பறவைசிறை விரித்தொடுங்கப்
பனிப்புறத்து வதியுமால்.
[386]
நீணிலைமா ளிகைமேலும்
நிலாமுன்றின் மருங்கினிலும்
வாணிழனற் சோலையிலும்
மலர்வாவிக் கரைமாடும்
பூணிலவு முத்தணிந்த
பூங்குழலார் முலைத்தடத்தும்
காணும்மகிழ்ச் சியின்மலர்ந்து
மாந்தர்கலந் துறைவரால்.
[387]
மயிலொடுங்க வண்டாட
மலர்க்கமல முகைவிரியக்
குயிலொடுங்காச் சோலையின்மெல்
தளிர்கோதிக் கூவியெழத்
துயிலொடுங்கா உயிரனைத்தும்
துயில்பயிலச் சுடர்வானில்
வெயிலொடுங்கா வெம்மைதரும்
வேனில்விரி தருநாளில்.
[388]
சண்பைவரும் பிள்ளையார்
சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத் தொழுதேத்திப்
பழையாறை எய்துதற்கு
நண்புடைய அடியார்கள்
உடன்போத நடந்தருளி
விண்பொருநீள் மதிளாறை
மேற்றளிசென் றெய்தினார்.
[389]
திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி
உருகியஅன் பொடுபோற்றி
மருவாரும் குழல்மலையாள்
வழிபாடு செய்யஅருள்
தருவார்தந் திருச்சத்தி
முற்றத்தின் புறஞ்சார்ந்தார்.
[390]
திருச்சத்தி முற்றத்தில்
சென்றெய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள்
ஆர்வமுறப் பணிந்தேத்திக்
கருச்சுற்றில் அடையாமல்
கைதருவார் கழல்பாடி
விருப்புற்றுத் திருப்பட்டீச்
சரம்பணிய மேவுங்கால்.
[391]
வெம்மைதரு வேனிலிடை
வெயில்வெப்பந் தணிப்பதற்கு
மும்மைநிலைத் தமிழ்விரகர்
முடிமீதே சிவபூதம்
தம்மைஅறி யாதபடி
தண்தரளப் பந்தரெடுத்
தெம்மைவிடுத் தருள்புரிந்தார்
பட்டீசர் என்றியம்ப.
[392]
அவ்வுரையும் மணிமுத்தின்
பந்தரும்ஆ காயமெழச்
செவ்விய மெய்ஞ் ஞானமுணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு
வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன்
மேதினியின் மிசைத்தாழ்ந்தார்.
[393]
அதுபொழுதே அணிமுத்தின்
பந்தரினை அருள்சிறக்கக்
கதிரொளிய மணிக்காம்பு
பரிசனங்கள் கைக்கொண்டார்
மதுரமொழி மறைத்தலைவர்
மருங்கிமையோர் பொழிவாசப்
புதுமலரால் அப்பந்தர்
பூம்பந்த ரும்போலும்.
[394]
தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச்
சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க
எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல்
மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு
வடிநீழல் எனஅமர்ந்தார்.
[395]
பாரின்மிசை அன்பருடன்
வருகின்றார் பன்னகத்தின்
ஆரம்அணிந் தவர்தந்த
அருட்கருணைத் திறம்போற்றி
ஈரமனங் களிதழைப்ப
எதிர்கொள்ள முகமலர்ந்து
சேரவரும் தொண்டருடன்
திருப்பட்டீச் சரம்அணைந்தார்.
[396]
சென்றணைந்து திருவாயில்
புறத்திறைஞ்சி உள்புக்கு
வென்றிவிடை யவர்கோயில்
வலங்கொண்டு வெண்கோட்டுப்
பன்றிகிளைத் தறியாத
பாததா மரைகண்டு
முன்தொழுது விழுந்தெழுந்து
மொழிமாலை போற்றிசைத்தார்.
[397]
அருள்வெள்ளத் திறம்பரவி
அளப்பரிய ஆனந்தப்
பெருவெள்ளத் திடைமூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே
செம்பொன்மலை வல்லியார்
தருவள்ளத் தமுதுண்ட
சம்பந்தர் புறத்தணைந்தார்.
[398]
அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பருஞ்சீர்த் திருவாறை
வடதளியில் சென்றிறைஞ்சி
ஒப்பரிய தமிழ்பாடி
உடனமரும் தொண்டருடன்
எப்பொருளு மாய்நின்றார்
இரும்பூளை எய்தினார்.
[399]
தேவர்பிரா னமர்ந்ததிரு
இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள்
நாட்டியுடன் களிசிறப்பப்
பூவணமா லைகள்நாற்றிப்
பூரணபொற் குடநிரைத்தங்கு
யாவர்களும் போற்றிசைப்பத்
திருத்தொண்டர் எதிர்கெண்டார்.
[400]
வண்டமிழின் மொழிவிரகர்
மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங்
கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை
அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம்
பரம்பொருளைப் பாடுவார்.
[401]
நிகரிலா மேருவரை
அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக்
கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள்
தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின்
பொருள்விரியப் பாடினார்.
[402]
பாடும் அரதைப்பெரும்
பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை
திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென்
திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந்
நெடுநகரில் இனிதமர்ந்தார்.
[403]
அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.
[404]
போற்றிசைத்துப் புனிதரருள்
பெற்றுப்போந்து எவ்வுயிரும்
தோற்றுவித்த அயன்போற்றுந்
தோணிபுரத் தந்தணனார்
ஏற்றுமிசை ஏற்றுகந்த
இறைவர்தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவுதிருக்
குடமூக்கு நண்ணினார்.
[405]
தேமருவு மலர்ச்சோலைத்
திருக்குடமூக் கினிற்செல்வ
மாமறையோர் பூந்தராய்
வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலிபெருகத்
தூரியமங் கலமுழங்கக்
கோமுறைமை எதிர்கொண்டு
தம்பதியில் கொடுபுக்கார்.
[406]
திருஞான சம்பந்தர்
திருக்குடமூக் கினைச்சேர
வருவார்தம் பெருமானை
வண்டமிழின் திருப்பதிகம்
உருகாநின் றுளமகிழக்
குடமூக்கை உகந்திருந்த
பெருமான்எம் இறையென்று
பெருகிசையால் பரவினார்.
[407]
வந்தணைந்து திருக்கீழ்க்கோட்
டத்திருந்த வான்பொருளைச்
சிந்தைமகிழ் வுறவணங்கித்
திருத்தொண்ட ருடன்செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து
போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில்சூழ்ந்த
காரோணஞ் சென்றடைந்தார்.
[408]
பூமருவும் கங்கைமுதல்
புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுதற்கு
வந்துவழி படுங்கோயில்
தூமருவு மலர்க்கையால்
தொழுதுவலங் கொண்டணைந்து
காமர்கெட நுதல்விழித்தார்
கழல்பணிந்து கண்களித்தார்.
[409]
கண்ணாரும் அருமணியைக்
காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த
நான்மறையின் பொருளானைப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பணிந்தேத்திப் பிறபதியும்
எண்ணார்ந்த சீரடியா
ருடன்பணிவுற் றெழுந்தருளி.
[410]
திருநாகேச் சரத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைக்
கருநாகத் துரிபுனைந்த
கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின்
திருப்பதிகம் அருள்செய்து
பெருஞான சம்பந்தர்
பெருகார்வத் தின்புற்றார்.
[411]
மாநாகம் அருச்சித்த
மலர்க்கமலத் தாள்வணங்கி
நாணாளும் பரவுவார்
பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர்
பரமர்திரு விடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித்
தடங்கரைபோய்ப் புகுகின்றார்.
[412]
ஓங்குதிருப் பதிகம்ஓ
டேகலன்என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி
தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனையா ளுடையபிரான்
இடைமரு தீதோஎன்று
பாங்குடைய இன்னிசையால்
பாடிஎழுந் தருளினார்.
[413]
அடியவர்கள் எதிர்கொள்ள
எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார்
முதற்கோயில் முன்னிறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு
முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு
நிறைகண்ணீர் நிரந்திழிய.
[414]
பரவுறுசெந் தமிழ்ப்பதிகம்
பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம்
பலபாடி வெண்மதியோ
டரவுசடைக் கணிந்தவர்தம்
தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன்
பணிந்தேத்தி உறையுநாள்.
[415]
மருங்குளநற் பதிகள்பல
பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து
குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லால்பணிந்து
பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம்
அருள்செய்து பரவினார்.
[416]
அம்ம லர்த்தடம் பதிபணிந்
தகன்றுபோந் தருகு
மைம்ம லர்க்களத் திறைவர்தங்
கோயில்கள் வணங்கி
நம்ம லத்துயர் தீர்க்கவந்
தருளிய ஞானச்
செம்ம லார்திரு ஆவடு
துறையினைச் சேர்ந்தார்.
[417]
மூவ ருக்கறி வரும்பொரு
ளாகிய மூலத்
தேவர் தந்திரு வாவடு
துறைத்திருத் தொண்டர்
பூவ லம்புதண் பொருபுனல்
தடம்பணைப் புகலிக்
காவ லர்க்கெதிர் கொள்ளும்ஆ
தரவுடன் கலந்தார்.
[418]
வந்த ணைந்தவர் தொழாமுனம்
மலர்புகழ்ச் சண்பை
அந்த ணர்க்கெலாம் அருமறைப்
பொருளென வந்தார்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்தெதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர்தங்
கோயில்முன் சென்றார்.
[419]
நீடு கோபுரம் இறைஞ்சியுள்
புகுந்துநீள் நிலையான்
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு
துறையுள்ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்தெழுந்
தருந்தமிழ் நவின்றார்.
[420]
அன்பு நீடிய அருவிகண்
பொழியும்ஆர் வத்தால்
முன்பு போற்றியே புறம்பணை
முத்தமிழ் விரகர்
துன்பு போமனத் திருத்தொண்டர்
தம்முடன் தொழுதே
இன்பம் மேவிஅப் பதியினில்
இனிதமர்ந் திருந்தார்.
[421]
மேவி அங்குறை நாளினில்
வேள்வி செய்வதனுக்
காவ தாகிய காலம்வந்
தணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத்
தாதையார் தாமும்
போவ தற்கரும் பொருள்பெற
எதிர்நின்று புகன்றார்.
[422]
தந்தை யார்மொழி கேட்டலும்
புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை
நினைந்தருள் முன்னி
அந்த மில்பொரு ளாவன
ஆவடு துறையுள்
எந்தை யார்அடித் தலங்கள்
அன்றோஎன எழுந்தார்.
[423]
சென்று தேவர்தம் பிரான்மகிழ்
கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி
வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி
அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய
செந்தமிழ் எடுத்தார்.
[424]
எடுத்த வண்டமிழ்ப் பதிகநா
லடியின்மே லிருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன்
னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார்
அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்
தஞ்சலி அளித்தார்.
[425]
நச்சி இன்தமிழ் பாடிய
ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய
இறைவர்இன் னருளால்
அச்சி றப்பருள் பூதமுன்
விரைந்தகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன்ஆ
யிரக்கிழி யொன்று.
[426]
வைத்த பூதம்அங் கணைந்துமுன்
நின்றுநல் வாக்கால்
உய்த்த இக்கிழி பொன்னுல
வாக்கிழி உமக்கு
நித்த னாரருள் செய்ததென்
றுரைக்கநேர் தொழுதே
அத்த னார்திரு வருள்நினைந்
தவனிமேற் பணிந்தார்.
[427]
பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன்
பனிமலர்ப் பீடத்
தணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டரு மறைகள்
துணிந்த வான்பொருள் தரும்பொருள்
தூயவாய் மையினால்
தணிந்த சிந்தைஅத் தந்தையார்க்
களித்துரை செய்வார்.
[428]
ஆதிமாமறை விதியினால்
ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே
புரியுநல் வேள்வி
தீது நீங்கநீர் செய்யவும்
திருக்கழு மலத்து
வேத வேதியர் அனைவரும்
செய்யவும் மிகுமால்.
[429]
என்று கூறிஅங் கவர்தமை
விடுத்தபின் அவரும்
நன்றும் இன்புறு மனத்தொடும்
புகலிமேல் நண்ண
வென்றி ஞானசம் பந்தரும்
விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில்
மகிழ்ந்தினி திருந்தார்.
[430]
அண்ண லார்திரு வாவடு
துறையமர்ந் தாரை
உண்ணி லாவிய காதலி
னால்பணிந் துறைந்து
மண்ணெ லாம்உய வந்தவர்
போந்துவார் சடைமேல்
தெண்ணி லாஅணி வார்திருக்
கோழம்பஞ் சேர்ந்தார்.
[431]
கொன்றை வார்சடை முடியரைக்
கோழம்பத் திறைஞ்சி
என்றும் நீடிய இன்னிசைப்
பதிகம் முன் இயம்பி
மன்று ளார்மகிழ் வைகல்மா
டக்கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர்
சிரபுரச் செல்வர்.
[432]
வைகல் நீடுமா டக்கோயில்
மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டுதாழ்ந்
தெழுந்துகண் ணருவி
செய்ய இன்னிசைச் செந்தமிழ்
மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்த ராய்த்திர
நல்லத்தில் நண்ணி.
[433]
நிலவு மாளிகைத் திருநல்லம்
நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சிஇன்
தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தந் திருப்பதி
பணிந்துசெல் பவர்தாம்
அலைபு னல்திரு வழுந்தூர்மா
டக்கோயில் அடைந்தார்.
[434]
மன்னு மாமடம் மகிழ்ந்தவான்
பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிகஇன்
னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில்
மீண்டும்போந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத்
துருத்தியில் தொழுதார்.
[435]
திரைத்த டம்புனல் பொன்னிசூழ்
திருத்துருத் தியினில்
வரைத்த லைப்பசும் பொன்எனும்
வண்டமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந்
துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத
லார்கழல் பணிந்தார்.
[436]
மூவ லூருறை முதல்வரைப்
பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே
விருப்பொடும் போந்து
பூவ லம்புதண் புனற்பணைப்
புகலியர் தலைவர்
வாவி சூழ்திரு மயிலாடு
துறையினில் வந்தார்.
[437]
மல்கு தண்டலை மயிலாடு
துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரோ
டெதிர்கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக்
கோயில்புக் கிறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம்முன்
பெருகிட எழுந்தார்.
[438]
உள்ளம் இன்புற உணர்வுறும்
பரிவுகொண் டுருகி
வெள்ளந் தாங்கிய சடையரை
விளங்குசொற் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும்
புறத்தணைந் தருளி
வள்ள லார்மற்ற வளம்பதி
மருவுதல் மகிழ்ந்தார்.
[439]
அத்தி ருப்பதி யகன்றுபோய்
அணிகிளர் சூலக்
கைத்த லப்படை வீரர்செம்
பொன்பள்ளி கருதி
மெய்த்த காதலில் விளநகர்
விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்திசைப்
பதிகம்முன் பகர்ந்தார்.
[440]
பாடும் அப்பதி பணிந்துபோய்ப்
பறியலூர் மேவும்
தோடு லாமலர் இதழியும்
தும்பையும் அடம்பும்
காடு கொண்டசெஞ் சடைமுடிக்
கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர்
நிறைமறை வேந்தர்.
[441]
பரமர் தந்திருப் பறியலூர்
வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல
அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர்
எதிர்கொளச் செல்வார்.
[442]
அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்
குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும்
நெறிகாட்டும் பவள வாயர்.
[443]
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
பிறப்பிடமாம் அதனாற் சார
வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண்
டடிவணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார்
பிள்ளையா ரருளிச் செய்த
அருமையுடைப் பதிகந்தாம் யாழினால்
பயிற்றும்பே றருளிச் செய்தார்.
[444]
கிளைஞரும்மற் றதுகேட்டுக் கெழுவுதிருப்
பதிகத்திற் கிளர்ந்த ஓசை
அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்றும்
அதனாலே அகில மெல்லாம்
வளரஇசை நிகழ்வதென விளம்புதலும்
வளம்புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப்
பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
[445]
அலகில்திருப் பதிகஇசை அளவுபடா
வகைஇவர்கள் அன்றி யேயும்
உலகிலுளோ ருந்தெரிந்தங் குண்மையினை
அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்
பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு
ளப்பெற்றால் பண்பு நீடி
இலகுமிசை யாழின்கண் அடங்காமை
யான்காட்டப் பெறுவ னென்றார்.
[446]
வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன்
தொழுதுதிருப் பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்துங் கலத்தினிலும்
நிலத்தநூல் புகன்ற வேத
நாதவிசை முயற்சிகளால் அடங்காத
வகைகாட்ட நாட்டு கின்றார்
மாதர்மடப் பிடிபாடி வணங்கினார்
வானவரும் வணங்கி ஏத்த.
[447]
வண்புகலி வேதியனார் மாதர்மடப்
பிடியெடுத்து வனப்பிற் பாடிப்
பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த
அணைந்துபெரும் பாண னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினில் முன்புபோல்
கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்
கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில்
இடஅடங்கிற் றில்லை யன்றே.
[448]
அப்பொழுது திருநீல கண்டஇசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப்பயமும் பரிவுமுறப் பிள்ளையார்
கழலிணைவீழ்ந் தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்
திசையாழி லேற்பன் என்னச்
செப்பியதிக் கருவியைநான் தொடுதலின்அன்
றோஎன்று தெளிந்து செய்வார்.
[449]
வீக்குநரம் புடையாழி னால்விளைந்த
திதுவென்றங் கதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்தருளி ஐயரே
உற்றஇசை யளவி னால்நீர்
ஆக்கியஇக் கருவியினைத் தாருமென
வாங்கிக்கொண் டவனி செய்த
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
வாயர்பணித் தருளு கின்றார்.
[450]
ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
வையின்இயற்றல் வழக்கே என்றார்.
[451]
சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
செயலளவில் எய்து மோநீர்
இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப்
பதிகஇசை இதனில் எய்த
வந்தவா றேபாடி வாசிப்பீர்
எனக்கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு
பெரும்பாணர் தலைமேற் கொண்டார்.
[452]
அணைவுறும்அக் கிளைஞருடன் பெரும்பாணர்
ஆளுடைய பிள்ளை யார்தம்
துணைமலர்ச்சே வடிபணிந்து துதித்தருளத்
தோணிபுரத் தோன்ற லாரும்
இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன்
அப்பதியில் இனிது மேவிப்
பணைநெடுங்கை மதயானை உரித்தவர்தம்
பதிபிறவும் பணியச் செல்வார்.
[453]
பங்கயப்பா சடைத்தடஞ்சூழ் பழனநாட்
டகன்பதிகள் பலவும் நண்ணி
மங்கையொரு பாகத்தார் மகிழ்கோயில்
எனைப்பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசையாழ்ப் பெரும்பாண ருடன்மறையோர்
தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கைமான் மழுவேந்துஞ் சினவிடையார்
அமர்ந்தருளுந் திருநள் ளாறு.
[454]
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர்திருத்
தொண்டர்குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றி லெதிர்கொண்டு குலவியுடன்
சூழ்ந்தணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர்தந் திருவளர்கோ
புரமிறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலங்கொண்டு திருமுன்பு
தாழ்ந்தெழுந்தார் உணர்வின் மிக்கார்.
[455]
உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி
நனைஈரம் பெற்றாற் போல
மருவுதிரு மேனியெலாம் முகிழ்த்தெழுந்த
மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த
வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண்
முலையாள்என் றெடுத்துப் போற்றி.
[456]
யாணரம்பில் ஆரஇயல் இசைகூடப்
பாடியே எண்ணில் கற்பச்
சேண்அளவு படவோங்குந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் செங்கண்நாகப்
பூண்அகலத் தவர்பாதம் போற்றிசைத்துப்
புறத்தணைந்து புவன மேத்தும்
பாணனார் யாழிலிடப் பாலறா
வாயர்அருள் பணித்த போது.
[457]
பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப்
பின்புபெரும் பாண னார்தாம்
தெள்ளமுத இன்னிசையின் தேம்பொழிதந்
திரியாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ளஇடும் பொழுதின்கண் குவலயத்தோர்
களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திருவுள்ளம் மகிழ்ந்துதிருத்
தொண்டருடன் மருவுங் காலை.
[458]
மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளந் தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகமலருந்
திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னிலெழுந் தருளினார் சைவசிகா
மணியார்மெய்த் தவத்தோர் சூழ.
[459]
நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்
நீலநக்கர் தாமுஞ் சைவ
மறையவனார் எழுந்தருளும் படிகேட்டு
வாழ்ந்துவழி விளக்கி யெங்குந்
துறைமலிதோ ரணங்கதலி கமுகுநிறை
குடந்தூப தீப மாக்கி
முறைமையில்வந் தெதிர்கொள்ள உடன்அணைந்து
முதல்வனார் கோயில் சார்ந்தார்.
[460]
அயவந்தி அமர்ந்தருளும் அங்கணர்தங்
கோயில்மருங் கணைந்து வானோர்
உயவந்தித் தெழுமுன்றில் புடைவலங்கொண்
டுட்புக்கா றொழுகுஞ் செக்கர்
மயவந்தி மதிச்சடையார் முன்தாழ்ந்து
மாதவம் இவ்வைய மெல்லாம்
செயவந்த அந்தணனார் செங்கைமேல்
குவித்தெழுந்து திருமுன் னின்றார்.
[461]
போற்றிசைக்கும் பாடலினால் பொங்கியெழும்
ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர்தம் எதிர்நின்று
துதித்துப்போந் தெல்லை இல்லா
நீற்றுநெறி மறையவனார் நீலநக்கர்
மனையிலெழுந் தருளி அன்பால்
ஆற்றும்விருந் தவர்அமைப்ப அன்பருடன்
இன்புற்றங் கமுது செய்தார்.
[462]
நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
விருந்தமுது செய்து நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாண ருந்தங்க
அங்கிரவு பள்ளி மேவி
ஆடுமவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடியநண் புடைநீல நக்கடிக
ளுடன்நாதர் கழலில்தாழ்ந்து.
[463]
கோதிலா ஆரமுதைக் கோமளக்கொம்
புடன்கூடக் கும்பிட் டேத்தி
ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்
திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்
தம்பெருஞ்சீர் நிகழ வைத்துப்
பூதிசா தனர்பரவும் புனிதஇயல்
இசைப்பதிகம் போற்றி செய்தார்.
[464]
பரவியகா தலிற்பணிந்து பாலறா
வாயர்புறத் தணைந்து பண்பு
விரவியநண் புடையடிகள் விருப்புறுகா
தலில்தங்கி மேவும் நாளில்
அரவணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
ஆதரவா லணைந்து செல்வார்
உரவுமனக் கருத்தொன்றாம் உள்ளம்உடை
யவர்க்குவிடை உவந்து நல்கி.
[465]
மற்றவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவும் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.
[466]
கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை
யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
அங்ககன்றார் மூதூர் நின்றும்.
[467]
அருகணையுந் திருப்பதிகள் ஆனவெலாம்
அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகியஞா னம்பெற்ற பிள்ளையார்
எழுந்தருளும் பெருமை கேட்டுத்
திருமருவு செங்காட்டங் குடிநின்றும்
சிறுத்தொண்டர் ஓடிச் சென்றங்
குருகுமனங் களிசிறப்ப எதிர்கொண்டு
தம்பதியுட் கொண்டு புக்கார்.
[468]
சிறுத்தொண்ட ருடன் கூடச் செங்காட்டங்
குடியிலெழுந் தருளிச் சீர்த்தி
நிறுத்தெண்திக் கிலும்நிலவுந் தொண்டரவர்
நண்பமர்ந்து நீல கண்டம்
பொறுத்தண்டர் உயக்கொண்டார் கணபதீச்
சரத்தின்கட் போக மெல்லாம்
வெறுத்துண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்ட
ருடன்அணைந்தார் வேதகீதர்.
[469]
அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி
அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு
பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
தொழவிருந்த தன்மை போற்றிப்
பொங்கியெழும் இசைபாடிப் போற்றிசைத்தங்
கொருபரிசு புறம்பு போந்தார்.
[470]
போந்துமா மாத்திரர்தம் போரேற்றில்
திருமனையிற் புகுந்து சிந்தை
வாய்ந்தமா தவரவர்தா மகிழ்ந்தருள
அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்
காய்ந்தமால் விடையார்தங் கணபதீச்
சரம்பரவு காதல் கூர
ஏந்துநூ லணிமார்பர் இன்புற்றங்
கன்பருடன் இருந்த நாளில்.
[471]
திருமருகல் நகரின்கண் எழுந்தருளித்
திங்களுடன் செங்கட் பாம்பு
மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்க
வண்ணர்கழல் வணங்கிப் போற்றி
உருகியஅன் புறுகாத லுள்ளலைப்பத்
தெள்ளுமிசை யுடனே கூடப்
பெருகுதமிழ்த் தொடைசார்த்தி அங்கிருந்தார்
பெரும்புகலிப் பிள்ளை யார்தாம்.
[472]
அந்நாளில் ஒருவணிகன் பதிக னாகி
அணைவானோர் கன்னியையும் உடனே கொண்டு
பொன்னார்மே ருச்சிலையார் கோயில் மாடு
புறத்திலொரு மடத்திரவு துயிலும் போது
மின்னார்வெள் ளெயிற்றரவு கவ்வுதலும் கிளர்ந்த
விடவேகங் கடிதுதலை மீக்கொண் டேறத்
தன்னாவி நீங்குமவன் தன்மை கண்டு
சாயல்இளங் கன்னிநிலை தளர்ந்து சோர்வாள்.
[473]
வாளரவு தீண்டவும்தான் தீண்ட கில்லாள்
மறுமாற்றம் மற்றொருவர் கொடுப்பா ரின்றி
ஆளரியே றனையானை அணுக வீழ்ந்தே
அசைந்தமலர்க் கொடிபோல்வாள் அரற்றும் போது
கோளுருமும் புள்ளரசும் அனையார் எல்லாக்
கொள்கையினா லுந்தீர்க்கக் குறையா தாக
நீள்இரவு புலர்காலை மாலை வாச
நெறிகுழலாள் நெடிதயர்ந்து புலம்பு கின்றாள்.
[474]
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன்போந்தேன் அரவால் வீடி
என்னையுயிர் விட்டகன்றாய் யான்என் செய்கேன்
இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னியசீர் வணிகர்குல மணியே யானும்
வாழேன்என் றென்றயர்வாள் மதியினாலே
சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித் தொழுதழுதாள் செயலொன் றில்லாள்.
[475]
அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.
[476]
வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி
வருங்காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்
[477]
இத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கும்
இளங்கொடிபோல் நுடங்கும்இடை ஏழை ஏத்தும்
அத்தன்மை ஓசையெழுந் தெங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிடவந் தணைகின்றார்தம்
மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார
மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்
வைத்தன்ன மெனஅயர்வாள் மாடுநீடு
மாதவத்தோர் சூழஎழுந் தருளி வந்தார்.
[478]
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான்அருள்போற்றிச் சிந்தை நைந்து
பரவுறுவாள் தனைநோக்கிப் பயப்ப டேல்நீ
பருவுரலும் நும்பரிசும்பகர்வாய் என்னக்
கரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு
கண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
போந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்.
[479]
வளம்பொழில்சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை
மருமகன்மற் றிவன்அவற்கு மகளிர்நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் இவரில் மூத்தாள்
இவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்
குளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவ ராகஎனை யொழிய ஈந்தான்
தளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்
கவரைமறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.
[480]
மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
மறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்
சுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்
துயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்
கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்.
[481]
சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.
[482]
பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கையவள் தனைநயந்த நம்பி யோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலிபுகலி வேந்தர்
மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
[483]
மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.
[484]
புக்கிறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்
பொங்குதிரை நதிப்புனலும் பிறையுஞ் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற் றார்தம்
திருமேனி ஒருபாகம் பசுமை யாக
மைக்குலவு கண்டத்தார் மருகற் கோயில்
மன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்
கைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
காட்சிகொடுத் தருளுவான் காட்டக் கண்டார்.
[485]
மருகல் அமர்ந்து நிறைந்த கோலர்
மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்ச ரத்தார்
பீடுடைக் கோலமே யாகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க
உலகர்முன் கொள்ளும் உணர்வு நீட
அருவிகண் வார்வுறப் பாட லுற்றார்
அங்கமும் வேதமும் என்றெ டுத்து.
[486]
கண்டெதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரங் காத லித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதி யிற்சில நாள்கள் போற்றித்
தொண்ட ருடனருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி யெல்லை நீங்கிப்
புண்டரி கத்தடஞ் சூழ் பழனப்
பூம்புக லூர்தொழப் போது கின்றார்.
[487]
சீரின் மலிந்த சிறப்பின் மேவும்
சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற் றவரும்
விடையரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம்
பயில்புக லூர்நகர்ப் பாங்க ணைந்தார்.
[488]
திருப்புக லூர்த்திருத் தொண்ட ரோடும்
செம்மை முருகனார் மெய்ம்ம கிழ்ந்த
விருப்பொடு சென்றெதிர் கொள்ள வந்து
வேத முதல்வர்தங் கோயி லெய்திப்
பொருப்புறழ் கோபுரத் துட்பு குந்து
பூமலி முன்றில் புடைவ லம்கொண்
டொருப்படு சிந்தையொ டுள்ள ணைந்தார்
ஓதாது ஞானமெ லாமு ணர்ந்தார்.
[489]
புக்கெதிர் தாழ்ந்து விழுந்தெ ழுந்து
பூம்புக லூர்மன்னு புண்ணி யரை
நெக்குரு குஞ்சிந்தை அன்பு பொங்க
நிறைமலர்க் கண்ணீ ரருவி செய்ய
மிக்க தமிழ்த்தொடை மாலை சாத்தி
மேவிய ஏழிசை பாடிப் போந்து
திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல அவர்மடஞ் சென்று புக்கார்.
[490]
ஆங்கவர் போற்றுஞ் சிறப்பின் மேவி
அப்பதி தன்னில்அமரு நாளில்
வாங்கு மலைச்சிலை யார்ம கிழ்ந்த
வர்த்தமா னீச்சரந் தான்வ ணங்கி
ஓங்கிய அன்பின் முருக னார்தம்
உயர்திருத் தொண்டு சிறப்பித் தோங்கும்
பாங்குடை வண்டமிழ் பாடி நாளும்
பரமர்தம் பாதம் பணிந்தி ருந்தார்.
[491]
மற்றத் திருப்பதி வைகு நாளில்
வாக்கின் பெருவிறல் மன்ன னார்தாம்
புற்றிடங் கொண்டாரை வந்தி றைஞ்சிப்
பொன்மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும்
திருப்புக லூர்தொழச் சிந்தை செய்து
கொற்றவ னாரருள் பெற்ற தொண்டர்
குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.
[492]
நாவுக் கரசர் எழுந்த ருளும்
நல்லதிரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்த ரான
திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக
விரைந்தெதிர் கொள்ளமெய் யன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப்
புறம்பணை எல்லை கடந்து போந்தார்.
[493]
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின்
வாய்மை வினவி மகிழும் போது.
[494]
மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின்
வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கணை யப்பெ றும்பே
ரருளுடை யோம்யாம் அந்தணாரூர்
எப்பரி சால்தொழு துய்ந்த தென்று
வினவிட ஈறில் பெருந்த வத்தோர்
செப்பிய வண்டமிழ் மாலை யாலே
திருவா திரைநிகழ் செல்வஞ் சொன்னார்.
[495]
அரசரு ளிச்செய்த வாய்மை கேட்ட
அப்பொழு தேஅருள் ஞான முண்ட
சிரபுர வேந்தருஞ் சிந்தை யின்கண்
தென்திரு வாரூர் வணங்கு தற்கு
விரவிய காதலிற் சென்று போற்றி
மீண்டும்வந் தும்முடன் மேவு வன்என்
றுரவு கடற்கல் மிதப்பின் வந்தார்க்
குரைத்துடன் பாடுகொண் டொல்லை போந்தார்.
[496]
சொற்பெரு வேந்தருந் தோணி மூதூர்த்
தோன்றல்பின் காதல் தொடரத் தாமும்
பொற்புக லூர்தொழச் சென்ற ணைந்தார்
புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டஞ் சென்று மேவி
விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரந் தொண்ட ரோடும்
பாடல னான்மறை பாடிப் போந்தார்.
[497]
துணரிணர்ச் சோலையுஞ் சாலி வேலித்
துறைநீர்ப் பழனமுஞ் சூழ்க ரும்பின்
மணமலி கானமும் ஞானம் உண்டார்
மருங்குற நோக்கி மகிழ்ந் தருளி
அணைபவர் அள்ளற் கழனி ஆரூர்
அடைவோம் எனமொழிந் தன்பு பொங்கப்
புணரிசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்
பொன்மதி லாரூர்ப் புறத்த ணைந்தார்.
[498]
வானுயர் செங்கதிர் மண்டலத்து
மருங்கணை யுங்கொடி மன்னும்ஆரூர்
தானொரு பொன்னுல கென்னத் தோன்றும்
தயங்கொளி முன்கண்டு சண்பை வந்த
பானிற நீற்றர் பருக்கை யானைப்
பதிகத் தமிழிசை பாடி ஆடித்
தேனொடு வண்டு முரலுஞ் சோலைத்
திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.
[499]
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
பொழிந்து புவிமேற் பொலிவ தென்ன
எங்குங் குளிரொளி வீசு முத்தின்
இலங்கு சிவிகை இழிந்த ருளிச்
செங்கை நிறைமலர் கொண்டு தூவித்
திருவிருக் குக்குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான்அர சாளும் ஆரூர்
தனைப்பணி வுற்றார் தமிழ் விரகர்.
[500]
படியில் ஞானமுண் டருளிய
பிள்ளையைப் பணிதற்
கடியர் சென்றெதிர் கொளஎழுந்
தருளும்அஞ் ஞான்று
வடிகொள் சூலத்தர் மன்னிய
பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவையார்முடிவுறக் காண்பார்.
[501]
நான மான்மத நளிர்பெருஞ்
சேற்றிடை நறும்பொன் தூந றுந்துகள் சொரிதலிற்
சுடரொளிப் படலை
ஆன வீதிகள் அடிவலித்
தவைகரைந் தலைய
வான மாரியிற் பொழிந்தது
மலர்மது மாரி.
[502]
ஆடல் நீடுவ துகிற்கொடி
கொடிகள் அணிகுழற்
தோடு சூழ்வன சுரும்பொடு
தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலிதோ
ரணநிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்
களின்மருங் கெல்லாம்.
[503]
மாலை சூழ்புறங் கடைகளின்
மணிநிரை விளக்கின்
கோல நீள்சுடர் ஒளியுடன்
கோத்திடை தூக்கும்
நீல மாமணி நிழல்பொர
நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவளவே
திகைமலர்ப் பந்தர்.
[504]
தழைம லர்த்தடஞ் சாலைகள்
தெற்றிகள் சதுக்கம்
குழைமு கத்தவர் ஆடரங்
கிமையவர் குழாமும்
விழைசி றப்பின வியலிடம்
யாவையு மிடைந்து
மழைமு ழக்கென இயம்பின
மங்கல இயங்கள்.
[505]
விரவு பேரணி வேறுவே
றின்னன விளங்கும்
பிரச மென்மலர்ச் சோலைசூழ்
பெருந்திரு வாரூர்
அரச ளிப்பவர் அருளினால்
அடியவர் குழுவும்
புரிச னங்களும் புறத்தணைந்
தெதிர்கொளும் பொழுது.
[506]
வந்தி றைஞ்சு மெய்த் தொண்டர்தங்
குழாத்தெதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம்
சண்பையர் தலைவர்
அந்த மாயுல காதியாம்
பதிகமங் கெடுத்தே
எந்தை தானெனை ஏன்றுகொ
ளுங்கொல்என் றிசைத்தார்.
[507]
ஆன அத்திருப் பதிகம்முன்
பாடிவந் தணையும்
[508]
மன்னு தோரண வாயில்முன்
வணங்கியுள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும்
தாங்கிய தகைத்தாம்
பன்னெ டுஞ்சுடர்ப் படலையின்
பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்துதே வாசிரி
யன்தொழு தெழுந்தார்.
[509]
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கிக்
கூடு காதலிற் கோபுரம்
பணிந்துகை குவித்துத்
தேடு மாலயற் கரியராய்ச்
செழுமணிப் புற்றில்
நீடு வார்முன்பு நிலமுறப்
பலமுறை பணிந்தார்.
[510]
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர்
பரவிய புளகம்
அணிந்த மேனியோ டாடினர்
பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொரு ளானவர்
தமைக்கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்தெழு
வேட்கையில் தாழ்ந்தார்.
[511]
செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதி
கத்திசை யெடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய
நம்பர்முன் பாடி
மஞ்சு சூழ்திரு மாளிகை
வாயிலின் புறம்போந்
தஞ்செ ழுத்தின்மெய் யுணர்ந்தவர்
திருமடத் தணைந்தார்.
[512]
அங்க ணைந்தமர்ந் தருளுவார்
அரனெறி அமர்ந்த
செங்க ணேற்றவர் சேவடி
[513]
புற்றி டங்கொளும் புனிதரைப்
போற்றிசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்திசைப்
பதிகங்கள் பாடி
நற்ற வத்திருத் தொண்டர்க
ளொடுநலஞ் சிறப்ப
மற்ற வண்பதி தன்னிடை
வைகுமந் நாளில்.
[514]
மல்லல் நீடிய வலிவலங்
கோளிலி முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர்தம்
பதிபல தொழுதே
எல்லை யில்திருப் பதிகங்க
ளாற்பணிந் தேத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும்
ஆரூர்தொழ அணைந்தார்.
[515]
ஊறு காதலில் ஒளிவளர்
புற்றிடங் கொண்ட
ஆறு லாவிய சடைமுடி
ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வென நிகழ்திருத்
தொண்டர்க ளோடும்
ஈறி லாத்திரு ஞானசம்
பந்தர்அங் கிருந்தார்.
[516]
அங்கு நன்மையில் வைகும்அந்
நாள்சில அகல
நங்கள் தந்திரு நாவினுக்
கரசரை நயந்து
பொங்கு சீர்ப்புக லூர்தொழ
அருளினாற் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை
சார்ந்தருள் செய்வார்.
[517]
புவனவா ரூரினிற் புறம்புபோந்
ததனையே நோக்கிநின்றே
அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ
உய்யுமா றறிதிஅன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற
வாதென்று செங்கைகூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனுந்திருப்
பதிகமுன் பாடினாரே.
[518]
காழியார் வாழவந் தருள்செயும்
கவுணியப் பிள்ளை யார்தாம்
ஆழியான் அறியொணா அண்ணல்
ஆரூர்பணிந் தரிது செல்வார்
பாழிமால் யானையின் உரிபுனைந்
தார்பனை யூர்ப ணிந்து
வாழிமா மறையிசைப் பதிகமும்
பாடிஅப் பதியில் வைகி.
[519]
அங்குநின் றரிதெழுந் தருளுவார்
அகிலகா ரணரும் ஆனார்
தங்குநற் பதிகளும் பிறபணிந்
தருளிவண் தமிழ்பு னைந்தே
எங்குமெய்த் தவர்குழா மெதிர்கொளத்
தொழுதெழுந் தருளி வந்தார்
பொங்குதண் பாசடைப் பங்கயப்
புனல்வயற் புகலூர் சார.
[520]
நாவினுக் கரசரும் நம்பிசீர்
முருகரும் மற்று நாமச்
சேவுகைத் தவர்திருத் தொண்டரா
னவர்கள்முன் சென்று சீதப்
பூவினிற் பொலிபுனற் புகலியார்
போதகத் தெதிர்ப ணிந்தே
மேவமற் றவருடன் கூடவே
விமலர்கோ யிலைஅ டைந்தார்.
[521]
தேவர்தந் தலைவனார் கோயில்புக் கனைவரும்
சீர்நிலத் துறவ ணங்கிப்
பாவருந் தமிழிசைப் பதிகமும் பாடிமுன்
பரவுவார் புறம்ப ணைந்தே
தாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திஅத்
தனிமுதல் தொண்டர் தாமே
யாவையுங் குறைவறுத் திடஅமர்ந் தருளுவார்
இனிதின்அங் குறையு நாளில்.
[522]
நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்
உடன்அணைந் தெய்து நீர்மைச்
சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங்
செய்கைநேர் நின்று வாய்மைச்
சாலமிக் குயர்திருத் தொண்டின்உண் மைத்திறந்
தன்னையே தெளிய நாடிக்
காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந்
தருளினார் காழி நாடர்.
[523]
கும்பிடுங் கொள்கையிற் குறிகலந் திசையெனும்
பதிகமுன் னான பாடல்
தம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன்
பெருமைசால் புறவி ளம்பி
உம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார்
உள்ளமெய்க் காதல் கூர
நம்பர்தம் பதிகளா யினஎனைப் பலவும்முன்
நண்ணியே தொழந யந்தார்.
[524]
புள்ள லம்புதண் புனற்புக
லூருறை புனிதனார் அருள்பெற்றுப்
பிள்ளை யாருடன் நாவினுக்
கரசரும் பிறபதி தொழச்செல்வார்
வள்ள லார்சிறுத் தொண்டரும்
நீலநக் கரும்வளம் பதிக்கேக
உள்ளம் அன்புறு முருகர்அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
[525]
கண்ண கன்புக லூரினைத்
தொழுதுபோம் பொழுதினிற் கடற்காழி
அண்ண லார்திரு நாவினுக்
கரசர்தம் அருகுவிட் டகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும்
பின்வர வழிக்கொள உறுங்காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்
கரசரும் மற்றவர்க் கிசைக்கின்றார்.
[526]
நாயனார்உமக் களித்தருள்
செய்தஇந் நலங்கிளர் ஒளிமுத்தின்
தூய யானத்தின் மிசை யெழுந்
தருளுவீர் என்றலும் சுடர்த்திங்கள்
மேய வேணியார் அருளும்இவ்
வாறெனில் விரும்புதொண் டர்களோடும்
போய தெங்குநீர் அங்குயான்
பின்வரப் போவதென் றருள்செய்தார்.
[527]
என்று பிள்ளையார் மொழிந்தருள்
செய்திட இருந்தவத் திறையோரும்
நன்று நீரருள் செய்ததே
செய்வன்என் றருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள்முத லுடன்செலு
நாளெலாம் அவ்வியல் பினிற்செல்வார்
சென்று முன்னுறத் திருஅம்பர்
அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
[528]
சண்பை மன்னருந் தம்பிரான்
அருள்வழி நிற்பது தலைச்செல்வார்
பண்பு மேம்படு பனிக்கதிர்
நித்திலச் சிவிகையிற் பணிந்தேறி
வண்பெ ரும்புக லூரினைக்
கடந்துபோய் வரும்பரி சனத்தோடும்
திண்பெ ருந்தவர் அணைந்ததெங்
கென்றுபோய்த் திருஅம்பர் நகர்புக்கார்.
[529]
அம்பர் மாநகர் அணைந்துமா
காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை
வலங்கொண்டு திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாம்மலர் தூவிமுன்
பரவியே வண்டமிழ் இசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர்
தமைப்பணிந் துருகும்அன் பொடுதாழ்ந்தார்.
[530]
தாழ்ந்து நாவினுக் கரசுடன்
தம்பிரான் கோயில்முன் புறமெய்திச்
சூழ்ந்த தொண்டரோ டப்பதி
அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப்பெறுங்
காலங்கள் விருப்பினாற் கும்பிட்டு
வாழ்ந்தி ருந்தனர் காழியார்
வாழவந் தருளிய மறைவேந்தர்.
[531]
பொருவி லாதசொற் புல்குபொன்
னிறமுதற் பதிகங்க ளாற்போற்றித்
திருவினார்ந்தகோச் செங்கணான்
அந்நகர்ச் செய்தகோ யிலைச் சேர்ந்து
மருவு வாய்மைவண் டமிழ்மலர்
மாலைஅவ் வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலிற் பணிந்துமுன்
பரவினார் பேணிய உணர்வோடும்.
[532]
இன்ன வாறுசொல் மாலைக
ளால்துதித் திறைஞ்சிஅங் கமர்நாளில்
கன்னி மாமதில் திருக்கட வூர்தொழக்
காதல்செய் தருளிப் போய்
மன்னு கோயில்கள் பிறபதி
வணங்கியே வாக்கின்மன் னவரோடும்
அந்நெ டும்பதி அணைவுறக்
கலயரோ டடியவர் எதிர்கொண்டார்.
[533]
மற்றவ் வண்பதி அணைந்துவீ
ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு
காலனை உதைத்துருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன்
போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை
யானெனும் பதிகஇன் னிசைபாடி.
[534]
பரவி ஏத்திஅங் கரிதினிற்
போந்துபார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி
யப்பெருங் கலயர் தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத்
தருளிய விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா
னமும்பணிந் திருந்தனர் சிறப்பெய்தி.
[535]
சிறப்பு டைத்திருப் பதியத
னிடைச்சில நாளமர்ந் தருளோடும்
விறற்பெ ருங்கரி யுரித்தவர்
கோயில்கள் விருப்பொடுந் தொழச் செல்வார்
மறைப்பெ ருந்திருக் கலயரும்
உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப்பெ ரும்பயன் அனையஅத்
தொண்டரோ டணைந்தனர் திருவாக்கூர்.
[536]
தக்க அந்தணர் மேவும்அப்
பதியினிற் தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப்
பணிந்திசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன்
தொழுதுபோய் மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின்
றாடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.
[537]
பாம்பு ரத்துறை பரமரைப்
பணிந்துநற் பதிகஇன் னிசைபாடி
வாம்பு னற்சடை முடியினார்
மகிழ்விடம் மற்றும்உள் ளனபோற்றிக்
காம்பி னில்திகழ் கரும்பொடு
செந்நெலின் கழனியம் பணைநீங்கித்
தேம்பொ ழில்திரு வீழிநன்
மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.
[538]
அப்பொழுதின் ஆண்ட
அரசை எதிர்கொண்ட
மெய்ப்பெருமை அந்தணர்கள்
வெங்குருவாழ் வேந்தனார்
பிற்படவந் தெய்தும்
பெரும்பேறு கேட்டுவப்பார்
எப்பரிசி னால்வந்
தணைந்தங் கெதிர்கொண்டார்.
[539]
நிறைகுடந்தூ பந்தீபம்
நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப்பொற் சுண்ணம்
நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப
மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை
எதிர்கொள்வர வேற்றார்.
[540]
வந்துதிரு வீழி
மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத்
தாமும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகைநின்
றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ
ருடன்அணைந்தங் குள்புகுவார்.
[541]
அப்போ தரையார்
விரிகோ வணவாடை
ஒப்போ தரும்பதிகத்
தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார்
தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற்
கொண்டு கவுணியனார்.
[542]
நாவின் தனிமன்னர்
தாமும் உடன்நண்ண
மேவிய விண்ணிழிந்த
கோயில் வலங்கொள்வார்
பூவியலும் உந்தியான்
போற்றப் புவிக்கிழிந்த
தேவியலு மெய்கண்டு
சிந்தைவியப் பெய்தினார்.
[543]
வலங்கொண்டு புக்கெதிரே
வந்து வரநதியின்
சலங்கொண்ட வேணித்
தனிமுதலைத் தாழ்ந்து
நிலங்கொண்ட மேனியராய்
நீடுபெருங் காதல்
புலங்கொண்ட சிந்தையினால்
பொங்கியிசை மீப்பொழிந்தார்.
[544]
போற்றிச் சடையார்
புனலுடையான் என்றெடுத்துச்
சாற்றிப் பதிகத்
தமிழ்மாலைச் சந்தவிசை
ஆற்ற மிகப்பாடி
ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக்கீழ்
நின்றலைந்து நீடினார்.
[545]
நீடியபே ரன்புருகி
உள்ளலைப்ப நேர்நின்று
பாடியெதி ராடிப்
பரவிப் பணிந்தெழுந்தே
ஆடிய சேவடிகள்
ஆர்வமுற உட்கொண்டு
மாடுயர் கோயில்
புறத்தரிது வந்தணைந்தார்.
[546]
வந்தணைந்து வாழ்ந்து
மதிற்புறத்தோர் மாமடத்துச்
செந்தமிழ்சொல் வேந்தரும்
செய்தவரும் சேர்ந்தருளச்
சந்தமணிக் கோபுரத்துச்
சார்ந்தவட பாற்சண்பை
அந்தணர்சூ ளாமணியார்
அங்கோர் மடத்தமர்ந்தார்.
[547]
அங்கண் அமர்வார்
அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற்
காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச
ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார்
இன்புற் றுறைகின்றார்.
[548]
ஓங்குபுனற் பேணு
பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கார் திலதைப்
பதிமுற்ற மும்பணிந்து
வீங்கொலிநீர்வீழி மிழலையினில்
மீண்டும் அணைந்
தாங்கினிது கும்பிட்
டமர்ந்துறையும் அந்நாளில்.
[549]
சேணுயர் மாடப் புகலி யுள்ளார்
திருஞான சம்பந்தப் பிள்ளை யாரைக்
காணும் விருப்பிற் பெருகு மாசை
கைம்மிகு காதல் கரை யிகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார்மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை யகன்று போந்து
வீழி மிழலையில் வந்த ணைந்தார்.
[550]
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்
தோங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்க ளெல்லாம்
வந்து மருங்கணைந் தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதி யர்கள்
கேட்டுமெய்ஞ் ஞானமுண் டாரை முன்னா
ஏழிசை சூழ்மறை எய்த வோதி
எதிர்கொள் முறைமையிற் கொண்டு புக்கார்.
[551]
சண்பைத் திருமறை யோர்கள் எல்லாம்
தம்பிரா னாரைப் பணிந்து போந்து
நண்பிற் பெருகிய காதல் கூர்ந்து
ஞானசம் பந்தர் மடத்தில் எய்திப்
பண்பிற் பெருகுங் கழும லத்தார்
பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண்பெற்ற தோணி புரத்தில் எம்மோ
டெழுந்தரு ளப்பெற வேண்டும் என்றார்.
[552]
என்றவர் விண்ணப்பஞ் செய்த போதில்
ஈறில் சிவஞானப் பிள்ளை யாரும்
நன்றிது சாலவுந் தோணி மேவும்
நாதர் கழலிணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும்
இறைவர் அருள்பெற்றுப் போவ தென்றே
அன்று புகலி அரும றையோர்க்
கருள்செய் தவர்க்கு முகமளித்தார்.
[553]
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
வேதியர்க் காய விருந்த ளிப்பப்
பாற்பட்ட சிந்தைய ராய்ம கிழ்ந்து
பரம்பொரு ளானார் தமைப் பரவும்
சீர்ப்பட்ட எ ல்லை யினிது செல்லத்
திருத்தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப்பட்ட வண்கைக் கவுணி யர்க்குக்
கனவிடை முன்னின் றருள்செய் கின்றார்.
[554]
தோணியில் நாம்அங் கிருந்த வண்ணம்
தூமறை வீழிமிழலை தன்னுள்
சேணுயர் விண்ணின் றிழிந்த இந்தச்
சீர்கொள் விமானத்துக் காட்டு கின்றோம்
பேணும் படியால் அறிதி என்று
பெயர்ந்தருள் செய்யப் பெருந்த வங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார்
விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.
[555]
அறிவுற்ற சிந்தைய ராய்எ ழுந்தே
அதிசயித் துச்சிமேல் அங்கை கூப்பி
வெறியுற்ற கொன்றையி னார்ம கிழ்ந்த
விண்ணிழி கோயிலிற் சென்று புக்கு
மறியுற்ற கையரைத் தோணி மேல்முன்
வணங்கும் படியங்குக் கண்டு வாழ்ந்து
குறியிற் பெருகுந் திருப்ப திகம்
குலவிய கொள்கையிற் பாடு கின்றார்.
[556]
மைம்மரு பூங்குழல் என்றெ டுத்து
மாறில் பெருந் திருத்தோணி தன்மேற்
கொம்மை முலையினாள் கூட நீடு
கோலங் குலாவும் மிழலை தன்னில்
செம்மை தருவிண் ணிழிந்த கோயில்
திகழ்ந்த படிஇது என்கொல் என்று
மெய்ம்மை விளங்குந் திருப்ப திகம்
பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்.
[557]
செஞ்சொல் மலர்ந்த திருப்ப திகம்
பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்தெ ழுவார்
ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப்புகலி மேவும்
மாமறை யோர்தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த
நீர்மைத் திறத்தை அருள்செய் கின்றார்.
[558]
பிரம புரத்தி லமர்ந்த முக்கட்
பெரிய பிரான்பெரு மாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்குஞ் சென்று
விரும்பிய கோயில் பணிந்து போற்றி
வருவது மேற்கொண்ட காதல் கண்டங்
கமர்ந்த வகையிங் களித்த தென்று
தெரிய வுரைத்தருள் செய்து நீங்கள்
சிரபுர மாநகர் செல்லும் என்றார்.
[559]
என்று கவுணியப் பிள்ளை யார்தாம்
இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண்
ஒழிய ஒருவா றகன்று போந்து
மன்றுள் நடம்புரிந் தார்ம கிழ்ந்த
தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த்தோணி நீடு வாரைப்
பணியும் நியதிய ராய் உறைந்தார்.
[560]
சிரபுரத் தந்தணர் சென்ற பின்னைத்
திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும்
பண்பின் வழாத்திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி
ஓங்கிய நாவுக் கரச ரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர
மேவி இனிதங் குறையும் நாளில்.
[561]
மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.
[562]
வானாகி நிலனாகி அனலு மாகி
மாருதமாய் இருசுடராய் நீரு மாகி
ஊனாகி உயிராகி உணர்வு மாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும் போது
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில்அணைந் தருளிச் செய்வார்.
[563]
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்டம்
நீங்குதற்கு நித்தம் ஒரோர் காசு நீடும்
இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால்
அலகில்புக ழீர்தவிர்வ தாகும் என்றே
அருள்புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.
[564]
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையார் இளவேறு தாமு ணர்ந்து
நம்பிரான் அருள்இந்த வண்ணம் என்றே
நாவினிசை யரசரொடுங் கூட நண்ணி
வம்புலா மலரிதழி வீழி நாதர்
மணிக்கோயில் வலஞ்செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதியருளால் பிள்ளை யார்தாம்
அபிமுகத்துப் பீடிகைமேற் காசு கண்டார்.
[565]
காதலொடுந் தொழுதெடுத்துக் கொண்டு நின்று
கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்க
நாதர்விரும் படியார்கள் நாளும் நாளும்
நல்விருந்தா யுண்பதற்கு வருக வென்று
தீதில்பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறிநெய்பால் தயிரென் றின்ன
ஏதமுறா தினி துண்ண ஊட்டி அங்கண்
இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்.
[566]
நாவினுக்கு வேந்தர்திரு மடத்திற் தொண்டர்
நாட்கூறு திருவமுது செய்யக் கண்டு
சேவுகைத்தார் அருள்பெற்ற பிள்ளை யார்தந்
திருமடத்தில் அமு தாக்கு வாரை நோக்கித்
தீவினைக்கு நீர்என்றும் அடைவி லாதீர்
திருவமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவுமிக்க அடியவருக் களியா வண்ணம்
விளைந்தவா றென்கொலோ விளம்பும் என்றார்.
[567]
திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுதமைப்போர் செப்பு வார்கள்
ஒருபரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர்பாற் பெறும்படிக்கா சொன்றுங் கொண்டு
கருதியஎல் லாங்கொள்ள வேண்டிச் சென்றால்
காசுதனை வாசிபட வேண்டும் என்பார்
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
பேணியே கொள்வரிது பிற்பா டென்றார்..
[568]
திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட மற்றக் காசு
நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப்
பெருவாய்மைத் திருநாவுக் கரசர் தொண்டால்
பெறுங்காசாம் ஆதலினாற் பெரியோன் தன்னை
வருநாள்கள் தருங்காசு வாசி தீரப்
பாடுவன்என் றெண்ணிஅது மனத்துட் கொண்டார்.
[569]
மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
வாசிதீர்த் தருளும்எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நற்காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
நற்றவத்தீர் இக்காசு சால நன்று
வேண்டுவன நாந்தருவோம் என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாட் கூறு தன்னில்
அடியவரை அமுதுசெய்வித் தார்வ மிக்கார்.
[570]
அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெய்யத் தொண்டர்அள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தா ருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாகத்
திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும்
சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்க
பெருமைதரு சண்பைநகர் வேந்தர் நாவுக்
கரசர்இவர் பெருஞ்சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.
[571]
அவனிமிசை மழைபொழிய உணவு மல்கி
அனைத்துயிருந் துயர்நீங்கி அருளி னாலே
புவனமெலாம் பொலிவெய்துங் காலம் எய்தப்
புரிசடையார் கழல்பலநாள் போற்றி வைகித்
தவமுனிவர் சொல்வேந்த ரோடுங் கூடத்
தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீது
சிவன்மகிழுந் தானங்கள் வணங்கப் போவார்
தென்திருவாஞ் சியமூதூர் சென்று சேர்ந்தார்.
[572]
நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு
பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழநினைந்து சென்று புக்கார்.
[573]
நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி யேத்தி
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி யேத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
[574]
மற்றவ்வூர் தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
மாலயனுக் கரியபிரான் மருவுந் தானம்
பற்பலவும் சென்று பணிந் தேத்திப் பாடிப்
பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றித்
திருமறைக்காட்டதன் மருங்கு சேர்ந்தா ரன்றே.
[575]
கார்அமண்வெஞ் சுரமருளாற் கடந்தார் தாமும்
கடற்காழிக் கவுணியர்தந் தலைவர் தாமும்
சேரஎழுந் தருளியஅப் பேறு கேட்டுத்
திருமறைக்காட் டகன்பதியோர் சிறப்பிற் பொங்கி
ஊரடைய அலங்கரித்து விழவு கொள்ள
உயர்கமுகு கதலிநிறை குடந்தீ பங்கள்
வார்முரச மங்கலநா தங்கள் மல்க
எதிர்கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.
[576]
முன்னணைந்த திருநாவுக் கரசர் தம்மை
முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின்னணைய எழுந்தருளும் பிள்ளை யார்தம்
பெருகியபொற் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னிமிசைக் கரங்குவித்து முன்பு சென்று
சேணிலத்து வணங்குதலுந் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்திழிந்து வணங்கியுடன் மகிழ்ந்து போந்தார்.
[577]
சொல்லரச ருடன்கூடப் பிள்ளை யாரும்
தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்
மல்குதிரு மறுகின்கட் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்று முள்ளோர்
எல்லையில்லா வகைஅரஎன் றெடுத்த ஓசை
இருவிசும்பும் திசையெட்டும் நிறைந்து பொங்கி
ஒல்லொலிநீர் வேலையொலி அடக்கி விண்மேல்
உம்பர்நாட் டப்புறத்தும் உற்ற தன்றே.
[578]
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணிமறுகின் ஊடெய்தி அருகு சூழ்ந்த
கொடிநுடங்கு செழுந்திருமா ளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்திறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவிலிமை யவர்முனிவர் நெருங்குந் தெய்வ
முன்றில்வலம் கொண்டுநேர் சென்று முன்னாள்
படியின்மறை அருச்சித்துக் காப்புச் செய்த
பைம்பொன்மணித் திருவாயிற் பாங்கு வந்தார்
[579]
அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த
அக்கதவந் திறந்திடஅம் மறைகளோதும்
பெருகியஅன் புடைஅடியார் அணைந்து நீக்கப்
பெறாமையினால் அன்றுமுத லாகப் பின்னை
ஒருபுடைஓர் வாயில்அமைத் தொழுகுந் தன்மை
உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர்வியப் பெய்தி நின்று
திருநாவுக் கரசருக்குச் செப்பு கின்றார்.
[580]
அப்பரே வேதவனத் தையர் தம்மை
அபிமுகத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம்இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப் பொருள்வண் டமிழ்பாடி அருளும் என்ன
விளங்குமொழி வேந்தரது மேற்கொண் டென்னை
இப்பரிசு நீரருளிச் செய்தீ ராகில்
இதுசெய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட.
[581]
பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
[582]
மற்றது கண்ட போதே வாக்கின்மன்
னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட
அவரும் போற்றி
அற்புத நிலையி னார்கள் அணிதிரு
மறைக்கா டாளுங்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி
குறுகிப் புக்கார்.
[583]
கோயிலுட் புகுவார் உச்சி
குவித்தசெங் கைக ளோடும்
தாயினும் இனிய தங்கள்
தம்பிரா னாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள்
தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்ய ராகி
விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.
[584]
அன்பினுக் களவு காணார்
ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்புநெக் குருக நோக்கி
இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்புநிற் பதுவும் ஆற்றார்
மொழிதடு மாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப்
பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
[585]
புறம்புவந் தணைந்த போது
புகலிகா வலரை நோக்கி
நிறங்கிளர் மணிக்க பாடம்
நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறந்தவா றடைக்கப் பாடி
யருளும்நீர் என்றார் தீய
மறம்புரி அமணர் செய்த
வஞ்சனை கடக்க வல்லார்.
[586]
அன்றர சருளிச் செய்ய
அருமறைப் பிள்ளை யாரும்
வென்றிவெள் விடையார் தம்மை
விருப்பினாற் சதுரம் என்னும்
இன்றமிழ்ப் பதிகப் பாடல்
இசைத்திட இரண்டு பாலும்
நின்றஅக் கதவு காப்பு
நிரம்பிட அடைத்த தன்றே.
[587]
அடைத்திடக் கண்டு சண்பை
ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத்தமி ழாளி யாருந்
தொழுதெழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பொழிந் திழிந்த தெங்கும்
பூமழை புகலி வேந்தர்
நடைத்தமிழ்ப் பதிக மாலை
நிரம்பிட நவின்று போற்றி.
[588]
அத்திரு வாயில் தன்னில்
அற்றைநாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல
மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த
வரம்பிலாப் பெருமை யோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து
வாழ்ந்தது கடல்சூழ் வையம்.
[589]
அருமறை யான வெல்லாம்
அகலிரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச
நாதமும் பிறங்கி ஓங்க
இருபெருந் தகையோர் தாமும்
எதிரெதிர் இறைஞ்சிப் போந்து
திருமடங் களின்முன் புக்கார்
செழும்பதி விழவு கொள்ள.
[590]
வேதங்கள் எண்ணில் கோடி
மிடைந்துசெய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார்
இருவருஞ் செய்து வைத்தார்
நாதங்கொள் வடிவாய் நின்ற
நதிபொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர்
பெருமையார் பகரும் நீரார்.
[591]
திருமறை நம்பர் தாமுன்
பருள்செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர்
தம்பிரா னார்பால் ஒக்க
வரும்அருட் செய்கை தாமே
வகுத்திட வல்லோ ரென்றால்
பெருமறை யுடன்மெய்த் தொண்டர்க்
கிடையீடு பெரிதா மன்றே.
[592]
இவ்வகை திரும றைக்காட்
டிறையவர் அருளை யுன்னி
மெய்வகை தெரிந்த வாக்கின்
வேந்தர்தாம் துயிலும் போதில்
மைவளர் கண்டர் சைவ
வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை யிருத்தும் அங்கே
வாஎன அருளிப் போக.
[593]
கண்டஅப் போதே கைகள்
குவித்துடன் கடிது செல்வார்
மண்டிய காத லோடு
மருவுவார் போன்றுங் காணார்
எண்டிசை நோக்கு வாருக்
கெய்துவார் போல எய்தா
அண்டர்தம் பிரானார் தம்பின்
போயினார் ஆர்வத் தோடும்.
[594]
அங்கவர் ஏகச் சண்பை
ஆண்டகை யாரும் அப்பர்
எங்குற்றார் என்று கேட்ப
எய்தினார் திருவாய் மூரில்
பொங்கிய காத லால்என்று
உரைத்திடப் போன தன்மை
சங்கையுற் றென்கொல் என்று
தாமும்அங் கணையப் போந்தார்.
[595]
அந்நிலை அணைந்த போதில்
அம்பிகை யுடனே கூட
மன்னிய ஆடல் காட்டத்
தளரிள வளரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர்
அரசொடுஞ் சென்று புக்கங்
கின்னியல் புறமுன் கூடி
இருவரும் போற்றி செய்தார்.
[596]
நீடுசீர்த் திருவாய் மூரில்
நிலவிய சிவனார் தம்மைப்
பாடுசொற் பதிகந் தன்னால்
பரவியப் பதியில் வைகிக்
கூடுமெய் அன்பு பொங்க
இருவருங் கூடி மீண்டு
தேடுமா மறைகள் கண்டார்
திருமறைக் காடு சேர்ந்தார்.
[597]
சண்பைநா டுடைய பிள்ளை
தமிழ்மொழித் தலைவ ரோடு
மண்பயில் கீர்த்திச் செல்வ
மாமறைக் காட்டு வைகிக்
கண்பயில் நெற்றி யார்தங்
கழலிணை பணிந்து போற்றிப்
பண்பயில் பதிகம் பாடிப்
பரவிஅங் கிருந்தா ரன்றே.
[598]
இவ்வகை இவர்கள் அங்கண்
இருந்தனராக இப்பால்
செய்வகை இடையே தப்பும்
தென்னவன் பாண்டி நாட்டு
மெய்வகை நெறியில் நில்லா
வினைஅமண் சமய மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை
கழியமுன் கலங்குங் காலை.
[599]
தென்னவன் தானும் முன்செய்
தீவினைப் பயத்தி னாலே
அந்நெறிச் சார்வு தன்னை
அறமென நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை
வைதிக வழக்க மாகும்
நன்னெறி திரிந்து மாறி
நவைநெறி நடந்த தன்றே.
[600]
பூழியர் தமிழ்நாட் டுள்ள
பொருவில்சீர்ப் பதிக ளெல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத்
தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி
அமணரே யாகி மொய்ப்ப.
[601]
பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித்
திரிபவ ரெங்கு மாகி
அறியும்அச் சமய நூலின்
அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா
நிலைமையில் நிகழுங் காலை.
[602]
வரிசிலைத் தென்ன வன்தான்
உய்தற்கு வளவர் கோமான்
திருவுயிர்த் தருளுஞ் செல்வப்
பாண்டிமா தேவி யாரும்
குரைகழல் அமைச்ச னாராங்
குலச்சிறை யாரும் என்னும்
இருவர்தம் பாங்கு மன்றிச்
சைவம்அங் கெய்தா தாக.
[603]
ஆங்கவர் தாங்கள் அங்கண்
அரும்பெறல் தமிழ்நா டுற்ற
தீங்கினுக் களவு தேற்றாச்
சிந்தையிற் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை
ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழற் செழியன் முன்பு
புலப்படா வகைகொண் டுய்த்தார்.
[604]
இந்நெறி யொழுகு கின்றார்
ஏழுல குய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர்
வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார்
திருமறைக் காடு சேர்ந்த
நன்னிலை கன்னி நாட்டு
நல்வினைப் பயத்தாற் கேட்டார்.
[605]
கேட்டஅப் பொழுதே சிந்தை
கிளர்ந்தெழு மகிழ்ச்சி பொங்க
நாட்பொழு தலர்ந்த செந்தா
மரைநகை முகத்த ராகி
வாட்படை அமைச்ச னாரும்
மங்கையர்க் கரசி யாரும்
சேட்படு புலத்தா ரேனுஞ்
சென்றடி பணிந்தார் ஒத்தார்.
[606]
காதலால் மிக்கோர் தாங்கள்
கைதொழு கருத்தி னாலே
போதவிழ் சோலை வேலிப்
புகலிகா வலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று
பரிசன மாக்கள் தம்மை
மாதவஞ் சுருதி செய்த
மாமறைக் காட்டில் விட்டார்.
[607]
ஆங்கவர் விடமுன் போந்த
அறிவுடை மாந்தர் அங்கண்
நீங்கிவண் தமிழ்நாட் டெல்லை
பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர்நீர் நாடும் காடும்
நதிகளும் கடந்து வந்து
தேங்கமழ் கைதை நெய்தல்
திருமறைக் காடு சேர்ந்தார்.
[608]
திருமறைக் காடு நண்ணிச்
சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம்
அமர்ந்தினி தருளுஞ் செல்வப்
பெருமடத் தணைய வந்து
பெருகிய விருப்பில் தாங்கள்
வருமுறைத் தன்மை எல்லாம்
வாயில்கா வலர்க்குச் சொன்னார்.
[609]
மற்றவர் சென்று புக்கு
வளவர்கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம்
எனச்சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித்
தொழுதுவிண் ணப்பஞ் செய்தார்.
[610]
புகலிகா வலர்தாங் கேட்டுப்
பொருவிலா அருள்முன் கூர
அகமலர்ந் தவர்கள் தம்மை
அழையும்என் றருளிச் செய்ய
நகைமுகச் செவ்வி நோக்கி
நற்றவ மாந்தர் கூவத்
தகவுடை மாந்தர் புக்குத்
தலையினால் வணங்கி நின்றார்.
[611]
நின்றவர் தம்மை நோக்கி
நிகரில்சீர்ச் சண்பை மன்னர்
மன்றலங் குழலி யாராம்
மானியார் தமக்கும் மானக்
குன்றென நின்ற மெய்ம்மைக்
குலச்சிறை யார்த மக்கும்
நன்றுதான் வினவக் கூறி
நற்பதம் போற்று வார்கள்.
[612]
கன்னிநா டமணர் தம்மாற்
கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்
தழுந்தமா தேவி யாரும்
கொன்னவில் அயில்வேல் வென்றிக்
குலச்சிறை யாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்
கியம்புமென் றிறைஞ்சி விட்டார்.
[613]
என்றவர்கள் விண்ணப்பஞ் செய்த பின்னை
ஏறுயர்த்த சிவபெருமான் தொண்ட ரெல்லாம்
நன்றுநமை ஆளுடைய நாதன் பாதம்
நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்றருளி வேதநூல் நெறியே யாக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித் தங்கு
நின்றசெயல் சிவனடியார் செயலே யாக
நினைந்தருள வேண்டும்என நின்று போற்ற.
[614]
மற்றவர்கட் கருள்புரிந்து பிள்ளை யாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து போந்து
பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென்னா
டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரும்
உரிமைஅமைச் சரும்உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்
சொல்லியெழுந் தருளுதற்குத் துணிந்த போது.
[615]
அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய் அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை
உரைசெய்வ துளதுறுகோள் தானுந் தீய
எழுந்தருள உடன்படுவ தொண்ணா தென்னப்
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தார்
வேயுறுதோ ளியை எடுத்து விளம்பினாரே.
[616]
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகங் கேட்டதற்பின் திருந்து நாவுக்
கரசும்அதற் குடன்பாடு செய்து தாமும்
அவர்முன்னே எழுந்தருள அமைந்த போது
புரமெரித்தார் திருமகனார் அப்பர் இந்தப்
புனல்நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலருந் தொழுதரிதாங் கருத்தில் நேர்ந்தார்.
[617]
வேதம்வளர்க் கவுஞ்சைவம் விளக்கு தற்கும்
வேதவனத் தருமணியை மீண்டும் புக்குப்
பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப்
பரசியருள் பெற்றுவிடை கொண்டு போந்து
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம்
வணங்கியருள் செய்துவிடை கொடுத்து மன்னுங்
காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக்
கதிர்ச்சிவிகை மருங்கணைந்தார் காழி நாதர்.
[618]
திருநாவுக் கரசரும் அங்கிருந்தார் இப்பால்
திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின்மீ தேறிப் பெற்றம்
உயர்த்தவர்தாள் சென்னியின்மேற் பேணும் உள்ளத்
தொருநாமத் தஞ்செழுத்தும் ஓதி வெண்ணீற்
றொளிவிளங்குந் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத் தன்புருகுங் கடலாம் என்ன
மாதவரார்ப் பொலிவையம் நிறைந்த தன்றே.
[619]
பொங்கியெழுந் திருத்தொண்டர்
போற்றிசைப்ப நாற்றிசையும்
மங்கலதூ ரியந்தழங்க
மறைமுழங்க மழைமுழங்கும்
சங்கபட கம்பேரி
தாரைகா ளந்தாளம்
எங்குமெழுந் தெதிரியம்ப
இருவிசும்பு கொடிதூர்ப்ப.
[620]
மலர்மாரி பொழிந்திழிய
மங்கலவாழ்த் தினிதிசைப்ப
அலர்வாசப் புனற்குடங்கள்
அணிவிளக்குத் தூபமுடன்
நிலைநீடு தோரணங்கள்
நிரைத்தடியார் எதிர்கொள்ளக்
கலைமாலை மதிச்சடையார்
இடம்பலவுங் கைதொழுவார்.
[621]
தெண்டிரைசூழ் கடற்கானல்
திருவகத்தி யான்பள்ளி
அண்டர்பிரான் கழல்வணங்கி
அருந்தமிழ்மா மறைபாடிக்
கொண்டல்பயில் மணற்கோடு
சூழ்கோடிக் குழகர்தமைத்
தொண்டருடன் தொழுதணைந்தார்
தோணிபுரத் தோன்றலார்.
[622]
கண்ணார்ந்த திருநுதலார்
மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா
வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும்
மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப்
பரவியே செல்கின்றார்.
[623]
திருவுசாத் தானத்துத்
தேவர்பிரான் கழல்பணிந்து
மருவியசெந் தமிழ்ப்பதிகம்
மால்போற்றும் படிபாடி
இருவினையும் பற்றறுப்பார்
எண்ணிறந்த தொண்டருடன்
பெருகுவிருப் பினராகிப்
பிறபதியும் பணிந்தணைவார்.
[624]
கருங்கழிவே லைப்பாலைக்
கழிநெய்தல் கடந்தருளித்
திருந்தியசீர்ப் புனல்நாட்டுத்
தென்மேல்பால் திசைநோக்கி
மருங்குமிடை தடஞ்சாலி
மாடுசெறி குலைத்தெங்கு
நெருங்கிவளர் கமுகுடுத்த
நிறைமருத வழிச்சென்றார்.
[625]
சங்கங்கள் வயலெங்கும்
சாலிகழைக் கரும்பெங்கும்
கொங்கெங்கும் நிறைகமலக்
குளிர்வாசத் தடமெங்கும்
அங்கங்கே உழவர்குழாம்
ஆர்க்கின்ற ஒலியெங்கும்
எங்கெங்கும் மலர்ப்படுகர்
இவைகழிய எழுந்தருளி.
[626]
தடமெங்கும் புனல்குடையும்
தையலார் தொய்யில்நிறம்
இடமெங்கும் அந்தணர்கள்
ஓதுகிடை யாகநிலை
மடமெங்கும் தொண்டர்குழாம்
மனையெங்கும் புனைவதுவை
நடமெங்கும் ஒலியோவா
நற்பதிகள் அவைகடந்து.
[627]
நீர்நாடு கடந்தருளி
நெடும்புறவிற் குறும்புதல்கள்
கார்நாடு முகைமுல்லைக்
கடிநாறு நிலங்கடந்து
போர்நாடுஞ் சிலைமறவர்
புன்புலவைப் பிடைபோகிச்
சீர்நாடு தென்பாண்டி
நன்னாடு சென்றணைவார்.
[628]
மன்றல்மலர்ப் பிறங்கல்மருங்
கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித்
திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தெனவுகைக்கும்
கானஅதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார்
மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.
[629]
கொடுங்குன்றத் தினிதமர்ந்த
கொழும்பவளச் செழுங்குன்றை
அடுங்குன்றம் உரித்தானை
வணங்கிஅருந் தமிழ்பாடி
நெடுங்குன்றம் படர்கானும்
நிறைநாடுங் கடந்துமதி
தொடுங்குன்ற மதில்மதுரைத்
தொன்னகர்வந் தணைகின்றார்.
[630]
இந்நிலை இவர்வந் தெய்த
எண்பெருங் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கட்
கழிவுமுன் சாற்ற லுற்றுப்
பன்முறை வெருக்கொண் டுள்ளம்
பதைப்பத்தீக் கனாக்க ளோடும்
துன்னிமித் தங்கள் அங்கு
நிகழ்ந்தன சொல்ல லுற்றாம்.
[631]
பள்ளிகள் மேலும் மாடு
பயில்அமண் பாழி மேலும்
ஒள்ளிதழ் அசோகின் மேலும்
உணவுசெய் கவளங் கையில்
கொள்ளும்மண் டபங்கள் மேலும்
கூகையோ டாந்தை தீய
புள்ளின மான தம்மில்
பூசலிட் டழிவு சாற்றும்.
[632]
பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்
கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக
வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு
மயங்கினர் அமண ரெல்லாம்.
[633]
கந்தியர் தம்மில் தாமே
கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்
மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட
பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந்
தீக்குணந் தலைநின் றார்கள்.
[634]
இப்படி அமணர் வைகும்
எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம்
ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும்
வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும்
தென்னவன் மதுரை சேர்ந்தார்.
[635]
அந்நகர் தன்னில் வாழ்வார்
புறம்புநின் றணைவார் கூடி
மன்னவன் தனக்குங் கூறி
மருண்டவுள் ளத்த ராகித்
துன்னிய அழுக்கு மெய்யில்
தூசிலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம்
எனஎடுத் தியம்ப லுற்றார்.
[636]
சீர்மலி அசோகு தன்கீழ்
இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக்
கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும்
எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக்
கண்டனம் என்று ரைப்பார்.
[637]
குண்டிகை தகர்த்துப் பாயும்
பீறியோர் குரத்தி யோடப்
பண்டிதர் பாழி நின்றுங்
கழுதைமேற் படர்வார் தம்பின்
ஒண்டொடி இயக்கி யாரும்
உளையிட்டுப் புலம்பி யோடக்
கண்டனம் என்று சொன்னார்
கையறு கவலை யுற்றார்.
[638]
கானிடை நட்ட மாடும்
கண்ணுதல் தொண்ட ரெல்லாம்
மீனவன் மதுரை தன்னில்
[639]
மழவிடை இளங்கன் றொன்று
வந்துநங் கழகந் தன்னை
உழறிடச் சிதறி யோடி
ஒருவருந் தடுக்க அஞ்சி
விழவொரு புகலு மின்றி
மேதினி தன்னை விட்டு
நிழலிலா மரங்கள் ஏறி
நின்றிடக் கண்டோம் என்பார்.
[640]
ஆவதென் பாவி காள்இக்
கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை
விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்த ராகி
நுகர்பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயலென் றெண்ணி
இடர்உழன் றழுங்கி னார்கள்.
[641]
அவ்வகை அவர்க ளெல்லாம்
அந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபில் வந்த
தடமயில் மடமென் சாயல்
பைவளர் அரவுஏர் அல்குல்
பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை அமைச்ச னார்க்கும்
விளங்குநன் னிமித்தம் மேன்மேல்.
[642]
அளவிலா மகிழ்ச்சி காட்டும்
அரும்பெரு நிமித்தம் எய்த
உளமகிழ் வுணருங் காலை
உலகெலாம் உய்ய வந்த
வளரொளி ஞானம் உண்டார்
வந்தணைந் தருளும் வார்த்தை
கிளர்வுறும் ஓகை கூறி
வந்தவர் மொழியக் கேட்டார்.
[643]
அம்மொழி விளம்பி னோர்க்கு
வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல்
விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம்
கைமிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர
மேவிய சிறப்பின் மிக்கார்.
[644]
மங்கையர்க் கரசி யார்பால்
வந்தடி வணங்கி நின்ற
கொங்கலர் தெரிய லாராம்
குலச்சிறை யாரை நோக்கி
நங்கள்தம் பிரானா ராய
ஞானபோ னகர்முன் பெய்தி
இங்கெழுந் தருள உய்ந்தோம்
எனஎதிர் கொள்ளும் என்றார்.
[645]
மன்றலங் குழலி னாரை
வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
எதிர்கொள எய்துங் காலை.
[646]
அம்புய மலராள் போல்வாள்
ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு மென்று
கொற்றவன் தனக்கும் கூறித்
தம்பரி சனங்கள் சூழத்
தனித்தடை யோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும்
நல்வர வேற்று நின்றார்.
[647]
திருநிலவு மணிமுத்தின்
சிவிகையின்மேல் சேவித்து
வருநிலவு தருமதிபோல்
வளரொளிவெண் குடைநிழற்றப்
பெருகொளிய திருநீற்றுத்
தொண்டர்குழாம் பெருகிவர
அருள்பெருக வருஞானத்
தமுதுண்டார் அணைகின்றார்.
[648]
துந்துபிகள் முதலாய
தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள்
ஆயிரமா மறையெடுப்ப
வந்தெழும்மங் கலநாதம்
மாதிரம்உட் படமுழங்கச்
செந்தமிழ்மா ருதம்எதிர்கொண்
டெம்மருங்குஞ் சேவிப்ப.
[649]
பண்ணியவஞ் சனைத்தவத்தால்
பஞ்சவன்நாட் டிடைப்பரந்த
எண்ணில்அமண் எனும்பாவ
இருஞ்சேனை இரிந்தோட
மண்ணுலக மேயன்றி
வானுலகம் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி
போலெய்தும் பொலிவெய்த.
[650]
துன்னும்முழு வுடல்துகளால்
சூழும்உணர் வினில்துகளால்
அன்னெறியிற் செறிந்தடைந்த
அமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினால்
தூய்மையினால் வழுதியர்தம்
கன்னிநாட் டிடைக்கங்கை
அணைந்ததெனுங் கவின்காட்ட.
[651]
பானல்வயல் தமிழ்நாடு
பழிநாடும் படிபரந்த
மானமிலா அமண்என்னும்
வல்லிருள்போய் மாய்வதனுக்
கானபெரு கொளிப்பரப்பால்
அண்டமெலாம் கொண்டதொரு
ஞானமணி விளக்கெழுந்து
வருவதென நலம்படைப்ப.
[652]
புரசைவயக் கடகளிற்றுப்
பூழியர்வண் டமிழ்நாட்டுத்
தரைசெய்தவப் பயன்விளங்கச்
சைவநெறி தழைத்தோங்க
உரைசெய்திருப் பேர்பலவும்
ஊதுமணிச் சின்னமெலாம்
பரசமய கோளரிவந்
தான்என்றுபணிமாற.
[653]
இப்பரி சணையும் சண்பையர் பெருமான்
எழுந்தரு ளும்பொழு திசைக்கும்
ஒப்பில்நித் திலப்பொன் தனிப்பெருங் காளம்
உலகுய்ய ஒலித்தெழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தம்
செவிநிறை அமுதெனத் தேக்க
அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே
அளப்பருங் களிப்பின ரானார்.
[654]
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல்
அணைந்திடக் கடிதுசென் றணைவார்
நஞ்சணி கண்டர் தந்திரு மகனா
ருடன்வரு நற்றவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வமுன் செல்லக்
கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர்
பாங்குற அணைந்துமுன் பணிந்தார்.
[655]
நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை
நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும்முன் னணைந்து வணங்கிமற் றவர்தாம்
படியின்நின் றெழாவகை கண்டு
மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி
வைதிகச் சேகரர் பாதம்
குலவிஅங் கணைந்தார் தென்னவ னமைச்சர்
குலச்சிறை யார்எனக் கூற.
[656]
சிரபுரச் செல்வர் அவருரை கேட்டுத்
திருமுகத் தாமரை மலர்ந்து
விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து
விரைந்துசென் றவர்தமை அணைந்து
கரகம லங்கள் பற்றியே எடுப்பக்
கைதொழு தவரும்முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி
வள்ளலார் மதுரவாக் களிப்பார்.
[657]
செம்பியர் பெருமான் குலமக ளார்க்குந்
திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம்பெரு மான்தன் திருவருள் பெருகும்
நன்மைதான் வாலிதே என்ன
வம்பலர் அலங்கல் மந்திரி யாரும்
மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத்
தன்மையாம் நிலையுரைக் கின்றார்.
[658]
சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனிஎதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.
[659]
இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி
எய்துதற் கரியபே றெய்தி
மங்கையர்க் கரசி யாரும்நம் முடைய
வாழ்வெழுந் தருளிய தென்றே
அங்குநீர் எதிர்சென் றடிபணி வீர்என்
றருள்செய்தார் எனத்தொழு தார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
போற்றினார் புரவலன் அமைச்சர்.
[660]
ஆங்ஙனம் போற்றி அடிபணிந் தவர்மேல்
அளவிலா அருள்புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித்
தலையளித் தருளும்அப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலும்
உயர்தவத் தொண்டரை நோக்கி
ஈங்குநம் பெருமான் திருவால வாய்மற்
றெம்மருங் கினதென வினவ.
[661]
அன்பராய் அவர்முன் பணிந்தசீ ரடியார்
அண்ணலார் அடியிணை வணங்கி
முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி
முருகலர் சோலைகள் சூழ்ந்து
மின்பொலி விசும்பை அளக்குநீள் கொடிசூழ்
வியனெடுங் கோபுரந் தோன்றும்
என்பணி அணிவார் இனிதமர்ந் தருளுந்
திருவால வாய்இது வென்றார்.
[662]
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க் கரசிஎன் றெடுத்தே
எண்டிசை பரவும் ஆலவாய் ஆவ
திதுவேஎன் றிருவர்தம் பணியும்
கொண்டமை சிறப்பித் தருளிநற் பதிகம்
பாடினார் குவலயம் போற்ற.
[663]
பாடிய பதிகம் பரவியே வந்து
பண்புடை யடியவ ரோடுந்
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.
[664]
ஆளும் அங்கணர் ஆலவாய்
அமர்ந்தினி திருந்த
காள கண்டரைக் கண்களின்
பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால்
பணிந்தெழ நிறையார்
மீள வும்பல முறைநில
முறவிழுந் தெழுவார்.
[665]
அங்கம் எட்டினும் ஐந்தினும்
அளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப்
புளகமும் பொழியும்
செங்கண் நீர்தரும் அருவியுந்
திகழ்திரு மேனி
எங்கு மாகிநின் றேத்தினார்
புகலியர் இறைவர்.
[666]
நீல மாமிடற் றாலவா
யான்என நிலவும்
மூல மாகிய திருவிருக்
குக்குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்தொண்டர்
தம்மொடும் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப்
புலவனார் தம்முன்.
[667]
சேர்த்தும் இன்னிசைப் பதிகமுந்
திருக்கடைக் காப்புச்
சார்த்தி நல்லிசைத் தண்தமிழ்ச்
சொல்மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடிவெண்
பிறையணி சென்னி
மூர்த்தி யார்கழல் பரவியே
திருமுன்றில் அணைய.
[668]
பிள்ளையார் எழுந் தருளிமுன்
புகுதும்அப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார்
தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட எதிர்செலா
தொருமருங் கொதுங்கும்
தெள்ளு நீர்விழித் தெரிவையார்
சென்றுமுன் பெய்த.
[669]
மருங்கின் மந்திரி யார்பிள்ளை
யார்கழல் வணங்கிக்
கருங்கு ழற்கற்றை மேற்குவி
கைத்தளிர் உடையார்
பருங்கை யானைவாழ் வளவர்கோன்
பாவையார் என்னப்
பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர்
பிள்ளையார் அணைந்தார்.
[670]
தென்ன வன்பெருந் தேவியார்
சிவக்கன்றின் செய்ய
பொன்ன டிக்கம லங்களிற்
பொருந்தமுன் வீழ்ந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார்
மகிழ்சிறந் தளிக்கும்
இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந்
திருக்கையால் எடுத்தார்.
[671]
ஞான போனகர் எதிர்தொழு
தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற்
றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த
தவமென்கொல் என்றார்.
[672]
யாழின் மென்மொழி யார்மொழிந்
தெதிர்கழல் வணங்கக்
காழி வாழவந் தருளிய
கவுணியர் பிரானும்
சூழு மாகிய பரசம
யத்திடைத் தொண்டு
வாழு நீர்மையீர் உமைக்காண
வந்தனம் என்றார்.
[673]
இன்ன வாறருள் செய்திடத்
தொழுதடி வீழ்ந்தார்
மன்னு மந்திரி யார்வரு
திறமெலாம் மொழிய
அன்ன மென்னடை யார்தமக்
கருள்செய்து போக்கித்
துன்னு மெய்த்தொண்டர் சூழவந்
தருளும்அப் பொழுது.
[674]
செல்வம் மல்கியதிரு வால
வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார்
மருங்கணைந் திறைஞ்சி
மல்கு கார்அமண் இருள்கெட
ஈங்குவந் தருள
எல்லை யில்தவஞ் செய்தனம்
எனஎடுத் திசைத்தார்.
[675]
அத்தி ருத்தொண்டர் தங்களுக்
கருள்முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும்
புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார்
திருமடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்
தொடும்இனி தமர்ந்தார்.
[676]
பரவு காதலில் பாண்டிமா
தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறை
யார்விருந் தளிப்பச்
சிரபு ரத்துவந் தருளிய
செல்வர்அங் கிருந்தார்
இரவி மேற்கடல் அணைந்தனன்
எல்லிவந் தணைய.
[677]
வழுதி மாநகர் அதனிடை
மாமறைத் தலைவர்
பழுதில் சீரடி யாருடன்
பகல்வரக் கண்ட
கழுது போல்வருங் காரமண்
குண்டர்கள் கலங்கி
இழுது மையிருட் கிருளென
ஈண்டினர் ஒருபால்.
[678]
அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத்
தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி
கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம்
புக்கிடப் பொறாராய்.
[679]
மற்றிவ் வான்பழி மன்னவன்
மாறனை எய்திச்
சொற்றும் என்றுதம் சூழ்ச்சியும்
ஒருபடி துணிவார்
கொற்ற வன்கடை காவலர்
முன்சென்று குறுகி
வெற்றி வேலவற்கு எங்களை
விளம்புவீர் என்றார்.
[680]
வாயில் காவலர் மன்னவன்
தனைஎதிர் வணங்கி
ஆய மாகிவந் தடிகள்மார்
அணைந்தனர் என்ன
ஏயி னான்அணை வாரென
அவருஞ்சென் றிசைத்தார்
பாயி னால்உடல் மூடுவார்
பதைப்புடன் புக்கார்.
[681]
புக்க போதவர் அழிவுறு
மனத்திடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும்
கண்டெதிர் வினவி
ஒக்க நீர்திரண் டணைவதற்
குற்றதென் என்னத்
தக்க தல்லதீங் கடுத்தது
சாற்றுதற் கென்றார்.
[682]
ஆவ தேல்நுமக் கடுத்தது
கூறுவீர் என்று
காவ லன்பரிந் துரைத்தலும்
கார்அமண் கையர்
மாவ லாய்உன்றன் மதுரையிற்
சைவவே தியர்தாம்
மேவ லால்இன்று கண்டுமுட்
டியாமென்று விளம்ப.
[683]
என்று கூறலும் கேட்டுமுட்
டியானும்என் றியம்பி
நன்று நல்லறம் புரிந்தவா
நானென்று நகுவான்
கன்றும் உள்ளத்த னாகிஅக்
கண்ணுதல் அடியார்
இன்றுஇம் மாநகர் அணைந்ததென்
அவர்கள்யார் என்றான்.
[684]
மாலை வெண்குடை வளவர்சோ
ணாட்டுவண் புகலிச்
சூல பாணிபால் ஞானம்பெற்
றானென்று சுருதிப்
பாலன் அன்பர்தங் குழாத்தொடும்
பனிமுத்தின் சிவிகை
மேல ணைந்தனன் எங்களை
வாதினில் வெல்ல.
[685]
என்று கூறுவார் இத்திற
முன்புதா மறிந்த
தொன்றும் அங்கொழி யாவகை
உரைத்தலும் தென்னன்
மன்ற லம்பொழிற் சண்பையார்
வள்ளலார் நாமம்
சென்று தன்செவி நிறைத்தலும்
செயிர்த்துமுன் சொல்வான்.
[686]
மற்ற மாமறை மைந்தன்இம்
மருங்கணைந் தானேல்
உற்ற செய்தொழில் யாதுசெய்
கோம்என உரைப்பச்
செற்ற மீக்கொண்ட சிந்தையும்
செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கெதிர்
குறித்துரை செய்வார்.
[687]
வந்த அந்தணன் தன்னைநாம்
வலிசெய்து போக்கும்
சிந்தை யன்றிஅச் சிறுமறை
யோனுறை மடத்தில்
வெந்த ழற்பட விஞ்சைமந்
திரத்தொழில் விளைத்தால்
இந்த மாநகர் இடத்திரான்
ஏகும்என் றிசைத்தார்.
[688]
ஆவதொன் றிதுவே யாகில்
அதனையே விரைந்து செய்யப்
போவதென் றவரைப் போக்கிப்
பொய்ப்பொரு ளாகக்கொண்டான்
யாவது உரையா டாதே
எண்ணத்திற் கவலை யோடும்
பூவணை அமளி புக்கான்
பொங்கெழில் தேவி சேர்ந்தாள்.
[689]
மன்னவன் உரைப்ப தின்றி
இருக்கமா தேவி யார்தாம்
என்னுயிர்க் குயிராய் உள்ள
இறைவநீ உற்ற தென்னோ
முன்னுள மகிழ்ச்சி இன்றி
முகம்புலர்ந் திருந்தாய் இன்று
பன்னிய உள்ளத் தெய்தும்
பருவரல் அருள்செய் என்றார்.
[690]
தேவியார் தம்மை நோக்கித்
தென்னவன் கூறு கின்றான்
காவிநீள் கண்ணி னாய்கேள்
காவிரி நாட்டின் மன்னும்
தாவில்சீர்க் கழும லத்தான்
சங்கர னருள்பெற் றிங்கு
மேவினான் அடிகள் மாரை
வாதினில் வெல்ல என்று.
[691]
வெண்பொடி பூசுந் தொண்டர்
விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள்
கேட்டுமுட் டியானுங் காதல்
வண்டுணத் துதைந்த கோதை
மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும்
பரிசுவே றில்லை என்றான்.
[692]
மன்னவன் உரைப்பக் கேட்டு
மங்கையர்க் கரசி யார்தாம்
நின்னிலை யிதுவே யாகில்
நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால்
வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகும்
சுழிவுறேல் மன்ன என்றார்.
[693]
சிந்தையிற் களிப்பு மிக்குத்
திருக்கழு மலத்தார் வேந்தன்
வந்தவா றெம்மை யாள
எனவரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக்
குலச்சிறை யார்அங் கெய்த
இந்தநன் மாற்றம் எல்லாம்
அவர்க்குரைத் திருந்த பின்னர்.
[694]
கொற்றவன் அமைச்ச னாரும்
கைதலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளை யாரிங்
கணைந்திடப் பெறும்பே றென்பார்
இற்றைநாள் ஈசன் அன்பர்
தம்மைநாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்றினிச் சமணர் செய்யும்
வஞ்சனை அறியோம் என்றார்.
[695]
மானியார் தாமும் அஞ்சி
வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார்
செய்வதென் நாம்என் றெண்ணி
ஞானசம் பந்தர் தம்பால்
நன்மையல் லாத செய்ய
ஊனம்வந் தடையில் யாமும்
உயிர்துறந் தொழிவ தென்றார்.
[696]
இவர்நிலை இதுவே யாக
இலங்குவேல் தென்ன னான
அவன்நிலை யதுவாம் அந்நாள்
அருகர்தம் நிலையா தென்னில்
தவமறைந் தல்ல செய்வார்
தங்கள்மந் திரத்தால் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார்
திருமடஞ் சேரச் செய்தார்.
[697]
ஆதி மந்திரம் அஞ்செழுத்
தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந்
திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்தில்தாம்
புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண்
குண்டர்கள் தளர்ந்தார்.
[698]
தளர்ந்து மற்றவர் தாஞ்செய்த
தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம்முன் கெழுமிய
கீழ்மையோர் கூடி
விளங்கு நீள்முடி வேந்தன்
ஈதறியின்நம் மேன்மை
உளங்கொ ளான்நமர் விருத்தியும்
ஒழிக்குமென் றுணர்வார்.
[699]
மந்தி ரச்செயல் வாய்த்தில
மற்றினிச் செய்யும்
புந்தி யாவதிங் கிதுஎனப்
பொதிதழல் கொடுபுக்
கந்தண் மாதவர் திருமடப்
புறத்தயல் இருள்போல்
வந்து தந்தொழில் புரிந்தனர்
வஞ்சனை மனத்தோர்.
[700]
திரும டப்புறச் சுற்றினில்
தீயபா தகத்தோர்
மருவு வித்தஅத் தொழில்வெளிப்
படுதலும் மறுகிப்
பரிச னத்தவர் பதைப்பொடும்
சிதைத்தது நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை
தெளிந்துசென் றணைவார்.
[701]
கழும லப்பதிக் கவுணியர்
கற்பகக் கன்றைத்
தொழுது நின்றமண் குண்டர்செய்
தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும்இத்
திருமடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள்
எனப்பரிந் தருளி.
[702]
என்பொ ருட்டவர் செய்ததீங்
காயினும் இறையோன்
அன்ப ருக்கெய்து மோஎன்று
பின்னையும் அச்சம்
முன்பு றப்பின்பு முனிவுற
முத்தமிழ் விரகர்
மன்பு ரக்குமெய்ம் முறைவழு
எனமனங் கொண்டார்.
[703]
வெய்ய தீங்கிது வேந்தன்மேற்
றெனும்விதி முறையால்
செய்ய னேதிரு வாலவாய்
எனுந்திருப் பதிகம்
சைவர் வாழ்மடத் தமணர்கள்
இட்டதீத் தழல்போய்ப்
பைய வேசென்று பாண்டியற்
காகெனப் பணித்தார்.
[704]
பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பி னாலும்
அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.
[705]
திருந்தி சைப்பதி கத்தொடை
திருவால வாயில்
மருந்தி னைச்சண்பை மன்னவர்
புனைந்திட அருளால்
விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த்
தென்னனை மேவிப்
பெருந்த ழற்பொதி வெதுப்பெனப்
பெயர்பெற்ற தன்றே.
[706]
செய்ய மேனியர் திருமக
னார்உறை மடத்தில்
நையும் உள்ளத்த ராய்அமண்
கையர்தாம் நணுகிக்
கையி னால்எரி இடவுடன்
படும்எல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை
எழுந்தனன் மீது.
[707]
இரவு பாதகர் செய்ததீங்
கிரவிதன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறை
யாருடன் கேட்டுச்
சிரபு ரப்பிள்ளை யாரைஇத்
தீயவர் நாட்டு
வரவ ழைத்தநாம் மாய்வதே
எனமனம் மயங்கி.
[708]
பெருகும் அச்சமோ டாருயிர்
பதைப்பவர் பின்பு
திரும டப்புற மருங்குதீ
தின்மையில் தெளிந்து
கருமு ருட்டமண் கையர்செய்
தீங்கிது கடைக்கால்
வருவ தெப்படி யாமென
மனங்கொளும் பொழுது.
[709]
அரச னுக்குவெப் படுத்ததென்
றருகுகஞ் சுகிகள்
உரைசெ யப்பதைத் தொருதனித்
தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேற்கொளக்
குலச்சிறை யாரும்
வரைசெய் பொற்புய மன்னவன்
மருங்குவந் தணைந்தார்.
[710]
வேந்த னுக்குமெய் விதிர்ப்புற
வெதுப்புறு வெம்மை
காந்து வெந்தழற் கதுமென
மெய்யெலாங் கவர்ந்து
போந்து மாளிகைப் புறத்துநின்
றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது
விழுந்துடல் திரங்க.
[711]
உணர்வும் ஆவியும் ஒழிவதற்
கொருபுடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகுதூ
ரத்திடை அகலப்
புணர்இ ளங்கத லிக்குருத்
தொடுதளிர் புடையே
கொணரி னுஞ்சுருக் கொண்டவை
நுண்துக ளாக.
[712]
மருத்து நூலவர் தங்கள்பல்
கலைகளில் வகுத்த
திருத்த குந்தொழில் யாவையும்
செய்யவும் மேன்மேல்
உருத்தெ ழுந்தவெப் புயிரையும்
உருக்குவ தாகக்
கருத்தொ ழிந்துரை மறந்தனன்
கௌரியர் தலைவன்.
[713]
ஆன வன்பிணி நிகழ்வுழி
அமணர்க ளெல்லாம்
மீன வன்செயல் கேட்டலும்
வெய்துயிர்த் தழிந்து
போன கங்குலிற் புகுந்ததின்
விளைவுகொல் என்பார்
மானம் முன்தெரி யாவகை
மன்னன்மாட் டணைந்தார்.
[714]
மால்பெருக்குஞ் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதிநிலை கண்டழிந்து வந்த நோயின்
மூலநெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழிநவில்மந் திரங்கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற் கெடுத்த போது
பிடித்தபீ லிகள்பிரம்பி னோடுந் தீந்து
மேலெரியும் பொறிசிதறி வீழக் கண்டு
வெப்பினதி சயம்நோக்கி வெருவின் மிக்கார்.
[715]
கருகியமா சுடையாக்கைத் தீயோர் தங்கள்
கைத்தூங்கு குண்டிகைநீர் தெளித்துக் காவாய்
அருகனே அருகனே என்றென் றோதி
அடல்வழுதி மேல்தெளிக்க அந்நீர் பொங்கிப்
பெருகும்எரி தழற்சொரிந்த நெய்போ லாகிப்
பேர்த்துமொரு தழல்அதன்மேற் பெய்தாற் போல
ஒருவரும்இங் கிருமருங்கும் இராது போமென்
றமணரைப்பார்த் துரைத்தரசன் உணர்வு சோர்ந்தான்.
[716]
பாண்டிமா தேவி யாரும்
பயமெய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப்
புகலியில் வந்து நம்மை
ஆண்டுகொண் டவர்பாற் கங்குல்
அமணர்தாம் செய்த தீங்கு
மூண்டவா றினைய தாகி
முடிந்ததோ என்று கூற.
[717]
கொற்றவன் அமைச்ச னாராம்
குலச்சிறை யாருந் தாழ்ந்து
மற்றிதன் கொடுமை இந்த
வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பாற்
செய்ததீங் கரசன் பாங்கு
முற்றிய திவர்கள் தீர்க்கின்
முதிர்வதே யாவ தென்பார்.
[718]
இருதிறத் தவரும் மன்னன்
எதிர்பணிந்து இந்த வெப்பு
வருதிறம் புகலி வந்த
வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய
அநுசித மதனால் வந்து
பெருகிய திதற்குத் தீர்வு
பிள்ளையார் அருளே என்று.
[719]
காயமும் மனமும் மாசு
கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை
வளர்ப்பதே வளர்வெண் திங்கள்
மேயவே ணியர்பால் ஞானம்
பெற்றவர் விரும்பி நோக்கில்
தீயஇப் பிணியே அன்றிப்
பிறவியுந் தீரு மென்றார்.
[720]
மீனவன் செவியி னூடு
மெய்யுணர் வளிப்போர் கூற
ஞானசம் பந்த ரென்னும்
நாமமந் திரமுஞ் செல்ல
ஆனபோ தயர்வு தன்னை
அகன்றிட அமண ராகும்
மானமில் லவரைப் பார்த்து
மாற்றமொன் றுரைக்க லுற்றான்.
[721]
மன்னவன் அவரை நோக்கி
மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவா றெய்தும் நோய்க்கே
ஏதுவா யினஎன் றெண்ணி
மன்னிய சைவ நீதி
மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்
அகலுமேல் அறிவேன் என்றான்.
[722]
என்றுமுன் கூறிப் பின்னும்
யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன்
விரகுண்டேல் அழையும் என்ன
அன்றவர் உவகை பொங்கி
ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங்
காதல்வெள் ளத்தில் செல்வார்
[723]
பாயுடைப் பாத கத்தோர்
திருமடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி
உள்ளழி திருவுள் ளத்தால்
மேயஅத் துயரம் நீங்க
விருப்புறு விரைவி னோடு
நாயகப் பிள்ளை யார்தம்
நற்பதம் பணிவா ராகி.
[724]
மன்னவன் இடும்பை தீர
மற்றவன் பணிமேற் கொண்டே
அன்னமென் டையி னாரும்
அணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ
வேற்படை அமைச்ச னாரும்
முன்னணைந் தேகச் சண்பை
முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
[725]
திருமடஞ் சாரச் சென்று
சேயரிக் கண்ணி னார்முன்
வருபரி இழிந்து நின்ற
அமைச்சனார் வந்த பான்மை
சிரபுரப் பிள்ளை யார்க்கு
விண்ணப்பஞ் செய்வீர் என்னப்
பரிசனத் தவரும் புக்குப்
பதமறிந் துணர்த்து கின்றார்.
[726]
பாண்டிமா தேவி யாரும்
பரிவுடை அமைச்ச னாரும்
ஈண்டுவந் தணைந்தா ரென்று
விண்ணப்பஞ் செய்யச் சண்பை
ஆண்டகை யாரும் ஈண்ட
அழையுமென் றருளிச் செய்ய
மீண்டுபோந் தழைக்கப் புக்கார்
விரைவுறு விருப்பின் மிக்கார்.
[727]
ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
கண்களிப்பக் கண்டார்கள்.
[728]
கண்டபொழு தமண்கொடியோர்
செய்தகடுந் தொழில்நினைந்தே
மண்டியகண் ணருவிநீர்
பாயமலர்க் கைகுவித்துப்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில முறவிழுந்தார்
கொண்டகுறிப் போடுநெடி
துயிர்த்தழிந்த கொள்கையராய்.
[729]
உரைகுழறி மெய்ந்நடுங்கி
ஒன்றும்அறிந் திலராகித்
தரையின்மிசைப் புரண்டயர்ந்து
சரணகம லம்பற்றிக்
கரையில்கவ லைக்கடற்கோர்
கரைபற்றி னார்போன்று
விரைவுறுமெய் அன்பினால்
விடாதொழிவார் தமைக்கண்டு.
[730]
அருமறைவாழ் பூம்புகலி
அண்ணலார் அடிபூண்ட
இருவரையுந் திருக்கையால்
எடுத்தருளித் தேற்றிடவும்
தெருமந்து தெளியாதார்
தமைநோக்கிச் சிறப்பருளித்
திருவுடையீர் உங்கள்பால்
தீங்குளதோ எனவினவ.
[731]
வெஞ்சமணர் முன்செய்த
வஞ்சனைக்கு மிகஅழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்
கடாதென்றே அதுதீர்ந்தோம்
வஞ்சகர்மற் றவர்செய்த
தீத்தொழில்போய் மன்னவன்பால்
எஞ்சலிலாக் கொடுவெதுப்பாய்
எழாநின்ற தெனத்தொழுது.
[732]
வெய்யதொழில் அமண்குண்டர்
விளைக்கவரும் வெதுப்பவர்தாஞ்
செய்யுமதி மாயைகளால்
தீராமைத் தீப்பிணியால்
மையலுறு மன்னவன்முன்
மற்றவரை வென்றருளில்
உய்யும்எம துயிரும் அவன்
உயிருமென உரைத்தார்கள்.
[733]
என்றவர் உரைத்த போதில்
எழில்கொள்பூம் புகலி வேந்தர்
ஒன்றும்நீர் அஞ்ச வேண்டா
உணர்விலா அமணர் தம்மை
இன்றுநீர் உவகை எய்த
யாவருங் காண வாதில்
வென்றுமீ னவனை வெண்ணீ
றணிவிப்பன் விதியால் என்றார்.
[734]
மொழிந்தருள அதுகேட்டு
முன்னிறைஞ்சி முகமலர்வார்
அழுந்தும்இடர்க் கடலிடைநின்
றடியோமை எடுத்தருளச்
செழுந்தரளச் சிவிகையின்மேல்
தென்னாடு செய்தவத்தால்
எழுந்தருளப் பேறுடையோம்
என்பெறோம் எனத்தொழலும்.
[735]
ஆவதும் அழிவும் எல்லாம்
அவர்செயல் அமண ராகும்
பாவகா ரிகளை நோக்கும்
பழுதுடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியி னார்தந்
திருவுள்ளம் அறிவே னென்று
பூவலர் பொழில்சூழ் சண்பைப்
புரவலர் போது கின்றார்.
[736]
வையகம் உய்ய வந்த
வள்ளலார் மடத்தி னின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர்
வெள்ளமும் தாமும் போந்து
கையிணை தலையின் மீது
குவியக்கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும்
திருவால வாயுள் புக்கார்.
[737]
நோக்கிட விதியி லாரை
நோக்கியான் வாது செய்யத்
தீக்கனல் மேனி யானே
திருவுள மேஎன் றெண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள
பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கிவண் டமிழ்செய் மாலைப்
பதிகந்தான் நுவல லுற்றார்.
[738]
கானிடை ஆடு வாரைக்
காட்டுமா வுரிமுன் பாடித்
தேனலர் கொன்றை யார்தம்
திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி
என்றெடுத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை
வாதில்வென் றழிக்கப் பாடி.
[739]
ஆலமே அமுத மாக
உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்
காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக
வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில்
சிவபெரு மானே என்றார்.
[740]
நாதர்தம் அருள்முன் பெற்று
நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி
விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத் தோடும்
விருப்புறு தொண்டர் சூழ
மூதெயில் கபாடம் நீடு
முதல்திரு வாயில் சார்ந்தார்.
[741]
அம்மலர்க் குழலி னார்க்கும்
அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம்மணிப் பலகை முத்தின்
சிவிகைமேற் கொண்ட போதில்
எம்மருங் கினிலும் தொண்டர்
எடுத்தஆர்ப் பெல்லை இன்றி
மும்மைநீ டுலக மெல்லாம்
முழுதுடன் நிறைந்த தன்றே.
[742]
பல்லிய நாதம் பொங்கப்
படர்திரு நீற்றின் சோதி
நல்லொளி வட்ட மாகி
நண்ணிமேல் வருவ தென்ன
வில்வளர் தரளக் கோவை
வெண்குடை நிழற்றி வெவ்வே
றெல்லையில் முத்தின் காளம்
தாரைசங் கெங்கும் ஊத.
[743]
கண்ணினுக் கணியாய் உள்ளார்
எழுச்சியிற் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு
நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்கொல்
பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து
மதுரையில் புகுத என்றார்.
[744]
தென்னவன் தேவி யாரும்
திருமணிச் சிவிகை மீது
பின்வர அமைச்சர் முன்பு
பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன்னணி மாட வீதி
யூடெழுந் தருளிப் புக்கார்
கன்னிநா டுடையான் கோயில்
காழிநா டுடைய பிள்ளை.
[745]
கொற்றவன் தன்பால் முன்பு
குலச்சிறை யார்வந் தெய்திப்
பொற்றட மதில்சூழ் சண்பைப்
புரவலர் வரவு கூற
முற்றுயர் சிறிது நீங்கி
முழுமணி அணிப்பொற் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்
திடுகென வல்ல னானான்.
[746]
மந்திரி யாரைப் பின்னும்
எதிர்செல மன்னன் ஏவச்
சிந்தையுள் மகிழ்ந்து போந்தார்
செயலையான் சமயத் துள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன்
பரிசுகண் டிதுவோ பண்பால்
நந்தனிச் சமயந் தன்னை
நாட்டுமா றென்று பின்னும்.
[747]
நின்அற நெறியை நீயே
காத்தருள் செய்தி யாகில்
அன்னவர் தம்மை இங்கே
அழைத்தனை அவரும் யாமும்
முன்னுற ஒக்கத் தீர்க்க
மொழிந்துமற் றவரால் தீர்ந்த
தென்னினும் யாமும் தீர்த்தோ
மாகவும் இசைவா யென்றார்.
[748]
பொய்தவ மாகக் கொண்ட
புன்தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன்வந் தெய்தும்
செவ்விமுன் னுறுத லாலே
எய்திய தெய்வச் சார்வால்
இருதிறத் தீருந் தீரும்
கைதவம் பேச மாட்டேன்
என்றுகை தவனுஞ் சொன்னான்.
[749]
என்றவன் உரைப்பக் குண்டர்
எண்ணங்கெட் டிருந்த எல்லைத்
தென்தமிழ் நாடு செய்த
செய்தவக் கொழுந்து போல்வார்
வன்தனிப் பவனம் முன்னர்
வாயிலுள் அணைந்து மாடு
பொன்திகழ் தரளப் பத்திச்
சிவிகைநின் றிழிந்து புக்கார்.
[750]
குலச்சிறை யார்முன் பெய்தக்
கொற்றவன் தேவி யாரும்
தலத்திடை இழிந்து சென்றார்
தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று
நீளிருள் நீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலும்
கவுணியர் தம்மைக் கண்டான்.
[751]
கண்டஅப் பொழுதே வேந்தன்
கையெடுத் தெய்த நோக்கித்
தண்துணர் முடியின் பாங்கர்த்
தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி
அதன்மிசை இருந்தார் மாயை
கொண்டவல் லமணர் எல்லாம்
குறிப்பினுள் அச்சங் கொண்டார்.
[752]
செழியனும் பிள்ளை யார்தம்
திருமேனி காணப் பெற்று
விழியுற நோக்க லாலே
வெம்மைநோய் சிறிது நீங்கி
அழிவுறும் மனம் நேர்நிற்க
அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியா தென்று
விருப்புடன் கேட்ட போது.
[753]
பொன்னிவளந் தருநாட்டுப்
புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலம்நாம்
கருதுமூர் எனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும்
பரவியசொல் திருப்பதிகம்
தென்னவன்முன் பருள்செய்தார்
திருஞான சம்பந்தர்.
[754]
பிள்ளையார் செம்பொன்மணிப்
பீடத்தில் இருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினால்
உழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்சம்
மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழும் அனற்கண்கள்
சிவந்துபல சொல்லுவார்.
[755]
காலையெழுங் கதிரவனைப்
புடைசூழுங் கருமுகில்போல்
பீலிசேர் சமண்கையர்
பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால்
வெல்வதனுக் கெண்ணித்தாம்
கோலுநூ லெடுத்தோதித்
தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்.
[756]
பிள்ளையார் அதுகேளாப்
பேசுகநும் பொருளெல்லை
உள்ளவா றென்றருள
ஊத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளிஎழுந் தநேகராய்ச்
சூழ்ந்துபத றிக்கதற
ஒள்ளிழையார் அதுகண்டு
பொறாராகி உள்நடுங்கி.
[757]
தென்னவன் தன்னை நோக்கித்
திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்
றிவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்
வள்ளலார் தீர நல்கும்
பின்னையிவ் வமணர் மூள்வார்
வல்லரேல் பேச என்றார்.
[758]
மாறனும் அவரை நோக்கி
வருந்தல்நீ என்று மற்று
வேறுவா தென்கொல் என்மேல்
வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக்
கன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை
என்னிடைத் தெரிப்பீர் என்றான்.
[759]
ஞானஆ ரமுத முண்டார்
நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
றெழுந்திருப் பதிகம் பாடி.
[760]
பெற்றியால் அருளிச் செய்த
பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்றுநின் றழைத்தல் ஓவா
அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற
பிணியைநீர் இகலித் தீரும்
தெற்றெனத் தீர்த்தார் வாதில்
வென்றனர் என்று செப்ப.
[761]
மன்னவன் மாற்றங் கேட்டு
வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்து மென்றார்.
[762]
யாதும்ஒன் றறிவி லாதார்
இருளென அணையச் சென்று
வாதினில் மன்ன வன்தன்
வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு
தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன்
சிரபுரத் தவரைப் பார்த்தான்.
[763]
தென்னவன் நோக்கங் கண்டு
திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும்மந் திரமு மாகி
மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைக ளேத்திப்
பகர்திருப் பதிகம் பாடி.
[764]
திருவளர் நீறு கொண்டு
திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
பொய்கையிற் குளிர்ந்த தப்பால்
மருவிய இடப்பால் மிக்க
அழலெழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்புங் கூடி
இடங்கொளா தென்னப் பொங்க.
[765]
உறியுடைக் கையர் பாயின்
உடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத்
தென்னன்வெப் புறுதீத் தம்மை
எறியமா சுடலுங் கன்றி
அருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை ஒத்தார்
அறிவிலா நெறியில் நின்றார்.
[766]
பலர்தொழும் புகலி மன்னர்
ஒருபுடை வெப்பைப் பாற்ற
மலர்தலை யுலகின் மிக்கார்
வந்ததி சயித்துச் சூழ
இலகுவேல் தென்னன் மேனி
வலமிடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
ஒதுங்கினால் ஒத்த தன்றே.
[767]
மன்னவன் மொழிவான் என்னே
மதித்தஇக் காலம் ஒன்றில்
வெந்நர கொருபா லாகும்
வீட்டின்பம் ஒருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகும்
சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றேன்
இருதிறத் தியல்பும் என்பான்.
[768]
வெந்தொழில் அருகர் தோற்றீர்
என்னைவிட் டகல நீங்கும்
வந்தெனை உய்யக் கொண்ட
மறைக்குல வள்ள லாரே
இந்தவெப்பு அடைய நீங்க
எனக்கருள் புரிவீ ரென்று
சிந்தையால் தொழுது சொன்னான்
செல்கதிக் கணிய னானான்.
[769]
திருமுகங் கருணை காட்டத்
திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கு மாற்றால்
பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண்
ஒழிந்துவெப் பகன்று பாகம்
மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும்
முழுதும் உய்ந்தான்.
[770]
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத்
தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை யின்று
பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே
உளங்களித் துவகை மிக்கார்.
[771]
மீனவன் தன்மேல் உள்ள
வெப்பெலாம் உடனே மாற
ஆனபே ரின்ப மெய்தி
உச்சிமே லங்கை கூப்பி
மானமொன் றில்லார் முன்பு
வன்பிணி நீக்க வந்த
ஞானசம் பந்தர் பாதம்
நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.
[772]
கந்துசீறு மாலியானை
மீனவன் கருத்துநேர்
வந்துவாய்மை கூறமற்று
மாசுமேனி நீசர்தாம்
முந்தைமந் திரத்துவிஞ்சை
முற்றம்எஞ்ச அஞ்சியே
சிந்தைசெய்து கைவருந்
திறந்தெரிந்து தேடுவார்.
[773]
சைவமைந்தர் சொல்லின்வென்றி
சந்தஇன்சொல் மாலையால்
கைதவன்தன் வெப்பொழித்த
தன்மைகண் டறிந்தனம்
மெய்தெரிந்த தர்க்கவாதம்
வெல்லல்ஆவ தன்றுவே
றெய்துதீயின் நீரில்வெல்வ
தென்றுதம்மில் எண்ணினார்.
[774]
பிள்ளையாரும் உங்கள்வாய்மை
பேசுமின்கள் என்றலும்
தள்ளுநீர்மை யார்கள்வேறு
தர்க்கவாதி னுத்தரம்
கொள்ளும் வென்றிஅன்றியே
குறித்தகொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில்
உய்ப்பதென்ன ஒட்டினார்.
[775]
என்றுவாது கூறலும்
இருந்ததென்னர் மன்னனும்
கன்றிஎன் உடம்பொடுங்க
வெப்புநோய் கவர்ந்தபோ
தொன்றும்அங் கொழித்திலீர்கள்
என்னவா துமக்குஎனச்
சென்றுபின்னும் முன்னும்நின்று
சில்லிவாயர் சொல்லுவார்.
[776]
என்னவாது செய்வதென்
றுரைத்ததே வினாவெனாச்
சொன்னவா சகந்தொடங்கி
ஏடுகொண்டு சூழ்ச்சியால்
மன்னுதம் பொருட்கருத்தின்
வாய்மைதீட்டி மாட்டினால்
வெந்நெருப்பின் வேவுறாமை
வெற்றியாவ தென்றனர்.
[777]
என்றபோது மன்னன்ஒன்
றியம்புமுன்பு பிள்ளையார்
நன்றுநீ ருரைத்தவாறு
நாடுதீயி லேடுதான்
வென்றிடிற் பொருட்கருத்து
மெய்ம்மையாவ தென்றிரேல்
வன்றனிக்கை யானைமன்னன்
முன்புவம்மின் என்றனர்.
[778]
அப்ப டிக்கெதிர் அமணரும்
அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர்
காவலர் உரையால்
செப்ப ருந்திறல் மன்னனும்
திருந்தவை முன்னர்
வெப்பு றுந்தழல் அமைக்கென
வினைஞரை விடுத்தான்.
[779]
ஏய மாந்தரும் இந்தனங்
குறைத்துடன் அடுக்கித்
தீய மைத்தலும் சிகைவிடு
புகைஒழிந்து எழுந்து
காயும் வெவ்வழற் கடவுளும்
படரொளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும்
அணையவந் தருளி.
[780]
செங்கண் ஏற்றவ ரேபொருள்
என்றுதாம் தெரித்த
பொங்கி சைத்திருப் பதிகநன்
முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள்
எனத்தொழு தெடுத்தே
அங்கை யால்முடி மிசைக்கொண்டு
காப்புநாண் அவிழ்த்தார்.
[781]
சாற்று மெய்ப்பொருள் தருந்திரு
முறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும்
வந்துநேர்ந் துளதால்
நாற்ற டம்புயத் தண்ணலார்
மருவுநள் ளாறு
போற்றும் அப்பதிகம் போக
மார்த்தபூண் முலையாள்.
[782]
அத்தி ருப்பதி கத்தினை
அமர்ந்துகொண் டருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள்
ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு ஏட்டினைக்
கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர்
கவுணியர் தலைவர்.
[783]
நன்மை உய்க்கும்மெய்ப் பதிகத்தின்
நாதனென் றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன்
நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொரு ளாமெனக்
காட்டிட வன்னி
தன்னி லாகெனத் தளிரிள
வளரொளி பாடி.
[784]
செய்ய தாமரை அகவித
ழினும்மிகச் சிவந்த
கையி லேட்டினைக் கைதவன்
பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை
யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர்
மகிழ்ந்துமுன் னிட்டார்.
[785]
இட்ட ஏட்டினில் எழுதிய
செந்தமிழ்ப் பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை
மலைமகள் பாகத்
தட்டமூர்த்தியைப் பொருளென
உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய்
விளங்கிய தன்றே.
[786]
மையல் நெஞ்சுடை அமணரும்
தம்பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவுசெந்
தீயினில் இடுவார்
உய்யு மோஇது வெனஉறும்
கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சின ராகியே
நடுங்கிநின் றிட்டார்.
[787]
அஞ்சும் உள்ளத்த ராகியும்
அறிவிலா அமணர்
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில்
விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது
படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை
சோர்ந்திலர் நின்றார்.
[788]
மான மன்னவன் அவையின்முன்
வளர்த்தசெந் தீயின்
ஞானம் உண்டவர் இட்டஏ
டிசைத்தநா ழிகையில்
ஈனம் இன்மைகண் டியாவரும்
வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையிற் பசுமையும்
புதுமையும் பயப்ப.
[789]
எடுத்த ஏட்டினை அவையின்
முன் காட்டிஅம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும்
அதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் தூக்கிய
கையரை நோக்கிக்
கடுத்து நீரிட்ட ஏட்டினைக்
காட்டுமின் என்றான்.
[790]
அருகர்தாம் இட்ட ஏடு
வாங்கச்சென் றணையும் போதில்
பெருகுதீக் கதுவ வெந்து
போந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந்தீத்
தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும்
கரியலால் மற்றென் காண்பார்.
[791]
செய்வதொன் றறிகி லாதார்
திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப்
பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடும்
ஏடின்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை யாக்கப்
புகுந்தநீர் போமின் என்றான்.
[792]
வெப்பெனுந் தீயில் யான்முன்
வீடுபெற் றுய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர்
ஆதலால் அதுஆ றாக
இப்பொழு தெரியில் இட்ட
ஏடுய்ந்த தில்லை என்றால்
துப்புர வுடையீர் நீங்கள்
தோற்றிலீர் போலு மென்றான்.
[793]
தென்னவன் நகையுட் கொண்டு
செப்பிய மாற்றந் தேரார்
சொன்னது பயனாக் கொண்டு
சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகாற் செய்தோம்
முக்காலில் ஒருகால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை
இனியொன்று காண்ப தென்றார்.
[794]
தோற்கவும் ஆசை நீங்காத்
துணிவிலார் சொல்லக் கேட்டிம்
மாற்றமென் னாவ தென்று
மன்னவன் மறுத்த பின்னும்
நீற்றணி விளங்கு மேனி
நிறைபுகழ்ச் சண்பை மன்னர்
வேற்றுவா தினியென் செய்வ
தென்றலும் மேற்கோள் ஏற்பார்.
[795]
நீடுமெய்ப் பொருளின் உண்மை
நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்ப தென்றார்.
[796]
என்றமண் கையர் கூற
ஏறுசீர்ப் புகலி வேந்தர்
நன்றது செய்வோம் என்றங்
கருள்செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்ச னார்தாம்
வேறினிச் செய்யும் இவ்வா
தொன்றினுந்தோற்றார் செய்வ
தொட்டியே செய்வ தென்றார்.
[797]
அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
வேந்தனே யென்று சொன்னார்.
[798]
மற்றவர் சொன்ன வார்த்தை
கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள்
செய்கையும் மறந்தீ ரென்று
பற்றிய பொருளின் ஏடு
படர்புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவ தற்குப்
போதுக என்று கூற.
[799]
பிள்ளையார் முன்னம் பைம்பொற்
பீடத்தின் இழிந்து போந்து
தெள்ளுநீர்த் தரளப் பத்திச்
சிவிகைமே லேறிச் சென்றார்
வள்ளலார் அவர்தம் பின்பு
மன்னன்மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு உணர்கி லாதார்
உணர்வுமால் ஏறிச் சென்றார்.
[800]
தென்னவன் வெப்புத் தீர்ந்து
செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது
பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர்
மறுகில்வந் தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர்
தொழுதுவே றினைய சொன்னார்.
[801]
மீனவன் கொண்ட வெப்பை
நீக்கிநம் விழுமந் தீர்த்த
ஞானசம் பந்தர் இந்த
நாயனார் காணும் என்பார்
பானறுங் குதலைச் செய்ய
பவளவாய்ப் பிள்ளை யார்தாம்
மானசீர்த் தென்னன் நாடு
வாழவந் தணைந்தார் என்பார்.
[802]
எரியிடை வாதில் தோற்ற
திவர்க்குநம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே
பொருளெனக் கண்டோம் என்பார்
பெருகொளி முத்தின் பைம்பொற்
[803]
ஏதமே விளைந்த திந்த
அடிகள்மார் இயல்பா லென்பார்
நாதனும் ஆல வாயில்
நம்பனே காணு மென்பார்
போதமா வதுவும் முக்கட்
புராணனை அறிவ தென்பார்
வேதமும் நீறு மாகி
விரவிடும் எங்கும் என்பார்.
[804]
அடிகள்மார் முகங்கள் எல்லாம்
அழிந்தன பாரீர் என்பார்
கொடியவஞ் சனைகள் எல்லாம்
குலைந்தன போலும் என்பார்
வடிகொள்வேல் மாறன் காதல்
மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்த திந்த
வெஞ்சமண் இருளும் என்பார்.
[805]
நெருப்பினில் தோற்றார் தாங்கள்
நீரில்வெல் வர்களோ என்பார்
இருப்புநெஞ் சுடைய ரேனும்
பிள்ளையார்க் கெதிரோ என்பார்
பருப்பொரு ளுணர்ந்தார் தாங்கள்
படுவன பாரீர் என்பார்
மருப்புடைக் கழுக்கோல் செய்தார்
மந்திரி யார்தா மென்பார்.
[806]
ஏடுகள் வைகை தன்னில்
இடுவதற் கணைந்தார் என்பார்
ஓடுநீ ருடன்செ லாது
நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார்
நிறுத்தவும் வல்லர் என்பார்
நாடெலாங் காண இங்கு
நண்ணுவர் காணீர் என்பார்.
[807]
தோற்றவர் கழுவி லேறத்
துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப்
பிள்ளையார்க்கு அழகி தென்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு
நீங்கிய வண்ணங் கண்டார்
போற்றுவா ரெல்லாஞ் சைவ
நெறியினைப் போற்று மென்பார்.
[808]
இன்னன இரண்டு பாலும்
ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின்னொளி மணிப்பொற் காம்பின்
வெண்குடை மீது போதப்
பன்மணிச் சிவிகை தன்மேற்
பஞ்சவ னாட்டு ளோர்க்கு
நன்னெறி காட்ட வந்தார்
நான்மறை வாழ வந்தார்.
[809]
தென்றமிழ் விளங்க வந்த
திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான
வட்டில்வண் கையன் வந்தான்
வென்றுல குய்ய மீள
வைகையில் வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச்சின் னங்கள்
எண்டிசை நெருங்கி ஓங்க.
[810]
பன்மணி முரசம் சூழ்ந்த
பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவி யாரும்
உடன்செலத் திரண்டு செல்லும்
புன்னெறி அமணர் வேறோர்
புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை யாற்றின்
கரைமிசை மருவ வந்தார்.
[811]
கார்கெழு பருவம் வாய்ப்பக்
காமுறு மகளிர் உள்ளம்
சீர்கெழு கணவன் தன்பால்
விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவம் நோக்கி
நிரைதிரை இரைத்துச் செல்லும்
பார்கெழு புகழின் மிக்க
பண்புடை வைகை யாறு.
[812]
ஆற்றில்நீர் கடுக வோடும்
மருங்குற அரசன் நோக்கி
நீற்றணி திகழ்ந்த மேனி
நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றுரு அருகர் நீரும்
விதித்தஏ டிடுக என்றான்
தோற்றவர் தோலா ரென்று
முன்னுறத் துணிந்திட் டார்கள்.
[813]
படுபொரு ளின்றி நெல்லிற்
பதடிபோல் உள்ளி லார்மெய்
அடுபவர் பொருளை அத்தி
நாத்திஎன் றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும்
அவாவினாற் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு
வேலைமேற் படர்ந்த தன்றே.
[814]
ஆறுகொண் டோடும் ஏட்டைத்
தொடர்ந்தெதி ரணைப்பார் போலத்
தேறுமெய் யுணர்வி லாதார்
கரைமிசை ஓடிச் சென்றார்
பாறுமப் பொருள்மேற் கொண்ட
பட்டிகை எட்டா தங்கு
நூறுவிற் கிடைக்கு முன்னே
போனது நோக்கிக் காணார்.
[815]
காணவும் எய்தா வண்ணம்
கடலின்மேற் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை
நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்
சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது
அஞ்சுவார் அணைய மீண்டார்.
[816]
வேறொரு செயலி லாதார்
வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறுவந் தெய்திற் றென்றே
மன்னவன் எதிர்வந் தெய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம்
வெளிப்பட வொளிப்பார் போன்று
மாறுகொண்ட வரும் இட்டால்
வந்தது காண்டும் என்றார்.
[817]
மாசுசேர் அமணர் எல்லாம்
மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த
அரசனும் அவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந்
திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார்
பரசம யங்கள் பாற.
[818]
தென்னவன் மாறன் தானுஞ்
சிவபுரத் தலைவர் தீண்டிப்
பொன்னவில் கொன்றை யார்தந்
திருநீறு பூசப் பெற்று
முன்னைவல் வினையும் நீங்கி
முதல்வனை யறியுந் தன்மை
துன்னினான் வினைக ளொத்துத்
துலையென நிற்ற லாலே.
[819]
உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்
கலதிவாய் அமணர்காண் கிலார்க ளாயினும்
பலர்புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.
[820]
அந்தணர் தேவர்ஆ னினங்கள் வாழ்கஎன்
றிந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச்
சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன்
வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம்.
[821]
வேள்வி நற்பயன் வீழ்புன லாவது
நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்
ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை
மூளும் மற்றிவை காக்கு முறைமையால்.
[822]
ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வேறெல்லாம் அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும்
வாழி அஞ்செழுத் தோதி வளர்கவே.
[823]
சொன்ன வையக முந்துயர் தீர்கவே
என்னும் நீர்மை இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்.
[824]
அரிய காட்சியர் என்பதவ் வாதியைத்
தெரிய லாநிலை யால்தெரி யாரென
உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்.
[825]
ஆயி னும்பெரி யாரவர் என்பது
மேய இவ்வியல் பேயன்றி விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர்வடி வென்றதாம்.
[826]
பின்பும் ஆரறி வாரவர் பெற்றியே
என்ப தியாருணர் வானும்சென் றெட்டொணா
மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார்
அன்பு சூழ்சண்பை ஆண்டகை யாரவர்.
[827]
வெந்த சாம்பல் விரையென் பதுதம
தந்த மில்லொளி யல்லா வொளியெலாம்
வந்து வெந்தற மற்றப் பொடியணி
சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார்.
[828]
தமக்குத் தந்தையர் தாயிலர் என்பதும்
அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ
திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம்.
[829]
தம்மையே சிந்தி யாவெனுந் தன்மைதான்
மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென
இம்மை யேநினை வார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதாம்.
[830]
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலென்
றிந்த வாய்மைமற் றெப்பொருட் கூற்றினும்
முந்தை யோரைஎக் கூற்றின் மொழிவதென்
றந்தண் பூந்தராய் வேந்த ரருளினார்.
[831]
ஆதி ஆட்பா லவர்க்கரு ளுந்திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்
ஓது மெல்லை உலப்பில வாதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.
[832]
அன்ன ஆதலில் ஆதியார் தாளடைந்
தின்ன கேட்கவே ஏற்றகோட் பாலவும்
[833]
மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்
டன்ன வாற்றால் அளப்பில னென்றதாம்.
[834]
தோன்று காட்சி சுடர்விட் டுளன்என்ப
தான்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க் கிதுபொரு ளென்றதாம்.
[835]
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றும் என்ப
தாதிச் சுடர்ச்சோ தியைஅன்பி னகத்துள் ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
[836]
ஈண்டுச் சாதுக்கள் என்றெடுத் தோதிற்று
வேண்டும் வேட்கைய வெல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினிற் போற்றுவீர் சார்மின்என்
றாண்ட சண்பை அரச ரருளினார்.
[837]
ஆடும் எனவருந் திருப்பாட்டில் [838]
கருதுங் கடிசேர்ந்த எனுந்திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தருதன் மையதாதல் சண்டீசர் தஞ்செய்கை தக்கோர்
பெரிதுஞ் சொலக்கேட் டனம்என்றனர் பிள்ளை யார்தாம்.
[839]
வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினில்நேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓதென் றுரைசெய் தனர்யாவும் ஓதா துணர்ந்தார்.
[840]
பாவுற்ற பாராழி வட்டத் திருப்பாட்டி னுண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல்பெற்ற
தியாவர்க்கு மேலாய ஈசன் அருள்ஆழி பெற்று
மேவுற்ற சீருற் றதுவென்றனர் வேத வாயர்.
[841]
மாலா யவன்என்ன வருந்திருப் பாட்டில் மாலுந்
தோலா மறைநான் முகனுந் தொடர்வாம் அமரர்
ஏலா வகைசுட்ட நஞ்சுண் டிறவாமை காத்த
மேலாங் கருணைத்திறம் வெங்குரு வேந்தர் வைத்தார்.
[842]
ஆனஅற் றன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மாநக ரத்துச் சங்கம் வைத்தவன் தேறத் தேறா
ஈனர்க ளெல்லைக் கிட்ட ஏடுநீர் எதிர்ந்து செல்லில்
ஞானம்ஈ சன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.
[843]
வெறியார் பொழிற்சண் பையர்வேந்தர்
மெய்ப்பா சுரத்தைக்
குறியே றியஎல்லை அறிந்துகும்
பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கவர் தந்திருப்
பாதந் தந்த
நெறியே சிறிதியான் அறிநீர்மைகும்
பிட்டேன் அன்பால்.
[844]
அலரும் விரைசூழ் பொழிற்காழியுள் ஆதி ஞானம்
மலருந் திருவாக் குடைவள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந் துய்யப்பகர்ந்து வரைந்தி யாற்றில்
நிலவுந் திருவேடு திருக்கையால் நீட்டி யிட்டார்.
[845]
திருவுடைப் பிள்ளை யார்தந்
திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவி யாற்றில்
மாதவர் மனஞ்சென் றாற்போல்
பொருபுனல் வைகை யாற்றில்
எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத் தோர்கட் கெல்லாம்
இதுபொரு ளென்று காட்டி.
[846]
எம்பிரான் சிவனே எல்லாப்
பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன்
தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே.
[847]
ஏடுநீ ரெதிர்ந்து செல்லும்
பொழுதிமை யோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்திற் போற்றி
நிறைந்தபூ மாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன்
அற்புத மெய்தி நின்றான்
பாடுசேர் அமண ரஞ்சிப்
பதைப்புடன் பணிந்து நின்றார்.
[848]
ஆற்றின்மேற் செல்லும்ஏடு
தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லும்
கடும்பரி ஏறிக் கொண்டு
கோற்றொழில் திருத்த வல்ல
குலச்சிறை யார்பின் சென்றார்
ஏற்றுயர் கொடியி னாரைப்
பாடினார் ஏடு தங்க.
[849]
ஏடகம் பிள்ளை யார்தாம்
வன்னிஎன் றெடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு
குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக ஆடும்
கண்ணுதல் கோயில் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு
நின்றஏ டெடுத்துக் கொண்டார்.
[850]
தலைமிசை வைத்துக் கொண்டு
தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி
அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி
மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம்
உண்டவர் தம்பால் வந்தார்.
[851]
மற்றவர் பிள்ளை யார்தம்
மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர்
காணமுன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையி லேந்திப்
பண்பினால் யார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர்
அரவொலி எழுந்த தன்றே.
[852]
மன்னவன் மாறன் கண்டு
மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித்
தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால்
அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற
முறைசெய்க என்று கூற.
[853]
புகலியில் வந்த ஞானப்
புங்கவர் அதனைக் கேட்டும்
இகலிலர் எனினும் சைவர்
இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த
தன்மையாற் சாலு மென்றே
மிகையிலா வேந்தன் செய்கை
விலக்கிடா திருந்தவேலை.
[854]
பண்புடை அமைச்ச னாரும்
பாருளோர் அறியு மாற்றால்
கண்புடை பட்டு நீண்ட
கழுத்தறி நிரையி லேற்ற
நண்புடை ஞானம் உண்டார்
மடத்துத்தீ நாடி யிட்ட
எண்பெருங் குன்றத் தெண்ணா
யிரவரும் ஏறி னார்கள்.
[855]
தோற்றவர் கழுவில் ஏறித்
தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை
அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை
விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்.
[856]
தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்.
[857]
பூதிமெய்க் கணிந்து வேந்தன்
புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேத நீதி
யாகியே நிகழ்ந்த தெங்கும்
மேதினி புனித மாக
வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரந் தூய்மை செய்ய
அமணிருள் மாய்ந்த தன்றே.
[858]
மீனவற் குயிரை நல்கி
மெய்ந்நெறி காட்டி மிக்க
ஊனமாஞ் சமணை நீக்கி
உலகெலாம் உய்யக் கொண்ட
ஞானசம் பந்தர் வாய்மை
ஞாலத்திற் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றை யார்தந்
திருநெறி நடந்த தன்றே.
[859]
மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நன்னெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவில தெனினும் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறைகடற் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்ற தன்றே.
[860]
அங்கயற் கண்ணி தன்னோ
டாலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம்
பணிவன்என் றெழுந்து சென்று
பொங்கொளிச் சிவிகை ஏறிப்
புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க் கரசி யாரும்
மன்னனும் போற்றி வந்தார்.
[861]
எண்ணரும் பெருமைத் தொண்டர்
யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளை யாரைப்
புகழ்ந்துடன் போற்றிப் போத
மண்ணெலாம் உய்ய வந்த
வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினாற் பயன்கொண் டார்கள்
கன்னிநாட் டவர்க ளெல்லாம்.
[862]
ஆலவாய் அண்ணல் கோயில்
அங்கண்முன் தோன்றக் கண்டு
பாலறா வாயர் மிக்க
பண்பினால் தொழுது சென்று
மாலுநான் முகனும் போற்ற
மன்னினார் கோயில் வாயில்
சீலமா தவத்தோர் முன்பு
சிவிகைநின் றிழிந்து புக்கார்.
[863]
தென்னவன் தானும் எங்கள்
செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்ச னாரும்
ஞானசம் பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி
உடன் புகப் புனிதர்கோயில்
தன்னைமுன் வலங்கொண் டுள்ளால்
சண்பையர் தலைவர் புக்கார்.
[864]
கைகளுந் தலைமீ தேறக்
கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத
முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை
அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே என்று வீட
லாலவாய் விளம்ப லுற்றார்.
[865]
ஒன்றுவே றுணர்வு மில்லேன்
ஒழிவற நிறைந்த கோலம்
மன்றிலான் மறைக ளேத்த
மானுடர் உய்ய வேண்டி
நின்றுநீ ஆடல் செய்கை
நினைப்பதே நியம மாகும்
என்றுபூம் புகலி மன்னர்
இன்தமிழ்ப் பதிகம் பாட.
[866]
தென்னவன் பணிந்து நின்று
திருவால வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள்
மாயையால் மயங்கி யாதும்
உன்னையான் அறிந்தி லேனை
உறுபிணி தீர்த்தாட் கொள்ள
இன்னருட் பிள்ளை யாரைத்
தந்தனை இறைவ என்றான்.
[867]
சீருடைப் பிள்ளை யாரும்
சிறப்புடை அடியா ரோடும்
காரினிற் பொலிந்த கண்டத்
திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி
அங்குநின் றரிது நீங்கி
ஏரியல் மடத்தின் உள்ளால்
இனிதெழுந் தருளிப் புக்கார்.
[868]
நீடுசீர்த் தென்னர் கோனும்
நேரியன் பாவை யாரும்
மாடுசென் றிறைஞ்சிநோக்கி
மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
கும்பிடும் விருப்பி னாலே
நாடியங் கிருந்து தங்கள்
நாதரைப் பாட லுற்றார்.
[869]
திருஇய மகத்தி னுள்ளும்
திருநீல கண்டப் பாணர்க்
கருளிய திறமும் போற்றி
அவரொடும் அளவ ளாவித்
தெருளுடைத் தொண்டர் சூழத்
திருத்தொண்டின் உண்மை நோக்கி
இருள்கெட மண்ணில் வந்தார்
இனிதமர்ந் திருந்தா ரன்றே.
[870]
பூழியன் மதுரை யுள்ளார்
புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியு மான எல்லாம்
[871]
மீனவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் மிக்க
ஞானசம் பந்தர் பாதம்
நாள்தொறும் பணிந்து போற்ற
ஆனசண் பையர்கோ னாரும்
ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊனமர்ந் துருக ஏத்தி
உளங்களித் துறையும் நாளில்.
[872]
செய்தவத்தாற் சிவபாத
இருதயர்தாம் பெற்றெடுத்த
வைதிகசூ ளாமணியை
மாதவத்தோர் பெருவாழ்வை
மைதிகழுந் திருமிடற்றார்
அருள்பெற்ற வான்பொருளை
எய்தியபூம் புகலியிலே
இருந்தநாள் மிகநினைந்தார்.
[873]
ஆனபுகழ்த் திருநாவுக்
கரசர்பால் அவஞ்செய்த
மானமிலா அமணருடன்
வாதுசெய்து வெல்வதற்கும்
மீனவன்தன் நாடுய்ய
வெண்ணீறு பெருக்குதற்கும்
போனவர்பாற் புகுந்தபடி
அறிவனெனப் புறப்படுவார்.
[874]
துடியிடையாள் தன்னோடும்
தோணியில் வீற்றிருந்தபிரான்
அடிவணங்கி அலர்சண்பை
அதனின்றும்வழிக்கொண்டு
படியின்மிசை மிக்குளவாம்
பரன்கோயில் பணிந்தேத்தி
வடிநெடுவேல் மீனவன்தன்
வளநாடு வந்தணைந்தார்.
[875]
மாமறை யோர் வளம்பதிகள்
இடைத்தங்கி வழிச்செல்வார்
தேமருவு நறும்பைந்தார்த்
தென்னவன்தன் திருமதுரை
தாமணைந்து திருவால
வாயமர்ந்த தனிநாதன்
பூமருவுஞ் சேவடிக்கீழ்ப்
புக்கார்வத் தொடுபணிந்தார்.
[876]
அங்கணரைப் பணிந்துபோந்
தருகணைந்தார் தமைவினவ
இங்கெம்மைக் கண்விடுத்த
காழியார் இளவேறு
தங்குமிடம் திருநீற்றுத்
தொண்டர்குழாஞ் சாருமிடம்
செங்கமலத் திருமடம்மற்
றிதுவென்றே தெரிந்துரைத்தார்.
[877]
செப்புதலும் அதுகேட்டுத்
திருமடத்தைச் சென்றெய்த
அப்பர்எழுந் தருளினார்
எனக்கண்டோர் அடிவணங்கி
ஒப்பில்புகழ்ப் பிள்ளையார்
தமக்கோகை உரைசெய்ய
எப்பொழுது வந்தருளிற்
றென்றெதிரே எழுந்தருள.
[878]
சிவபாத இருதயர்தாம்
முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையுந்
தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டருளித்
திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம்
பாதங்கள் நினைவுற்றார்.
[879]
இருந்தவத்தோர் அவர்முன்னே
இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனையறியாப்
பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகையெம் பெருமாட்டி
உடனிருந்த தேயென்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல்
திருப்பதிகம் போற்றிசைத்தார்.
[880]
மண்ணில்நல்ல என்றெடுத்து
மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால்
கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித்
திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத்
தாரணிந்த தமிழ்விரகர்.
[881]
திருப்பதிகந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினால் அவர்தமக்கு
அருப்புறுமெய்க் காதல்புரி
அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர்
பதிபிறவும் தொழப்போவார்.
[882]
ஆலின்கீழ் நால்வர்க்கன்
றறமுரைத்த அங்கணனை
நூலின்கட் பொருள்பாடி
நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக்
கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொள் தென்னவனும்
தேவியரும் உடன்போத.
[883]
தேன்நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன்நெகிழும் படியழிந்தங் கொழுகு கண்ணீர்
பாய்ந்திழிய உணர்வின்றி வீழக் கண்டே
யான்உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்
டிறைவர்பதி யெனைப்பலவும் பணிவீ ரென்று
ஞானமுணர் வார்அருள அவரும் போத
நம்பர்திருப் பரங்குன்றை நண்ணி னாரே.
[884]
ஆறணிந்தார் தமைவணங்கி அங்குப் போற்றி
அணிஆப்ப னூரணைந்து பணிந்து பாடி
நீறணிந்த செல்வர்பதி பிறவுஞ் சேர்ந்து
நிலவுதிருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறணிந்த வயற்பழனக் கழனி சூழ்ந்த
சிரபுரத்து வந்தருளுஞ் செல்வர் செங்கண்
ஏறணிந்த வெல்கொடியார் திருப்புத் தூரை
எய்திஇறைஞ் சிச்சிலநாள்அங் கிருந்தா ரன்றே.
[885]
பற்றார்தம் புறங்கள்மலைச் சிலையால் செற்ற
பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம்
பூவணத்தைப் புக்கிறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுதேத்துங் கானப் பேரும்
கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலங் குறும்பலாக் கும்பிட் டேத்திக்
கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே.
[886]
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்துபாடி
நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்றுகந்தான் இலங்கை செற்ற
மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை இராமன் செய்த
திருவிரா மேச்சரத்தைச் சென்று சேர்ந்தார்.
[887]
செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்தெழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியா ரும்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும் விருப்பினால் உடனே புக்குப்
புடைவலங்கொண் டுள்ளணைவார் போற்றி செய்து
பங்கயச் செங் கைகுவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி யேத்த.
[888]
சேதுவின்கண் செங்கண்மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்
கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி
நளிர்வேலைக் கரையில்நயந் திருந்தா ரன்றே.
[889]
அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந் தன்னில்
மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச்
சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம்
உன்னிமிகப் பணிந்தேத்தி அன்பரோடும்
உலவாத கிழிபெற்றார் உவகை யுற்றார்.
[890]
அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
அங்கையனல் தரித்தபிரான் அமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப்
புணரிபொரு தலைகரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
செந்தமிழ்மா லைகள்சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.
[891]
பதிநிலவு பாண்டிநா டதனில் முக்கட்
பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி
விதிநிலவு வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீற்றின் சார்வினால் மிக்குயர்ந்த
கதியருளிக் காழிநகர் வாழவந்தார் கண்ணுதலான்
திருத்தொண்டர் பலருஞ் சூழ
மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல
மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார்.
[892]
அந்நகரில் இனிதமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில்நீ டங்கணர்தங் கோயில் தாழ்ந்து
மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
மன்னவனும் மங்கையருக் கரசி யாரும்
கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக்
குறைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச்
சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச்
சிரபுரத்துச் செல்வர்இனி திருந்த நாளில்.
[893]
பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று
மங்கையருக் கரசியார் தாமும் தென்னர்
மன்னவனும் மந்திரியார் தாமுங் கூட
அங்கவர்தந் திருப்பாதம் பிரிய லாற்றா
துடன்போக ஒருப்படும்அவ் வளவுநோக்கி
இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகில்
ஈசர்சிவ நெறிபோற்றி இருப்பீ ரென்று.
[894]
சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணம்
தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு
மேலவர்தம் பணிமறுக்க அவரும்அஞ்சி
மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப்
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆலவிட முண்டவரை அடிகள் போற்றி
அந்நாட்டை அகன்றுமீண் டணையச் செல்வார்.
[895]
பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க
பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயில் தோறும்
பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று
கன்னிமதில் திருக்களரும் போற்றிக் கண்டங்
கறையணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி
முன்னணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி
முள்ளிவாய்க் கரையணைந்தார் முந்நூல் மார்பர்.
[896]
மலைவளர்சந் தனம்அகிலும் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
அலைபெருகி ஆள்இயங்கா வண்ணம் ஆறு
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலைபுரியும் ஓடக்கோல் நிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோன் அதனைக் கண்டக்
கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.
[897]
தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்
எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவா ரின்றி
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்
கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன்மே னின்று
நம்பர் தமைக் கொட்டமென நவின்று பாட.
[898]
உம்பருய்ய நஞ்சுண்டார் அருளால் ஓடம்
செலச்செல்ல உந்துதலால் ஊடு சென்று
செம்பொனேர் சடையார்தங் கொள்ளம் பூதூர்
தனைச்சேர அக்கரையிற் சேர்ந்த பின்பு
நம்பரவர் தமைவணங்க ஞான முண்ட
பிள்ளையார் நற்றொண்ட ருடனி ழிந்து
வம்பலரும் நறுங்கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.
[899]
நீள்நிலைக்கோ புரமதனை இறைஞ்சிப் புக்கு
நிகரிலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாள்நிலவு கோயிலினை வலங்கொண் டெய்தி
மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின்கண் ஓடம் உய்க்குந்
தன்மையால் அருள்தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கட்
புனிதனே எனப்பணிந்து போற்றி செய்தார்.
[900]
போற்றிசைத்துப் புறம்போந்தங் குறையும் நாளில்
பூழியன்முன் புன்சமயத் தமணர் தம்மோ
டேற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
பதிகமுடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும்அங் கருள்பெற்றுப் போந்து முன்னம்
அணைந்தபதி களும்இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவுதிரு நள்ளா றெய்தி
நாடுடைநா யகர்கோயில் நண்ணினாரே.
[901]
நீடுதிருத் தொண்டர்புடை சூழ அங்கண்
நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று
பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப்
பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில்
மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப்
பாடகமெல் லடியெடுத்துப் பாடி நின்று
பரவினார்கண்ணருவி பரந்து பாய.
[902]
தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
தீயின்கண் இடுமேடு பச்சை யாக்கி
என்னுள்ளத் துணையாகி ஆல வாயில்
அமர்ந்திருந்த வாறென்கொல் எந்தாய் என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
பண்பினிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.
[903]
சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும்மற் றதுஅறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
பரசமய கோளரிவந் தான்என் றூத.
[904]
புல்லறிவிற் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்
புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர்
எடுத்தஆர்ப் பொலியாலும் எதிர்முன் சென்று
மல்கியெழுந் திருச்சின்ன ஒலிக ளாலும்
மனங்கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி
முதலான தேரர்க்குங் கனன்று சொன்னார்.
[905]
மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார்முன்
வருசின்னப் பெருகொலியும் மன்னுந் தொண்டர்
பொற்புடைய ஆர்ப்பொலியுஞ் செவியினூடு
புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
செயிர்த் தெழுந்து தேரர்குழாஞ் சூழச்சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
வென்றன்றோ பிடிப்பதென வெகுண்டு சொன்னான்.
[906]
புத்தரினம் புடைசூழப் புத்த நந்தி
பொருவில்ஞா னப்புனிதர் திருமுன் பூதும்
மெய்த்தவிறற் சின்னங்கள் விலக்குங் காலை
வெகுண்டெழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கிவரைத் தடிதல் செய்யா
திதுபொறுக்கில் தங்கணிலை ஏற்ப ரென்று
முத்துநிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
முறைபணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.
[907]
வருமிடத்தில் அழகிதாம் நமக்கு வாதில்
மற்றிவர்தம் பொருள்நிலைமை மறாத வண்ணம்
பொருமிடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
பொய்ம்மேற்கோள் எனப்புகலி வேந்தர் கூற
அருமுறைசொல் திருப்பதிகம் எழுது மன்பர்
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உருமிடித்து விழப்புத்தன் உத்த மாங்கம்
உருண்டுவீழ் கெனப்பொறா உரைமுன் விட்டார்.
[908]
ஏறுயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க
எதிர்விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறில்வலி மந்திரமாம் அசனி போல
வாய்மைஉரைத் திருத்தொண்டர் வாக்கி னாலே
வேறுமொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
மேனியையும் தலையினையும் வெவ்வே றாகக்
கூறுபட நூறியிடப் புத்தர் கூட்டம்
குலைந்தோடி விழுந்துவெருக் கொண்ட தன்றே.
[909]
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி
வாக்கின்போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும்
அற்றுவிழ அத்திரவாக் கதனால் அன்பர்
அறுத்ததுவுங் கண்டஅர னடியார் எல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செயவெதிர்ந்த விலக்கு நீங்க
உற்றவிதி அதுவேயாம் அரஎன் றெல்லாம்
ஓதுகென அவ்வொலிவான் உற்ற தன்றே.
[910]
அஞ்சிஅகன் றோடியஅப் புத்த ரெல்லாம்
அதிசயித்து மீண்டுமுடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான்மற் றவர்தஞ்சைவ
வாய்மையோ எனமருண்டு மனத்திற் கொள்வார்
எஞ்சலின்மந் திரவாத மன்றி எம்மோ
டெதிர்ந்து பொருள் பேசுவதற் கிசைவ தென்று
தஞ்செயலின் மிக்குள்ள சாரிபுத்தன்
தன்னையே முன்கொண்டு பின்னுஞ் சார்ந்தார்.
[911]
அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த
அடலேறு திருவுள்ளத் தழகி தென்று
மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று
வெண்தரளச் சிவிகையினின் றிழிந்து வேறோர்
சத்திரமண் டபத்தின் மிசை ஏறி நீடு
சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்கவெனத் திருமுன் நின்றார்
புகலிகா வலர்ஏவல் போற்றிச் சென்றார்.
[912]
சென்றவர்கள் தேரர்குழாம் அணைந்து நீங்கள்
செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றிமழ இளங்களிறு சண்பை யாளி
வேதபா லகன்மும்மைத் தமிழின் வேந்தன்
நன்றுமகிழ்ந் தழைக்கின்றான் ஈண்ட நீரும்
நண்ணுமெனக் கூறுதலும் நன்மை சாராத்
தன்தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சத்திரமண் டபமுன்பு சார வந்தான்.
[913]
அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும்
பிள்ளையார் அருகணைய நின்ற போதில்
எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்தன்
இருஞ்சிரத்தைப் பொடியாக்கும் எதிரில் அன்பர்
பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம்
போற்றிஅரு ளாற்சாரி புத்தன் தன்னை
உங்கள்தலை வனும்பொருளும் உரைக்க என்ன
உற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான்.
[914]
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து
கதிமாறுங் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே நன்மை
புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவின்றி உரைத்த ஞானத்
தொழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்துய்ய அறமுன் சொன்ன
பான்மையான் யாங்கள்தொழும் பரமன் என்றான்.
[915]
என்றுரைத்த சாரிபுத்தன் எதிர்வந் தேற்ற
இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
நன்றுமது தலைவன்தான் பெற்றா னென்று
நாட்டுகின்ற முத்திதான் யாவ தென்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்து ஐந்தும்
ஒன்றியகந் தத்தழிவே முத்தி யென்ன
உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.
[916]
ஆங்கவன்தான் உரைத்தமொழி கேட்ட அன்பர்
அதனைஅனு வாதஞ்செய் தவனை நோக்கித்
தாங்கியஞா னத்துடனாம் கந்தம் ஐந்தும்
தாம்வீந்து கெட்டனவேல் தலைவன் தானும்
ஈங்குளன் என் றவனுக்கு விடயமாக
யாவையுமுன் இயற்றுதற்கு விகார மேசெய்
தோங்குவடி வமைத்துவிழ வெடுக்கும் பூசை
கொள்வார்ஆர் உரைக்கவென உரைக்க லுற்றான்.
[917]
கந்தமாம் வினையுடம்பு நீங்கி எங்கோன்
கலந்துளன்முத் தியில்என்றான் என்னக் காணும்
இந்திரியங் கண்முதலாம் கரணந் தானும்
இல்லையேல் அவனுணர்ச்சி யில்லை யென்றார்
முந்தையறி விலனாகி உறங்கி னானை
நிந்தித்து மொழிந் துடல்மீ தாடினார்க்கு
வந்தவினைப் பயன்போல வழிபட் டார்க்கும்
வருமன்றோ நன்மையென மறுத்துச் சொன்னான்.
[918]
சொன்னவுரை கேட்டருளி அன்பர் தாமும்
தொடர்ந்தவழி பாடுபல கொள்கின் றானுக்
கன்னவற்றி னுடன்பாடும் எதிர்வு மில்லை
ஆனபோ தவன்பெறுதல் இல்லை யென்றார்
முன்னவற்றி னுடன்பாடும் எதிர்வுமின்றி
முறுகுதுயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன்னுயிர்போய்க் கொலையாகி முடிந்த தன்றோ
இப்படியால் எம்மிறைவற் கெய்தும் என்றார்.
[919]
இப்படியால் எய்துமென இசைத்துநீ இங்கு
எடுத்துக்காட் டியதுயிலும்இயல்பி னான்போல்
மெய்ப்படிய கரணங்கள் உயிர்தா மிங்கு
வேண்டுதியா னும்மிறைவற் கான போது
செப்பியஅக் கந்தத்தின் விளைவின் றாகித்
திரிவில்லா முத்தியிற்சென் றிலனும் ஆனான்
அப்படியக் கந்தத்துள் அறிவுங் கெட்டால்
அம்முத்தி யுடன்இன்ப மணையா தென்றார்.
[920]
அவ்வுரைகேட் டெதிர்மாற்றம் அறைவ தின்றி
அணைந்துளன் அம் முத்தியெனும் அதுவும் பாழாம்
கவ்வையில்நின் றவனையெதிர் நோக்கி ஞானக்
கடலமுதம் அனையவர்தங் காத லன்பர்
பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே
பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவனெல்லாம் உணர்ந்த தீதும்
இல்லதுரைப் பாய்எனினும் ஏற்போ மென்றார்.
[921]
உணர்வுபொதுச் சிறப்பென்ன இரண்டின் முன்ன
துளவான மரப்பொதுமை உணர்தல் ஏனைப்
புணர்சிறப்பு மரங்களில்வைத் தின்ன தென்றல்
இப்படியால் வரம்பில்லாப் பொருள்கள் எல்லாம்
கொணரும்விற கினைக்குவைசெய் திடினும் வேறு
குறைத்தவற்றைத் தனித்ததனியே இடினும் வெந்தீத்
துணர்கதுவிச் சுடவல்ல வாறு போலத்
தொகுத்தும்விரித் துந்தெரிக்குந் தொல்லோன் என்றான்.
[922]
எடுத்துரைத்த புத்தனெதிர் இயம்பு மன்பர்
எரியுணர்வுக் கெடுத்துக்காட் டாகச் சொன்னாய்
அடுத்தவுணர் உருவுடைய தன்று சொன்ன
அனல்வடிவிற் றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்தநிகழ் காலமே யன்றி ஏனைத்
தொடர்ந்தஇரு காலமுந்தொக் கறியுமாகில்
கடுத்தஎரி நிகழ்காலத் திட்ட தல்லால்
காணாத காலத்துக் கதுவா தென்றார்.
[923]
ஆதலினால் உன்னிறைவன் பொருள்கள் எல்லாம்
அறிந்ததுநும் முத்திபோல் ஆயிற் றன்றே
ஏதமாம் இவ்வறிவால் உரைத்த நூலும்
என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய
வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்
மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர்
பாததா மரைபணிந்தார் அன்பர் தங்கள்
பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.
[924]
புந்தியினால் அவருரைத்த பொருளின் தன்மை
பொருளன்றாம் படியன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர் வுடையவரை நோக்கிச் சைவம்
அல்லாது மற்றொன்றும் இல்லை யென்றே
அந்தமில்சீர் மறைகள்ஆ கமங்கள் ஏனை
அகிலகலைப் பொருளுணர்ந்தார் அருளிச் செய்யச்
சிந்தையினில் அதுதெளிந்து புத்தர் சண்பைத்
திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.
[925]
அன்றவர்க்குக் கவுணியர்கோன் கருணை நோக்கம்
அணை தலினால் அறிவின்மை அகன்று நீங்கி
முன்தொழுது விழுந்தெழுந்து சைவ ரானார்
முகைமலர்மா ரியின்வெள்ளம் பொழிந்த தெங்கும்
[926]
அந்நகரில் அடியார்கள்
எதிர்கொள்ள புக்கருளிக்
கொன்னவிலுங் கூற்றுதைத்தார்
குரைகழல்கள் பணிந்தேத்தி
மன்னியமர்ந் துறையுநாள்
வாகீச மாமுனிவர்
எந்நகரில் எழுந்தருளிற்
றென்றடியார் தமைவினவ.
[927]
அங்கவரும் அடிபோற்றி
ஆண்டஅர செழுந்தருளிப்
பொங்குபுனற் பூந்துருத்தி
நகரின்கண் போற்றிசைத்துத்
தங்குதிருத் தொண்டுசெயும்
மகிழ்ச்சியினாற் சார்ந்தருளி
எங்குநிகழ்ந் திடஇருந்த
படியெல்லாம் இயம்பினார்.
[928]
அப்பரிசங் கவர்மொழிய
ஆண்டஅர சினைக்காணும்
ஒப்பரிய பெருவிருப்பு
மிக்கோங்க ஒளிபெருகும்
மைப்பொருவு கறைக்கண்டர்
கழல்வணங்கி அருள்பெற்றுச்
செப்பரிய புகழ்ப்புகலிப்
பிள்ளையார் செல்கின்றார்.
[929]
பூவிரியுந் தடஞ்சோலை
புடைபரப்பப் புனல்பரக்கும்
காவிரியின் தென்கரைபோய்க்
கண்ணுதலார் மகிழ்ந்தஇடம்
மேவிஇனி தமர்ந்திறைஞ்சி
விருப்புறுமெய்த் தொண்டரொடு
நாவரசர் உழைச்சண்பை
நகரரசர் நண்ணுவார்.
[930]
அந்தணர்சூ ளாமணியார்
பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை
வாகீசர் கேட்டருளி
நந்தமையா ளுடையவரை
நாம்எதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று
முகமலர அகமலர்வார்
[931]
எதிர்சென்று பணிவனென
எழுகின்ற பெருவிருப்பால்
நதிதங்கு சடைமுடியார்
நற்பதங்கள் தொழுதந்தப்
பதிநின்றும் புறப்பட்டுப்
பரசமயஞ் சிதைத்தவர்பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர்
முன்னெய்த வந்தணைந்தார்.
[932]
திருச்சின்னம் பணிமாறக்
கேட்டநாற் றிசையுள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால்
பிள்ளையார் தமைச்சூழ்ந்த
நெருக்கினிடை யவர்காணா
வகைநிலத்துப் பணிந்துள்ளம்
உருக்கியெழு மனம்பொங்கத்
தொண்டர்குழாத் துடன்அணைந்தார்.
[933]
வந்தணைந்த வாகீசர்
வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின்
சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார்
திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று
நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்.
[934]
அப்பர்தாம் எங்குற்றார்
இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநா
வுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன்
ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப்
பெற்றுய்ந்தேன் யான்என்றார்.
[935]
அவ்வார்த்தை கேட்டஞ்சி
அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்
றென்னாம்என் றிறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர்
திருஞான சம்பந்தர்க்
கெவ்வாறு செயத்தகுவ
தென்றெதிரே இறைஞ்சினார்.
[936]
சூழ்ந்துமிடைந் தருகணையுந்
தொண்டரெல்லாம் அதுகண்டு
தாழ்ந்துநில முறவணங்கி
எழுந்துஅங்கை தலைகுவித்து
வாழ்ந்துமனக் களிப்பினராய்
மற்றிவரை வணங்கப்பெற்
றாழ்ந்தபிறப் புய்ந்தோம்என்
றண்டமெலாம் உறஆர்த்தார்.
[937]
திருஞான சம்பந்தர்
திருநாவுக் கரசர்தமைப்
பெருகார்வத் தொடும்அணைந்து
தழீஇக்கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலரடிகள்
வணங்கியுடன் வந்தணைந்தார்
பொருவாரும் புனற்சடையார்
மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.
[938]
அன்பர்குழாத் தொடும்செல்வார்
ஆனேற்றார் மகிழ்கோயில்
முன்பணித்தா கச்சென்று
கோபுரத்தை முன்னிறைஞ்சித்
துன்பமிலாத் திருத்தொண்ட
ருடன்தொழுது புக்கருளி
என்புருக வலங்கொண்டு
பணிந்தேத்தி இறைஞ்சினார்.
[939]
பொய்யிலியா ரைப்பணிந்து
போற்றியே புறத்தணைவார்
செய்யசடை யார்கோயில்
திருவாயில் முன்னாக
மையறுசீர்த் தொண்டர்குழாம்
வந்துபுடை சூழஉல
குய்யவரு வார்தங்க
ளுடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார்.
[940]
வாக்கின் தனிமன்னர்
வண்புகலி வேந்தர்தமைப்
போக்கும் வரவும்
வினவப் புகுந்ததெல்லாம்
தூக்கின் தமிழ்விரகர்
சொல்லிறந்த ஞானமறை
தேக்குந் திருவாயால்
செப்பி யருள்செய்தார்.
[941]
காழியினில் வந்த
கவுணியர்தம் போரேற்றை
ஆழிமிசைக் கல்மிதப்பில்
வந்தார் அடிவணங்கி
வாழிதிருத் தொண்டென்னும்
வான்பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெருவேலி
யானீர்எனத் தொழுதார்.
[942]
பிள்ளையார் தாமும்அவர்
முன்தொழுது பேரன்பின்
வெள்ள மனையபுகழ்
மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக்
குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசெல்லாம்
மொழிந்தங் குவந்திருந்தார்.
[943]
தென்னற் குயிரோடு
நீறளித்துச் செங்கமலத்
தன்னம் அனையார்க்கும்
அமைச்சர்க்கும் அன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின்
தூநெறியே ஆக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர்
கேட்டு மனமகிழ்ந்தார்.
[944]
சொல்லின் பெருவேந்தர்
தொண்டைவள நாடெய்தி
[945]
அங்கணரைப் போற்றியெழுந்
தாண்ட அரசமர்ந்த
பொங்கு திருமடத்திற்
புக்கங் கினிதமர்ந்து
திங்கட் பகவணியும்
சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு
தாம்பரவிச் செல்லுநாள்.
[946]
வாகீச மாமுனிவர்
மன்னுதிரு வாலவாய்
நாகம் அரைக்கசைத்த
நம்பர் கழல் வணங்கப்
போகும் பெருவிருப்புப்
பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங்காதல்
பிள்ளையார் ஏற்றெழுவார்.
[947]
பூந்துருத்தி மேவும்
புனிதர்தமைப் புக்கிறைஞ்சிப்
போந்து திருவாயில்
புறத்தணைந்து நாவினுக்கு
வேந்தர் திருவுள்ளம்
மேவவிடை கொண்டருளி
ஏந்தலார் எண்ணிறந்த
தொண்டருடன் ஏகினார்.
[948]
மாடுபுனற் பொன்னி
இழிந்து வடகரையில்
நீடுதிரு நெய்த்தானம்
ஐயாறு நேர்ந்திறைஞ்சிப்
பாடுதமிழ் மாலைகளும்
சாத்திப் பரவிப்போய்
ஆடல் புரிந்தார்திருப்
பழனம் சென்றணைந்தார்.
[949]
செங்கண் விடையார்
திருப்பழனஞ் சேர்ந்திறைஞ்சிப்
பொங்கிய காதலின்முன்
போற்றும் பதிபிறவும்
தங்கிப்போய்ச் சண்பைநகர்
சார்ந்தார் தனிப்பொருப்பின்
மங்கை திருமுலைப்பால்
உண்டருளும் வள்ளலார்.
[950]
தென்னாட் டமண்மா
சறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார்
வந்தணையும் வார்த்தைகேட்
டெந்நாள் பணிவதென
ஏற்றெழுந்த மாமறையோர்
முன்னாக வேதம்
முழங்க எதிர்கொண்டார்.
[951]
போத நீடுமா மறையவர்
எதிர்கொளப் புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின்
றிழிந்தெதிர் செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட
நகைமலர்க் கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்குகோ
யிலின்மணிக் கோபுரஞ் சென்றுற்றார்.
[952]
அங்கம் மாநிலத் தெட்டுற
வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப்
பொங்கு காதலிற் புடைவலங்
கொண்டுமுன் பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாம்
கோயிலை அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந்
தருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.
[953]
முற்றும் மெய்யெலாம் புளகங்கள்
முகிழ்த்தெழ முகந்துகண் களிகூரப்
பற்றும் உள்ளம்உள் ளலைத்தெழும்
ஆனந்தம் பொழிதரப் பணிந்தேத்தி
உற்றுமை சேர்வ தெனுந்திரு
வியமகம் உவகையால் எடுத்துஏத்தி
வெற்றி யாகமீ னவன்அவை
எதிர்நதி மிசைவரு கரனென்பார்.
[954]
சீரின் மல்கிய திருப்பதி
கத்தினில் திருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை
யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
ஆரும் இன்னருள் பெற்றுமீண்
டணைபவர் அங்கையால் தொழுதேத்தி
ஏரின் மல்கிய கோயில்முன்
பணிந்துபோந் திறைஞ்சினர் மணிவாயில்.
[955]
தாதை யாரும்அங் குடன்பணிந்து
அணைந்திடச் சண்பையார் தனியேறு
மூதெ யில்திரு வாயிலைத்
தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள்
ஆதரித்துவாழ்த் துரையிரு
மருங்கெழ அணிமறு கிடைச்சென்று
காத லித்தவர்க் கருள்செய்து
தந்திரு மாளிகைக் கடைசார்ந்தார்.
[956]
நறவம் ஆர்பொழிற் புகலியில்
நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலி யாருடன் நீலகண்
டப்பெரும் பாணர்க்கு மிகநல்கி
உறையு ளாம்அவர் மாளிகை
செலவிடுத் துள்ளணை தரும்போதில்
அறலி னேர்குழ லார்மணி
விளக்கெடுத் தெதிர்கொள அணைவுற்றார்.
[957]
அங்க ணைந்தரு மறைக்குலத்
தாயர்வந் தடிவணங் கிடத்தாமும்
துங்க நீள்பெருந் தோணியில்
தாயர்தாள் மனங்கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கமர்ந்
தருளுநாள் தம்பிரான் கழல்போற்றிப்
பொங்கும் இன்னிசைத் திருப்பதி
கம்பல பாடினார் புகழ்ந்தேத்தி.
[958]
நீல மாவிடந் திருமிடற்
றடக்கிய நிமலரை நேரெய்தும்
கால மானவை அனைத்தினும்
பணிந்துடன் கலந்தஅன் பர்களோடும்
சால நாள்கள்அங் குறைபவர்
தையலாள் தழுவிடக் குழைகம்பர்
கோல மார்தரக் கும்பிடும்
ஆசைகொண் டெழுங்குறிப் பினர்ஆனார்.
[959]
தண்ட கத்திரு நாட்டினைச்
சார்ந்துவந்து எம்பிரான் மகிழ்கோயில்
கண்டு போற்றிநாம் பணிவதென்
றன்பருக் கருள்செய்வார் காலம்பெற்
றண்ட ருக்கறி வரும்பெருந்
தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத்
தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத்
தொடர்ந்தெழுந் தாதையார்க் குரைசெய்வார்.
[960]
அப்பர் நீர்இனி இங்கொழிந்
தருமறை அங்கிவேட் டன்போடுந்
துப்பு நேர்சடை யார்தமைப்
பரவியே தொழுதிரு மெனச்சொல்லி
மெய்ப்பெருந் தொண்டர் மீள்பவர்
தமக்கெலாம் விடைகொடுத் தருளிப்போய்
ஒப்பி லாதவர் தமைவழி
யிடைப்பணிந் துருகுமன் பொடுசெல்வார்.
[961]
செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப்
பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை வந்துற்றார்.
[962]
கன்னி மாவனங் காப்பென
இருந்தவர் கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கால்முயற்
கருள்செய்த வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவடு
கூரினை வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு
வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
[963]
வக்க ரைப்பெரு மான்தனை
வணங்கிஅங் கமருநாள் அருளாலே
செக்கர் வேணியார் இரும்பைமா
காளமும் சென்றுதாழ்ந் துடன்மீண்டு
மிக்க சீர்வளர் அதிகைவீ
ரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந்
தெதிர்கொளத் தொழுதெழுந் தணைவுற்றார்.
[964]
ஆதி தேவர்அங் கமர்ந்தவீ
ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார்
திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய்
உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதி லாஇசை குலவுகுண்
டைக்குறட் பூதம்என் றெடுத்துஏத்தி.
[965]
பரவி ஏத்திய திருப்பதி
கத்திசை பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி
துறைபவர் விமலரை வணங்கிப்போய்
அரவ நீர்ச்சடை அங்கணர்
தாம்மகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய
திருமறைச் சிறுவர்சென் றணைவுற்றார்.
[966]
சென்ற ணைந்துசிந் தையின்மகிழ்
விருப்பொடு திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும்
வன்னியும் புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை யெனுந்திருப்
பதிகமெய் குலவிய இசைபாடி
நன்று மின்புறப் பணிந்துசெல்
வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.
[967]
கோவல் நீடிய வீரட்டம்
அமர்ந்தவர் குரைகழல் பணிந்தேத்தி
ஆவின் ஐந்துகந் தாடுவார்
அறையணி நல்லூரை அணைந்தேத்திப்
மேவு மன்புறு மேன்மையாம்
தன்மையை விளங்கிட அருள்செய்தார்.
[968]
சீரின் மன்னிய பதிகம்முன்
பாடிஅத் திருவறை யணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள்
இமையவர் நாடொறும் பணிந்தேத்துங்
காரின் மல்கிய சோலைஅண்
ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.
[969]
அண்ணா மலைஅங் கமரர்பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது
கலந்து போற்றுங் காதலினால்
உண்ணா முலையாள் எனும்பதிகம்
பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா
மலையைச் சென்று சேர்வுற்றார்.
[970]
அங்கண் அணைவார் பணிந்தெழுந்து
போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார்
தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து
புளகம் மலர்ந்த திருமேனி
எங்கு மாகிக் கண்பொழியும்
இன்ப அருவி பெருக்கினார்.
[971]
ஆதி மூர்த்தி கழல்வணங்கி
அங்கண் இனிதின் அமருநாள்
பூத நாத ரவர் தம்மைப்
பூவார் மலராற் போற்றிசைத்துக்
காத லால்அத் திருமலையிற்
சிலநாள் வைகிக் கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
பிறவும் பணியும் விருப்புறுவார்.
[972]
மங்கை பாகர் திருவருளால்
வணங்கிப் போந்து வடதிசையில்
செங்கண் விடையார் பதிபலவும்
பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான்பலவும்
கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிதமரும்
திருவோத் தூரைச் சேர்வுற்றார்.
[973]
தேவர் முனிவர்க்கு ஓத்தளித்த
திருவோத் தூரில் திருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர்
தாம்அங் கணையக் களிசிறந்து
மேவுங் கதலி தோரணங்கள்
விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியுஞ் சுண்ணமும்முன்
கொண்டு போற்றி எதிர்கொண்டார்.
[974]
சண்பை வேந்தர் தண்தரளச்
சிவிகை நின்றும் இழிந்தருளி
நண்பின் மிக்க சீரடியார்
சூழ நம்பர் கோபுரஞ்சூழ்
விண்பின் னாகமுன் னோங்கும்
வியன்பொற் புரிசை வலங்கொண்டு
பண்பு நீடிப் பணிந்தெழுந்து
பரமர் கோயில் உள்ளடைந்தார்.
[975]
வார ணத்தின் உரிபோர்த்த
மைந்தர் உமையாள் மணவாளர்
ஆர ணத்தின் உட்பொருளாய்
நின்றார் தம்முன் அணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும்
நண்ணற் கரிய கழல்போற்றும்
கார ணத்தின் வரும்இன்பக்
கண்ணீர் பொழியக் கைதொழுதார்.
[976]
தொழுது விழுந்து பணிந்தெழுந்து
சொல்மா லைகளால் துதிசெய்து
முழுது மானார் அருள்பெற்றுப்
போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப்
போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்தொன் றறிவிப்பார்.
[977]
அங்கை அனலேற் றவர்க்கடியேன்
ஆக்கும் பனைக ளானவெலாம்
மங்கு லுறநீண் டாண்பனையாய்க்
காயா வாகக் கண்டமணர்
இங்கு நீரிட் டாக்குவன
காய்த்தற் கடைவுண் டோவென்று
பொங்கு நகைசெய் திழித்துரைத்தார்
அருள வேண்டு மெனப்புகல.
[978]
பரம னார்தந் திருத்தொண்டர்
பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து
விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர
அணிந்தார் தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம்
இசையிற் பெருக எடுத்தருளி.
[979]
விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்
பதனில் விமல ரருளாலே
குரும்பை ஆண் பனைஈனும்
என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம்
நிறைந்த குலைக ளாய்க்குரும்பை
யரும்பு பெண்ணை யாகியிடக்
கண்டா ரெல்லாம் அதிசயித்தார்.

[980]
சீரின் மன்னும் திருக்கடைக்காப்
பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.
[981]
தென்னாட் டமண்மா சறுத்தார்தம்
செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார்
சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவையென்று
தகர்ப்பார் இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
அன்றே என்று போற்றினார்.
[982]
பிள்ளை யார்தந் திருவாக்கில்
பிறத்தலால்அத் தாலம்முன்
புள்ள பாசம் விட்டகல
ஒழியாப் பிறவி தனையொழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள்
கழித்துச் சிவமே கூடினவால்
வள்ள லார்மற் றவரருளின்
வாய்மை கூறின் வரம்பென்னாம்.
[983]
அங்கண் அமரர் பெருமானைப்
பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார்
மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும்
வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
டத்தைச் சென்று குறுகினார்.
[984]
ஆதி முதல்வர் குரங்கணில்முட்
டத்தை அணைந்து பணிந்தேத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர்
போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி
விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம்மன்னும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.
[985]
நீடுகாஞ்சி வாழ்நரும்
நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார்
வந்தணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பநேர்
குலவுவீதி கோலினார்
காடுகொண்ட பூகம்வாழை
காமர்தோ ரணங்களால்.
[986]
கொடிநிரைத்த வீதியில்
கோலவே திகைப்புறங்
கடி கொள்மாலை மொய்த்தபந்தர்
கந்தநீர்த் தசும்புடன்
மடிவில்பொன் விளக்கெடுத்து
மாதர்மைந்தர் மல்குவார்
படிவிளக்கும் அன்பரும்பரந்த
பண்பில் ஈண்டுவார்.
[987]
கோதைமாதர் ஆடலுங்
குலாவுதொண்டர் பாடலும்
வேதகீத நாதமும்
மிக்கெழுந்து விம்மவே
காதல்நீடு காஞ்சிவாழ்நர்
கம்பலைத் தெழுந்துபோய்
மூதெயிற் புறம்புசென்
றணைந்துமுன் வணங்கினார்.
[988]
சண்பையாளும் மன்னர்முன்பு
தொண்டர்வந்து சார்தலும்
பண்புநீடி யானமுன்
பிழிந்திறைஞ்சு பான்மைகண்
டெண்பெருக்கு மிக்கதொண்டர்
அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்தெழுந்து
வானம்முட்ட ஆர்த்தனர்.
[989]
சேணுயர்ந்த வாயில்நீடு
சீர்சொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றணி
விளங்கிட மனத்தினில்
பூணுமன்பர் தம்முடன்
புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யிற்குவித்த
கைந்நிரை யெடுத்தனர்.
[990]
வியல்நெடுந் தெருவினூடு
மிக்கதொண்டர் ஆர்ப்பெழக்
கயல்நெடுங்கண் மாதரும்
காதல்நீடு மாந்தரும்
புயல்பொழிந்த தாமெனப்
பூவினொடு பொற்சுணம்
இயலுமாறு வாழ்த்தெடுத்
திருமருங்கும் வீசினார்.
[991]
இன்னவண்ணம் யாவரும்
இன்பமெய்த எய்துவார்
பின்னுவார் சடைமுடிப்
பிரான்மகிழ்ந்த கோயில்கள்
முன்னுறப் பணிந்துபோய்
மொய்வரைத் திருமகள்
மன்னுபூ சனைமகிழ்ந்த
மன்னர்கோயில் முன்னினார்.
[992]
கம்பவாணர் கோயில்வாயில்
கண்டுகை குவித்தெடுத்
தும்பர்ஓங்கு கோபுரத்தின்
முன்னிறைஞ்சி உள்ளணைந்
தம்பொன்மா ளிகைப்புறத்தில்
அன்பரோடு சூழவந்
திம்பர்ஞாலம் உய்யவந்த
பிள்ளையார் இறைஞ்சுவார்.
[993]
செம்பொன்மலைக் கொடிதழுவக்
குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்கும்
கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி
பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல்
தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.
[994]
பலமுறையும் பணிந்தெழுந்து
பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுக மளித்ததிரு
மணிவாயால் மறையான்என்
றுலகுய்ய எடுத்தருளி
உருகியஅன் பென்புருக்க
நிலவுமிசை முதற்றாளம்
நிரம்பியநீர் மையில்நிகழ.
[995]
பாடினார் பணிவுற்றார்
பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார்
அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
தெரிவரியார் திருமகனார்.
[996]
மருவியஏ ழிசைபொழிய
மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப்
பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியஅன் புள்ளலைப்ப
உமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் உணர்வினொடும்
பரவியே புறத்தணைந்தார்.
[997]
புறத்தணைந்த தொண்டருடன்
போந்தமைந்த திருமடத்தில்
பெறற்கரும்பே றுலகுய்யப்
பெற்றருளும் பிள்ளையார்
மறப்பரிய காதலுடன்
வந்தெய்தி மகிழ்ந்துறைவார்
அறப்பெருஞ்செல் வக்காமக்
கோட்டம்அணைந் திறைஞ்சினார்.
[998]
திருவேகம் பத்தமர்ந்த
செழுஞ்சுடரைச் சேவடியில்
ஒருபோதும் தப்பாதே
உள்ளுருகிப் பணிகின்றார்
மருவுதிரு இயமகமும்
வளர்இருக்குக் குறள்மற்றும்
பெருகும்இசைத் திருப்பதிகத்
தொடைபுனைந்தார் பிள்ளையார்.
[999]
நீடுதிருப் பொழில்காஞ்சி
நெறிக்காரைக் காடிறைஞ்சிச்
சூடுமதிக் கண்ணியார்
துணைமலர்ச்சே வடிபாடி
ஆடுமவர் இனிதமரும்
அனேகதங்கா வதம்பரவி
மாடுதிருத் தானங்கள்
பணிந்தேத்தி வைகுநாள்.
[1000]
எண்திசையும் போற்றிசைக்கும்
திருப்பதிமற் றதன்புறத்துத்
தொண்டருடன் இனிதேகித்
தொல்லைவிடம் உண்டிருண்ட
கண்டர்மகிழ் மேற்றளியும்
முதலான கலந்தேத்தி
மண்டுபெருங் காதலினால்
வணங்கிமீண் டினிதிருந்தார்.
[1001]
அப்பதியில் விருப்பினொடும்
அங்கணரைப் பணிந்தமர்வார்
செப்பரிய புகழ்ப்பாலித்
திருநதியின் தென்கரைபோய்
மைப்பொலியுங் கண்டர்திரு
மாற்பேறு மகிழ்ந்திறைஞ்சி
முப்புரஞ்செற் றவர்தம்மை
மொழிமாலை சாத்தினார்.
[1002]
திருமாற்பே றுடையவர்தம்
திருவருள்பெற் றெழுந்தருளிக்
கருமாலுங் கருமாவாய்க்
காண்பரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார்
திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப்
பெரும்பிணையல் அணிவித்தார்.
[1003]
அங்குள்ள பிறபதியில்
அரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பாலியாற்றின்
புடையில்வட பாலிறைவர்
எங்கும்உறை பதிபணிவார்
இலம்பையங்கோட் டூரிறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத்
திருப்பதிகம் பாடினார்.
[1004]
திருத்தொண்டர் பலர்சூழத்
திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை
புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார்
தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல்
மேவினார் தமைப்பணிந்தார்.
[1005]
தொழுதுபல முறைபோற்றிச்
சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த
மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப்
பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்
போந்தனர்முத் தமிழ்விரகர்.
[1006]
குன்றநெடுஞ் சிலையாளர்
குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி
நீடுதிருத் தொண்டருடன்
பொன்தயங்கு மணிமாடப்
பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழையனூர்த்
திருவாலங் காட்டருகு.
[1007]
இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண
ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று
செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்
செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்.
[1008]
மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கென் றருளிச் செய்ய
ஞாலமிருள் நீங்கவரும் புகலி வேந்தர்
நடுஇடையா மத்தினிடைத் தொழுது ணர்ந்து
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்.
[1009]
துஞ்சவரு வார்என்றே எடுத்த வோசைச்
சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி
அஞ்சனமா கரியுரித்தார் அருளா மென்றே
அருளும்வகை திருக்கடைக்காப் பமையச் சாற்றி
பஞ்சுரமாம் பழைய திறங் கிழமை கொள்ளப்
பாடினார் பாரெலாம் உய்ய வந்தார்.
[1010]
நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடுதிருத் தொண்டர்குழா மணைந்தபோது
மாலையினில் திருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லாம்
அருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன்மருங்கு செல்ல லுற்றார்.
[1011]
திருப்பாசூர் அணைந்தருளி யங்கு மற்றச்
செழும்பதியோ ரெதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வே யிடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனியெலா முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாளன் நாமஞ் சிந்தை
யிடையாரென் றிசைப்பதிகம் அருளிச் செய்தார்.
[1012]
மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.
[1013]
மிக்கபெருங் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல்நாட் டினையகன்று வெற்பும் கானும்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதல் தலைவனிட மாகி யுள்ள
முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
[1014]
இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.
[1015]
மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண.
[1016]
கானவர்தங் குலம்உலகு போற்ற வந்த
கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய
மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும்
வானமறை நிலைபெரிய மரமும் தூறும்
ஏனையிமை யோர்தாமும் இறைஞ்சி யேத்தி
எய்தவரும் பெருமையவாம் எண்ணி லாத
தானமும்மற் றவைகடந்து திருக்கா ளத்தி
சாரஎழுந் தருளினார் சண்பை வேந்தர்.
[1017]
அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.
[1018]
திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்.
[1019]
வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்.
[1020]
திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.
[1021]
தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
[1022]
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்
பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்
மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.
[1023]
பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
பரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
தம்பெருமான் கழல்போற்றுந் தன்மைநீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
அரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்
புக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.
[1024]
யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.
[1025]
அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.
[1026]
கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்.
[1027]
தென்திசையில் கயிலையெனும்திருக்காளத்தி
போற்றிஇனி தமர்கின்றார் திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை
இறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி அங்கண்
இன்தமிழின் விரகரருள் பெற்று மீள்வார்
எந்தையா ரிணையடியென் மனத்த வென்று
பொன்தரளங் கொழித்திழி பொன் முகலிகூடப்
புனைந்ததிருப் பதிகஇசை போற்றிப் போந்தார்.
[1028]
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.
[1029]
திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம்பாடி
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்தெய் திவணங்கிப் போற்றி
உருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை
ஒற்றியூர் கைதொழச்சென் றுற்றபோது
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.
[1030]
மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
தொழுதிழிந்து விடையவனென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.
[1031]
பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால்
பொங்கியெழுங் காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றியெழும் மயிர்ப்புளகம் எங்கு மாகிப்
பரந்திழியுங் கண்ணருவி பாய நின்று
சொல்திகழுந் திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரொடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தார்
உலகுய்ய வுலவாத ஞானம் உண்டார்.
[1032]
இன்ன தன்மையிற் பிள்ளையார்
இருந்தனர் இப்பால்
பன்னு தொல்புகழ்த் திருமயி
லாபுரிப் பதியில்
மன்னு சீர்ப்பெரு வணிகர்தந்
தோன்றலார் திறத்து
முன்னம் எய்திய தொன்றினை
நிகழ்ந்தவா மொழிவாம்.
[1033]
அருநி தித்திறம் பெருக்குதற்
கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப்
பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப்
பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தின்
எல்லையில் வளத்தார்.
[1034]
தம்மை யுள்ளவா றறிந்தபின்
சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன்
மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது
எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார்
சிவநேசர் என்பார்.
[1035]
கற்றை வார்சடை முடியினார்
அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவின்றி
உருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம
யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமும்
உடையராய்த் திகழ்வார்.
[1036]
ஆன நாள்செல அருமறைக்
கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும்
நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம்
இழித்தழித் ததுவும்
ஊன மில்புகழ் அடியர்பால்
கேட்டுவந் துளராய்.
[1037]
செல்வ மல்கிய சிரபுரத்
தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலின்
இடையறா வுணர்வால்
அல்லும் நண்பக லும்புரிந்
தவர்அருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவும்
தொழிலின ரானார்.
[1038]
நிகழும் மாங்கவர் நிதிப்பெருங்
கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினிற்
சிறந்துள ராகிப்
புகழும் மேன்மையில் உலகினில்
பொலிந்துளா ரெனினும்
மகவி லாமையின்ம கிழ்மனை
வாழ்க்கையின் மருண்டு.
[1039]
அரிய நீர்மையில் அருந்தவம்
புரிந்தரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை யுலப்பில
செய்தஅந் நலத்தால்
கரிய வாங்குழன் மனைவியார்
வயிறெனுங் கமலத்
துரிய பூமக ளெனவொரு
பெண்கொடி யுதித்தாள்.
[1040]
நல்ல நாள்பெற ஓரையில்
நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு
வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண்
டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப்
பொழிந்துளம் மகிழ்ந்தார்.
[1041]
ஆறு சூடிய முடியினார்
அடியவர்க் கன்பால்
ஈறி லாதபூ சனைகள்யா
வையுமிகச் செய்து
மாறி லாமறை யவர்க்குவேண்
டினவெலாம் அளித்துப்
பேறு மற்றிதுவே எனும்படி
பெருங்களி சிறந்தார்.
[1042]
சூத நல்வினை மங்கலத்
தொழில்முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி
வழாவகை விரித்த
சாத கத்தொடு சடங்குகள்
தசதினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில்
கடிவிழா அயர்ந்தார்.
[1043]
யாவ ரும்பெரு மகிழ்ச்சியால்
இன்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர்
பண்பெலாம் நோக்கிப்
பூவி னாள்என வருதலின்
பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர்
புவியின்மேல் விளங்க.
[1044]
திங்கள் தோறுமுன் செய்யும்அத்
திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை
மாட்சியிற் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட
ஆண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி
தளர்நடை பயில.
[1045]
தளரும் மின்னின்அங் குரமெனத்
தமனியக் கொடியின்
வளரி ளந்தளிர்க் கிளையென
மணிகிள ரொளியின்
அளவி லஞ்சுடர்க் கொழுந்தென
அணைவுறும் பருவத்
திளவ னப்பிணை யனையவர்க்
ஏழுயாண் டெய்த.
[1046]
அழகின் முன்னிளம் பதமென
அணிவிளக் கென்ன
விழவு கொண்டெழும் பேதைய
ருடன்விளை யாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம்
என்றுமற் றினைய
மழலை மென்கிளிக் குலமென
மனையிடை ஆடி.
[1047]
பொற்றொ டிச்சிறு மகளிர்
ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்துட
னடுந்தொழிற் சிறுசோ
றுற்ற உண்டிகள் பயின்றொளி
மணியூசல் ஆடி
மற்றும்இன்புறு வண்டலாட்
டயர்வுடன் வளர.
[1048]
தந்தை யாரும்அத் தளிரிளம்
கொம்பனாள் தகைமை
இந்த வையகத் தின்மையால்
இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்துமற்
றிவள்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக்
குரியனென்று அறைந்தார்.
[1049]
ஆய நாள்களில் அமண்பயில்
பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய
தோன்றலார் அணைந்து
மாய வல்லமண் கையரை
வாதில்வென் றதுவும்
மேய வெப்பிடர் மீனவன்
மேலொழித் ததுவும்.
[1050]
நெருப்பில் அஞ்சினார் தங்களை
நீரில் ஒட்டியபின்
மருப்பு நீள்கழுக் கோலின்மற்
றவர்கள் ஏறியதும்
விருப்பி னால்திரு நீறுமீ
னவற்களித் தருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம்
போற்றுவித் ததுவும்.
[1051]
இன்ன வாறெலாம் அறிந்துளார்
எய்தியங் கிசைப்பச்
சொன்ன வர்க்கெலாம் இருநிதி
தூசுடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார்
தமைத்திசை நோக்கிச்
சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந்
தெழுந்துசெந் நின்று.
[1052]
சுற்றம் நீடிய கிளையெலாம்
சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநா
டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும்
பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன்
யானென்று மொழிந்தார்.
[1053]
எல்லை யில்பெருங் களிப்பினால்
இப்பரி சியம்பி
முல்லை வெண்ணகை முகிழ்முலை
யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையும்
மறைவளர் புகலிச்
செல்வ ரேயுடை யாரெனும்
சிந்தையால் மகிழ்ந்தார்.
[1054]
ஆற்று நாள்களில் அணங்கனார்
கன்னிமா டத்தின்
பால்த டம்பொழில் மருங்கினிற்
பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய
ருடன்புறம் போந்து
கோற்றொடித் தளிர்க் கையினால்
முகைமலர் கொய்ய.
[1055]
அன்பர் இன்புறும் ஆர்வத்தின்
அளித்தபாங் கல்லால்
பொன்பி றங்குநீர்ப் புகலிகா
வலர்க்கிது புணரா
தென்ப துட்கொண்ட பான்மைஓர்
எயிற்றிளம் பணியாய்
முன்ப ணைந்தது போலவோர்
முள்ளெயிற்று அரவம்.
[1056]
மௌவல் மாதவிப் பந்தரில்
மறைந்துவந் தெய்திச்
செவ்வி நாண்முகை கவர்பொழு
தினில்மலர்ச் செங்கை
நவ்வி வாள்விழி நறுநுதற்
செறிநெறி கூந்தல்
கொவ்வை வாயவள் முகிழ்விரல்
கவர்ந்தது குறித்து.
[1057]
நாலு தந்தமும் என்புறக்
கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின்
றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடர்ந்தெழ
நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது
போன்றுள மயங்கி.
[1058]
தரையில் வீழ்தரச் சேடியர்
வெருக்கொண்டு தாங்கி
வரைசெய் மாடத்தின் உட்கொடு
புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலையழிந்
துறுதுயர் பெருகக்
கரையில் சுற்றமுந் தாமும்முன்
கலங்கினார் கலுழ்ந்தார்.
[1059]
விடந்தொ லைத்திடும் விஞ்சையில்
பெரியராம் மேலோர்
அடர்ந்த தீவிடம் அகற்றுதற்
கணைந்துளார் அனேகர்
திடங்கொள் மந்திரந் தியானபா
வகநிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தொழிலராய்த்
தனித்தனிச் சூழ்வார்.
[1060]
மருந்தும் எண்ணில் மாறில
செய்யவும் வலிந்து
பொருந்து வல்விடம் ஏழுவே
கமும்முறை பொங்கிப்
பெருந்த டங்கண்மென் கொடியனாள்
தலைமிசைப் பிறங்கித்
திருந்து செய்வினை யாவையும்
கடந்துதீர்ந் திலதால்.
[1061]
ஆவி தங்குபல் குறிகளும்
அடைவில வாக
மேவு காருட விஞ்சைவித்
தகர்இது விதியென்
றோவும் வேளையில் உறுபெரும்
சுற்றமும் அலறிப்
பாவை மேல்விழுந் தழுதனர்
படரொலிக் கடல்போல்.
[1062]
சிந்தை வெந்துயர் உறுசிவ
நேசருந் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில்
வையகத் துள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு
ஈகுவன்என் னுடைய
அந்த மில்நிதிக் குவையெனப்
பறையறை வித்தார்.
[1063]
முரசி யம்பிய மூன்றுநாள்
அகவயின் முற்ற
அரசர் பாங்குளோர் உட்பட
அவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரும்
அணைந்துதங் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடா
தொழிந்திடப் போனார்.
[1064]
சீரின் மன்னிய சிவநேசர்
கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ்
கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல்
தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே
மிப்பது தெளிவார்.
[1065]
உடைய பிள்ளையார்க் கெனஇவள்
அடைவு துன்புறு வதற்கிலை
யாம்நமக் கென்றே
இடரொ ழிந்தபின் அடக்கிய
என்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற்
புகப்பெய்து வைப்பார்.
[1066]
கன்னி மாடத்தின் முன்புபோல்
பொன்னு முத்துமே லணிகலன்
பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை
விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு பொன்னரி மாலைகள்
அணிந்துவைத் தனரால்.
[1067]
மாலை சாந்தொடு மஞ்சனம்
நாடொறும் வழாமைப்
பாலி னேர்தரும் போனகம்
பகல்விளக்கு இனைய
சாலு நன்மையில் தகுவன
நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு மாசெய யாவரும்
வியப்பெய்து நாளில்.
[1068]
சண்பை மன்னவர் திருவொற்றி
யூர்நகர் சார்ந்து
பண்பு பெற்றநற் றொண்டர்க
ளுடன்பணிந் திருந்த
நண்பு மிக்கநல் வார்த்தைஅந்
நற்பதி யுள்ளோர்
வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு
வந்துரை செய்தார்.
[1069]
சொன்ன வர்க்கெலாந் தூசொடு
காசுபொன் னளித்தே
இன்ன தன்மையர் எனவொணா
மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு
வொற்றியூ ரளவும்
துன்னு நீள்நடைக் காவணந்
துகில்விதா னித்து.
[1070]
மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.
[1071]
இன்ன வாறணி செய்துபல்
குறைவறுப் பேவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை
முத்தமிழ் விரகர்
பொன்ன டித்தலம் தலைமிசைப்
புனைவனென் றெழுவார்
அந்ந கர்ப்பெருந் தொண்டரும்
உடன்செல வணைந்தார்.
[1072]
ஆய வேலையில் அருமறைப்
புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர்
வியனகர் அகன்று
காயல் சூழ்கரைக் கடல்மயி
லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும்
எதிர்வந்து தோன்ற.
[1073]
மாறில் வண்பெரு வணிகரும்
தொண்டரும் மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை
நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமக
னார்அணைந் தாரென்
ஈறி லாததோர் மகிழ்ச்சியி
னால்விழுந் திறைஞ்ச.
[1074]
காழி நாடரும் கதிர்மணிச்
சிவிகைநின் றிழிந்து
சூழி ரும்பெருந் தொண்டர்முன்
தொழுதெழுந் தருளி
வாழி மாதவர் வணிகர்செய்
திறஞ்சொலக் கேட்டே
ஆழி சூழ்மயி லாபுரித்
திருநகர் அணைந்தார்.
[1075]
அத்தி றத்துமுன் நிகழ்ந்தது
திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர்
தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர்
புறத்துறை அழிய
வைத்த வப்பெருங் கருணைநோக்
கால்மகிழ்ந் தருளி.
[1076]
கங்கை வார்சடை யார்கபா
லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுரம்
தொழுதுபுக் கருளி
மங்கை பாகர்தம் கோயிலை
வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேல் குவிந்திடத்
திருமுன்பு சேர்ந்தார்.
[1077]
தேவ தேவனைத் திருக்கபா
லீச்சரத் தமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு
பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய
விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையால் போற்றினார்
ஞானசம் பந்தர்.
[1078]
போற்றி மெய்யருள் திறம்பெறு
பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறைமயிர்ப்
புளகங்கள் நெருங்கக்
கூற்ற டர்த்தவர் கோயிலின்
புறம்புபோந் தருளி
ஆற்றும் இன்னருள் வணிகர்மேற்
செலவருள் செய்வார்.
[1079]
ஒருமை உய்த்தநல் லுணர்வி
னீர்உல கவர்அறிய
அருமை யால்பெறும் மகள்என்பு
நிறைத்தஅக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி
வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலில்
கொணர்கென்று செப்ப.
[1080]
அந்த மில்பெரு மகிழ்ச்சியால்
அவனிமேல் பணிந்து
வந்து தந்திரு மனையினில்
மேவிஅம் மருங்கு
கந்த வார்பொழில் கன்னிமா
டத்தினில் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர்
குடத்தைவே றெடுத்து.
[1081]
மூடு பன்மணிச் சிவிகையுள்
பெய்துமுன் போத
மாடு சேடியர் இனம்புடை
சூழ்ந்துவந் தணைய
ஆடல் மேவினார் திருக்கபா
லீச்சரம் அணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச்
சிவிகையை நீக்கி.
[1082]
அங்க ணாளர்தம் அபிமுகத்
தினில்அடி யுறைப்பால்
மங்கை என்புசேர் குடத்தினை
வைத்துமுன் வணங்கப்
பொங்கு நீள்புனற் புகலிகா
வலர்புவ னத்துத்
தங்கி வாழ்பவர்க் குறுதியாம்
நிலைமைசா திப்பார்.
[1083]
மாடம் ஓங்கிய மயிலைமா
நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில்
சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந்
தெய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர்
விசும்பிடை நெருங்க.
[1084]
தொண்டர் தம்பெரும் குழாம்புடை
சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர
வாயில்நேர் அணைந்து
வண்டு வார்குழ லாள்என்பு
நிறைந்தமண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின்
பெருமையே கருதி.
[1085]
இந்த மாநிலத் திறந்துளோர்
என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட
நன்மையாந் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம்
எனவருள் நோக்கால்
சிந்தும் அங்கம்அங் குடையபூம்
பாவைபேர் செப்பி.
[1086]
மண்ணி னில்பிறந் தார்பெறும்
பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை
அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப்
பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன்
வருகஎன வுரைப்பார்.
[1087]
மன்னு வார்சடை யாரைமுன்
தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில்
போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும்
அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த்
தொக்கதக் குடத்துள்.
[1088]
ஆன தன்மையில் அத்திருப்
பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும்
பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத் தடங்கிமுன்
னிருந்தெழு வதன்முன்
ஞான போனகர் பின்சமண்
பாட்டினை நவில்வார்.
[1089]
தேற்ற மில்சமண் சாக்கியத்
திண்ணர்இச் செய்கை
ஏற்ற தன்றென எடுத்துரைப்
பார்என்ற போது
கோற்றொ டிச்செங்கை தோற்றிடக்
குடமுடைந் தெழுவாள்
போற்று தாமரைப் போதவிழ்ந்
தெழுந்தனள் போன்றாள்.
[1090]
எடுத்த பாட்டினில்வடிவுபெற்
றிருநான்கு திருப்பாட்
டடுத்த அம்முறைப் பன்னிரண்
டாண்டள வணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில்
தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக்
காப்புமேல் விரித்தார்.
[1091]
ஆங்கனம் எழுந்து நின்ற
அணங்கினை நோக்கு வார்கள்
ஈங்கிது காணீர் என்னா
அற்புத மெய்தும் வேலைப்
பாங்குசூழ் தொண்ட ரானோர்
அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய வோசை யும்பர்
நாட்டினை உற்ற தன்றே.
[1092]
தேவரும் முனிவர் தாமும்
திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி
பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம்
எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி
மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.
[1093]
அங்கவள் உருவங் காண்பார்
அதிசயம் மிகவும் எய்திப்
பங்கமுற் றாரே போன்றார்
பரசம யத்தி னுள்ளோர்
எங்குள செய்கை தான்மற்
றென்செய்த வாறி தென்று
சங்கையாம் உணர்வு கொள்ளும்
சமணர்தள் ளாடி வீழ்ந்தார்.
[1094]
கன்னிதன் வனப்புத் தன்னைக்
கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லாம்
மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா
மரையின்மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற
சூழல்போ லிருண்டு தோன்ற.
[1095]
பாங்கணி சுரும்பு மொய்த்த
பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும்
திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக் கழகின் மாரி
பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின்
வளரொளி வனப்பு வாய்ப்ப.
[1096]
புருவமென் கொடிகள் பண்டு
புரமெரித் தவர்தம் நெற்றி
ஒருவிழி எரியில் நீறா
யருள்பெற உளனாம் காமன்
செருவெழும் தனுவ தொன்றும்
சேமவில் லொன்றும் ஆக
இருபெருஞ் சிலைகள் முன்கொண்
டெழுந்தன போல ஏற்ப.
[1097]
மண்ணிய மணியின் செய்ய
வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில்
காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய
கயலிரண் டொத்து லாவ.
[1098]
பணிவளர் அல்குல் பாவை
நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியில் தோன்றும்
நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு
மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி
அனையதாம் அழகு காட்ட.
[1099]
இளமயில் அனைய சாயல்
ஏந்திழை குழைகொள் காது
வளமிகு வனப்பி னாலும்
வடிந்ததா ளுடைமை யாலும்
கிளரொளி மகர ஏறு
கெழுமிய தன்மை யாலும்
[1100]
விற்பொலி தரளக் கோவை
விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதன மாகும்
பதுமநன் னிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும்
நன்னிதி போன்று தோன்றி
அற்பொலி கண்டர் தந்த
அருட்கடை யாளங் காட்ட.
[1101]
எரியவிழ் காந்தள் மென்பூத்
தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை
மாலையோ தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை
கைகளால் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ என்னும்
அதிசயம் வடிவில் தோன்ற.
[1102]
ஏர்கெழு மார்பிற் பொங்கும்
ஏந்திளங் கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை நீக்குங்
கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர்திரு வருளிற் பூரித்
தடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டுஞ்
செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
[1103]
காமவேள் என்னும் வேடன்
உந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்கள் தம்மை
யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த
சலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி
மருங்கின்மேல் உரோம வல்லி.
[1104]
பிணியவிழ் மலர்மென் கூந்தல்
பெண்ணமு தனையாள் செம்பொன்
அணிவளர் அல்குல் தங்கள்
அரவுசெய் பிழையால் அஞ்சி
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து
வனப்புடை அல்கு லாகிப்
பணியுல காளும் சேடன்
பணம்விரித் தடைதல் காட்ட.
[1105]
வரிமயில் அனைய சாயல்
மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று
கதலிமென் தண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச்
செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப்
பொலிந்தொளி விளங்கிப் பொங்க.
[1106]
பூவலர் நறுமென் கூந்தல்
பொற்கொடி கணைக்கால் காமன்
ஆவநா ழிகையே போலும்
அழகினின் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின்
வனப்பினை மீதிட் டென்றும்
ஓவியர்க் கெழுத ஒண்ணாப்
பரட்டொளி ஒளிர்வுற் றோங்க.
[1107]
கற்பகம் ஈன்ற செவ்விக்
காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப்
பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட
ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி
அழகினுக் கணியாய் நின்றாள்.
[1108]
எண்ணில்ஆண் டெய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு
பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார்.
[1109]
இன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்
தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார்
பொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள்
சென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.
[1110]
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்
திணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.
[1111]
சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.
[1112]
பெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார்
மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்
றருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்தருள் செய்யும் என்றலும்.
[1113]
மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.
[1114]
வணிகருஞ் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமல ரடியில்வீழ்ந் தரற்ற ஆங்கவர்
தணிவில்நீள் பெருந்துயர் தணிய வேதநூல்
துணிவினை யருள்செய்தார் தூய வாய்மையார்.
[1115]
தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின்
உள்ளெழுந் தருளினார் உடைய பிள்ளையார்.
[1116]
பான்மையால் வணிகரும் பாவை தன்மணம்
ஏனையோர்க் கிசைகிலேன் என்று கொண்டுபோய்
வானுயர் கன்னிமா டத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
[1117]
தேவர்பிரான் அமர்ந்தருளும்
திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர்
விரிஞ்சன்முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை
கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப்
பன்முறையும் பணிந்தெழுவார்.
[1118]
தொழுதுபுறம் போந்தருளித்
தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப்
பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர்
முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார்
அப்பதியின் மருங்ககல்வார்.
[1119]
திருத்தொண்டர் அங்குள்ளார்
விடைகொள்ளச் சிவநேசர்
வருத்தம்அகன் றிடமதுர
மொழியருளி விடைகொடுத்து
நிருத்தர்உறை பிறபதிகள்
வணங்கிப்போய் நிறைகாதல்
அருத்தியொடும் திருவான்மி
யூர்பணிய அணைவுற்றார்.
[1120]
திருவான்மி யூர்மன்னும்
திருத்தொண்டர் சிறப்பெதிர
வருவார்மங் கலஅணிகள்
மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி
அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித்
தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.
[1121]
மிக்குயர்ந்த கோபுரத்தை
வணங்கிவியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப்
புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்தும்
குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார்
சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.
[1122]
தாழ்ந்துபல முறைபணிந்து
தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி
மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச்
சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன்
சாத்திமிக இன்புற்றார்.
[1123]
பரவிவரும் ஆனந்தம்
நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள்
மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை
அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார்
சிலநாள்அங் கினிதமர்ந்தார்.
[1124]
அங்கண்அமர் வார்உலகா
ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள்
பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார்
பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம்
இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.
[1125]
சென்னியிள மதியணிந்தார்
மருவுதிரு இடைச்சுரத்து
மன்னுதிருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள வந்தருளி
நன்நெடுங்கோ புரம்இறைஞ்சி
உட்புகுந்து நற்கோயில்
தன்னைவலங் கொண்டணைந்தார்
தம்பிரான் திருமுன்பு.
[1126]
கண்டபொழு தேகலந்த
காதலால் கைதலைமேல்
கொண்டுதலம் உறவிழுந்து
குலவுபெரு மகிழ்ச்சியுடன்
மண்டியபே ரன்புருகி
மயிர்முகிழ்ப்ப வணங்கிஎழுந்
தண்டர்பிரான் திருமேனி
வண்ணங்கண்டு அதிசயித்தார்.
[1127]
இருந்தஇடைச் சுரம்மேவும்
இவர்வண்ணம் என்னேயென்
றருந்தமிழின் திருப்பதிகத்
தலர்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத்
திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார்
பேருலகின் பேறானார்.
[1128]
நிறைந்தாரா வேட்கையினால்
நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்
குறைந்தருளிப் பணிகின்றார்
உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன்
எழுந்தருளிச் செந்துருத்தி
அறந்தளிகள் பயில்சாரல்
திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.
[1129]
சென்றணையும் பொழுதின்கண்
திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்திகழும் மணிச்சிவிகை
இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத்
திருமலையை வலங்கொண்டு
மின்தயங்கும் சடையாரை
விருப்பினுடன் பணிகின்றார்.
[1130]
திருக்கழுக்குன் றத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால்
பணிந்தெழுந்து பேராத
கருத்தினுடன் காதல்செயுங்
கோயில்கழுக் குன்றென்று
திருப்பதிகம் புனைந்தருளிச்
சிந்தைநிறை மகிழ்வுற்றார்.
[1131]
இன்புற்றங் கமர்ந்தருளி
ஈறில்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார்
அருள்பெற்றுப் போந்தருளி
என்புற்ற மணிமார்பர்
எல்லையிலா ஆட்சிபுரிந்
தன்புற்று மகிழ்ந்ததிரு
அச்சிறுபாக் கத்தணைந்தார்.
[1132]
ஆதிமுதல் வரைவணங்கி
ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை
குலவியபா டலில்போற்றி
மாதவத்து முனிவருடன்
வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார்
சின்னாள்அங் கமர்ந்தருளி.
[1133]
ஏறணிந்த வெல்கொடியார்
இனிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்டர்
எதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானம்
கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு
அரசிலியை வந்தடைந்தார்.
[1134]
அரசிலியில் அமர்ந்தருளும்
அங்கண்அர சைப்பணிந்து
பரசியெழு திருப்புறவார்
பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
மேவுபதி பலவணங்கித்
திரைசெய்நெடுங் கடலுடுத்த
திருத்தில்லை நகரணைந்தார்.
[1135]
எல்லையில்ஞா னத்தலைவர்
எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில்வா ழந்தணர்மெய்த்
திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கியெதிர் பணிந்திறைஞ்ச
மணிமுத்தின் சிவிகையிழிந்
தல்கு பெருங் காதலுடன்
அஞ்சலிகொண் டணைகின்றார்.
[1136]
திருவெல்லை யினைப்பணிந்து
சென்றணைவார் சேண்விசும்பை
மருவிவிளங் கொளிதழைக்கும்
வடதிசைவா யிலைவணங்கி
உருகுபெருங் காதலுடன்
உட்புகுந்து மறையினொலி
பெருகிவளர் மணிமாடப்
பெருந்திருவீ தியைஅணைந்தார்.
[1137]
நலம்மலியும் திருவீதி
பணிந்தெழுந்து நற்றவர்தம்
குலம்நிறைந்த திருவாயில்
குவித்தமலர்ச் செங்கையொடு
தலம்உறமுன் தாழ்ந்தெய்தித்
தமனியமா ளிகைமருங்கு
வலம் உறவந் தோங்கியபே
ரம்பலத்தை வணங்கினார்.
[1138]
வணங்கிமிக மனம்மகிழ்ந்து
மாலயனும் தொழும்பூத
கணங்கள்மிடை திருவாயில்
பணிந்தெழுந்து கண்களிப்ப
அணங்குதனிக் கண்டருள
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கடந்த தனிக்கூத்தர்
பெருங்கூத்துக் கும்பிடுவார்.
[1139]
தொண்டர்மனம் பிரியாத
திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினால்
நோக்கிமுகம் மலர்ந்தெழுவார்
அண்டமெலாம் நிறைந்தெழுந்த
ஆனந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின்
கரையில்லா நிலையணைந்தார்.
[1140]
அந்நிலைமை யடைந்துதிளைத்
தாங்கெய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை
வலங்கொண்டு போந்தருளிப்
பொன்னணிமா ளிகைவீதிப்
புறத்தணைந்து போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக்
கும்பிட்டங் கினிதமர்ந்தார்.
[1141]
திருந்தியசீர்த் தாதையார்
சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப்
பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும்
பெரும்பற்றப் புலியூரில்
இருந்தமிழா கரர்அணைந்தார்
எனக்கேட்டு வந்தணைந்தார்.
[1142]
ஆங்கவரைக் கண்டுசிறப்
பளித்தருளி அவரோடும்
தாங்கரிய காதலினால்
தம்பெருமான் கழல்வணங்க
ஓங்குதிருத் தில்லைவாழ்
அந்தணரும் உடனாகத்
தேங்கமழ்கொன் றைச்சடையார்
திருச்சிற்றம் பலம்பணிந்தார்.
[1143]
தென்புகலி அந்தணரும்
தில்லைவா ழந்தணரும்
அன்புநெறி பெருக்குவித்த
ஆண்தகையார் அடிபோற்றிப்
பொன்புரிசெஞ் சடைக்கூத்தர்
அருள்பெற்றுப் போந்தருளி
இன்புறுதோ ணியில்அமர்ந்தார்
தமைவணங்க எழுந்தருள.
[1144]
நற்றவர்தங் குழாத்தோடும்
நம்பர்திரு நடம்செய்யும்
பொற்பதியின் திருவெல்லை
பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றம்உயர்த் தவர்அமர்ந்த
பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக்
கழுமலமே சென்றடைவார்.
[1145]
பல்பதிகள் கடந்தருளிப்
பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய்
தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின்
சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேல்
திருப்பதிகம் அருள் செய்வார்.
[1146]
மன்னுமிசை மொழிவண்டார்
குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண்
தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை
எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப்
புறம்பணையில் வந்தணைந்தார்.
[1147]
வாழிவளர் புறம்பணையின்
மருங்கணைந்து வரிவண்டு
சூழுமலர் நறுந்தீப
தூபங்க ளுடன்தொழுது
காழிநகர் சேர்மின்எனக்
கடைமுடிந்த திருப்பதிகம்
ஏழிசையி னுடன்பாடி
எயில்மூதூர் உட்புகுந்தார்.
[1148]
சேணுயர்ந்த திருத்தோணி
வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த ஆதரவின்
தலைப்பாடு தனையுன்னி
நீள்நிலைக்கோ புரம்அணைந்து
நேரிறைஞ்சிப் புக்கருளி
வாள்நிலவு பெருங்கோயில்
வலங்கொண்டு முன்பணிந்தார்.
[1149]
முன்னிறைஞ்சித் திருவருளின்
முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன்
புணர்ந்திருந்த புராதனரைச்
சென்னிமிசைக் குவித்தகரம்
கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி
மனங்களிப்ப வணங்குவார்.
[1150]
பரவுதிருப் பதிகங்கள்
பலவும்இசை யினிற்பாடி
விரவியகண் ணருவிநீர்
வெள்ளத்திற் குளித்தருளி
அரவணிந்தார் அருள்பெருகப்
புறம்பெய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார்
தந்திருமா ளிகைசேர்ந்தார்.
[1151]
மாளிகையின் உள்ளணைந்து
மறையவர்கட் கருள்புரிந்து
தாள்பணியும் பெருங்கிளைக்குத்
தகுதியினால் தலையளிசெய்
தாளுடைய தம்பெருமான்
அடியவர்க ளுடன்அமர்ந்து
நீளவரும் பேரின்பம்
மிகப்பெருக நிகழுநாள்.
[1152]
காழிநா டுடையபிரான்
கழல்வணங்கி மகிழ்வெய்த
ஆழியினும் மிகப்பெருகும்
ஆசையுடன் திருமுருகர்
வாழிதிரு நீலநக்கர்முதல்
தொண்டர் மற்றெனையோர்
சூழுநெடுஞ் சுற்றமுடன்
றோணிபுரந் தொழுதணைந்தார்.
[1153]
வந்தவரை எதிர்கொண்டு
மனமகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில்சீர் அடியார்க
ளவரோடு மினிதமர்ந்து
சுந்தரவா ரணங்கினுடன்
றோணியில்வீற் றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால்
திருப்பதிகம் பலபாடி.
[1154]
பெருமகிழ்ச்சி யுடன்செல்லப்
பெருந்தவத்தால் பெற்றவரும்
மருவுபெருங் கிளையான
மறையவரும் உடன்கூடித்
திருவளர்ஞா னத்தலைவர்
திருமணம்செய் தருளுதற்குப்
பருவம்இது என்றெண்ணி
அறிவிக்கப் பாங்கணைந்தார்.
[1155]
நாட்டுமறை முறையொழுக்கம்
ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார்
கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல
புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென
விண்ணப்பம் செய்தார்கள்.
[1156]
மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள.
[1157]
அருமறையோர் அவர்பின்னும்
கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
திருவுள்ளம் செய்யுமென.
[1158]
மறைவாழ அந்தணர்தம்
வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
தமைத்தொழுது மனங்களித்தார்.
[1159]
திருஞான சம்பந்தர்
திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப்
பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும்
உளமகிழ்ச்சி எய்துவார்.
[1160]
ஏதமில்சீர் மறையவரில்
ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
எனப்பொருந்த எண்ணினார்.
[1161]
திருஞான சம்பந்தர்
சீர்பெருக மணம்புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர்
மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெருஞ்சுற்றம்
மகிழ்சிறப்ப மகள்பேசத்
தருவார்தண் பணைநல்லூர்
சார்கின்றார் தாதையார்.
[1162]
மிக்கதிருத் தொண்டர்களும்
வேதியரும் உடன்ஏகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப்
பெருமணத்தைச் சென்றெய்தத்
தக்கபுகழ் நம்பாண்டார்
நம்பிதாம் அதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தம்
திருப்பாதம் தொழுதெழுவார்.
[1163]
ஒப்பரிய பேருவகை
ஓங்கியெழும் உள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு
மறுகெல்லாம் அணிபெருக்கிச்
செப்பரிய ஆர்வமிகு
பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
எப்பொருளும் எய்தினேன்
எனத்தொழுதங் கெதிர்கொண்டார்.
[1164]
எதிர்கொண்டு மணிமாடத்
தினில்எய்தி இன்பமுறு
மதுரமொழி பலமொழிந்து
வரன்முறையால் சிறப்பளிப்பச்
சதுர்முகனின் மேலாய
சண்பைவரு மறையவரும்
முதிருணர்வின் மாதவரும்
அணைந்ததிறம் மொழிகின்றார்.
[1165]
ஞானபோ னகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால்
மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால்
அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு
மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.
[1166]
உம்முடைய பெருந்தவத்தால்
உலகனைத்தும் ஈன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலில்
குழைத்தஆ ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை
யாமுய்யத் தருகின்றோம்
வம்மின்என உரைசெய்து
மனமகிழ்ந்து செலவிடுத்தார்.
[1167]
பேருவகை யால்இசைவு
பெற்றவர்தாம் மீண்டணைந்து
காருலவு மலர்ச்சோலைக்
கழுமலத்தை வந்தெய்திச்
சீருடைய பிள்ளையார்க்கு
அவர்நேர்ந்த படிசெப்பிப்
பார்குலவும் திருமணத்தின்
பான்மைவினை தொடங்குவார்.
[1168]
திருமணஞ்செய் கலியாணத்
திருநாளும் திகழ்சிறப்பின்
மருவிய ஓரையுங்கணித
மங்கலநூ லவர்வகுப்பப்
பெருகுமண நாள்ஓலை
பெருஞ்சிறப்பி னுடன் போக்கி
அருள்புரிந்து நன்னாளில்
அணிமுளைப்பா லிகைவிதைத்தார்.
[1169]
செல்வம்மலி திருப்புகலிச்
செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு
மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து
மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க
அணிசிறக்க அலங்கரித்தார்.
[1170]
அருந்தவத்தோர் அந்தணர்கள்
அயலுள்ளோர் தாம்உய்யப்
பொருந்துதிரு நாள்ஓலை
பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார்
நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தால் மகட்கொடுப்பார்
வதுவைவினை தொடங்குவார்.
[1171]
மன்னுபெருஞ் சுற்றத்தார்
எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக்
கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம்
பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது
புனிதமுளை பூரித்தார்.
[1172]
சேணுயரும் மாடங்கள்
திருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள்
நிகரில்அணி பெறவிளக்கிக்
காணவரு கைவண்ணம்
கவின்ஓங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண்
மங்கலக்கோ லம்புனைந்து.
[1173]
நீடுநிலைத் தோரணங்கள்
நீள்மறுகு தொறும்நிரைத்து
மாடுயரும் கொடிமாலை
மணிமாலை இடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள்
செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின்
பெரும்பந்தர் பலபுனைந்தார்.
[1174]
மன்றல்வினைத் திருமுளைநாள்
தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும்
முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு
நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள்
தூபங்கள் துதைவித்தார்.
[1175]
எங்கணும்மெய்த் திருத்தொண்டர்
மறையவர்கள் ஏனையோர்
மங்கலநீள் மணவினைநாள்
கேட்டுமிக மகிழ்வெய்திப்
பொங்குதிருப் புகலிதனில்
நாள்தோறும் புகுந்துஈண்ட
அங்கண்அணைந் தவர்க்கெல்லாம்
பெருஞ்சிறப்பு மிகவளித்தார்.
[1176]
மங்கலதூ ரியநாதம்
மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை
கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின்
தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும்
தெய்வவிரை மணம்பெருக.
[1177]
எண்திசையில் உள்ளோரும்
ஈண்டுவளத் தொடுநெருங்கப்
பண்டநிறை சாலைகளும்
பலவேறு விதம்பயில
மண்டுபெரு நிதிக்குவைகள்
மலைப்பிறங்கல் எனமலிய
உண்டிவினைப் பெருந்துழனி
ஓவாத ஒலியோங்க.

[1178]
மாமறைநூல் விதிச்சடங்கின்
வகுத்தமுறை நெறிமரபின்
தூமணநல் லுபகரணம்
சமைப்பவர்தந் தொழில்துவன்றத்
தாமரையோன் அனையபெருந்
தவமறையோர் தாம்எடுத்த
பூமருவு பொற்கலசப்
புண்ணியநீர் பொலிவெய்த.
[1179]
குங்குமத்தின் செழுஞ்சேற்றின்
கூட்டமைப்போர் இனங்குழுமப்
பொங்குவிரைப் புதுக்கலவைப்
புகையெடுப்போர் தொகைவிரவத்
துங்கநறுங் கர்ப்பூரச்
சுண்ணம்இடிப் போர்நெருங்க
எங்குமலர்ப் பிணைபுனைவோர்
ஈட்டங்கள் மிகப்பெருக.
[1180]
இனையபல வேறுதொழில்
எம்மருங்கும் நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லாம்
மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்கள்
நெருங்குதலால் நிதிக்கோமான்
தனையிறைவர் தாம்ஏவச்
சமைத்ததுபோல் அமைந்துளதால்.
[1181]
மாறி லாநிறை வளந்தரு
புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில்
வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரும்
நிகரிலா தவருக்
காறு சூடினார் அருள்திருக்
காப்புநா ணணிவார்.
[1182]
வேத வாய்மையின் விதியுளி
வினையினால் விளங்க
ஓத நீர்உல கியல்முறை
ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள்திருத் தொண்டர்கள்
மறையவர் கவினார்
மாதர் மைந்தர்பொற் காப்புநாண்
நகர்வலம் செய்தார்.
[1183]
நகர்வ லஞ்செய்து புகுந்தபின்
நவமணி யணிந்த
புகரில் சித்திர விதானமண்
டபத்தினிற் பொலியப்
பகரும் வைதிக விதிச்சமா
வர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார்
திருமுன்பு சேர்ந்தார்.
[1184]
செம்பொ னின்பரி கலத்தினில்
செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீள் மாலைசூழ்
மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குடம்
அரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக்
கொளிர்தரும் பரப்பில்.
[1185]
நாத மங்கல முழக்கொடு
நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட
விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில்
புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந்
தவர்முன்பு மேவி.
[1186]
ஆர்வ மிக்கெழும் அன்பினால்
மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய்
திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு
வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில்
காப்புநாண் சாத்த.
[1187]
கண்ட மாந்தர்கள் கடிமணம்
காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ்
கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமும்
மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்எழுந்
தார்த்தன மகிழ்ந்தே.
[1188]
நிரந்த கங்குலின் நிதிமழை
விதிமுறை யெவர்க்கும்
புரந்த ஞானசம் பந்தர்தாம்
புன்னெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகலமுன்
னவதரித் தாற்போல்
பரந்த பேரிருள் துரந்துவந்
தெழுந்தனன் பகலோன்.
[1189]
அஞ்சி றைச்சுரும் பறைபொழில்
சண்பையாண் டகையார்
தம்சி வத்திரு மணஞ்செயத்
தவஞ்செய்நாள் என்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென
மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்கதிர்ப் பேரணி
யணிந்தன திசைகள்.
[1190]
பரம்பு தம்வயின் எங்கணும்
உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை
யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக்
கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ
தொத்தது வையம்.
[1191]
நங்கள் வாழ்வென வருந்திரு
ஞானசம் பந்தர்
மங்க லத்திரு மணவெழுச்
சியின்முழக் கென்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை
ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குடன்
எழுந்தது புணரி.
[1192]
அளக்கர் ஏழும்ஒன் றாமெனும்
பெருமையெவ் வுலகும்
விளக்கு மாமண விழாவுடன்
விரைந்துசெல் வனபோல்
துளக்கில் வேதியர் ஆகுதி
தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலஞ்சுழித்
தெழுந்தது வன்னி.
[1193]
சந்த மென்மலர்த் தாதணி
நீறுமெய் தரித்துக்
கந்தம் மேவுவண்டு ஒழுங்கெனுங்
கண்டிகை பூண்டு
சிந்தை தூயஅன் பர்களுடன்
திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந்
தெழுந்தது மருத்து.
[1194]
எண்தி சைத்தலத் தியாவரும்
புகலிவந் தெய்தி
மண்டும் அத்திரு மணஎழுச்
சியின்அணி வாய்ப்பக்
கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க்
கொண்டல்கள் என்னும்
வெண்து கிற்கொடி நிரைத்தது
போன்றது விசும்பு.
[1195]
ஏல இந்நலம் யாவையும்
எழுச்சிமுன் காட்டும்
காலை செய்வினை முற்றிய
கவுணியர் பெருமான்
மூல மாகிய தோணிமேல்
முதல்வரை வணங்கிச்
சீல மார்திரு வருளினால்
மணத்தின்மேற் செல்வார்.
[1196]
காழி மாநகர் வேதியர்
குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர்
துதைந்துமுன் செல்ல
வாழி மாமறை முழங்கிட
வளம்பதி வணங்கி
நீழல் வெண்சுடர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.
[1197]
ஆன வாகனம் ஏறுவார்
யாரும்மேற் கொள்ளக்
கான மாகிய தொங்கல்பிச்
சங்குடை கவரி
மேனெ ருங்கிட விசும்பினும்
நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன்
மங்கல வியங்கள்.
[1198]
சங்கொடு தாரை சின்னம்
தனிப்பெருங் காளந் தாளம்
வங்கியம் ஏனை மற்று
மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப்
பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத்
திருமணம் எழுந்த தன்றே.
[1199]
கோதையர் குழல்சூழ் வண்டின்
குழாத்தொலி யொருபால் கோல
வேதியர் வேத வாய்மை
மிகும்ஒலி யொருபால் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை
யாழொலி யொருபால் ஏத்தும்
நாதமங் கலங்கள் கீத
நயப்பொலி ஒருபா லாக.
[1200]
விண்ணினை விழுங்க மிக்க
வெண்துகில் பதாகை வெள்ளம்
கண்வெறி படைப்ப மிக்க
கதிர்விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூண் நீடும்
அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின்
பொதிப்பரப் பெங்கும் நண்ண.
[1201]
சிகையொடு மான்தோல் தாங்கும்
கிடையும் ஆசானும் செல்வார்
புகைவிடும் வேள்விச் செந்தீ
இல்லுடன் கொண்டு போவார்
தகைவிலா விருப்பின் மிக்க
பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையுஞ் செற்ற
மாதவ ரியல்பின் மல்க.
[1202]
அறுவகை விளங்குஞ் சைவத்
தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேடம்
நீடிய தவத்தி னுள்ளோர்
மறுவறு மனத்தி லன்பின்
வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர்
குழாங்குழாம் ஆகி ஏக.
[1203]
விஞ்சையர் இயக்கர் சித்தர்
கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத்
தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித்
தழைத்த ஆதரவி னோடும்
மஞ்சுறை விசும்பின் மீது
மணவணி காணச் சென்றார்.
[1204]
மற்றிவர் மிடைந்து செல்லும்
மங்கல வனப்பின் காட்சி
முற்றஇத் தலத்தி னுள்ளோர்
மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த
அணைதலால் மணமேற் செல்லும்
பொற்பமை மணத்தின் சாயை
போன்றுமுன் பொலியச் செல்ல.
[1205]
தவஅர சாள உய்க்கும்
தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார்
பாதம்உள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த
பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த்
திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.
[1206]
பெருமணக் கோயி லுள்ளார்
மங்கலம் பெருகு மாற்றால்
வருமணத் திறத்தின் முன்னர்
வழியெதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும்
சிரபுரச் செம்ம லார்தாம்
இருள்மறைத்து இலங்கு கண்டத்
திறைவர்தங் கோயில் புக்கார்.
[1207]
நாதரைப் பணிந்து போற்றி
நற்பொருட் பதிகம் பாடிக்
காதல்மெய் யருள்முன் பெற்றுக்
கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம்
புனைந்திட வேண்டும் என்னப்
பூதநா யகர்தங் கோயில்
புறத்தொரு மடத்திற் புக்கார்.
[1208]
பொற்குடம் நிறைந்த வாசப்
புனிதமஞ் சனநீ ராட்டி
விற்பொலி வெண்பட் டாடை
மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு வுத்த ரீய
நறுந்துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம்
பான்மையில் அணிந்த பின்னர்.
[1209]
திருவடி மலர்மேற் பூத்த
செழுந்தகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை
மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது
விளங்குபொற் சரட்டில் கோத்த
பெருகொளி முத்தின் தாமம்
பிறங்கிய தொங்கல் சாத்தி.
[1210]
தண்சுடர்ப் பரிய முத்துத்
தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக்
கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை
விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்திரு அரையில் நீடு
வனப்பொளி வளரச் சாத்தி.
[1211]
ஒளிகதிர்த் தரளக் கோவை
யுதரபந் தனத்தின் மீது
தளிர்ஒளி துளும்பு முத்தின்
சன்னவீ ரத்தைச் சாத்திக்
குளிர்நில வெறிக்கு முத்தின்
பூணநூல் கோவை சாத்தி
நளிர்கதிர் முத்துமாலை
நகுசுடர் ஆரஞ் சாத்தி.
[1212]
வாள்விடு வயிரக் கட்டு
மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின்
தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு
நிறைசுடர் வடமும் சாத்தித்
தோள்வளைத் தரளப் பைம்பூண்
சுந்தரத் தோள்மேற் சாத்தி.
[1213]
திருக்கழுத் தாரந் தெய்வக்
கண்டிகை மாலை சேரப்
பருத்தமுத் தொழுங்கு கோத்த
படரொளி வடமும் சாத்திப்
பெருக்கிய வனப்பின் செவ்வி
பிறங்கிய திருவார் காதில்
வருக்கவெண் தரளக் கொத்தின்
வடிக்குழை விளங்கச் சாத்தி.
[1214]
நீற்றொளி தழைத்துப் பொங்கி
நிறைதிரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி
வெண்சுட ரெழுந்த தென்னப்
பாற்படு முத்தின் பாரப்
பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத் தணிந்த முத்தின்
எழில்வளர் மகுடஞ் சேர்த்தார்.
[1215]
இவ்வகை நம்மை யாளும்
ஏர்வளர் தெய்வக் கோலம்
கவ்வினை மறையோர் செய்யக்
கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீள் தாம மார்பர்
திருவடை யாள மாலை
எவ்வுல கோரும் ஏத்தத்
தொழுதுதாம் எடுத்துப் பூண்டார்.
[1216]
அழகினுக் கணியாம் வெண்ணீ
றஞ்செழுத் தோதிச் சாத்திப்
பழகிய அன்பர் சூழப்
படரொளி மறுகி லெய்தி
மழவிடை மேலோர் தம்மை
மனங்கொள வணங்கி வந்து
முழுவொலி யெடுப்ப முத்தின்
சிவிகைமேல் கொண்ட போது.
[1217]
எழுந்தன சங்க நாதம்
இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணோர்
கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர்
சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது
மலர்ந்தன உலகம் எல்லாம்.
[1218]
படர்பெருந் தொங்கல் பிச்சம்
பைங்கதிர்ப் பீலிப் பந்தர்
அடர்புனை செம்பொற் பாண்டில்
அணிதுகிற் சதுக்கம் மல்கக்
கடலின்மீ தெழுந்து நிற்கும்
கதிர்நிறை மதியம் போல
வடநிரை யணிந்த முத்தின்
மணிக்குடை நிழற்ற வந்தார்.
[1219]
சீரணி தெருவி னூடு
திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம்
இலங்கொளித் தாரை யெல்லாம்
பேரொலி பெருக முன்னே
பிடித்தன மறைக ளோடு
தாரணி உய்ய ஞான
சம்பந்தர் வந்தா ரென்று.
[1220]
மண்ணினுக் கிடுக்கண் தீர
வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச்
சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய
அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட
மங்கலம் பொழிந்து பொங்க.
[1221]
முற்றுமெய்ஞ்ஞானம் பெற்ற
மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெருந் தவத்தின் நீர்மை
நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார்
தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப்
பரிவுடன் செய்த வேலை.
[1222]
செம்பொன்செய் வாசிச் சூட்டுத்
திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த
பவளமென் கொடியொப் பாரை
நம்பன்தன் அருளே வாழ்த்தி
நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன
அழகலங் கரித்து வைத்தார்.
[1223]
மாமறை மைந்தர் எல்லாம்
மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம்
தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார்
அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர்
இருக்குடன் கலந்து வீச.
[1224]
விண்ணவர் மலரின் மாரி
விசும்பொளி தழைப்ப வீச
மண்ணக நிறைந்த கந்த
மந்தமா ருதமும் வீசக்
கண்ணொளி விளக்கம் மிக்க
காமர்தோ ரணங்க ளூடு
புண்ணிய விளைவு போல்வார்
பூம்பந்தர் முன்பு சார்ந்தார்.

[1225]
பொன்னணி சங்கின் வெள்ளம்
பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி
வளர்மணிச் சிவிகை நின்றும்
பன்மலர் நறும்பொற் சுண்ணம்
பரந்தபா வாடைமீது
முன்னிழிந் தருளி வந்தார்
மூவுல குய்ய வந்தார்.
[1226]
மறைக்குல மனையின் வாழ்க்கை
மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்கள்
நிறைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை
நகுசுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி
உடன்எதி ரேற்று நின்றார்.
[1227]
ஆங்குமுன் னிட்ட செம்பொன்
அணிமணிப் பீடந் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம்
உண்ணிறைந் தெழுவ தென்னத்
தாங்கிய முத்தின் பைம்பூண்
தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார்
பரசம யங்கள் வீழ்த்தார்.
[1228]
எதிர்வர வேற்ற சாயல்
இளமயி லனைய மாதர்
மதுரமங் கலமுன் னான
வாழ்த்தொலி யெடுப்ப வந்து
கதிர்மணிக் கரக வாசக்
கமழ்புன லொழுக்கிக் காதல்
விதிமுறை வலங்கொண் டெய்தி
மேவுநல் வினைகள் செய்தார்.
[1229]
மங்கலம் பொலிய ஏந்தி
மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொன்
இமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத்
தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னாள்
ஏடுவை கையினுள் இட்டார்.
[1230]
திருமகட் கொடுக்கப் பெற்ற
செழுமறை முனிவர் தாமும்
அருமையால் முன்செய் மெய்ம்மை
அருந்தவ மனைவி யாரும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம்
விளக்குவார் பிள்ளை யார்முன்
உரிமையால் வெண்பால் தூநீர்
உடனெடுத் தேந்தி வந்தார்.
[1231]
வந்துமுன் னெய்தித் தாம்முன்
செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி
ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற்
கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம்
புரிசடை யான்என் றுன்னி.
[1232]
விருப்பினால் விளக்கி மிக்க
புனிதநீர் தலைமேற் கொண்டு
பொருப்புறு மாடத் துள்ளும்
புறத்துளுந் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும்
பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும்
தெளித்தனர் ஆர்வத் தோடும்.
[1233]
பெருகொளி ஞானம் உண்ட
பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவுமங் கலநீர் வாசக்
கரகம்முன் னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்தி ரத்தின்
தங்குலம் செப்பி என்தன்
அருநிதிப் பாவை யாரைப்
பிள்ளையார்க் களித்தேன் என்றார்.
[1234]
நற்றவக் கன்னி யார்கை
ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பில்
பழுதில்நற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார்
பெருமணப் பிணையன் னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக்
கொண்டுமுன் துன்னி னார்கள்.
[1235]
ஏகமாம் சிவமெய்ஞ் ஞானம்
இசைந்தவர் வலப்பா லெய்தி
நாகமார் பணபே ரல்குல்
நற்றவக் கொழுந்தன் னாரை
மாகமார் சோதி மல்க
மன்னிவீற் றிருந்த வெள்ளை
மேகமோ டிசையும் மின்னுக்
கொடியென விளங்க வைத்தார்.
[1236]
புனிதமெய்க் கோல நீடு
புகலியார் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங்
கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதில்
நல்லமங் கலங்கள் கூறி
மனிதரும் தேவ ரானார்
கண்ணிமை யாது வாழ்த்தி.
[1237]
பத்தியிற் குயிற்றும் பைம்பொன்
பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச்
செழுந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு
முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம்
மேவுமுள் ளத்தாற் செய்ய.
[1238]
மறையொலி பொங்கி யோங்க
மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற
நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர்
புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை
எரிவலங் கொள்ள வேண்டி.
[1239]
அருப்புமென் முலையி னார்தம்
அணிமலர்க் கைப்பி டித்தங்
கொருப்படும் உடைய பிள்ளை
யார்திரு உள்ளந் தன்னில்
விருப்புறும் அங்கி யாவார் விடை
உயர்த் தவரே என்று
திருப்பெரு மணத்தை மேவும்
சிந்தையில் தெளிந்து செல்வார்.
[1240]
மந்திர முறையால் உய்த்த
எரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றும்
தாமரைச் செங்கை யாளர்
இந்தஇல் லொழுக்கம் வந்து
சூழ்ந்ததே இவள்தன் னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வன்
என்னும்ஆ தரவு பொங்க.
[1241]
மலர்பெருங் கிளையும் தொண்டர்
கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை
அடைவுறுங் குறிப்பால் அங்கண்
உலகில்எம் மருங்கும் நீங்க
உடன்அணைந் தருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தம்
கோயிலை நோக்கி வந்தார்.
[1242]
சிவனமர்ந் தருளுஞ் செல்வத்
திருப்பெரு மணத்துள் எய்தித்
தவநெறி வளர்க்க வந்தார்
தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
பவமற என்னை முன்னாள்
ஆண்டஅப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டும்
என்னும்நல் லுணர்வு நல்க.
[1243]
காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப்
பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசந்
தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும்
[1244]
தேவர்கள் தேவர் தாமும்
திருவருள் புரிந்து நீயும்
பூவையன் னாளும் இங்குன்
புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி
இதனுள்வந் தெய்தும் என்று
மூவுல கொளியால் விம்ம
முழுச்சுடர்த் தாணு வாகி.
[1245]
கோயிலுட் படமேல் ஓங்குங்
கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட
மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு
பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய
வழியினை அருளிச் செய்வார்.
[1246]
ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.
[1247]
வருமுறைப் பிறவி வெள்ளம்
வரம்புகா ணாத ழுந்தி
உருவெனுந் துயரக் கூட்டில்
உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து
முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க
மன்னுசோ தியினுள் புக்கார்.
[1248]
சீர்பெருகு நீலநக்கர்
திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத
இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர்
மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப்
பன்னிகளோ டுடன்புக்கார்.
[1249]
அணிமுத்தின் சிவிகைமுதல்
அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை
மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள்
பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த்
தொழுதுடன்புக் கொடுங்கினார்.
[1250]
ஆறுவகைச் சமயத்தின்
அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும்
கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால்
வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினுள்
எல்லாரும் புக்கதற்பின்.
[1251]
காதலியைக் கைப்பற்றிக்
கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும்
திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி
நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப்
புக்கொன்றி உடனானார்.
[1252]
பிள்ளையார் எழுந்தருளிப்
புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக்
குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய
மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீ ருலகத்துப்
பேறில்லார் தெருமந்தார்.
[1253]
கண்ணுதலார் திருமேனி
உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே
கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும்
விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு
தீரஎடுத் தேத்தினார்.
[1254]
அருந்தமிழா கரர்சரிதை
அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி
துதிசெய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையுந் திண்ணனவும்
பேருணர்வுந் திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காம
னார்செய்கை வழுத்துவேன்.
[1255]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
12.290   ஏயர்கோன் கலிக்காம நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்நீ டியஅணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
[1]
இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளினமெல் லடிச்செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.
[2]
விழவ றாதன விளங்கொளி மணிநெடு வீதி
முழவ றாதன மொய்குழ லியர்நட வரங்கம்
மழவ றாதன மங்கலம் பொலிமணி முன்றில்
உழவ றாதநல் வளத்தன ஓங்கிருங் குடிகள்.
[3]
நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிநாட் டத்துக்
காரி னில்திகழ் கண்டர்தங் காதலோர் குழுமிப்
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுஞ் சிறப்பால்.
[4]
இன்ன வாழ்பதி யதனிடை
ஏயர்கோக் குடிதான்
மன்னி நீடிய வளவர்சே
னாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால்
நிகழ்வது தூய
பொன்னி நாட்டுவே ளாண்மையில்
உயர்ந்தபொற் பினதால்.
[5]
அங்கண் மிக்கஅக் குடியினில் அவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடிபணி வார்அடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.
[6]
புதிய நாள்மதிச் சடைமுடி யார்திருப் புன்கூர்க்
கதிக மாயின திருப்பணி அநேகமுஞ் செய்து
நிதிய மாவன நீறுகந் தார்கழ லென்று
துதியி னாற்பர வித்தொழு தின்புறு கின்றார்.
[7]
நாவ லூர்மன்னர் நாதனைத் தூதுவிட் டதனுக்
கியாவ ரிச்செயல் புரிந்தன ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தஅச் செயலினை விளம்புவா னுற்றேன்.
[8]
திருத்தொண்டத் தொகையருளித்
திருநாவ லூராளி
கருத்தொன்று காதலினால்
கனகமதில் திருவாரூர்
ஒருத்தர்கழல் முப்பொழுதும்
உருகியஅன் பொடுபணிந்து
பெருத்தெழுமெய் யன்பினாற்
பிரியாதங் குறையுநாள்.
[9]
தாளாண்மை உழவுதொழில்
தன்மைவளந் தலைசிறந்த
வேளாளர் குண்டையூர்க்
கிழவரெனும் மேதக்கோர்
வாளார்வெண் மதியணிந்தார்
மறையவராய் வழக்கினில்வென்று
ஆளாகக் கொண்டவர்தாள்
அடைந்தன்பா லொழுகுவார்.
[10]
செந்நெல்லும் பொன்னன்ன
செழும்பருப்பும் தீங்கரும்பின்
இன்னல்ல வமுதும்முதல்
எண்ணில்பெரும் பலவளங்கள்
மன்னியசீர் வன்றொண்டர்க்
கமுதாக வழுவாமல்
பன்னெடுநாள் பரவையார்
மாளிகைக்குப் படிசமைத்தார்.
[11]
ஆனசெயல் அன்பின்வரும்
ஆர்வத்தால் மகிழ்ந்தாற்ற
வானமுறை வழங்காமல்
மாநிலத்து வளஞ்சுருங்கப்
போனகநெற் படிநிரம்ப
எடுப்பதற்குப் போதாமை
மானமழி கொள்கையினால்
மனமயங்கி வருந்துவார்.
[12]
வன்றொண்டர் திருவாரூர்
மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற
தென்செய்கேன் எனநினைந்து
துன்றுபெருங் கவலையினால்
துயரெய்தி உண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள
[13]
ஆரூரன் தனக்குன்பால்
நெல்தந்தோம் என்றருளி
நீரூருஞ் சடைமுடியார்
நிதிக்கோமான் தனையேவப்
பேரூர்மற் றதனெல்லை
அடங்கவும்நென் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்புங்
கரக்கநிறைந் தோங்கியதால்.
[14]
அவ்விரவு புலர்காலை
உணர்ந்தெழுவார் அதுகண்டே
எவ்வுலகில் நெல்மலைதா
னிதுவென்றே யதிசயித்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார்
திருவருளின் செயல் போற்றிக்
கொவ்வைவாய்ப் பரவையார்
கொழுநரையே தொழுதெழுவார்.
[15]
நாவலூர் மன்ன னார்க்கு
நாயனார் அளித்த நெல்இங்
கியாவரா லெடுக்க லாகும்
இச்செய லவர்க்குச் சொல்லப்
போவன்யா னென்று போந்தார்
புகுந்தவா றருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ
நம்பியும் எதிரே சென்றார்.
[16]
குண்டையூர்க் கிழவர் தாமும்
எதிர்கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதந் தன்னில்
தொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த
பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார் தாமே
நெல்மலைஅளித்தா ரென்று.
[17]
மனிதரால் எடுக்கு மெல்லைத்
தன்றுநெல் மலையின் ஆக்கம்
இனியெனால் செய்ய லாகும்
பணியன்றி தென்னக் கேட்டுப்
பனிமதி முடியா ரன்றே
பரிந்துமக் களித்தார் நெல்லென்
றினியன மொழிந்து தாமும்
குண்டையூர் எய்த வந்தார்.
[18]
விண்ணினை அளக்கு நெல்லின்
வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி
அதிசயம் மிகவு மெய்தி
எண்ணில்சீர்ப் பரவை யில்லத்
திந்நெல்லை யெடுக்க ஆளும்
தண்ணில வணிந்தார் தாமே
தரிலன்றி ஒண்ணா தென்று.
[19]
ஆளிடவேண் டிக்கொள்வார்
அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான்
கோயிலினை வந்தெய்தி
வாளனகண் மடவாள்
வருந்தாமே எனும்பதிகம்
மூளவருங் காதலுடன்
முன்தொழுது பாடுதலும்.
[20]
பகற்பொழுது கழிந்ததற்பின்
பரவைமனை யளவன்றி
மிகப்பெருகு நெல்லுலகில்
விளங்கியஆ ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம்
பூதங்க ளெனவிசும்பில்
நிகர்ப்பரிய தொருவாக்கு
நிகழ்ந்ததுநின் மலனருளால்.
[21]
தம்பிரான் அருள்போற்றித்
தரையின்மிசை விழுந்தெழுந்தே
உம்பரா லுணர்வரிய
திருப்பாதந் தொழுதேத்திச்
செம்பொன்நேர் சடையாரைப்
பிறபதியுந் தொழுதுபோய்
நம்பரா ரூரணைந்தார்
நாவலூர் நாவலனார்.
[22]
பூங்கோயில் மகிழ்ந்தருளும்
புராதனரைப் புக்கிறைஞ்சி
நீங்காத பெருமகிழ்ச்சி
யுடனேத்திப் புறம்போந்து
பாங்கானார் புடைசூழ்ந்து
போற்றிசைக்கப் பரவையார்
ஓங்குதிரு மாளிகையின்
உள்ளணைந்தார் ஆரூரர்.
[23]
கோவைவாய்ப் பரவையார்
தாம்மகிழும் படிகூறி
மேவியவர் தம்மோடு
மிகஇன்புற் றிருந்ததற்பின்
சேவின்மே லுமையோடும்
வருவார்தந் திருவருளின்
ஏவலினால் அவ்விரவு
பூதங்கள் மிக்கெழுந்து.
[24]
குண்டையூர் நென்மலையைக்
குறட்பூதப் படைகவர்ந்து
வண்டுலாங் குழற்பரவை
மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திருவாரூர்
அடங்கவும்நெல் மலையாக்கிக்
கண்டவர்அற் புதமெய்துங்
காட்சிபெற அமைத்தனவால்.
[25]
அவ்விரவு புலர்காலை
ஆரூரில் வாழ்வார்கண்டு
எவ்வுலகில் விளைந்தனநெல்
மலையிவையென் றதிசயித்து
நவ்விமதர்த் திருநோக்கின்
நங்கைபுகழ்ப் பரவையார்க்
கிவ்வுலகு வாழவரு
நம்பியளித் தனவென்பார்.
[26]
நீக்கரிய நெற்குன்று
தனைநோக்கி நெறிபலவும்
போக்கரிதா யிடக்கண்டு
மீண்டுந்தம் மில்புகுவார்
பாக்கியத்தின் திருவடிவாம்
பரவையார்க் கிந்நெல்லுப்
போக்குமிட மரிதாகும்
எனப்பலவும் புகல்கின்றார்.
[27]
வன்றொண்டர் தமக்களித்த
நெற்கண்டு மகிழ்சிறப்பார்
இன்றுங்கள் மனையெல்லைக்
குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையிற்
புகப்பெய்து கொள்கவென
வென்றிமுர சறைவித்தார்
மிக்கபுகழ்ப் பரவையார்.
[28]
அணியாரூர் மறுகதனில்
ஆளியங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப்
பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமற் கட்டிநகர்
களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்.
[29]
நம்பியா ரூரர்திரு
வாரூரில் நயந்துறைநாள்
செம்பொற்புற் றிடங்கொண்டு
வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந்
தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருடன் உம்பர்களும்
அதிசயிப்ப ஏத்தினார்.
[30]
குலபுகழ்க் கோட்புலியார்
குறையிரந்து தம்பதிக்கண்
அலகில்புக ழாரூரர்
எழுந்தருள அடிவணங்கி
நிலவியவன் தொண்டர்அஃ
திசைந்ததற்பி னேரிறைஞ்சிப்
பலர்புகழும் பண்பினார்
மீண்டுந்தம் பதியணைந்தார்.
[31]
தேவ ரொதுங்கத் திருத்தொண்டர்
மிடையுஞ் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளுங்
கடவுட் பெருமான் கழல்வணங்கி
நாவ லூர ரருள் பெற்று
நம்பர் பதிகள் பிறநண்ணிப்
பாவை பாகர் தமைப்பணிந்து
பாடும் விருப்பிற் சென்றணைவார்.
[32]
மாலும் அயனும் உணர்வரியார்
மகிழும் பதிகள் பலவணங்கி
ஞால நிகழ்கோட் புலியார்தம்
நாட்டி யத்தான் குடிநண்ண
ஏலும் வகையால் அலங்கரித்தங்
கவரு மெதிர்கொண் டினிதிறைஞ்சிக்
கோல மணிமா ளிகையின்கண்
ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.
[33]
தூய மணிப்பொன் தவிசிலெழுந்
தருளி யிருக்கத் தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கித்
தெளித்துக் கொண்டச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகையெங்கும்
விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
[34]
பூந்தண் பனிநீர் கொடுசமைத்த
பொருவில் விரைச்சந் தனக்கலவை
வாய்ந்த அகிலி னறுஞ்சாந்து
வாச நிறைமான் மதச்சேறு
தோய்ந்த புகைநா வியின்நறுநெய்
தூய பசுங்கர்ப் பூரமுதல்
ஏய்ந்த அடைக்கா யமுதினைய
எண்ணில் மணிப்பா சனத்தேந்தி.
[35]
வேறு வேறு திருப்பள்ளித்
தாமப் பணிகள் மிகவெடுத்து
மாறி லாத மணித்திருவா
பரண வருக்கம் பலதாங்கி
ஈறில் விதத்துப் பரிவட்டம்
ஊழி னிரைத்தே யெதிரிறைஞ்சி
ஆறு புனைந்தா ரடித்தொண்டர்
அளவில் பூசை கொளவளித்தார்.
[36]
செங்கோல் அரசன் அருளுரிமைச்
சேனா பதியாங் கோட்புலியார்
நங்கோ மானை நாவலூர்
நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திருவமுது
செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த
பொங்கோ தம்போற் பெருங்காதல்
புரிந்தார் பின்னும் போற்றுவார்.
[37]
ஆனா விருப்பின் மற்றவர்தாம்
அருமை யால்முன் பெற்றெடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார்
தமையும் அவர்பின் கருவுயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார்
தமையும் கொணர்ந்து வன்றொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்துத்
தாமுந் தொழுது சொல்லுவார்.
[38]
அடியேன் பெற்ற மக்களிவர்
அடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
கருணை யளிக்க வேண்டுமெனக்
தொடிசேர் தளிர்க்கை இவரெனக்குத்
தூய மக்க ளெனக்கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தங் கொழுநனார்.
[39]
கோதை சூழ்ந்த குழலாரைக்
குறங்கின் வைத்துக் கொண்டிருந்து
காதல் நிறைந்த புதல்வியராம்
கருத்துட் கசிவால் அணைத்துச்சி
மீது கண்ணீர் விழமோந்து
வேண்டு வனவுங் கொடுத்தருளி
நாதர் கோயில் சென்றடைந்தார்
நம்பிதம்பி ரான்தோழர்.
[40]
வென்றி வெள்ளே றுயர்த்தருளும்
விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால்
உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்துதிருப்
பதிகம் பூணா னென்றெடுத்துக்
கொன்றை முடியா ரருளுரிமை
சிறப்பித் தார்கோட் புலியாரை.
[41]
சிறப்பித் தருளுந் திருக்கடைக்காப்
பதனி னிடைச்சிங் கடியாரைப்
பிறப்பித்தெடுத்த பிதாவாகத்
தம்மை நினைந்த பெற்றியினால்
மறப்பில் வகைச்சிங் கடியப்ப
னென்றே தம்மை வைத்தருளி
நிறப்பொற் புடைய இசைபாடி
நிறைந்த அருள்பெற் றிறைஞ்சுவார்.
[42]
அங்கு நின்றும் எழுந்தருளி
அளவி லன்பில் உள்மகிழச்
செங்க ணுதலார் மேவுதிரு
வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம்
வலிவ லத்துக் கண்டேனென்
றெங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை
எடுத்துத் தொடுத்த விசைபுனைவார்.
[43]
நன்று மகிழுஞ் சம்பந்தர்
நாவுக் கரசர் பாட்டுகந்தீர்
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந்
தேத்தி யருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற்
பெருமான் செம்பொற் கழல்பணிந்து.
[44]
இறைஞ்சிப் போந்து பரவையார்
திருமா ளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநாள்
நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும்
பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா
தோவா இன்பம் உற்றிருந்தார்.
[45]
செறிபுன் சடையார் திருவாரூர்த்
திருப்பங் குனிஉத் திரத்திருநாள்
குறுக வரலும் பரவையார்
கொடைக்கு விழாவிற் குறைவறுக்க
நிறையும் பொன்கொண் டணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணியவெழுந்
தருளிச் சென்றங் கெய்தினார்.
[46]
சென்று விரும்பித் திருப்புகலூர்த்
தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலங்கொண்டு
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு
தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி
நினைந்த கருத்து நிகழ்விப்பார்.
[47]
சிறிது பொழுது கும்பிட்டுச்
சிந்தை முன்னம் அங்கொழிய
வறிது புறம்போந் தருளியயல்
மடத்தி லணையார் வன்றொண்டர்
அறிவு கூர்ந்த வன்பருடன்
அணிமுன் றிலினோ ரருகிருப்ப
மறிவண் கையா ரருளேயோ
மலர்க்கண் துயில்வந் தெய்தியதால்.
[48]
துயில்வந் தெய்தத் தம்பிரான்
றோழ ரங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமட் பலகைபல
கொணர்வித் துயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச்சிகழி
முடிமேல் அணையா உத்தரிய
வெயிலுந் தியவெண் பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்.
[49]
சுற்று மிருந்த தொண்டர்களுந்
துயிலு மளவில் துணைமலர்க்கண்
பற்றுந் துயில்நீங் கிடப்பள்ளி
யுணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையா ரருளாலே
வேமண் கல்லே விரிசுடர்ச்செம்
பொன்திண் கல்லா யினகண்டு
புகலூ ரிறைவ ரருள்போற்றி.
[50]
தொண்ட ருணர மகிழ்ந்தெழுந்து
துணைக்கைக் கமல முகைதலைமேல்
கொண்டு கோயி லுட்புக்குக்
குறிப்பி லடங்காப் பேரன்பு
மண்டு காத லுறவணங்கி
வாய்த்த மதுர மொழிமாலை
பண்தங் கிசையில் தம்மையே
புகழ்ந்தென் றெடுத்துப் பாடினார்.
[51]
பதிகம் பாடித் திருக்கடைக்காப்
பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரி லின்பம் இம்மையே
தருவா ரருள்பெற் றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு
நிறையும் நதியுங் குறைமதியும்
பொதியுஞ் சடையார் திருப்பனையூர்
புகுவார் புரிநூல் மணிமார்பர்.
[52]
செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங்
கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காட
வல்லார் அவரே யழகியரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம்
பாடி யருள்பெற் றுடன்போந்தார்.
[53]
வளமல் கியசீர்த் திருப்பனையூர்
வாழ்வா ரேத்த எழுந்தருளி
அளவில் செம்பொன் இட்டிகை
களால்மேல் நெருங்கி யணியாரூர்த்
தளவ முறுவற் பரவையார்
தம்மா ளிகையிற் புகத்தாமும்
உளமன் னியதம் பெருமானார்
தம்மை வணங்கி உவந்தணைந்தார்.
[54]
வந்து பரவைப் பிராட்டியார்
மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய
கோயில் பலவும் அணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி யினிதிருந்தார்
முனைப்பா டியர்தங் காவலனார்.
[55]
பலநாள் அமர்வார் பரமர்திரு
வருளால் அங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார்
திருநன் னிலத்துச் சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள்
வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார் கின்ற தண்ணியல்வெம்
மையினான் என்னுந் தமிழ்மாலை.
[56]
பாடி யங்கு வைகியபின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட
அந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும்
நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை
மல்க மணித்தோ ரணநிரைத்து.
[57]
வந்து நம்பி தம்மைஎதிர்
கொண்டு புக்கார் மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார்.
[58]
படங்கொள் அரவில் துயில்வோனும்
பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை
விரவும் புளக முடன்பரவி
அடங்கல் வீழி கொண்டிருந்தீர்
அடியேனுக்கும் அருளுமெனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை
சாத்தி யங்குச் சாருநாள்.
[59]
வாசி யறிந்து காசளிக்க
வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன்
பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள்
பணிந்து பொருவ னார்என்னும்
மாசில் பதிகம் பாடியமர்ந்
தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
[60]
செழுநீர் நறையூர் நிலவுதிருச்
சித்தீச் சரமும் பணிந்தேத்தி
விழுநீர் மையினிற் பெருந்தொண்டர்
விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோ டிளமான் கரதலத்தில்
உடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினில் துதித்தேத்தித்
தொண்டர் சூழ வுறையுநாள்.
[61]
புனித னார்முன் புகழ்த்துணையார்க்கு
அருளுந் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்தருளி
மூரி வெள்ளக் கங்கையினில்
பனிவெண் திங்கள் அணிசடையார்
[62]
விளங்குந் திருவா வடுதுறையில்
மேயார் கோயில் புடைவலங்கொண்டு
உளங்கொண் டுருகு மன்பினுடன்
உள்புக் கிறைஞ்சி யேத்துவார்
வளங்கொள் பதிக மறையவன்என்று
எடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத்
தமிழ்ச்சொல் மாலை சாத்தினார்.
[63]
சாத்தி யங்கு வைகுநாள்
தயங்கு மன்ப ருடன்கூடப்
பேர்த்து மிறைஞ்சி யருள்பெற்றுப்
பெண்ணோர் பாகத் தண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென்கரைமேல்
திகழும் பதிகள் பலபணிந்து
மூர்த்தி யார்தம் இடைமருதை
யடைந்தார் முனைப்பா டித்தலைவர்.
[64]
மன்னும் மருதி னமர்ந்தவரை
வணங்கி மதுரச் சொல்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்
பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வார்
அரனார் திருநா கேச்சுரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
[65]
பெருகும் பதிகம் பிறையணிவாள்
நுதலாள் பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத்
தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே
யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து
கலைய நல்லூர் மருங்கணைந் தார்
[66]
செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார்.
[67]
அங்கு நின்று திருக்குடமூக்
கணைந்து பணிந்து பாடிப்போய்
[68]
நல்லூர் இறைவர் கழல்போற்றி
நவின்று நடுவு நம்பர்பதி
எல்லா மிறைஞ்சி ஏத்திப்போய்
இசையாற் பரவுந் தம்முடைய
சொல்லூ தியமா வணிந்தவர்தஞ்
சோற்றுத் துறையின் மருங்கெய்தி
அல்லூர் கண்டர் கோயிலினுள்
அடைந்து வலங்கொண் டடிபணிவார்.
[69]
அழனீ ரொழுகி யனையவெனும்
அஞ்சொற் பதிக மெடுத்தருளிக்
கழனீ டியவன் பினிற்போற்றுங்
காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினி லருள்பெற்றுப்
போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவா ரமர்ந்தபதி
பலவும் பணிந்து முன்னுவார்.
[70]
தேவர் பெருமான் கண்டியூர்
பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி
விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்
பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப்
பள்ளி கொள்ளக் கனவின்கண்.
[71]
மழபா டியினில் வருவதற்கு
நினைக்க மறந்தா யோவென்று
குழகா கியதம் கோலமெதிர்
காட்டி யருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி
வடபா லேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி
யணைந்தார் நம்பி யாரூரர்.
[72]
அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி
அன்பர் சூழ வுடன்புகுந்து
பணங்கொ ளரவ மணிந்தார்முன்
பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
குணங்கொ ளருளின் திறம்போற்றிக்
கொண்ட புளகத் துடனுருகிப்
புணர்ந்த விசையாற் றிருப்பதிகம்
பொன்னார் மேனி என்றெடுத்து.
[73]
அன்னே யுன்னை யல்லால்யான்
ஆரை நினைக்கேன் எனவேத்தித்
தன்னே ரில்லாப் பதிகமலர்
சாத்தித் தொழுது புறம்பணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையி னிருமருங்கும்
பணிந்து மேல்பாற் போதுவார்.
[74]
செய்ய சடையார் திருவானைக்
காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர்கொள்ள
இறைஞ்சிக் கோயி லுள்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர்
வெள்ளம் பரப்ப விம்முவார்.
[75]
மறைக ளாய நான்கும்என
மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்
நிறையுங் காத லுடனெடுத்து
நிலவு மன்பர் தமைநோக்கி
இறையும் பணிவா ரெம்மையுமா
ளுடையா ரென்றென் றேத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரஞ்
சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி.
[76]
வளவர் பெருமான் மணியாரம்
சாத்திக் கொண்டு வரும்பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும்
வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்துள்
அதுபுக் காட்ட அணிந்தருளித்
தளரு மவனுக் கருள்புரிந்த
தன்மை சிறக்கச் சாற்றினார்.
[77]
சாற்றி யங்குத் தங்குநாள்
தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும்
சென்று தாழ்ந்து நிறைவிருப்பால்
போற்றி யங்கு நின்றும்போய்ப்
பொருவி லன்பர் மருவியதொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சி ராமம் சென்றடைந்தார்.
[78]
சென்று திருக்கோ புரம்இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல்
நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள்
அருளா தொழிய நேர்நின்று.
[79]
அன்பு நீங்கா அச்சமுட னடுத்த
திருத்தோழமைப் பணியாற்
பொன்பெ றாத திருவுள்ளம்
புழுங்க அழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர்
முகப்பே முறைப்பா டுடையார்போல்
என்பு கரைந்து பிரானார்மற்
றிலையோ யென்ன வெடுக்கின்றார்.
[80]
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி
நிலத்திடைப் புலங்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை
யொருமையா மெழுமையு முணர்த்தி
எத்தனை யருளா தொழியினும் பிரானார்
இவரலா தில்லையோ யென்பார்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
எனவழுத் தினார்வழித் தொண்டர்.
[81]
இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்
ஏசின வல்லஎன் றிசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெரு மானார்
விழுநிதிக் குவையளித் தருள
மைவளர் கண்டர் கருணையே பரவி
வணங்கியப் பதியிடை வைகி
எவ்வகை மருங்கு மிறைவர்தம் பதிகள்
இறைஞ்சியங் கிருந்தனர் சில நாள்.
[82]
அப்பதி நீங்கி யருளினாற் போகி
ஆவின்அஞ் சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி
இறைவர்பைஞ் ஞீலியை யெய்திப்
பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்
பாங்கமர் புடைவலங் கொண்டு
துப்புறழ் வேணி யார்கழல் தொழுவார்
தோன்றுகங் காளரைக் கண்டார்.
[83]
கண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம்
பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டறை குழலார் மனங்கவர் பலிக்கு
வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
குலவுசொற் காருலா வியவென்று
அண்டர்நா யகரைப் பரவிஆ ரணிய
விடங்கராம் அருந்தமிழ் புனைந்தார்.
[84]
பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக்
கரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது
கலந்தினி திருந்துபோந் தருளி
விரவிய ஈங்கோய் மலைமுத லாக
விமலர்தம் பதிபல வணங்கிக்
குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்
கொடுமுடி யணைந்தனர் கொங்கில்.
[85]
கொங்கினிற் பொன்னித் தென்கரைக் கறையூர்க்
கொடுமுடிக் கோயில் முன்குறுகிச்
சங்கவெண் குழையா ருழைவலஞ் செய்து
சார்ந்தடி யிணையினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத்தொழுது
புனிதர்பொன் மேனியை நோக்கி
இங்கிவர் தம்மை மறக்கவொண் ணாதென்
றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப.
[86]
அண்ணலா ரடிகள் மறக்கினுநாம
அஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
இடையறா தியம்புமென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் மற்றுப்
பற்றிலேன் எனச்செழுந் தமிழால்
நண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார்
நமச்சிவா யத்திருப் பதிகம்.
[87]
உலகெ லாம்உய்ய உறுதியாம் பதிகம்
உரைத்துமெய் யுணர்வறா வொருமை
நிலவிய சிந்தை யுடன்திரு வருளால்
நீங்குவார் பாங்குநற் பதிகள்
பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்
போந்துதண் பனிமலர்ப் படப்பைக்
குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
குறுகினார் முறுகுமா தரவால்.
[88]
அத்திருப் பதியை யணைந்துமுன் தம்மை
யாண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலங்கொண்டு திருமுன்
மேவுவார் தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள்நின் றாடல்
நீடிய கோலம்நேர் காட்டக்
கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக்
கலுழிநீர் பொழிதரக் கண்டார்.
[89]
காண்டலும் தொழுது வீழ்ந்துஉட னெழுந்து
கரையிலன் பென்பினை யுருக்கப்
பூண்டஐம் புலனிற் புலப்படா இன்பம்
புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத்
தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்
தலைப்படக் கிடைத்தபின் சைவ
ஆண்டகை யாருக் கடுத்தஅந் நிலைமை
விளைவையார் அளவறிந் துரைப்பார்.
[90]
அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பனார் இன்பவெள் ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி
வளம்பதி யதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்தசே வடியார்
புரிநடங் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவ தென்று
மீண்டெழுந் தருளுதற் கெழுவார்.
[91]
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
தென்திசைக் கற்குடி மலையில்.
[92]
வீடு தரும்இக் கற்குடியில்
விழுமி யாரைப் பணிந்திறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம்
நிறைந்த சிந்தை யுடன்பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன்
பதிகள் பலவும் அணைந்திறைஞ்சித்
தேடு மிருவர் காண்பரியார்
திருவா றைமேற் றளிசென்றார்.
[93]
செம்பொன் மேருச் சிலைவளைத்த
சிவனார் ஆறை மேற்றளியில்
நம்பர் பாதம் பணிந்திறைஞ்சி
நாளு மகிழ்வார்க் கருள்கூட
உம்பர் போற்றுந் தானங்கள்
பலவும் பணிந்து போந்தணைவார்
இம்பர் வாழ இன்னம்பர்
நகரைச் சேர வெய்தினார்.
[94]
ஏரின் மருவும் இன்னம்பர்
மகிழ்ந்த ஈசர் கழல்வணங்கி
ஆரு மன்பிற் பணிந்தேத்தி
ஆரா அருளால் அங்கமர்வார்
போரின் மலியுங் கரியுரித்தார்
மருவும் புறம்ப யம்போற்றச்
சேரும் உள்ளம் மிக்கெழமெய்ப்
பதிகம் பாடிச் செல்கின்றார்.
[95]
அங்க மோதியோ ராறை மேற்றளி
யென்றெ டுத்தமர் காதலில்
பொங்கு செந்தமி ழால்வி ரும்பு
புறம்ப யந்தொழப் போதும்என்
றெங்கும் மன்னிய இன்னி சைப்பதி
கம்பு னைந்துட னெய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவு
திருப்பு றம்பயஞ் சேரவே.
[96]
அப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்
அன்று வெண்ணெய்நல் லூரினில்
ஒப்ப ருந்தனி வேதி யன்பழ
வோலை காட்டிநின் றாண்டவர்
இப்ப திக்கண்வந் தெய்த என்ன
தவங்கள் என்றெதிர் கொள்ளவே
முப்பு ரங்கள் எரித்த சேவகர்
கோயில் வாயிலில் முன்னினார்.
[97]
நீடு கோபுர முன்பி றைஞ்சி
நிலாவு தொண்டரொ டுள்ளணைந்து
ஆடன் மேவிய வண்ண லாரடி
போற்றி யஞ்சலி கோலிநின்று
ஏடு லாமலர் தூவி எட்டினொ
டைந்து மாகும் உறுப்பினாற்
பீடு நீடு நிலத்தின் மேற்பெரு
கப்ப ணிந்து வணங்கினார்.
[98]
அங்கு நீடருள் பெற்றுஉள் ஆர்வம்
மிகப்பொ ழிந்தெழு மன்பினால்
பொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந்
தேத்தி மீண்டு புறத்தணைந்
தெங்கு மாகி நிறைந்து நின்றவர்
தாம கிழ்ந்த விடங்களில்
தங்கு கோல மிறைஞ்சு வாரருள்
தாவி லன்பரோ டெய்தினார்.
[99]
வம்புநீ டலங்கல் மார்பின்
வன்றொண்டர் வன்னி கொன்றை
தும்பைவெள் ளடம்பு திங்க
டூயநீ ரணிந்த சென்னித்
தம்பிரா னமர்ந்த தானம்
பலபல சார்ந்து தாழ்ந்து
கொம்பனா ராடல் நீடு
கூடலை யாற்றூர் சார.
[100]
செப்பரும் பதியிற் சேரார்
திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லும்
ஒருவழி யுமையா ளோடும்
மெய்ப்பரம் பொருளா யுள்ளார்
வேதிய ராகி நின்றார்
முப்புரி நூலுந் தாங்கி
நம்பியா ரூரர் முன்பு.
[101]
நின்றவர் தம்மை நோக்கி
நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன் றெய்த
வழியெமக் கியம்பும் என்னக்
குன்றவில் லாளி யாரும்
கூடலை யாற்றூர் ஏறச்
சென்றதிவ் வழிதானென்று
செல்வழித் துணையாய்ச் செல்ல.
[102]
கண்டவர் கைகள் கூப்பித்
தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை
வடிவுடை மழுவென் றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த
அதிசயம் அறியே னென்று
கொண்டெழு விருப்பி னோடும்
கூடலை யாற்றூர் புக்கார்.
[103]
கூடலை யாற்றூர் மேவும்
கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப்
பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவி லாடும்
அறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து
திருமுது குன்றி னேர்ந்தார்.
[104]
தடநிலைக் கோபு ரத்தைத்
தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில்
புடைவலங் கொண்டு புக்குப்
போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை நஞ்சி
யிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித்
தொழுதுகை சுமந்து நின்று.
[105]
நாதர்பாற் பொருள் தாம் வேண்டி
நண்ணிய வண்ண மெல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட
குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
மெய்யில்வெண் பொடியும் பாட.
[106]
பனிமதிச் சடையார் தாமும்
பன்னிரண் டாயி ரம்பொன்
நனியருள் கொடுக்கு மாற்றால்
நல்கிட உடைய நம்பி
தனிவரு மகிழ்ச்சி பொங்கத்
தாழ்ந்தெழுந் தருகு சென்று
கனிவிட மிடற்றி னார்முன்
பின்னொன்று கழற லுற்றார்.
[107]
அருளும்இக் கனக மெல்லாம்
அடியனேற் காரூ ருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே
வரப்பெற வேண்டு மென்னத்
தெருளுற வெழுந்த வாக்கால்
செழுமணி முத்தாற் றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க்
குளத்திற்போய்க் கொள்க வென்றார்.
[108]
என்றுதம் பிரானார் நல்கும்
இன்னருள் பெற்ற பின்னர்
வன்றொண்டர் மச்சம் வெட்டிக்
கைக்கொண்டு மணிமுத் தாற்றில்
பொன்றிரள் எடுத்து நீருள்
புகவிட்டுப் போது கின்றார்
அன்றெனை வலிந்தாட் கொண்ட
அருளிதில் அறிவே னென்று.
[109]
மேவிய காதல் தொண்டு
விரவுமெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி யான
அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்துக்
கண்டுகும் பிடுவன் என்று
வாவிசூழ் தில்லை மூதூர்
வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.
[110]
மாடுள பதிகள் சென்று
வணங்கிப்போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி
நிறைந்தஆ னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர்
அணைந்தணி வாயில் புக்குச்
சேடுயர் மாட மன்னுஞ்
செழுந்திரு வீதி சார்ந்தார்.
[111]
பொற்றிரு வீதி தாழ்ந்து
புண்ணிய விளைவாய் ஓங்கும்
நற்றிரு வாயில் நண்ணி
நறைமலி யலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல்
வணங்கியுட் புகுந்து பைம்பொன்
சுற்றுமா ளிசைழ் வந்து
தொழுதுகை தலைமேற் கொள்வார்.
[112]
ஆடிய திருமுன் பான
அம்பொனின் கோபு ரத்தின்
ஊடுபுக் கிறைஞ்சி ஓங்கும்
ஒளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை
நண்ணுற வுண்ணி றைந்து
நீடும்ஆ னந்த வெள்ளக்
கண்கள்நீர் நிரந்து பாய.
[113]
பரவுவாய் குளறிக் காதல்
படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் அங்கம் ஐந்தும்
எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத் துள்ளம்
ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவிலா தவரைக் கண்ட
நிறைவுதங் கருத்திற் கொள்ள.
[114]
மடித்தாடும் அடிமைக்கண் என்றெடுத்து
மன்னுயிர்கட் கருளு மாற்றால்
அடுத்தாற்று நன்னெறிக்கண் நின்றார்கள்
வழுவிநர கணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை
சிறப்பித்துத் தனிக்கூத் தென்றும்
நடிப்பானை நாம்மனமே பெற்றவா
றெனுங்களிப்பால் நயந்து பாடி.
[115]
மீளாத அருள்பெற்றுப் புறம்போந்து
திருவீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன்றொண்டர் அந்தணர்கள்
தாம்போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேரன்பால் பொற்பதியை
வணங்கிப்போய் மறலி வீழத்
தாளாண்மை கொண்டவர்தங் கருப்பறிய
லூர்வணங்கிச் சென்று சார்ந்தார்.
[116]
கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ
ஏற்றபெருங் காதலினால் இறைஞ்சி யேத்தி
எல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப்
போற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியின் வைகிப்
புனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச்
சாற்றியமெய்த் திருப்பதிகஞ் சிம்மாந் தென்னுந்
தமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில்.
[117]
கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
மாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி
யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன்என் றெடுத்துப்போற்றி.
[118]
திருப்பதிகம் பாடியே சென்றங் கெய்தித்
தேவர்பெரு மானார்தங் கோயில் வாயில்
உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே
உள்ளணைந்து பணிந்தேத்தி உருகு மன்பால்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லானைப்
போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென்
கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
கானாட்டு முள்ளூரைக் கலந்த போது.
[119]
கானாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
துணைப்பாத மலர்கண்டு தொழுதே னென்று
வானாளுந் திருப்பதிகம் வள்வாய் என்னும்
வண்டமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
திருவெதிர்கொள் பாடியினை யெய்தச் செல்வார்.
[120]
எத்திசையுந் தொழுதேத்த மத்த யானை
எடுத்தெதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து
செல்வமிகு செழுங்கோயி லிறைஞ்சி நண்ணி
அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி
அருள்பெற்றுத் திருவேள்விக் குடியி லெய்தி
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட
மூப்பதிலை எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.
[121]
காட்டுநல் வேள்விக் கோலங்
கருத்துற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத் தோடு
நம்பிஆ ரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ
அங்குநின் றேகி அன்பு
பூட்டிஆட் கொண்டார் மன்னுந்
தானங்கள் இறைஞ்சிப் போந்து.
[122]
எஞ்சாத பேரன்பில்
திருத்தொண்ட ருடனெய்தி
நஞ்சாருங் கறைமிடற்றார்
இடம்பலவு நயந்தேத்தி
மஞ்சாரும் பொழிலுடுத்த
மலர்த்தடங்கள் புடைசூழுஞ்
செஞ்சாலி வயன்மருதத்
திருவாரூர் சென்றடைந்தார்.
[123]
செல்வமலி திருவாரூர்த்
தேவரொடு முனிவர்களும்
மல்குதிருக் கோபுரத்து
வந்திறைஞ்சி உள்புக்கங்
கெல்லையிலாக் காதன்மிக
எடுத்தமலர்க் கைகுவித்துப்
பல்குபெருந் தொண்டருடன்
பரமர்திரு முன்னணைந்தார்.
[124]
மூவாத முதலாகி
நடுவாகி முடியாத
சேவாருங் கொடியாரைத்
திருமூலட் டானத்துள்
ஓவாத பெருங்காதல்
உடனிறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை
யார்திருமா ளிகைசார்ந்தார்.
[125]
பொங்குபெரு விருப்பினொடு
புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கண் செங்கனிவாய்ப்
பரவையார் அடிவணங்கி
எங்களையும் நினைந்தருளிற்
றெனஇயம்ப இனிதளித்து
மங்கைநல்லா ரவரோடும்
மகிழ்ந்துறைந்து வைகுநாள்.
[126]
நாயனார் முதுகுன்றர்
நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில்
புகவிட்டேம் துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பால்
குளத்தில்அவ ரருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப்
போதுவாய் எனப்புகல.
[127]
என்னஅதி சயம்இதுதான்
என்சொன்ன வாறென்று
மின்னிடையார் சிறுமுறுவ
லுடன்விளம்ப மெய்யுணர்ந்தார்
நன்னுதலாய் என்னுடைய
நாதனரு ளாற்குளத்தில்
பொன்னடைய எடுத்துனக்குத்
தருவதுபொய் யாதென்று.
[128]
ஆங்கவரும் உடன்போத
வளவிறந்த விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த
புராதனரைப் புக்கிறைஞ்சி
ஓங்குதிரு மாளிகையை
வலம்வந்தங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைந்தார்
பரவையார் தனித்துணைவர்.
[129]
மற்றதனின் வடகீழ்பால்
கரைமீது வந்தருளி
முற்றிழையார் தமைநிறுத்தி
முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக்
கைதொழுது குளத்தில்இழிந்து
அற்றைநாள் இட்டெடுப்பார்
போல்அங்குத் தடவுதலும்.
[130]
நீற்றழகர் பாட்டுவந்து
திருவிளையாட் டினில்நின்று
மாற்றுறுசெம் பொன்குளத்து
வருவியா தொழிந்தருள
ஆற்றினிலிட் டுக்குளத்தில்
தேடுவீர் அருளிதுவோ
சாற்றுமெனக் கோற்றொடியார்
மொழிந்தருளத் தனித்தொண்டர்.
[131]
முன்செய்த அருள்வழியே
முருகலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயில்நகை
தாராமே தாருமென
மின்செய்த நூன்மார்பின்
வேதியர்தாம் முதுகுன்றில்
பொன்செய்த மேனியினீர்
எனப்பதிகம் போற்றிசைத்து.
[132]
முட்டஇமை யோரறிய
முதுகுன்றில் தந்தபொருள்
சட்டநான் பெறாதொழிந்த
தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவளெதிரே
[133]
ஏத்தாதே இருந்தறியேன்
எனுந்திருப்பாட் டெவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக்
கண்ணுளனாங் கண்ணுதலைக்
கூத்தாதந் தருளாய்இக்
கோமளத்தின் முன்னென்று
நீத்தாருந் தொடர்வரிய
நெறிநின்றார் பரவுதலும்.
[134]
கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக்
கூத்தனார் திருவருளால்
வந்தெழுபொன் திரளெடுத்து
வரன்முறையாற் கரையேற்ற
அந்தரத்து மலர்மாரி
பொழிந்திழிந்த தவனியுளோர்
இந்தஅதி சயமென்னே
யார்பெறுவார் எனத்தொழுதார்.
[135]
ஞாலம்வியப் பெய்தவரு
நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த
ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால்
உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல்
வழுத்தினார் வன்றொண்டர்.
[136]
மீட்டுமவர் பரவுதலும்
மெய்யன்ப ரன்பில்வரும்
பாட்டுவந்து கூத்துவந்தார்
படுவாசி முடிவெய்தும்
ஓட்டறுசெம் பொன்னொக்க
ஒருமாவுங் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்தெடுத்துக்
கொண்டுகரை யேறினார்.
[137]
கரையேறிப் பரவையா
ருடன்கனக மானதெலாம்
நிரையேஆ ளிற்சுமத்தி
நெடுநிலைமா ளிகைபோக்கித்
திரையேறும் புனற்சடிலத்
திருமூலட் டானத்தார்
விரையேறு மலர்ப்பாதந்
தொழுதணைந்தார் வீதியினில்.
[138]
வந்திரு மாளிகையி
னுட்புகுந்து மங்கலவாழ்த்து
அந்தமிலா வகையேத்து
மளவிறந்தா ரொலிசிறப்பச்
சிந்தைநிறை மகிழ்ச்சியுடன்
சேயிழையா ருடனமர்ந்தார்
கந்தமலி மலர்ச்சோலை
நாவலர்தங் காவலனார்.
[139]
அணியாரூர் மணிப்புற்றில்
அமர்ந்தருளும் பரம்பொருளைப்
பணிவார்அங் கொருநாளில்
பாராட்டுந் திருப்பதிகம்
தணியாத ஆனந்தம்
தலைசிறப்பத் தொண்டருடன்
துணிவாய பேரருள்வினவித்
தொழுதாடிப் பாடுவார்.
[140]
பண்ணிறையும் வகைபாறு
தாங்கியென வெடுத்தருளி
உண்ணிறையும் மனக்களிப்பால்
உறுபுளகம் மயிர்முகிழ்ப்பக்
கண்ணிறையும் புனல்பொழியக்
கரையிகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படிதோன்ற
ஏத்திமதிழ்ந் தின்புற்றார்.
[141]
இன்புற்றங் கமர்நாளில்
ஈறிலரு மறைபரவும்
வன்புற்றில் அரவணிந்த
மன்னவனா ரருள்பெற்றே
அன்புற்ற காதலுடன்
அளவிறந்த பிறபதியும்
பொன்புற்கென் றிடவொளிருஞ்
சடையாரைத் தொழப்போவார்.
[142]
பரிசனமும் உடன்போதப்
பாங்கமைந்த பதிகள்தொறும்
கரியுரிவை புனைந்தார்தம்
கழல்தொழுது மகிழ்ந்தேத்தித்
துரிசறுநற் பெருந்தொண்டர்
நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறுமெய்த் திருத்தொண்டர்
எதிர்கொள்ளப் புக்கணைந்தார்.
[143]
விண்தடவு கோபுரத்தைப்
பணிந்துகர மேல்குவித்துக்
கொண்டுபுகுந் தண்ணலார்
கோயிலினை வலஞ்செய்து
மண்டியபே ரன்பினொடு
மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில மிசைப்பணிந்தார்.
[144]
அங்கணரைப் பணிந்தேத்தி
அருளினால் தொழுதுபோய்
மங்குலணி மணிமாடத்
திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந்
திருமயா னமும்பணிந்து
பொங்குமிசைப் பதிகம்மரு
வார்கொன்றை யெனப்போற்றி.
[145]
திருவீரட் டானத்துத்
தேவர்பிரான் சினக்கூற்றின்
பொருவீரந் தொலைத்தகழல்
பணிந்துபொடி யார்மேனி
மருவீரத் தமிழ்மாலை
புனைந்தேத்தி மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப்
பெருகார்வத் தொடுஞ்சென்றார்.
[146]
வரையோடு நிகர்புரிசை
வலம்புரத்தார் கழல்வணங்கி
உரையோசைப் பதிகம்எனக்
கினியோதிப் போய்ச்சங்க
நிரையோடு துமித்தூப
மணித்தீப நித்திலப்பூந்
திரையோதங் கொண்டிறைஞ்சுந்
திருச்சாய்க்கா டெய்தினார்.
[147]
தேவர்பெரு மான்தன்னைத்
திருச்சாய்க்காட் டினிற்பணிந்து
பாவலர்செந் தமிழ்மாலைத்
திருப்பதிகம் பாடிப்போய்
மேவலர்தம் புரமெரித்தார்
வெண்காடு பணிந்தேத்தி
நாவலர்கா வலரடைந்தார்
நனிபள்ளித் திருநகரில்.
[148]
நனிபள்ளி யமர்ந்தபிரான்
கழல்வணங்கி நற்றமிழின்
புனிதநறுந் தொடைபுனைந்து
திருச்செம்பொன் பள்ளிமுதல்
பனிமதிசேர் சடையார்தம்
பதிபலவும் பணிந்துபோய்த்
தனிவிடைமேல் வருவார்தம்
திருநின்றி யூர்சார்ந்தார்.
[149]
நின்றியூர் மேயாரை
நேயத்தால் புக்கிறைஞ்சி
ஒன்றியஅன் புள்ளுருகப்
பாடுவார் உடையஅர
சென்றுமுல கிடர்நீங்கப்
பாடியஏ ழெழுநூறும்
அன்றுசிறப் பித்தஞ்சொல்
திருப்பதிகம் அருள்செய்தார்.
[150]
அப்பதியில் அன்பருடன்
அமர்ந்தகல்வார் அகலிடத்தில்
செப்பரிய புகழ்நீடூர்
பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய வுணர்வினால்
நினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள்வண் தமிழ்மாலை
விளம்பியே மீண்டணைந்தார்.
[151]
மடலாரும் புனல்நீடூர்
மருவினர்தாள் வணங்காது
விடலாமே எனுங்காதல்
விருப்புறும்அத் திருப்பதிகம்
அடலார்சூ லப்படையார்
தமைப்பாடி அடிவணங்கி
உடலாரும் மயிர்ப்புளகம்
மிகப்பணிந்தங் குறைகின்றார்.
[152]
அங்கண்இனி தமர்ந்தருளால்
திருப்புன்கூ ரணைத்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத்
திருக்கோலக் காஅணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம்
எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பால்தொழுது
திருப்பதிகம் போற்றிசைப்பார்.
[153]
திருஞான சம்பந்தர்
திருக்கைக ளால் ஒற்றிப்
பெருகார்வத் துடன்பாடப்
பிஞ்ஞகனார் கண்டிரங்கி
அருளாலே திருத்தாளம்
அளித்தபடி சிறப்பித்துப்
பொருள்மாலைத் திருப்பதிகம்
பாடியே போற்றிசைத்தார்.
[154]
மூவாத முழுமுதலார்
முதற்கோலக் காஅகன்று
தாவாத புகழ்ச்சண்பை
வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர்
நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார்
குருகாவூர் மேவுவார்.
[155]
உண்ணீரின் வேட்கையுடன்
உறுபசியால் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப்பரவை
யார்கொழுநர் வரும்பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார்
காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறும்
கொண்டுவழிச் சார்கின்றார்.
[156]
வேனிலுறு வெயில்வெம்மை
தணிப்பதற்கு விரைக்குளிர்மென்
பானல்மலர்த் தடம்போலும்
பந்தரொரு பாலமைத்தே
ஆனமறை வேதியராய்
அருள்வேடங் கொண்டிருந்தார்
மானமருந் திருக்கரத்தார்
வன்தொண்டர் தமைப்பார்த்து.
[157]
குருகாவூர் அமர்ந்தருளும்
குழகர்வழி பார்த்திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான்
தோழர்திருத் தொண்டருடன்
வருவார்அப் பந்தரிடைப்
புகுந்துதிரு மறையவர்பால்
பெருகார்வஞ் செலவிருந்தார்
சிவாயநம வெனப்பேசி.
[158]
ஆலநிழற் கீழிருந்தார்
அவர்தம்மை எதிர்நோக்கிச்
சாலமிகப் பசித்தீர்இப்
பொதிசோறு தருகின்றேன்
காலமினித் தாழாமே
கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளிர்தண்ணீர்
குடித்திளைப்புத் தீரஎன.
[159]
வன்தொண்டர் அதுகேட்டு
மறைமுனிவர் தரும்பொதிசோறு
இன்றுநமக் கெதிர்விலக்க
லாகாதென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூல்மார்பர்
தரும்பொதிசோ றதுவாங்கிச்
சென்றுதிருத் தொண்டருடன்
திருவமுது செய்தருளி.
[160]
எண்ணிறந்த பரிசனங்கள்
எல்லாரும் இனிதருந்தப்
பண்ணியபின் அம்மருங்கு
பசித்தணைந்தார் களும்அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய்
ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாமளித்த
பொதிசோறு பொலிந்ததால்.
[161]
சங்கரனார் திருவருள்போல்
தண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரும் ஆதரவால்
அவர் நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வால் பள்ளியமர்ந்
தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தார்அப்
பந்தரொடுந் தாங்கரந்தார்.
[162]
சித்தநிலை திரியாத
திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி
யுணர்ந்தவரைக் காணாமை
இத்தனையா மாற்றை
அறிந்திலேன் எனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம்
விளம்பியே சென்றடைந்தார்.
[163]
குருகாவூர் அமர்ந்தருளும்
குழகனார் கோயிலினுக்
கருகார்பொற் கோபுரத்தை
யணைந்திறைஞ்சி யுள்புக்கு
வருகாதல் கூரவலங்
கொண்டுதிரு முன்வணங்கிப்
பருகாவின் னமுதத்தைக்
கண்களாற் பருகினார்.
[164]
கண்ணார்ந்த இன்னமுதைக்
கையாரத் தொழுதிறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பாடியே பணிந்தேத்தி
உள்நாடும் பெருங்காதல்
உடையவர்தாம் புறத்தெய்தி
நண்ணார்வத் தொண்டருடன்
அங்கினிது நயந்திருந்தார்.
[165]
அந்நாளில் தம்பெருமான்
அருள்கூடப் பணிந்தகன்று
மின்னார்செஞ் சடைமுடியார்
விரும்புமிடம் பலவணங்கிக்
கன்னாடும் எயில்புடைசூழ்
கழிப்பாலை தொழுதேத்தித்
தென்னாவ லூர்மன்னர்
திருத்தில்லை வந்தடைந்தார்.
[166]
சீர்வளருந் திருத்தில்லைத்
திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொன் திருமன்றுள்
எடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும்
பதியதனில் பணிந்துறைவார்
போர்வளர்மே ருச்சிலையார்
திருத்தினைமா நகர்புகுந்தார்.
[167]
திருத்தினைமா நகர்மேவும்
சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்
நிருத்தனார் அமர்ந்தருளும்
நிறைபதிகள் பலவணங்கிப்
பொருத்தமிகுந் திருத்தொண்டர்
போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரு மாதரவால்
கைதொழச்சென் றெய்தினார்.
[168]
திருநாவ லூர்மன்னர்
சேர்கின்றார் எனக்கேட்டுப்
பெருநாமப் பதியோரும்
தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என் றலங்கரித்து
வந்தெதிர்கொண் டுள்ளணையச்
செருநாகத் துரிபுனைந்தார்
செழுங்கோயி லுள்ளணைந்தார்.
[169]
மேவியஅத் தொண்டர்குழாம்
மிடைந்தரவென் றெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப
முதல்வனார் முன்பெய்தி
ஆவியினு மடைவுடையா
ரடிக்கமலத் தருள்போற்றிக்
கோவலனான் முகனெடுத்துப்
பாடியே கும்பிட்டார்.
[170]
நலம்பெருகும் அப்பதியில்
நாடியஅன் பொடுநயந்து
குலம்பெருகுந் திருத்தொண்டர்
குழாத்தோடு மினிதமர்ந்து
சலம்பெருகுஞ் சடைமுடியார்
தாள்வணங்கி யருள்பெற்றுப்
பொலம்புரிநூல் மணிமார்பர்
பிறபதியுந் தொழப்போவார்.
[171]
தண்டகமாந் திருநாட்டுத்
தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர் கொண்டணையத்
தொழுதுபோய்த் தூயநதி
வண்டறைபூம் புறவுமலை
வளமருதம் பலகடந்தே
எண்திசையோர் பரவுதிருக்
கழுக்குன்றை யெய்தினார்.
[172]
தேனார்ந்த மலர்ச்சோலை
திருக்கழுக்குன் றத்தடியார்
ஆனாத விருப்பினொடு
மெதிர்கொள்ள அடைந்தருளித்
தூநாள்வெண் மதியணிந்த
சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடு மின்னிசையின்
திருப்பதிகம் பாடினார்.
[173]
பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும்
திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
[174]
அணைந்தருளும் அவ்வேலை
அமுதுசெயும் பொழுதாகக்
கொணர்ந்தமுது சமைத்தளிக்கும்
பரிசனமும் குறுகாமைத்
தணந்தபசி வருத்தத்தால்
தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதில் புறத்திருந்தார்
முனைப்பாடிப் புரவலனார்.
[175]
வன்தொண்டர் பசிதீர்க்க
மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்டலையோ
டொழிந்தொருவெற் றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர்
அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி
அருள்கூரச் செப்புவார்.
[176]
மெய்ப்பசியால் மிகவருந்தி
இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங்
கியானுமக்குக் கொணர்கின்றேன்
அப்புறநீர் அகலாதே
சிறிதுபொழு தமருமெனச்
செப்பியவர் திருக்கச்சூர்
மனைதோறும் சென்றிரப்பார்.
[177]
வெண்திருநீற் றணிதிகழ
விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக்
கடும்பகற்போ திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல்
பொருந்தமனை தொறும்புக்குக்
கொண்டுதாம் விரும்பியாட்
கொண்டவர்முன் கொடுவந்தார்.
[178]
இரந்துதாங் கொடுவந்த
இன்னடிசி லுங்கறியும்
அரந்தைதரும் பசீதீர
அருந்துவீ ரெனவளிப்பப்
பெருந்தகையார் மறையவர்தம்
பேரருளின் திறம்பேணி
நிரந்தபெருங் காதலினால்
நேர்தொழுது வாங்கினார்.
[179]
வாங்கிஅத் திருவமுது
வன்தொண்டர் மருங்கணைந்த
ஓங்குதவத் தொண்டருடன்
உண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றார்போல்
அவர்தம்மை யறியாமே
நீங்கினா ரெப்பொருளும்
நீங்காத நிலைமையினார்.
[180]
திருநாவ லூராளி
சிவயோகி யார்நீங்க
வருநாம மறையவனார்
இறையவனா ரெனமதித்தே
பெருநாதச் சிலம்பணிசே
வடிவருந்தப் பெரும்பகற்கண்
உருநாடி எழுந்தருளிற்
றென்பொருட்டாம் எனவுருகி.
[181]
முதுவா யோரி என்றெடுத்து
முதல்வ னார்தம் பெருங்கருணை
அதுவா மிதுவென் றதிசயம்வந்
தெய்தக் கண்ணீர் மழையருவிப்
புதுவார் புனலின் மயிர்ப்புளகம்
புதையப் பதிகம் போற்றிசைத்து
மதுவார் இதழி முடியாரைப்
பாடி மகிழ்ந்து வணங்கினார்.
[182]
வந்தித் திறைவ ரருளாற்போய்
மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப்
புக்கு முக்கட்பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல்
பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியார்
அமருங் காஞ்சி மருங்கணைந்தார்.
[183]
அன்று வெண்ணெய் நல்லூரில்
அரியும் அயனுந் தொடர்வரிய
வென்றி மழவெள் விடையுயர்த்தார்
வேத முதல்வ ராய்வந்து
நின்று சபைமுன் வழக்குரைத்து
நேரே தொடர்ந்தாட் கொண்டவர்தாம்
இன்றிங் கெய்தப் பெற்றோமென்று
எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.
[184]
மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக
மறுகு மணித்தோ ரணம்நாட்டி
அல்கு தீபம் நிறைகுடங்கள்
அகிலின் தூபங் கொடியெடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்துத்
தெற்றி யாடன் முழவதிரப்
பல்கு தொண்ட ருடன்கூடிப்
பதியின் புறம்போய் எதிர்கொண்டார்.
[185]
ஆண்ட நம்பி யெதிர்கொண்ட
அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்கோ புரங்கடந்து
நிறைமா ளிகைவீ தியிற்போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன்
புனைமங் கலதூ ரியம்ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகுதிரு
ஏகாம் பரஞ்சென் றெய்தினார்.
[186]
ஆழிநெடுமா லயன்முதலாம்
அமரர் நெருங்கு கோபுரமுன்
பூமி யுறமண் மிசைமேனி
பொருந்த வணங்கிப் புகுந்தருளிச்
சூழு மணிமா ளிகைபலவுந்
தொழுது வணங்கி வலங்கொண்டு
வாழி மணிபபொற் கோயிலினுள்
வந்தார் அணுக்க வன்தொண்டர்.
[187]
கைகள் கூப்பி முன்னணைவார்
கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண்
மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
[188]
வீழ்ந்து போற்றிப் பரவசமாய்
விம்மி யெழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை யுடன்பாடி
மாறா விருப்பிற் புறம்போந்து
சூழ்ந்த தொண்ட ருடன்மருவும்
நாளில் தொல்லைக் கச்சிநகர்த்
தாழ்ந்த சடையா ராலயங்கள்
பலவுஞ் சார்ந்து வணங்குவார்.
[189]
சீரார் காஞ்சி மன்னுதிருக்
காமக் கோட்டம் சென்றிறைஞ்சி
நீரார் சடையா ரமர்ந்தருளும்
நீடு திருமேற் றளிமேவி
ஆரா அன்பிற் பணிந்தேத்து
மளவில்நுந்தா வொண்சுடராம்
பாரார் பெருமைத் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்து பரவினார்.
[190]
ஓண காந்தன் தளிமேவும்
ஒருவர் தம்மை யுரிமையுடன்
பேணி யமைந்த தோழமையால்
பெருகும் அடிமைத் திறம்பேசிக்
காண மோடு பொன்வேண்டி
நெய்யும் பாலும் கலைவிளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்தேத்தி
யெண்ணில் நிதிபெற் றினிதிருந்தார்.
[191]
அங்கண் அமர்வார் அனேகதங்கா
வதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து
தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்
தங்கு மிடமா மெனப்பாடித்
தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
புரிந்தப் பதியிற் பொருந்துநாள்.
[192]
பாட இசையும் பணியினால்
பாவை தழுவக் குழைகம்பர்
ஆடல் மருவுஞ் சேவடிகள்
பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர்
நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான்
பனங்காட் டூரில் வந்தடைந்தார்.
[193]
செல்வ மல்கு திருப்பனங்காட்
டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்லல் அறுக்கும் அருமருந்தை
வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்கநின்று விடையின்மேல்
வருவார் எனும்வண் டமிழ்ப்பதிகம்
நல்ல இசையி னுடன்பாடிப்
போந்து புறம்பு நண்ணுவார்.
[194]
மன்னு திருமாற் பேறணைந்து
வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய்ச்
சாரும் மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னல் முடியா ரிடம்பலவும்
பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத்
திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
[195]
தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளா லேறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்.
[196]
வணங்கி உள்ளங் களிகூர
மகிழ்ந்து போற்றி மதுரஇசை
[197]
வடமா திரத்துப் பருப்பதமும்
திருக்கே தார மலையுமுதல்
இடமா அரனார் தாமுவந்த
வெல்லா மிங்கே இருந்திறைஞ்சி
நடமா டியசே வடியாரை
நண்ணி னார்போ லுண்ணிறைந்து
திடமாங் கருத்தில் திருப்பதிகம்
பாடிக் காதல் சிறந்திருந்தார்.
[198]
அங்குச் சிலநாள் வைகியபின்
அருளாற் போந்து பொருவிடையார்
தங்கும் இடங்க ளெனைப்பலவுஞ்
சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணரிக் கரைமருங்கு
புவியுட் சிவலோகம் போலத்
திங்கள் முடியா ரமர்ந்ததிரு
வொற்றியூரைச் சென்றடைந்தார்.
[199]
அண்ணல் தொடர்ந்தா வணங்காட்டி
ஆண்ட நம்பி யெழுந்தருள
எண்ணில் பெருமை ஆதிபுரி
இறைவ ரடியா ரெதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்தொறும்
வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப
தீப மெடுத்துத் தொழவெழுங்கால்.
[200]
வரமங் கலநல் லியம்முழங்க
வாச மாலை யணியரங்கில்
புரமங் கையர்கள் நடமாடப்
பொழியும் வெள்ளப் பூமாரி
அரமங் கையரும் அமரர்களும்
வீச அன்ப ருடன்புகுந்தார்
பிரமன் தலையிற் பலியுகந்த
பிரானார் விரும்பு பெருந் தொண்டர்.
[201]
ஒற்றியூரி னுமையோடுங்
கூட நின்றா ருயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர்
பரந்த கடல்போல் வந்தீண்டிச்
சுற்றம் அணைந்து துதிசெய்யத்
தொழுது தம்பி ரானன்பர்
கொற்ற மழவே றுடையவர்தங்
கோயில் வாயி லெய்தினார்.
[202]
வானை அளக்குங் கோபுரத்தை
மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர்
கூனல் இளவெண் பிறைச்சடையார்
கோயில் வலங்கொண் டெதிர்குறுகி
ஊனும் உயிருங் கரைந்துருக
உச்சி குவித்த கையினுடன்
ஆன காத லுடன் வீழ்ந்தார்
ஆரா வன்பி னாரூரர்.
[203]
ஏட்டு வரியில் ஒற்றியூர்
நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்ட மலருந் திருநுதலார்
நறும்பொற் கமலச் சேவடியிற்
கூட்டு முணர்வு கொண்டெழுந்து
கோதி லமுத இசைகூடப்
பாட்டும் பாடிப் பரவிஎனும்
பதிக மெடுத்துப் பாடினார்.
[204]
பாடி அறிவு பரவசமாம்
பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காதல்
நிறைந்த அன்பர் பலர்போற்றத்
தேடும் அயனும் திருமாலும்
அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களில்அணைந்து
பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
[205]
இந்த நிலைமை யாரிவரிங்
கிருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலைநீங்கி
அருளாற் போந்த அநிந்திதையார்
வந்து புவிமேல் அவதரித்து
வளர்ந்து பின்பு வன்தொண்டர்
சந்த விரைசூழ் புயஞ்சேர்ந்த
பரிசு தெரியச் சாற்றுவாம்.
[206]
நாலாங் குலத்திற் பெருகுநல
முடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை
மிக்க திருஞா யிறுகிழவர்
பாலா தரவு தருமகளார்
ஆகிப் பார்மேல் அவதரித்தார்
ஆலா லஞ்சேர் கறைமிடற்றார்
அருளால் முன்னை அநிந்திதையார்.
[207]
மலையான் மடந்தை மலர்ப்பாதம்
மறவா அன்பால் வந்தநெறி
தலையா முணர்வு வந்தணையத்
தாமே யறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கண் சிறுமகளி
ராயத் தோடும் விளையாட்டு
நிலையா யினஅப் பருவங்கள்
தோறும் நிகழ நிரம்புவார்.
[208]
சீர்கொள் மரபில் வருஞ்செயலே
யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும்
பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம்
வளர்மென் முலைகள் இடைவருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார்
தங்கள் மனைவி யார்க்குரைப்பார்.
[209]
வடிவும் குணமும் நம்முடைய
மகட்கு மண்ணு ளோர்க்கிசையும்
படிவ மன்றி மேற்பட்ட
பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனிநிகழுங்
கால மென்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார்
ஏற்கு மாற்றால் கொடுமென்றார்.
[210]
தாய ரோடும் தந்தையார்
பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிதுஎம்
பெருமா னீசன் திருவருளே
மேய வொருவர்க் குரிய தியான்
வேறென் விளையும் எனவெருவுற்று
ஆய வுணர்வு மயங்கிமிக
அயர்ந்தே அவனி மிசைவிழுந்தார்.
[211]
பாங்கு நின்ற தந்தையார்
தாயார் பதைத்துப் பரிந்தெடுத்தே
ஏங்கும் உள்ளத் தினராகி
இவளுக் கென்னோ உற்றதெனத்
தாங்கிச் சீத விரைப்பனிநீர்
தெளித்துத் தைவந் ததுநீங்க
வாங்கு சிலைநன் னுதலாரை
வந்த துனக்கிங் கென்னென்றார்.
[212]
என்று தம்மை ஈன்றெடுத்தார்
வினவ மறைவிட் டியம்புவார்
இன்றென் திறத்து நீர்மொழிந்த
திதுஎன் பரிசுக் கிசையாது
வென்றி விடையா ரருள் செய்தார்
ஒருவர்க் குரியேன் யானினிமேல்
சென்று திருவொற்றி யூரணைந்து
சிவனார் அருளிற் செல்வனென.
[213]
அந்த மாற்றங் கேட்டவர்தாம்
அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த வுள்ளத் தினராகி
மற்ற மாற்றம் மறைத்தொழுகப்
பந்தம் நீடும் இவர்குலத்து
நிகராம் ஒருவன் பரிசறியான்
சிந்தை விரும்பி மகட்பேச
விடுத்தான் சிலருஞ் சென்றிசைத்தார்.
[214]
தாதை யாரும் அதுகேட்டுத்
தன்மை விளம்பத் தகாமையினால்
ஏத மெய்தா வகைமொழிந்து
போக்க அவராங் கெய்தாமுன்
தீதங் கிழைத்தே யிறந்தான்போற்
செல்ல விடுத்தா ருடன் சென்றான்
மாத ராரைப் பெற்றார்மற்று
அதனைக் கேட்டு மனமருண்டார்.
[215]
தைய லார்சங் கிலியார்தம்
திறத்துப் பேசத் தகாவார்த்தை
உய்ய வேண்டும் நினைவுடையார்
உரையா ரென்றங் குலகறியச்
செய்த விதிபோல் இதுநிகழச்
சிறந்தார்க் குள்ள படிசெப்பி
நையும் உள்ளத் துடன்அஞ்சி
நங்கை செயலே உடன்படுவார்.
[216]
அணங்கே யாகும் இவள்செய்கை
அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி
வார்த்தை யறியாள் மற்றொன்றும்
குணங்க ளிவையா மினியிவள் தான்
குறித்த படியே ஒற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம்
பாற்கொண் டணைவோம் எனப்பகர்வார்.
[217]
பண்ணார் மொழிச்சங் கிலியாரை
நோக்கிப் பயந்தா ரொடுங்கிளைஞர்
தெண்ணீர் முடியார் திருவொற்றி
யூரிற் சேர்ந்து செல்கதியும்
கண்ணார் நுதலார் திருவருளால்
ஆகக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற்
றங்கிப் புரிவீர் தவமென்று.
[218]
பெற்ற தாதை சுற்றத்தார்
பிறைசேர் முடியார் விதியாலே
மற்றுச் செயலொன் றறியாது
மங்கை யார்சங் கிலியார் தாம்
சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து
துதைந்த செல்வத் தொடும்புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றி
யூரிற் கொண்டு சென்றணைந்தார்.
[219]
சென்னி வளர்வெண் பிறையணிந்த
சிவனார் கோயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து
தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாட மருங்கமைத்துக்
கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத்
தந்தை யார்வந் தடிவணங்கி.
[220]
யாங்கள் உமக்குப் பணிசெய்ய
ஈசற் கேற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில்
உறைகின் றீரென் றுரைக்கின்றார்
தாங்கற் கரிய கண்கள்நீர்த்
தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும்இறைஞ்சிப்
போனார் எயில்சூழ் தம்பதியில்.
[221]
காதல் புரிந்து தவம்புரியுங்
கன்னி யாரங் கமர்கின்றார்
பூத நாதர் கோயிலினிற்
காலந் தோறும் புக்கிறைஞ்சி
நீதி முறைமை வழுவாது
தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப்பூ மண்டபத்துத்
திரைசூழ் ஒருபாற் சென்றிருந்து.
[222]
பண்டு கயிலைத் திருமலையில்
செய்யும் பணியின் பான்மைமனம்
கொண்ட உணர்வு தலைநிற்பக்
குலவு மலர்மென் கொடியனையார்
வண்டு மருவுந் திருமலர்மென்
மாலை காலங் களுக்கேற்ப
அண்டர் பெருமான் முடிச்சாத்த
அமைத்து வணங்கி யமருநாள்.
[223]
அந்தி வண்ணத் தொருவர்திரு
வருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார்
தம்மைக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதலால்
வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்தொருநாள்
முதல்வர் கோயி லுட்புகுந்தார்.
[224]
அண்டர் பெருமான் அந்தணராய்
ஆண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து
பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள்
கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந்
திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
[225]
அன்பு நாரா அஞ்செழுத்து
நெஞ்சு தொடுக்க அலர்தொடுத்தே
என்புள் ளுருகும் அடியாரைத்
தொழுது நீங்கி வேறிடத்து
முன்பு போலத் திரைநீக்கி
முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
மின்போல் மறையுஞ் சங்கிலியார்
தம்மை விதியாற் கண்ணுற்றார்.
[226]
கோவா முத்தும் சுரும்பேறாக்
கொழுமென் முகையு மனையாரைச்
சேவார் கொடியார் திருத்தொண்டர்
கண்ட போது சிந்தைநிறை
காவா தவர்பால் போய்வீழத்
தம்பாற் காம னார் துரந்த
பூவா ளிகள்வந் துறவீழத்
தரியார் புறமே போந்துரைப்பார்.
[227]
இன்ன பரிசென் றறிவரிதால்
ஈங்கோர் மருங்கு திரைக்குள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்தவொளி
யமுதில் அளாவிப் புதியமதி
தன்னுள் நீர்மை யால்குழைத்துச்
சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை யுள்ளந் திரிவித்தாள்
யார்கொல் என்றங் கியம்புதலும்.
[228]
அருகு நின்றார் விளம்புவார்
அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகு தவத்தால் ஈசர்பணி
பேணுங் கன்னி யாரென்ன
இருவ ராலிப் பிறவியைஎம்
பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்திஇவள்
மற்றை யவளாம் எனமருண்டார்.
[229]
மின்னார் சடையார் தமக்காளாம்
விதியால் வாழும் எனைவருத்தித்
தன்னா ரருளால் வரும்பேறு
தவத்தால் அணையா வகைதடுத்தே
என்னா ருயிரும் எழின்மலரும்
கூடப் பிணைக்கும் இவள்தன்னைப்
பொன்னார் இதழி முடியார்பால்
பெறுவே னென்று போய்ப்புக்கார்.
[230]
மலர்மே லயனும் நெடுமாலும்
வானும் நிலனுங் கிளைத்தறியா
நிலவு மலருங் திருமுடியும்
நீடுங் கழலும் உடையாரை
உலக மெல்லாந் தாமுடையார்
ஆயும் ஒற்றி யூரமர்ந்த
இலகு சோதிப் பரம்பொருளை
இறைஞ்சி முன்னின் றேத்துவார்.
[231]
மங்கை யொருபால் மகிழந்ததுவும்
அன்றி மணிநீண் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும்
காதலுடையீர் அடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை
தொடுத் தெனுள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத்
தந்தென் வருத்தந் தீருமென.
[232]
அண்ண லார்முன் பலவும்அவர்
அறிய வுணர்த்திப் புறத்தணைந்தே
எண்ண மெல்லாம் உமக்கடிமை
யாமா றெண்ணும் என்னெஞ்சில்
திண்ண மெல்லா முடைவித்தாள்
செய்வ தொன்று மறியேன் யான்
தண்ணி லாமின் னொளிர்பவளச்
சடையீர் அருளும் எனத்தளர்வார்.
[233]
மதிவாள் முடியார் மகிழ்கோயிற்
புறத்தோர் மருங்கு வந்திருப்பக்
கதிரோன் மேலைக் கடல்காண
மாலைக் கடலைக் கண்டயர்வார்
முதிரா முலையார் தம்மைமணம்
புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியா னண்பர் தமக்கருளும்
நண்பால் நினைந்து நினைந்தழிய.
[234]
உம்ப ருய்ய உலகுய்ய
ஓல வேலை விடமுண்ட
தம்பி ரானார் வன்தொண்டர்
தம்பா லெய்திச் சங்கிலியை
இம்ப ருலகில் யாவருக்கும்
எய்த வொண்ணா இருந்தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம்
கொண்ட கவலை ஒழிகென்ன.
[235]
அன்று வெண்ணெய் நல்லூரில்
வலிய ஆண்டு கொண்டருளி
ஒன்று மறியா நாயேனுக்
குறுதி யளித்தீர் உயிர்காக்க
இன்றும் இவளை மணம்புணர்க்க
ஏன்று நின்றீர் எனப்போற்றி
மன்றல் மலர்ச்சே வடியிணைக்கீழ்
வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.
[236]
ஆண்டு கொண்ட அந்தணனார்
அவருக் கருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து
நீங்கி வானில் நிறைமதியந்
தீண்டு கன்னி மாடத்துச்
சென்று திகழ்சங் கிலியாராம்
தூண்டு சோதி விளக்கனையார்
தம்பால் கனவில் தோன்றினார்.
[237]
தோற்றும் பொழுதிற் சங்கிலியார்
தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கியெழுந்
தடியே னுய்ய எழுந் தருளும்
பேற்றுக் கென்யான் செய்வதெனப்
பெரிய கருணை பொழிந்தனைய
நீற்றுக் கோல வேதியரும்
நேர்நின் றருளிச் செய்கின்றார்.
[238]
சாருந் தவத்துச் சங்கிலிகேள்
சால என்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யான்ஆள
உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொள் முலையாய் நீயவனை
மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்.
[239]
ஆதி தேவர் முன்னின்றங்
கருளிச் செய்த பொழுதின்கண்
மாத ரார்சங் கிலியாரும்
மாலும் மயனு மறிவரிய
சீத மலர்த்தா மரையடிக்கீழ்ச்
சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன்னடுக்கம்
எய்தித் தொழுது விளம்புவார்.
[240]
எம்பி ரானே நீரருளிச்
செய்தார்க் குரியேன் யான்இமையோர்
தம்பி ரானே அருள்தலைமேற்
கொண்டேன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை
நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக்
கூறுந் திறமொன் றுளதென்பார்.
[241]
பின்னும் பின்னல் முடியார்முன்
பெருக நாணித் தொழுரைப்பார்
மன்னுந் திருவா ரூரின்கண்
அவர்தாம் மிகவும் மகிழ்ந்துறைவ
தென்னுந் தன்மை யறிந்தருளும்
எம்பி ராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர்
என்றார் குன்றா விளக்கனையார்.
[242]
மற்றவர்தம் உரைகொண்டு
வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரைசெய்வார்
பொற்றொடியா யுனையிகந்து
போகாமைக் கொருசபதம்
அற்றமுறு நிலைமையினால்
அவன்செய்வா னெனவருளி.
[243]
வேயனைய தோளியார்
பால்நின்று மீண்டருளித்
தூயமனம் மகிழ்ந்திருந்த
தோழனார் பால்அணைந்து
நீஅவளை மணம்புணரும்
நிலையுரைத்தோம் அதற்கவள்பால்
ஆயதொரு குறைஉன்னால்
அமைப்பதுள தென்றருள.
[244]
வன்தொண்டர் மனங்களித்து
வணங்கிஅடி யேன்செய்ய
நின்றகுறை யாதென்ன
நீயவளை மணம்புணர்தற்
கொன்றியுட னேநிகழ
ஒருசபத மவள்முன்பு
சென்றுகிடைத் திவ்விரவே
செய்கவென வருள்செய்தார்.
[245]
என்செய்தால் இதுமுடியும்
ஆதுசெய்வன் யானிதற்கு
மின்செய்த புரிசடையீர்
அருள்பெறுதல் வேண்டுமென
முன்செய்த முறுவலுடன்
முதல்வரவர் முகநோக்கி
உன்செய்கை தனக்கினியென்
வேண்டுவதென் றுரைத்தருள.
[246]
வம்பணிமென் முலையவர்க்கு
மனங்கொடுத்த வன்தொண்டர்
நம்பரிவர் பிறபதியும்
நயந்தகோ லஞ்சென்று
கும்பிடவே கடவேனுக்
கிதுவிலக்கா மெனுங்குறிப்பால்
தம்பெருமான் றிருமுன்பு
தாம்வேண்டுங் குறையிரப்பார்.
[247]
சங்கரர்தாள் பணிந்திருந்து
தமிழ்வேந்தர் மொழிகின்றார்
மங்கையவள் தனைப்பிரியா
வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தால்
அப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க்
கொளவேண்டு மெனத்தாழ்ந்தார்.
[248]
தம்பிரான் தோழரவர்
தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர்நா யகருமதற்
குடன்பாடு செய்வாராய்
நம்பிநீ சொன்னபடி
நாஞ்செய்தும் என்றருள
எம்பிரா னேயரிய
தினியெனக்கென் னெனவேத்தி.
[249]
அஞ்சலிசென் னியில்மன்ன
அருள்பெற்றுப் புறம்போதச்
செஞ்சடையார் அவர்மாட்டுத்
திருவிளையாட் டினைமகிழ்ந்தோ
வஞ்சியிடைச் சங்கிலியார்
வழியடிமைப் பெருமையோ
துஞ்சிருள்மீ ளவும்அணைந்தார்
அவர்க்குறுதி சொல்லுவார்.
[250]
சங்கிலியார் தம்மருங்கு
முன்புபோற் சார்ந்தருளி
நங்கையுனக் காரூரன்
நயந்துசூ ளுறக்கடவன்
அங்கு நமக் கெதிர்செய்யும்
அதற்குநீ யிசையாதே
கொங்கலர்பூ மகிழின்கீழ்க்
கொள்கவெனக் குறித்தருள.
[251]
மற்றவருங் கைகுவித்து
மாலயனுக் கறிவரியீர்
அற்றமெனக் கருள்புரிந்த
அதனில்அடி யேனாகப்
பெற்றதியான் எனக்கண்கள்
பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தம்
சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்.
[252]
தையலார் தமக்கருளிச்
சடாமகுடர் எழுந்தருள
எய்தியபோ ததிசயத்தால்
உணர்ந்தெழுந்தவ் விரவின்கண்
செய்யசடை யாரருளின்
திறம்நினைந்தே கண்துயிலார்
ஐயமுடன் அருகுதுயில்
சேடியரை அணைந்தெழுப்பி.
[253]
நீங்குதுயிற் பாங்கியர்க்கு
நீங்கல்எழுத் தறியுமவர்
தாங்கனவில் எழுந்தருளித்
தமக்கருளிச் செய்ததெலாம்
பாங்கறிய மொழியஅவர்
பயத்தினுடன் அதிசயமும்
தாங்குமகிழ்ச் சியும்எய்தச்
சங்கிலியார் தமைப்பணிந்தார்.
[254]
சேயிழையார் திருப்பள்ளி
யெழுச்சிக்கு மலர்தொடுக்கும்
தூயபணிப் பொழுதாகத்
தொழில்புரிவா ருடன்போதத்
கோயிலின்முன் காலமது
வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய
வரவுபார்த் தாரூரர்.
[255]
நின்றவர்அங் கெதிர்வந்த
நேரிழையார் தம்மருங்கு
சென்றணைந்து தம்பெருமான்
திருவருளின் திறங்கூற
மின்தயங்கு நுண்ணிடையார்
விதியுடன்பட் டெதிர்விளம்பார்
ஒன்றியநா ணொடுமடவார்
உடனொதுங்கி உட்புகுந்தார்.
[256]
அங்கவர்தம் பின்சென்ற
ஆரூரர் ஆயிழையீர்
இங்குநான் பிரியாமை
உமக்கிசையும் படியியம்பத்
திங்கள்முடி யார்திருமுன்
போதுவீர் எனச்செப்பச்
சங்கிலியார் கனவுரைப்பக்
கேட்டதா தியர்மொழிவார்.
[257]
எம்பெருமான் இதற்காக
எழுந்தருளி யிமையவர்கள்
தம்பெருமான் திருமுன்பு
சாற்றுவது தகாதென்ன
நம்பெருமான் வன்தொண்டர்
நாதர்செயல் அறியாதே
கொம்பனையீர் யான்செய்வ
தெங்கென்று கூறுதலும்.
[258]
மாதரவர் மகிழ்க்கீழே
அமையுமென மனமருள்வார்
ஈதலரா கிலும்ஆகும்
இவர்சொன்ன படிமறுக்கில்
ஆதலினால் உடன்படலே
அமையுமெனத் துணிந்தாகில்
போதுவீ ரெனமகிழ்க்கீழ்
அவர்போதப் போயணைந்தார்.
[259]
தாவாத பெருந்தவத்துச்
சங்கிலியா ருங்காண
மூவாத திருமகிழை
முக்காலும் வலம்வந்து
மேவாதிங் கியானகலேன்
எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை
முனைப்பாடிப் புரவலனார்.
[260]
மேவியசீ ராரூரர்
மெய்ச்சபத வினைமுடிப்பக்
காவியினேர் கண்ணாருங்
கண்டுமிக மனங்கலங்கிப்
பாவியேன் இதுகண்டேன்
தம்பிரான் பணியால்என்
றாவிசோர்ந் தழிவார்அங்
கொருமருங்கு மறைந்தயர்ந்தார்.
[261]
திருநாவ லூராளி
தம்முடைய செயல்முற்றிப்
பொருநாகத் துரிபுனைந்தார்
கோயிலினுட் புகுந்திறைஞ்சி
அருள்நாளுந் தரவிருந்தீர்
செய்தவா றழகிதெனப்
பெருநாமம் எடுத்தேத்திப்
பெருமகிழ்ச்சி யுடன்போந்தார்.
[262]
வார்புனையும் வனமுலையார்
வன்தொண்டர் போனதற்பின்
தார்புனையும் மண்டபத்துத்
தம்முடைய பணிசெய்து
கார்புனையும் மணிகண்டர்
செயல்கருத்திற் கொண்டிறைஞ்சி
ஏர்புனையுங் கன்னிமா
டம்புகுந்தார் இருள்புலர.
[263]
அன்றிரவே ஆதிபுரி
ஒற்றிகொண்டார் ஆட்கொண்ட
பொன்றிகழ்பூண் வன்தொண்டர்
புரிந்தவினை முடித்தருள
நின்றபுகழ்த் திருவொற்றி
யூர்நிலவு தொண்டருக்கு
மன்றல்வினை செய்வதற்கு
மனங்கொள்ள வுணர்த்துவார்.
[264]
நம்பியா ரூரனுக்கு
நங்கைசங் கிலிதன்னை
இம்பர்ஞா லத்திடைநம்
ஏவலினால் மணவினைசெய்
தும்பர்வா ழுலகறிய
அளிப்பீரென் றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர்
அருள்தலைமேற் கொண்டெழுவார்.
[265]
மண்ணிறைந்த பெருஞ்செல்வத்
திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர்
எழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன்
உம்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற்
கலியாணஞ் செய்தளித்தார்.
[266]
பண்டுநிகழ் பான்மையினால்
பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை
மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப்
புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற்
றமர்ந்திருந்தார் காதலினால்.
[267]
யாழின்மொழி எழின்முறுவல்
இருகுழைமேற் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார்
மணியல்குல் துறைபடிந்து
வீழுமவர்க் கிடைதோன்றி
மிகும்புலவிப் புணர்ச்சிக்கண்
ஊழியா மொருகணந்தான்
அவ்வூழி யொருகணமாம்.
[268]
இந்நிலையில் பேரின்பம்
[269]
பொங்குதமிழ்ப் பொதியமலைப்
பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல்
இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர்
அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தமெதிர்
கொண்டருளும் வகைநினைந்தார்.
[270]
வெண்மதியின் கொழுந்தணிந்த
வீதிவிடங் கப்பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த
ஓலக்க மதனிடையே
பண்ணமரும் மொழிப்பரவை
யார்பாட லாடல்தனைக்
கண்ணுறமுன் கண்டுகேட்
டார்போலக் கருதினார்.
[271]
பூங்கோயில் அமர்ந்தாரைப்
புற்றிடங்கொண் டிருந்தாரை
நீங்காத காதலினால்
நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாமுன்பு
பணியவரும் பயனுணர்வார்
ஈங்குநான் மறந்தேனென்
றேசறவால் மிகவழிவார்.
[272]
மின்னொளிர்செஞ் சடையானை
வேதமுத லானானை
மன்னுபுகழ்த் திருவாரூர்
மகிழ்ந்தானை மிகநினைந்து
பன்னியசொற் பத்திமையும்
அடிமையையுங் கைவிடுவான்
என்னுமிசைத் திருப்பதிகம்
எடுத்தியம்பி யிரங்கினார்.
[273]
பின்னொருநாள் திருவாரூர்
தனைப்பெருக நினைந்தருளி
உன்னஇனி யார்கோயில்
புகுந்திறைஞ்சி ஒற்றிநகர்
தன்னையக லப்புக்கார்
தாஞ்செய்த சபதத்தால்
முன்னடிகள் தோன்றாது
கண்மறைய மூர்ச்சித்தார்.
[274]
செய்வதனை யறியாது
திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
மைவிரவு கண்ணார்பால்
சூளுறவு மறுத்ததனால்
இவ்வினைவந் தெய்தியதாம்
எனநினைந்தெம் பெருமானை
வெவ்வியஇத் துயர்நீங்கப்
பாடுவேன் எனநினைந்து.
[275]
அழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற் பதிகம்
ஆதி நீள்புரி யண்ணலை யோதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்
மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும்என் றிரந்தே
எய்து வெந்துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்
பணிந்து சாலவும் பலபல நினைவார்.
[276]
அங்கு நாதர்செய் அருளது வாக
அங்கை கூப்பியா ரூர்தொழ நினைந்தே
பொங்கு காதன்மீ ளாநிலை மையினால்
போது வார்வழி காட்டமுன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லை வாயில்
சென்றி றைஞ்சிநீ டிய திருப் பதிகம்
சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்
என்று சாற்றிய தன்மையிற் பாடி.
[277]
தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்
குறித்த காதலின் நெறிக்கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடுவெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
காயும்நா கத்தர் கோயிலை யடைந்தார்.
[278]
அணைந்த தொண்டர்க ளுடன்வல மாக
அங்கண் நாயகர் கோயில்முன் னெய்திக்
குணங்க ளேத்தியே பரவியஞ் சலியால்
குவித்த கைதலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே
என்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி
இணங்கி லாமொழி யால்உளோம் போகீர்
என்றி யம்பினார் ஏதிலார் போல.
[279]
பிழையுளன பொறுத்திடுவர்
என்றெடுத்துப் பெண்பாகம்
விழைவடிவிற் பெருமானை
வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழையெனமா சுணமணிந்த
விறையானைப் பாடினார்
மழை தவழு நெடும்புரிசை
நாவலூர் மன்னவனார்.

[280]
முன்னின்று முறைப்பாடு
போல்மொழிந்த மொழிமாலைப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடியபின் பற்றாய
என்னுடைய பிரானருள்இங்
கித்தனைகொ லாமென்று
மன்னுபெருந் தொண்டருடன்
வணங்கியே வழிக்கொள்வார்.
[281]
அங்கணர்தம் பதியதனை
அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ்
பழையனுர் உழையெய்தித்
தங்குவார் அம்மைதிருத்
தலையாலே வலங்கொள்ளும்
திங்கண்முடி யாராடுந்
திருவாலங் காட்டினயல்.
[282]
முன்னின்று தொழுதேத்தி
முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த்
திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக்
காஞ்சிமா நகரணைந்தார்.
[283]
தேனிலவு பொழிற்கச்சித்
திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம்
ஒழியாத கருணையினால்
ஆனதிரு வறம்புரக்கும்
அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில்
வணங்கினார் வன்தொண்டர்.
[284]
தொழுது விழுந் தெழுந்தருளாற்
துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும்அளித் தழித்தாக்கும்
முதல்வர்திரு வேகம்பம்
பழுதில்அடி யார்முன்பு
புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே
என்மொழிவேன் என்றிறைஞ்சி.
[285]
விண்ணாள்வார் அமுதுண்ண
மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா கச்சியே
கம்பனே கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்திங்
கியான்காண எழிற்பவள
வண்ணாகண் ணளித்தருளாய்
எனவீழ்ந்து வணங்கினார்.
[286]
பங்கயச்செங் கைத்தளிரால்
பனிமலர்கொண் டருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி
பணிந்தசே வடிநினைந்து
பொங்கியஅன் பொடுபரவிப்
போற்றியஆ ரூரருக்கு
மங்கைதழு வக்குழைந்தார்
மறைந்தஇடக் கண்கொடுத்தார்.
[287]
ஞாலந்தான் இடந்தவனும்
நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார்
கண்ணளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும்
குறுகிவிழுந் தெழுந்துகளித்
தாலந்தா னுகந்தவன் என்
றெடுத்தாடிப் பாடினார்.
[288]
பாடிமிகப் பரவசமாய்ப்
பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட
நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியஅஞ் சலியினராய்த்
தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன்
கும்பிட்டங் கினிதமர்வார்.
[289]
மாமலையாள் முலைச்சுவடும்
வளைத்தழும்பும் அணிந்தமதிப்
பூமலிவார் சடையாரைப்
போற்றியரு ளதுவாகத்
தேமலர்வார் பொழிற்காஞ்சித்
திருநகரங் கடந்தகல்வார்
பாமலர்மா லைப்பதிகம்
திருவாரூர் மேற்பரவி.
[290]
அந்தியும்நண் பகலும்என
எடுத்தார்வத் துடனசையால்
எந்தைபிரான் திருவாரூர்
என்றுகொல்எய் துவதென்று
சந்தஇசை பாடிப்போய்த்
தாங்கரிய ஆதரவு
வந்தணைய அன்பருடன்
மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.
[291]
மன்னுதிருப் பதிகள்தொறும்
வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்துவந்தார்
கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.
[292]
அங்கணரை ஆமாத்தூர்
அழகர்தமை யடிவணங்கித்
தங்கும்இசைத் திருப்பதிகம்
பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெருந்தொண்டை
வளநாடு கடந்தணைந்தார்
செங்கண்வள வன்பிறந்த
சீர்நாடு நீர்நாடு.
[293]
அந்நாட்டின் மருங்குதிரு வரத்துறையைச் சென்றெய்தி
மின்னாரும் படைமழுவார்
விரைமலர்த்தாள் பணிந்தெழுந்து
சொன்மாலை மலர்க்கல்வா
யகில்என்னுந் தொடைசாத்தி
மன்னார்வத் திருத்தொண்ட
ருடன்மகிழ்ந்து வைகினார்.
[294]
பரமர்திரு வரத்துறையைப்
பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார்
விரைமலர்த்தாள் தொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி
அடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தார் அமர்ந்ததிரு
வாவடுதண் டுறைஅணைந்தார்.
[295]
அங்கணைவார் தமையடியார்
எதிர்கொள்ளப் புக்கருளிப்
பொங்குதிருக் கோயிலினைப்
புடைவலங்கொண்டு உள்ளணைந்து
கங்கைவாழ் சடையாய்ஓர்
கண்ணிலேன் எனக்கவல்வார்
இங்கெனக்கா ருறவென்னுந்
திருப்பதிக மெடுத்திசைத்தார்.
[296]
திருப்பதிகங் கொடுபரவிப்
பணிந்துதிரு வருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி
தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி
யடியேன்மே லுற்றபிணி
வருத்தமெனை ஒழித்தருள
வேண்டுமென வணங்குவார்.
[297]
பரவியே பணிந்தவர்க்குப்
பரமர் திரு வருள்புரிவார்
விரவியஇப் பிணியடையத்
தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த
வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில்திருத் தொண்டர்தாங்
கைதொழுது புறப்பட்டார்.
[298]
மிக்கபுனல் தீர்த்தத்தின்
முன்னணைந்து வேதமெலாந்
தொக்கவடி வாயிருந்த
துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும்
புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர்
திருமேனி யாயினார்.
[299]
கண்டவர்கள் அதிசயிப்பக்
கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினால்
கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா
மேகம்எனுஞ் சொற்பதிகம்
எண்திசையு மறிந்துய்ய
ஏழிசையால் எடுத்திசைத்தார்.
[300]
பண்ணிறைந்த தமிழ்பாடிப்
பரமர்திரு வருள்மறவா
தெண்ணிறைந்த தொண்டருடன்
பணிந்தங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதிபிறவும்
உடையவர்தாள் வணங்கிப்போய்க்
கண்ணிறைந்த திருவாரூர்
முன்தோன்றக் காண்கின்றார்.
[301]
அன்றுதிரு நோக்கொன்றால்
ஆரக்கண் டின்புறார்
நின்றுநில மிசைவீழ்ந்து
நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி
வன்தொண்டர் திருவாரூர்
மயங்குமா லையிற்புகுந்து
துன்றுசடைத் தூவாயார்
தமைமுன்னந் தொழவணைந்தார்.
[302]
பொங்குதிருத் தொண்டருடன்
உள்ளணைந்து புக்கிறைஞ்சி
துங்கவிசைத் திருப்பதிகம்
தூவாயா என்றெடுத்தே
இங்கெமது துயர்களைந்து
கண்காணக் காட்டாயென்
றங்கணர்தம் முன்னின்று
பாடியருந் தமிழ்புனைந்தார்.
[303]
ஆறணியுஞ் சடையாரைத்
தொழுதுபுறம் போந்தங்கண்
வேறிருந்து திருத்தொண்டர்
விரவுவா ருடன்கூடி
ஏறுயர்த்தார் திருமூலட்
டானத்துள் இடைதெரிந்து
மாறில்திரு அத்தயா
மத்திறைஞ்ச வந்தணைந்தார்.
[304]
ஆதிதிரு அன்பரெதிர்
அணையஅவர் முகநோக்கிக்
கோதிலிசை யாற்குருகு
பாயவெனக் கோத்தெடுத்தே
ஏதிலார் போல்வினவி
ஏசறவால் திருப்பதிகம்
காதல்புரி கைக்கிளையாற்
பாடியே கலந்தணைவார்.
[305]
சீர்பெருகுந் திருத்தேவா
சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக்
கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில்
தனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத
லால்அவனி மேல்வீழ்ந்தார்.
[306]
வீழ்ந்தெழுந்து கைதொழுது
முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றால்
ஆராமல் மனமழிவார்
ஆழ்ந்ததுயர்க் கடலிடைநின்
றடியேனை யெடுத்தருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக்
கண்தாரும் எனத்தாழ்ந்தார்.
[307]
திருநாவ லூர்மன்னர்
திருவாரூர் வீற்றிருந்த
பெருமானைத் திருமூலட்
டானஞ்சேர் பிஞ்ஞகனைப்
பருகாஇன் னமுதத்தைக்
கண்களாற் பருகுதற்கு
மருவார்வத் துடன்மற்றைக்
கண்தாரீ ரெனவணங்கி.
[308]
மீளா வடிமை எனவெடுத்து [309]
பூத முதல்வர் புற்றிடங்கொண்
டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்கிரங்கிக்
கருணைத் திருநோக் களித்தருளிக்
சீத மலர்க்கண் கொடுத்தருளச்
செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து
வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.
[310]
விழுந்தும் எழுந்தும் பலமுறையால்
மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பி னாலாடிப்
பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி யிரண்டு கண்ணாலும்
அம்பொற் புற்றி னிடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின்
அருளைப் பருகித் திளைக்கின்றார்.
[311]
காலம் நிரம்பத் தொழுதேத்திக்
கனக மணிமா ளிகைக்கோயில்
ஞால முய்ய வரும்நம்பி
நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலும் அயனு முறையிருக்கும்
வாயில் கழியப் புறம்போந்து
சீல முடைய அன்பருடன்
தேவா சிரியன் மருங்கணைந்தார்.
[312]
நங்கை பரவை யார்தம்மை
நம்பி பிரிந்து போனதற்பின்
தங்கு மணிமா ளிகையின்கண்
தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல்கங்கு
லாகிக் கழியா நாளெல்லாம்
பொங்கு காதல் மீதூரப்
புலர்வார் சிலநாள் போனதற்பின்.
[313]
செம்மை நெறிசேர் திருநாவ
லூரர் ஒற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார்
தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம்அவர்பால்
விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினால்
தரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.
[314]
மென்பூஞ் சயனத் திடைத்துயிலும்
மேவார் விழித்தும் இனிதமரார்
பொன்பூந் தவிசின் மிசையினிரார்
நில்லார் செல்லார் புறம்பொழியார்
மன்பூ வாளி மழைகழியார்
மறவார் நினையார் என்செய்வார்
என்பூ டுருக்கும் புலவியோ
பிரிவோ இரண்டின் இடைப்பட்டார்.
[315]
ஆன கவலைக் கையறவால்
அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியார் கோயில் முன்குறுகப்
பானல் விழியார் மாளிகையில்
பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள்
புகுதப் பெறாது புறநின்றார்.
[316]
நின்ற நிலைமை அவர்கள் சிலர்
நிலவு திருவா ரூரர்எதிர்
சென்று மொழிவார் திருவொற்றி
யூரில் நிகழ்ந்த செய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங்
குள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமுஞ் சென்றெய்தப்
பெற்றி லோம்என் றிறைஞ்சினார்.
[317]
மற்ற மாற்றங் கேட்டழிந்த
மனத்த ராகி வன்தொண்டர்
உற்ற இதனுக் கினியென்னோ
செயலேன் றுயர்வார் உலகியல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக்
காதற் பரவை யார்கொண்ட
செற்ற நிலைமை யறிந்தவர்க்குத்
தீர்வு சொல்லச் செலவிட்டார்.
[318]
நம்பி யருளால் சென்றவரும்
நங்கை பரவை யார்தமது
பைம்பொன் மணிமா ளிகையணைந்து
பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும்
மின்னே ரிடையார் முன்னெய்தி
எம்பி ராட்டிக் கிதுதகுமோ
என்று பலவும் எடுத்துரைப்பார்.
[319]
பேத நிலைமை நீதியினாற்
பின்னும் பலவுஞ் சொன்னவர்முன்
மாத ரவரும் மறுத்துமனங்
கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவு மவர்திறத்தில்
இந்த மாற்றம் இயம்பில்உயிர்
போத லொழியா தெனவுரைத்தார்
அவரும் அஞ்சிப் புறம்போந்தார்.
[320]
போந்து புகுந்த படியெல்லாம்
பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும்
வெருவுற் றயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாந் துணைகாணார்
நிகழ்ந்த சிந்தா குலம்நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்தெழார்
கங்குல் இடையா மக்கடலுள்.
[321]
அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு
அத்த யாமம் பணிமடங்கிப்
பெருகு புவனஞ் சலிப்பின்றிப்
பேயும் உறங்கும் பிறங்கிருள்வாய்
முருகு விரியு மலர்க்கொன்றை
முடிமேல் அரவும் இளமதியுஞ்
செருகு மொருவர் தோழர்தனி
வருந்தி இருந்து சிந்திப்பார்.
[322]
முன்னை வினையால் இவ்வினைக்கு
மூல மானாள் பாலணைய
என்னை உடையாய் நினைந்தருளாய்
இந்த யாமத் தெழுந்தருளி
அன்ன மனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாமன்றிப்
பின்னை யில்லைச் செயவென்று
பெருமா னடிகள் தமைநினைந்தார்.
[323]
அடியார் இடுக்கண் தரியாதார்
ஆண்டு கொண்ட தோழர்குறை
முடியா திருக்க வல்லரே
முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும்
உடையார் தொண்டர் தாங்காணும்
படியால் அணைந்தார் நெடியோனுங்
காணா அடிகள் படிதோய.
[324]
தம்பி ரானார் எழுந்தருளத்
தாங்கற் கரிய மகிழ்ச்சியினால்
கம்பி யாநின் றவயவங்கள்
கலந்த புளகம் மயிர்முகிழ்ப்ப
நம்பி யாரூ ரரும்எதிரே
நளின மலர்க்கை தலைகுவிய
அம்பி காவல் லவர்செய்ய
அடித்தா மரையின் கீழ்வீழ்ந்தார்.
[325]
விழுந்து பரவி மிக்கபெரு
விருப்பி னோடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமைநோக்கி
யென்நீ யுற்ற தென்றருளத்
தொழுந்தங் குறையை விளம்புவார்
யானே தொடங்குந் துரிசிடைப்பட்
டழுந்து மென்னை யின்னமெடுத்
தாள வேண்டு முமக்கென்று.
[326]
அடியே னங்குத் திருவொற்றி
யூரில் நீரே யருள்செய்ய
வடிவே லொண்கண் சங்கிலியை
மணஞ்செய் தணைந்த திறமெல்லாம்
கொடியே ரிடையாள் பரவைதா
னறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவே னென்று துணிந்திருந்தா
ளென்னான் செய்வ தெனமொழிந்து.
[327]
நாய னீரே நான்உமக்கிங்
கடியே னாகில் நீர்எனக்குத்
தாயி னல்ல தோழருமாந்
தம்பி ரானா ரேயாகில்
ஆய வறிவும் இழந்தழிவேன்
அயர்வு நோக்கி அவ்வளவும்
போயிவ் விரவே பரவையுறு
புலவி தீர்த்துத் தாருமென.
[328]
அன்பு வேண்டும் தம்பெருமான்
அடியார் வேண்டிற் றேவேண்டி
முன்பு நின்று விண்ணப்பம்
செய்த நம்பி முகம்நோக்கித்
துன்பம் ஒழிநீ யாம்உனக்கோர்
தூத னாகி இப்பொழுதே
பொன்செய் மணிப்பூண் பரவைபால்
போகின் றோம்என் றருள்செய்தார்.
[329]
எல்லை யில்லாக் களிப்பின ராய்
இறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து
வல்ல பரிசெல் லாந்துதித்து
வாழ்ந்து நின்ற வன்தொண்டர்
முல்லை முகைவெண் ணகைப்பரவை
முகில்சேர் மாடத் திடைச்செல்ல
நில்லா தீண்ட எழுந்தருளி
நீக்கும் புலவி யெனத்தொழுதார்.
[330]
அண்டர் வாழக் கருணையினால்
ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்
றொருவர் இருவர்க் கறிவரியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல்
பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தம் துயர்நீக்கத்
தூத னாராய் எழுந்தருள.
[331]
தேவா சிரியன் முறையிருக்குந்
தேவ ரெல்லாஞ் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார்
போத ஒழிந்தார் புறத்தொழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில்
உள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகிகளின்
முதலா னார்கள் முன்போக.
[332]
அருகு பெரிய தேவருடன்
அணைந்து வரும்அவ் விருடிகளும்
மருவு நண்பின் நிதிக்கோனும்
முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்தத்
தெருவும் விசும்பும் நிறைந்துவிரைச்
செழும்பூ மாரி பொழிந்தலையப்
பொருவி லன்பர் விடுந்தூதர்
புனித வீதி யினிற்போத.
[333]
மாலும் அயனுங் காணாதார்
மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சும்
காலம் இதுவென் றங்கவரை
அழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தான்
அடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார்
திருமா ளிகையை நேர்நோக்கி.
[334]
இறைவர் விரைவில் எழுந்தருள
எய்து மவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில்
அரவு தொடர அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் சுரும்பு தொடரவுடன்
மறைகள் தொடர வன்தொண்டர்
மனமுந் தொடர வரும்பொழுது.
[335]
பெருவீ ரையினும் மிகமுழங்கிப்
பிறங்கு மதகுஞ் சரம்உரித்து
மரவீ ருரிவை புனைந்தவர்தம்
மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திருவீ தியினில் அழகரவர்
மகிழுஞ் செல்வத் திருவாரூர்
ஒருவீ தியிலே சிவலோகம்
முழுதுங் காண வுளதாமால்.

[336]
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தூதர் பரவையார்
கோல மணிமா ளிகைவாயில்
குறுகு வார்முன் கூடத்தம்
பால்அங் கணைந்தார் புறநிற்பப்
பண்டே தம்மை யர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவர்
ஆகித் தனியே சென்றணைந்தார்.
[337]
சென்று மணிவா யிற்கதவம்
செறிய அடைத்த அதன்முன்பு
நின்று பாவாய் திறவாய்என்று
அழைப்ப நெறிமென் குழலாரும்
ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வார்
உடைய பெருமான் பூசனைசெய்
துன்றும் புரிநூல் மணிமார்பர்
போலும் அழைத்தார் எனத்துணிந்து.
[338]
பாதி மதிவாழ் முடியாரைப்
பயில்பூ சனையின் பணிபுரிவார்
பாதி யிரவில் இங்கணைந்த
தென்னோ என்று பயமெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற்
பரம ராவ தறியாதே
பாதி மதிவாள் நுதலாரும்
பதைத்து வந்து கடைதிறந்தார்.
[339]
மன்னும் உரிமை வன்தொண்டர்
வாயில் தூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி
முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங்
கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீர்
எய்த வேண்டிற் றென்என்றார்.
[340]
கங்கைநீர் கரந்த வேணி
கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கைநீ மறாது செய்யின்
நான்வந்த துரைப்ப தென்ன
அங்கயல் விழியி னாரும்
அதனைநீ ரருளிச் செய்தால்
இங்கெனக் கிசையு மாகில்
இசையலாம் என்று சொல்லி.
[341]
என்னினைந் தணைந்த தென்பால்
இன்னதென் றருளிச் செய்தால்
பின்னைய தியலு மாகில்
ஆம்எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி
வரஇங்கு வேண்டு மென்ன
நன்னுத லாருஞ் சால
நன்றுநம் பெருமை யென்பார்.
[342]
பங்குனித் திருநா ளுக்குப்
பண்டுபோல் வருவா ராகி
இங்கெனைப் பிரிந்து போகி
ஒற்றியூர் எய்தி யங்கே
சங்கிலித் தொடக்குண் டாருக்
கிங்கொரு சார்வுண் டோநீர்
கங்குலின் வந்து சொன்ன
காரியம் அழகி தென்றார்.
[343]
நாதரும் அதனைக் கேட்டு
நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளா
தெய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற் கன்றோ
நுன்னையான் வேண்டிக் கொண்ட
தாதலின் மறுத்தல் செய்ய
அடாதென அருளிச் செய்தார்.
[344]
அருமறை முனிவ ரான
ஐயரைத் தைய லார்தாம்
கருமம்ஈ தாக நீர்
கடைத்தலை வருதல் நுந்தம்
பெருமைக்குத் தகுவ தன்றால்
ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற் கிசையேன் நீரும்
போம்என மறுத்துச் சொன்னார்.
[345]
நம்பர்தாம் அதனைக் கேட்டு
நகையும்உட் கொண்டு மெய்ம்மைத்
தம்பரி சறியக் காட்டார்
தனிப்பெருந் தோழ னார்தம்
வெம்புறு வேட்கை காணும்
திருவிளை யாட்டின் மேவி
வம்பலர் குழலி னார்தாம்
மறுத்ததே கொண்டு மீண்டார்.
[346]
தூதரைப் போக விட்டு
வரவுபார்த் திருந்த தொண்டர்
நாதரைஅறிவி லாதேன்
நன்னுதல் புலவி நீக்கப்
போதரத் தொழுதேன் என்று
புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு
வருவதே கருத்துட் கொள்வார்.
[347]
போயவள் மனையில் நண்ணும்
புண்ணியர் என்செய் தாரோ
நாயனார் தம்மைக் கண்டால்
நன்னுதல் மறுக்கு மோதான்
ஆயஎன் அயர்வு தன்னை
அறிந்தெழுந் தருளி னார்தாம்
சேயிழை துனிதீர்த் தன்றி
மீள்வதும் செய்யார் என்று.
[348]
வழியெதிர் கொள்ளச் செல்வர்
வரவுகா ணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர்
அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்த்தா ரென்று
மீளவு மெழுவர் மாரன் பொழிமலர் மாரி வீழ
ஒதுங்குவார் புன்க ணுற்றார்.
[349]
பரவையார் தம்பால் நம்பி
தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே
அறியுமாறு அணையும் போதில்
இரவுதான் பகலாய்த் தோன்ற
எதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல
ஓங்கிய களிப்பிற் சென்றார்.
[350]
சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
உறுதிசெய் தணைந்தா ரென்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
தீர்த்தெழுந் தருளி என்றார்.
[351]
அம்மொழி விளம்பு நம்பிக்
கையர்தா மருளிச் செய்வார்
நம்மைநீ சொல்ல நாம்போய்ப்
பரவைதன் இல்லம் நண்ணிக்
கொம்மைவெம் முலையி னாட்குன்
திறமெலாங் கூறக் கொள்ளாள்
வெம்மைதான் சொல்லி நாமே
வேண்டவும் மறுத்தா ளென்றார்.
[352]
அண்ணலார் அருளிச் செய்யக்
கேட்டஆ ரூரர் தாமும்
துண்ணென நடுக்க முற்றே
தொழுதுநீ ரருளிச் செய்த
வண்ணமும் அடியா ளான
பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணஆர் அடிமைக் கென்ப
தின்றறி வித்தீ ரென்று.
[353]
வானவர் உய்ய வேண்டி
மறிகடல் நஞ்சை யுண்டீர்
தானவர் புரங்கள் வேவ
மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க் காகக்
காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை யுமக்கின் றானால்
என்செய்வீர் போதா தென்றார்.
[354]
ஆவதே செய்தீர் இன்றென்
அடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்று
வலியஆட் கொண்ட பற்றென்
நோவும்என் னழிவுங் கண்டீர்
நுடங்கிடை யவள்பால் இன்று
மேவுதல் செய்யீ ராகில்
விடுமுயிர் என்று வீழ்ந்தார்.
[355]
தம்பிரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி
நாம்இன்னம் அவள்பாற் போய்அக்
கொம்பினை இப்போ தேநீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங் கென்றார்
வினையெலாம் விளைக்க வல்லார்.
[356]
மயங்கிய நண்பர் உய்ய
வாக்கெனும் மதுர வாய்மை
நயங்கிள ரமுதம் நல்க
நாவலூர் மன்னர் தாமும்
உயங்கிய கலக்கம் நீக்கி
யும்மடித் தொழும்ப னேனைப்
பயங்கெடுத்து இவ்வா றன்றோ
பணிகொள்வ தென்று போற்ற.
[357]
அன்பர்மேற் கருணை கூர
ஆண்டவர் மீண்டுஞ் செல்லப்
பின்புசென்றிறைஞ்சி நம்பி
பேதுற வோடு மீண்டார்
முன்புடன் போதா தாரும்
முறைமையிற் சேவித் தேகப்
பொன்புரி சடையார் மாதர்
புனிதமா ளிகையிற் சென்றார்.
[358]
மதிநுதற் பரவை யார்தாம்
மறையவர் போன பின்பு
முதிர்மறை முனியாய் வந்தார்
அருளுடை முதல்வ ராகும்
.அதிசயம் பலவும் தோன்ற
அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பி ரான்முன்
என்செய மறுத்தேன் என்பார்.
[359]
கண்துயில் எய்தார் வெய்ய
கையற வெய்தி ஈங்குஇன்று
அண்டர்தம் பிரானார் தோழர்க்
காகஅர்ச் சிப்பார் கோலம்
கொண்டணைந் தவரை யானுட்
கொண்டிலேன் பாவி யேன்என்
றொண்சுடர் வாயி லேபார்த்
துழையரோ டழியும் போதில்.
[360]
வெறியுறு கொன்றை வேணி
விமலருந் தாமாந் தன்மை
அறிவுறு கோலத் தோடும்
மளவில்பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோகர்
முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில்சீர்ப் பரவை யார்தம்
மாளிகை புகுந்தார் வந்து.
[361]
பாரிடத் தலைவர் முன்னாம்
பல்கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர்
இயக்கர்கள் நிறைத லாலே
பேரரு ளாள ரெய்தப்
பெற்றமா ளிகைதான் தென்பால்
சீர்வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்ற தன்றே.
[362]
ஐயர்அங் கணைந்த போதில்
அகிலலோ கத்துள் ளாரும்
எய்தியே செறிந்து சூழ
எதிர்கொண்ட பரவை யார்தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு
மிக்கெழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதா ளிணைமுன் சேர
விரைவினாற் சென்று வீழ்ந்தார்.
[363]
அரிஅயற் கரியார் தாமும்
ஆயிழை யாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ
மீளவும் உன்பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம்
முன்புபோல் மறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான்
வரப்பெற வேண்டும் என்றார்.
[364]
பெருந்தடங் கண்ணி னாரும்
பிரான்முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய வுள்ளத் தோடு
மலர்க்கரங் குழல்மேற் கொண்டே
அருந்திரு மறையோ ராகி
அணைந்தீர்முன் னடியேன் செய்த
இருந்தவப் பயனாம் என்ன
எய்திய நீரோ என்பார்.
[365]
துளிவளர் கண்ணீர் வாரத்
தொழுதுவிண் ணப்பஞ் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தஓர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீரு மானால்
என்செய்கேன் இசையா தென்றார்.
[366]
நங்கைநின் தன்மைக் கேற்கும்
நன்மையே மொழிந்தா யென்று
மங்கையோர் பாகம் வைத்த
வள்ளலார் விரைந்து போகத்
திங்கள் வாணுதலி னாருஞ்
சென்றுபின் னிறைஞ்சி மீண்டார்
எங்களை யாளும் நம்பி
தூதர்மீண் டேகு கின்றார்.
[367]
ஆதியும் மேலும் மால்அயன்
நாடற் கருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை
யாளுந் தொழில்கண்டே
வீதியில் ஆடிப் பாடி
மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியில் நீடும் பல்கண
நாதர் புகழ்வீரர்.
[368]
அன்னவர் முன்னும் பின்னும்
மருங்கும் அணைவெய்த
மின்னிடை யார்பால் அன்பரை
உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடுங் கங்கை
ததும்பத் திருவாரூர்
மன்னவ னார்அம் மறையவ
னார்பால் வந்துற்றார்.
[369]
அன்பரும் என்பால் ஆவி
யளிக்கும் படிபோனார்
என்செய்து மீள்வார் இன்னமும்
என்றே யிடர்கூரப்
பொன்புரி முந்நூல் மார்பினர்
செல்லப் பொலிவீதி
முன்புற நேருங் கண்ணிணை
தானும் முகிழாரால்.
[370]
அந்நிலை மைக்கண் மன்மதன்
வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு
மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல
குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்தென் சொல்லுவ
ரென்றே தெளியாதார்.
[371]
எம்பெரு மானீர் என்னுயிர்
காவா திடர்செய்யும்
கொம்பனை யாள்பால் என்கொடு
வந்தீர் குறையென்னத்
தம்பெரு மானும் தாழ்குழல்
[372]
நந்தி பிரானார் வந்தருள்
செய்ய நலமெய்தும்
சிந்தையு ளார்வங் கூர்களி
யெய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் தீரருள்
செய்யும் படிசெய்தீர்
எந்தைபி ரானே என்னினி
யென்பால் இடரென்றார்.
[373]
என்றடி வீழும் நண்பர்தம்
அன்புக் கெளிவந்தார்
சென்றணை நீஅச் சேயிழை
பாலென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி
விடங்கப் பெருமாள் தம்
பொன்றிகழ் வாயிற் கோயில்
புகுந்தார் புவிவாழ.
[374]
தம்பிரா னார்பின் சென்று
[375]
முன்துயில் உணர்ந்து சூழ்ந்த
பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின்திகழ் பொலம்பூ மாரி
விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல்செய் மதுர சீத
சீகரங் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர்கொண் டெய்துஞ்
சேவகம் முன்பு காட்ட.
[376]
மாலைதண் கலவைச் சேறு
மான்மதச் சாந்து பொங்கும்
கோலநற் பசுங்கர்ப் பூரம்
குங்குமம் முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச்
சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும்
பரிசனம் முன்பு செல்ல.
[377]
இவ்வகை இவர்வந் தெய்த
எய்திய விருப்பி னோடும்
மைவளர் நெடுங்கண் ணாரும்
மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கா ரத்துச்
சிறப்பணி பலவுஞ் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம்
நிறைகுடம் நிரைத்துப் பின்னும்.
[378]
பூமலி நறும்பொன் தாமம்
புனைமணிக் கோவை நாற்றிக்
காமர்பொற் சுண்ணம் வீசிக்
கமழ்நறுஞ் சாந்து நீவித்
தூமலர் வீதி சூழ்ந்த
தோகையர் வாழ்த்தத் தாமும்
மாமணி வாயில் முன்பு
வந்தெதி ரேற்று நின்றார்.
[379]
வண்டுலாங் குழலார் முன்பு
வன்தொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளங் காதல்
வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநாண் அச்சங் கூர
வணங்கஅக் குரிசி லாரும்
தண்டளிர்ச் செங்கை பற்றிக்
கொண்டுமா ளிகையுள் சார்ந்தார்.
[380]
இருவருந் தம்பி ரானார்
தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத்
திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய வின்ப வெள்ளத்
தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு
நிலைமையி லுயிரொன் றானார்.
[381]
ஆரணக் கமலக் கோயின்
மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை
.
[382]
நம்பியா ரூரர் நெஞ்சில்
நடுக்கம்ஒன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது
தையல்பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை
ஏயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினார் அதிச யித்தார்
வெருவினார் விளம்ப லுற்றார்.
[383]
நாயனை அடியான் ஏவும்
காரியம் நன்று சாலம்
ஏயுமென் றிதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க வொண்ணாப்
பிழையினைச் செவியால் கேட்ப
தாயின பின்னும் மாயா
திருந்ததென் னாவி யென்பார்.
[384]
காரிகை தன்பால் செல்லும்
காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய
பாததா மரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது
வருவ தாகி
ஓரிர வெல்லாம் தூதுக்
குழல்வராம் ஒருவ ரென்று.
[385]
நம்பர்தாம் அடியார் ஆற்றாராகியே
நண்ணி னாரேல்
உம்பரார் கோனும் மாலும்அயனுநேர்
உணர வொண்ணா
எம்பிரா னிசைந்தார் ஏவப்
பெறுவதே இதனுக் குள்ளம்
கம்பியா தவளை யான்முன்
காணுநாள் எந்நா ளென்று.
[386]
அரிவைகா ரணத்தி னாலே
ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக
ஏவியங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில்
வருவதென் னாங்கொல் என்று
விரவிய செற்றம் பற்றி
விள்ளும்உள் ளத்த ராகி.
[387]
ஈறிலாப் புகழின் ஓங்கும்
ஏயர்கோ னார்தாம் எண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப்
பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு
வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக்
கதனைவிண் ணப்பஞ் செய்து.
[388]
நாள்தொறும் பணிந்து போற்ற
நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்முள்
இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர்
குரிசிலார் தம்பால் மேனி
வாடுறு சூலை தன்னை
அருளினார் வருந்து மாற்றால்.
[389]
ஏதமில் பெருமைச் செய்கை
ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை
அனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய
மிகஅதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள்
பற்றியே போற்று கின்றார்.
[390]
சிந்தையால் வாக்கால் அன்பர்
திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளும் ஏயர்
காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்துஞ் சூலை
வன்தொண்டன் தீர்க்கி லன்றி
முந்துற வொழியா தென்று
மொழிந்தருள் செய்யக் கேட்டு.
[391]
எம்பிரான் எந்தை தந்தை
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று
வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை
யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென ஆண்டு கொண்டான்
ஒருவனோ தீர்ப்பான் வந்து.
[392]
மற்றவன் தீர்க்கில் தீரா
தொழிந்தெனை வருத்தல் நன்றால்
பெற்றம்மே லுயர்த்தீர் செய்யும்
பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற் கேயாம்
[393]
வன்தொண்டர் தம்பால் சென்று
வள்ளலா ரருளிச் செய்வார்
இன்றுநம் ஏவ லாலே
ஏயர்கோ னுற்ற சூலை
சென்றுநீ தீர்ப்பா யாகென்
றருள்செயச் சிந்தை யோடு
நன்றுமெய்ம் மகிழ்ந்து போற்றி
வணங்கினார் நாவ லூரர்.
[394]
அண்ணலார் அருளிச் செய்து
நீங்கஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பி ரானார்
ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவுங்
காதலாற் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க
வருந்திறஞ் செப்பி விட்டார்.
[395]
நாதர்தம் அருளால் நண்ணும்
சூலையும் அவர்பாற் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும்
வன்தொண்டர் வரவு கேட்டுத்
தூதனாய் எம்பி ரானை
ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதமிங் கெய்த வெய்தில்
யான்செய்வது என்னாம் என்பார்.
[396]
மற்றவன் இங்கு வந்து
தீர்ப்பதன் முன்நான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப்
பாதகச் சூலை தன்னை
உற்றஇவ் வயிற்றி னோடும்
கிழிப்பன்என் றுடைவாள் தன்னால்
செற்றிட வுயிரி னோடும்
சூலையுந் தீர்ந்த தன்றே.
[397]
கருதரும் பெருமை நீர்மைக்
கலிக்காமர் தேவி யாரும்
பொருவருங் கணவ ரோடு
போவது புரியுங் காலை
மருவிஇங் கணைந்தார் நம்பி
என்றுமுன் வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யா
தொழிகவென் றுரைத்துப் பின்னும்.
[398]
கணவர்தஞ் செய்கை தன்னைக்
கரந்துகா வலரை நம்பி
அணைவுறும் பொழுது சால
அலங்கரித் தெதிர்போம் என்னப்
புணர்நிலை வாயில் தீபம்
பூரண கும்பம் வைத்துத்
துணர்மலர் மாலை தூக்கித்
தொழுதெதிர் கொள்ளச் சென்றார்.
[399]
செம்மைசேர் சிந்தை மாந்தர்
சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி
நகைமுகம் அவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடும்
மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது
முகம்மலர்ந் திருந்த போது.
[400]
பான்மைஅர்ச் சனைக ளெல்லாம்
பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை
நம்பியா ரூரர் கொண்டிங்
கியான்மிக வருந்து கின்றேன்
ஏயர்கோ னார்தாம் உற்ற
ஊனவெஞ் சூலை நீக்கி
யுடனிருப் பதனுக் கென்றார்.
[401]
மாதர்தம் ஏவ லாலே
மனைத்தொழில் மாக்கள் மற்றிங்
கேதமொன் றில்லை யுள்ளே
பள்ளிகொள் கின்றார் என்னத்
தீதணை வில்லை யேனும்
என்மனந் தெருளா தின்னம்
ஆதலால் அவரைக் காண
வேண்டுமென் றருளிச் செய்தார்.
[402]
வன்தொண்டர் பின்னுங் கூற
மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத்
தொடர்குடர் சொரிந்துள் ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக்
கண்டபின் புகுந்த வாறு
நன்றென மொழிந்து நானும்
நண்ணுவேன் இவர்முன் பென்பார்.
[403]
கோளுறு மனத்த ராகிக்
குற்றுடை வாளைப் பற்ற
ஆளுடைத் தம்பி ரானார்
அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே யாகிக் கெட்டேன்
எனவிரைந் தெழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள
வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
[404]
மற்றவர் வணங்கி வீழ
வாளினை மாற்றி ஏயர்
கொற்றவ னாரும் நம்பி
குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றைநாள் நிகழ்ந்த இந்த
அதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி
பொழிந்தனர் புவனம் போற்ற.
[405]
இருவரும் எழுந்து புல்லி
இடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத்
திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று
வன்தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த
ணாளன்என் றெடுத்துப் பாடி.
[406]
சிலபகல் கழிந்த பின்பு
திருமுனைப் பாடி நாடர்
மலர்புகழ்த் திருவா ரூரின்
மகிழ்ந்துடன் வந்த ஏயர்
குலமுதற் றலைவ னாருங்
கூடவே குளிர்பூங் கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்
டுறைந்தனர் நிறைந்த அன்பால்.
[407]
அங்கினி தமர்ந்து நம்பி
அருளினான் மீண்டு போந்து
பொங்கிய திருவின் மிக்க
தம்பதி புகுந்து பொற்பில்
தங்குநாள் ஏயர் கோனார்
தமக்கேற்ற தொண்டு செய்தே
செங்கண்மால் விடையார் பாதம்
சேர்ந்தனர் சிறப்பி னோடும்.
[408]
நள்ளிருள் நாய னாரைத்
தூதுவிட் டவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார்
மலரடி வணங்கிப் புக்கேன்
உள்ளுணர் வான ஞானம்
முதலிய வொருநான் குண்மை
தெள்ளுதீந் தமிழாற் கூறுந்
திருமூலர் பெருமை செப்ப.
[409]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
12.300   திரு மூல நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
[1]
மற்றவர்தாம் அணிமாதி
வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை
மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினால்
உடன்சிலநாள் உறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை
நண்ணுதற்கு வழிக்கொண்டார்.
[2]
மன்னுதிருக் கேதாரம்
வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே
பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனார்
ஏற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீர்
அருங்கரையின் மருங்கணைந்தார்.
[3]
கங்கைநீள் துறையாடிக்
கருத்துறைநீள் கடலேற்றும்
அங்கணர்தாம் மகிழ்ந்தருளும்
அவிமுத்தம் பணிந்தேத்தி
மங்குல்வளர் வரைவிந்த
மன்னுபருப் பதம்இறைஞ்சித்
திங்களணி சடையர்திருக்
காளத்தி மலைசேர்ந்தார்.
[4]
நீடுதிருக் காளத்தி
நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான
ஆலவனந் தொழுதேத்தித்
தேடும்இரு வர்க்கரியார்
திருஏகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி
வளநகரின் வைகினார்.
[5]
நற்பதியங் கமர்யோக
முனிவர்களை நயந்துபோய்க்
கற்புரிசைத் திருவதிகை
கலந்திறைஞ்சிக் கறைக்கண்டர்
அற்புதக்கூத் தாடுகின்ற
அம்பலஞ்சூழ் திருவீதிப்
பொற்பதியாம் பெரும்பற்றப்
புலியூரில் வந்தணைந்தார்.
[6]
எவ்வுலகும் உய்யவெடுத்
தாடியசே வடியாரைச்
செவ்வியஅன் புறவணங்கிச்
சிந்தைகளி வரத்திளைத்து
வவ்வியமெய் யுணர்வின்கண்
வருமானந் தக்கூத்தை
அவ்வியல்பில் கும்பிட்டங்
காராமை அமர்ந்திருந்தார்.
[7]
தடநிலைமா ளிகைப்புலியூர்
தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல்வருவா
ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த தெனக்கருதி
மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத
காவிரியின் கரையணைந்தார்.
[8]
காவிரிநீர்ப் பெருந் தீர்த்தங்
கலந்தாடிக் கடந்தேறி
ஆவின்அருங் கன்றுறையும்
ஆவடுதண் டுறையணைந்து
சேவில்வரும் பசுபதியார்
செழுங்கோயில் வலம்வந்து
மேவுபெருங் காதலினால்
பணிந்தங்கு விருப்புறுவார்.
[9]
அந்நிலைமைத் தானத்தை
அகலாத தொருகருத்து
முன்னியெழுங் குறிப்பினால்
மூளும் ஆதரவெய்தப்
பின்னுமகன் றேகுவார்
பேணவருங் கோக்குலங்கள்
பொன்னிநதிக் கரைப்புறவிற்
புலம்புவன எதிர்கண்டார்.
[10]
அந்தணர்தஞ் சாத்தனூர்
ஆமேய்ப்பார் குடித்தோன்றி
முந்தைமுறை நிரைமேய்ப்பான்
மூலனெனும் பெயருடையான்
வந்துதனி மேய்க்கின்றான்
வினைமாள வாழ்நாளை
வெந்தொழில்வன் கூற்றுண்ண
வீடிநிலத் திடைவீழ்ந்தான்.
[11]
மற்றவன்றன் உடம்பினைஅக்
கோக்குலங்கள் வந்தணைந்து
சுற்றிமிகக் கதறுவன
சுழல்வனமோப் பனவாக
நற்றவயோ கிகள்காணா
நம்பரரு ளாலேயா
உற்றதுய ரிவைநீங்க
ஒழிப்பன்என வுணர்கின்றார்.
[12]
இவன்உயிர்பெற் றெழில்அன்றி
ஆக்களிடர் நீங்காவென்று
அவனுடலில் தம்முயிரை
அடைவிக்க அருள்புரியும்
தவமுனிவர் தம்முடம்புக்
கரண்செய்து தாம்முயன்ற
பவனவழி அவனுடலில்
தம்முயிரைப் பாய்த்தினார்.
[13]
பாய்த்தியபின் திருமூல
ராய்எழலும் பசுக்களெல்லாம்
நாத்தழும்ப நக்கிமோந்
தணைந்துகனைப் பொடுநயந்து
வாய்த்தெழுந்த களிப்பினால்
வாலெடுத்துத் துள்ளிப்பின்
நீத்ததுய ரினவாகி
நிரந்துபோய் மேய்ந்தனவால்.
[14]
ஆவினிரை மகிழ்வுறக்கண்
டளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய்விடத்துப்
பின்சென்று மேய்ந்தவைதாம்
காவிரிமுன் துறைத்தண்ணீர்
கலந்துண்டு கரையேறப்
பூவிரிதண் புறவின்நிழல்
இனிதாகப் புறங்காத்தார்.
[15]
வெய்யசுடர்க் கதிரவனும்
மேல்பாலை மலையணையச்
சைவநெறி மெய்யுணர்ந்தோர்
ஆன்இனங்கள் தாமேமுன்
பையநடப் பனகன்றை
நினைந்துபடர் வனவாகி
வையநிகழ் சாத்தனூர்
வந்தெய்தப் பின்போனார்.
[16]
போனவர்தாம் பசுக்களெலாம்
மனைதோறும் புகநின்றார்
மானமுடை மனையாளும்
வைகியபின் தாழ்த்தார்என்று
ஆனபயத் துடன்சென்றே
அவர்நின்ற வழிகண்டாள்
ஈனம்இவர்க் கடுத்ததென
மெய்தீண்ட அதற்கிசையார்.
[17]
அங்கவளும் மக்களுடன்
அருஞ்சுற்றம் இல்லாதாள்
தங்கிவெரு வுறமயங்கி
என்செய்தீர் எனத்தளர
இங்குனக்கென் னுடன்அணைவொன்
றில்லையென எதிர்மறுத்துப்
பொங்குதவத் தோர்ஆங்கோர்
பொதுமடத்தின் உட்புக்கார்.
[18]
இல்லாளன் இயல்புவே
றானமைகண் டிரவெல்லாம்
சொல்லாடா திருந்தவர்பால்
அணையாது துயிலாதாள்
பல்லார்முன் பிற்றைநாள்
இவர்க்கடுத்த பரிசுரைப்ப
நல்லார்கள் அவர்திறத்து
நாடியே நயந்துரைப்பார்.
[19]
பித்துற்ற மயல்அன்று
பிறிதொருசார் புளதன்று
சித்தவிகற் பங்களைந்து
தெளிந்தசிவ யோகத்தில்
வைத்தகருத் தினராகி
வரம்பில்பெரு மையிலிருந்தார்
இத்தகைமை யளப்பரிதால்
யாராலும் எனவுரைப்பார்.
[20]
பற்றறுத்த வுபதேசப்
பரமர்பதம் பெற்றார்போல்
முற்றுமுணர்ந் தனராகும்
முன்னைநிலை மையில்உங்கள்
சுற்றவியல் பினுக்கெய்தார்
என்றுரைப்பத் துயரெய்தி
மற்றவளும் மையலுற
மருங்குள்ளார் கொண்டகன்றார்.
[21]
இந்தநிலை மையிலிருந்தார்
எழுந்திருந்தங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று
வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடல் பொறைகாணார்
முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெயல்
ஆராய்ந்து தெளிகின்றார்.
[22]
தண்ணிலவார் சடையார்தாம்
தந்தஆ கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர்
வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணியஅத் திருவருளால்
அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையார்
ஈசர்அரு ளெனவுணர்ந்தார்.
[23]
சுற்றியஅக் குலத்துள்ளார்
தொடர்ந்தார்க்குத் தொடர்வின்மை
முற்றவே மொழிந்தருள
அவர்மீண்டு போனதற்பின்
பெற்றம்மீ துயர்த்தவர்தாள்
சிந்தித்துப் பெருகார்வச்
செற்றமுதல் கடிந்தவர்தாம்
ஆவடுதண் டுறைசேர்ந்தார்.
[24]
ஆவடுதண் டுறையணைந்தங்
கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபால்
மிக்குயர்ந்த அரசின்கீழ்த்
தேவிருக்கை அமர்ந்தருளிச்
சிவயோகந் தலைநின்று
பூவலரும் இதயத்துப்
பொருளோடும் புணர்ந்திருந்தார்.
[25]
ஊனுடம்பில் பிறவிவிடம்
தீர்ந்துலகத் தோருய்ய
ஞானமுதல் நான்குமலர்
நல்திருமந் திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்
கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயி றணிந்தாரை
ஒன்றவன்தா னெனஎடுத்து.
[26]
முன்னியஅப் பொருள்மாலைத்
தமிழ்மூவா யிரஞ்சாத்தி
மன்னியமூ வாயிரத்தாண்
டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னிமதி யணிந்தார்தந்
திருவருளால் திருக்கயிலை
தன்னிலணைந் தொருகாலும்
பிரியாமைத் தாளடைந்தார்.
[27]
நலஞ்சிறந்த ஞானயோ
கக்கிரியா சரியையெலாம்
மலர்ந்தமொழித் திருமூல
தேவர்மலர்க் கழல்வணங்கி
அலர்ந்தபுகழ்த் திருவாரூர்
அமணர்கலக் கங்கண்ட
தலங்குலவு விறல்தண்டி
யடிகள்திறஞ் சாற்றுவாம்.
[28]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
12.310   தண்டியடிகள் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தண்டி யடிகள் திருவாரூர்ப்
பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட
ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தின் அகனோக்கும்
குறிப்பே யன்றிப் புறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார்போற்
பிறந்த பொழுதே கண்காணார்.
[1]
காணுங் கண்ணால் காண்பதுமெய்த்
தொண்டே யான கருத்துடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப்
பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பி னால்பரவிப்
போற்றும் நிலைமை புரிந்தமரர்
சேணு மறிய வரியதிருத்
தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.
[2]
பூவார் சடிலத் திருமுடியார்
மகிழ்ந்த தெய்வப் பூங்கோயில்
தேவா சிரியன் முன்னிறைஞ்சி
வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி
நாவால் இன்ப முறுங்காதல்
நமச்சி வாய நற்பதமே
ஓவா அன்பில் எடுத்தோதி
ஒருநாள் போல வருநாளில்.
[3]
செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்
கெங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தாற் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான்இக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.
[4]
குழிவா யதனில் குறிநட்டுக்
கட்டுங் கயிறு குளக்கரையில்
இழிவாய்ப் புறத்து நடுதறியோடு
இசையக் கட்டி இடைதடவி
வழியால் வந்து மண்கல்லி
எடுத்து மறித்துந் தடவிப்போய்
ஒழியா முயற்சி யால்உய்த்தார்
ஓதும் எழுத்தஞ் சுடன்உய்ப்பார்.
[5]
நண்ணி நாளும் நற்றொண்டர்
நயந்த விருப்பால் மிகப்பெருகி
அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக்
கண்ட அமணர் பொறாராகி
எண்ணித் தண்டி யடிகள்பால்
எய்தி முன்னின் றியம்புவார்
மண்ணைக் கல்லிற் பிராணிபடும்
வருத்த வேண்டா வென்றுரைத்தார்.
[6]
மாசு சேர்ந்த முடையுடலார்
மாற்றங் கேட்டு மறுமாற்றம்
தேசு பெருகுந் திருத்தொண்டர்
செப்பு கின்றார் திருவிலிகாள்
பூசு நீறு சாந்தமெனப்
புனைந்த பிரானுக் கானபணி
ஆசி லாநல் லறமாவது
அறிய வருமோ உமக்கென்றார்.
[7]
அந்தம் இல்லா அறிவுடையார்
உரைப்பக் கேட்ட அறிவில்லார்
சிந்தித் திந்த அறங்கேளாய்
செவியும் இழந்தா யோஎன்ன
மந்த வுணர்வும் விழிக்குருடும்
கேளாச் செவியும் மற்றுமக்கே
இந்த வுலகத் துள்ளனஎன்
றன்பர் பின்னும் இயம்புவார்.
[8]
வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்
விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறு காணேன்யான்
அதுநீர் அறிதற் காரென்பார்
நில்லா நிலையீர் உணர்வின்றி
நுங்கண் குருடாய் என்கண்உல
கெல்லாங் காண யான்கண்டால்
என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.
[9]
அருகர் அதுகேட் டுன்தெய்வத்
தருளால் கண்நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வூ ரினில்நாங்கள்
பின்னை யிருக்கி லோமென்று
கருகு முருட்டுக் கைகளால்
கொட்டை வாங்கிக் கருத்தின்வழித்
தருகைக் கயிறுந் தறியுமுடன்
பறித்தார் தங்கள் தலைபறித்தார்.
[10]
வெய்ய தொழிலார் செய்கையின்மேல்
வெகுண்ட தண்டி யடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில்
மணிவா யிலின்முன் வந்திறைஞ்சி
ஐய னேஇன்று அமணர்கள்தாம்
என்னை யவமா னஞ்செய்ய
நைவ தானேன் இதுதீர
நல்கு மடியேற் கெனவீழ்ந்தார்.
[11]
பழுது தீர்ப்பார் திருத்தொண்டர்
பரவி விண்ணப் பஞ்செய்து
தொழுது போந்து மடம்புகுந்து
தூய பணிசெய் யப்பெறா
தழுது கங்கு லவர்துயிலக்
கனவி லகில லோகங்கள்
முழுது மளித்த முதல்வனார்
முன்னின் றருளிச் செய்கின்றார்.
[12]
நெஞ்சின் மருவும் கவலையினை
ஒழிநீ நின்கண் விழித்துஅந்த
வஞ்ச அமணர் தங்கள்கண்
மறையு மாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டா வென்றருளி
அவர்பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளின் அரசன்பாற்
தோன்றிக் கனவி லருள் புரிவார்.
[13]
தண்டி நமக்குக் குளங்கல்லக்
கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க
வெகுண்டான் அவன்பால் நீமேவிக்
கொண்ட குறிப்பால் அவன்கருத்தை
முடிப்பா யென்று கொளவருளித்
தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்
தருளி னார்அத் தொழிலுவப்பார்.
[14]
வேந்தன் அதுகண் டப்பொழுதே
விழித்து மெய்யில் மயிர் முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப்
போற்றிப் புலரத் தொண்டர்பால்
சார்ந்து புகுந்த படிவிளம்பத்
தம்பி ரானர் அருள் நினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்பஇது
புகுந்த வண்ணம் இயம்புவார்.
[15]
மன்ன கேள்யான் மழவிடையார்
மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்
துன்னும் அமணர் அங்கணைந்தீ
தறமன் றென்று பலசொல்லிப்
பின்னுங் கயிறு தடவுதற்கியான்
பிணித்த தறிக ளவைவாங்கி
என்னை வலிசெய் தியான்கல்லுங்
கொட்டைப் பறித்தா என்றியம்பி.
[16]
அந்த னான வுனக்கறிவும்
இல்லை யென்றா ரியானதனுக்
கெந்தை பெருமா னருளால்யான்
விழிக்கி லென்செய் வீரென்ன
இந்த வூரில் இருக்கிலோம்
என்றே ஒட்டி னார்இதுமேல்
வந்த வாறு கண்டிந்த
வழக்கை முடிப்ப தெனமொழிந்தார்.
[17]
அருகர் தம்மை அரசனும்அங்
கழைத்துக் கேட்க அதற்கிசைந்தார்
மருவுந் தொண்டர் முன்போக
மன்னன் பின்போய் மலர்வாவி
அருகு நின்று விறல்தண்டி
யடிகள் தம்மை முகநோக்கிப்
பெருகுந் தவத்தீர் கண்ணருளாற்
பெறுமா காட்டும் எனப்பெரியோர்.
[18]
ஏய்ந்த வடிமை சிவனுக்கியான்
என்னில் இன்றென் கண்பெற்று
வேந்த னெதிரே திருவாரூர்
விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்
ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே
யாவ தென்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்தோதி
மணிநீர் வாவி மூழ்கினார்.
[19]
தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்
தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்
பொழுது தெரியா வகையிமையோர்
[20]
தண்டி யடிகள் தம்முடனே
ஒட்டிக் கெட்ட சமண்குண்டர்
அண்டர் போற்றுந் திருவாரூர்
நின்றும் அகன்று போய்க்கழியக்
கண்ட அமணர் தமையெங்கும்
[21]
குழியில் விழுவார் நிலைதளர்வார்
கோலும் இல்லை எனவுரைப்பரார்
வழியீ தென்று தூறடைவார்
மாண்டோம் என்பார் மதிகெட்டீர்
அழியும் பொருளை வழிபட்டுஇங்கு
அழிந்தோம் என்பார் அரசனுக்குப்
பழியீ தாமோ என்றுரைப்பார்
பாய்க ளிழப்பார் பறிதலையர்.
[22]
பீலி தடவிக் காணாது
பெயர்வார் நின்று பேதுறுவார்
காலி னோடு கைமுறியக்
கல்மேல் இடறி வீழ்வார்கள்
சால நெருங்கி எதிரெதிரே
தம்மில் தாமே முட்டிடுவார்
மாலு மனமும் அழிந்தோடி
வழிக ளறியார் மயங்குவார்.
[23]
அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கங் கண்டவர்தாம்
சொன்ன வண்ண மேஅவரை
[24]
மன்னன் வணங்கிப் போயினபின்
மாலு மயனும் அறியாத
பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப்
புரிந்த பணியுங் குறைமுடித்தே
உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும்
[25]
கண்ணின் மணிக ளவையின்றிக்
கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்
[26]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
12.320   மூர்க்க நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநா டதனில் வயல் பரப்பும்
நன்னித் திலவெண் திரைப்பாலி
நதியின் வடபால் நலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
யலர்புக் காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள்
விழவிற் காடு வேற்காடு.
[1]
செம்பொற் புரிசைத் திருவேற்கா
டமர்ந்த செய்ய சடைக்கற்றை
நம்பர்க் கும்பர்க் கமுதளித்து
நஞ்சை யமுது செய்தவருக்
கிம்பர்த் தலத்தில் வழியடிமை
யென்றுங் குன்றா வியல்பில்வரும்
தம்பற் றுடைய நிலைவேளாண்
குலத்தல் தலைமை சார்ந்துள்ளார்.
[2]
கோதின் மரபில் பிறந்துவளர்ந்
தறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின்
அடைவே பொருளென் றறிந்தரனார்
காத லடியார்க் கமுதாக்கி
அமுது செய்யக் கண்டுண்ணும்
நீதி முறைமை வழுவாத
நியதி பூண்ட நிலைமையார்.
[3]
தூய அடிசில் நெய்கன்னல்
சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி
விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர்வேண்டும்
படியால் உதவி அன்புமிக
ஏயு மாறு நாடோறும்
இனைய பணிசெய் தின்புற்றார்.
[4]
இன்ன செயலின் ஒழுகுநாள்
அடியார் மிகவும் எழுந்தருள
முன்ன முடைமை யானபொருள்
முழுதும் மாள அடிமையுடன்
மன்னு காணி யானநிலம்
மற்று முள்ள திறம்விற்றே
அன்னம் அளித்து மேன்மேலும்
ஆரா மனத்தா ராயினார்.
[5]
அங்கண் அவ்வூர் தமக்கொருபற்று
அடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற
இலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கும் வகையால் தாமுன்பு
கற்ற தன்மை நற்சூதால்
பொங்கு பொருளாக் கவுமங்குப்
பொருவா ரின்மை யினிற்போவார்.
[6]
பெற்றம் ஏறிப் பலிக்குவரும்
பெருமான் அமருந் தானங்கள்
உற்றன் அன்பாற் சென்றெய்
உருகு முள்ளத் தொடும்பணிந்து
கற்ற சூதால் நியதியாங்
கடனு முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக்குடந்தை
யடைந்தார் வந்து சிலநாளில்.
[7]
இருளாரும் மணிகண்டர்
அடியார்க்கின் னமுதளிக்கப்
பொருளாயம் எய்துதற்குப்
புகழ்க்குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூதாடி
யுறுபொருள்வென் றனநம்பர்
அருளாக வேகொண்டங்
கமுதுசெய்வித் தின்புறுவார்.
[8]
முற்சூது தாந்தோற்று
முதற்பணையம் அவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும்
வென்றுபெரும் பொருளாக்கிச்
சொற்சூதுதான் மறுத்தாரைச்
சுரிகையுரு விக்குத்தி
நற்சூதர் மூர்க்கரெனும்
பெயர்பெற்றார் நானிலத்தில்.
[9]
சூதினில்வென் றெய்துபொருள்
துரிசற்ற நல்லுணர்வில்
தீதகல அமுதாக்கு
வார்கொள்ளத் தாந்தீண்டார்
காதலுடன் அடியார்கள்
அமுதுசெயக் கடைப்பந்தி
ஏதமிலா வகைதாமும்
அமுதுசெய்தங் கிருக்குநாள்.
[10]
நாதன்தன் அடியார்க்கு
நல்லடிசில் நாடோறும்
ஆதரவி னால்அமுது
செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல
இவ்வுலகை விட்டதற்பின்
பூதங்கள் இசைபாட
வாடுவார் புரம்புக்கார்.
[11]
வல்லார்கள் தமைவென்று
சூதினால் வந்தபொருள்
அல்லாருங் கறைக்கண்டர்
அடியவர்கள் தமக்காக்கும்
நல்லார்நற் சூதராம்
மூர்க்கர்கழல் நாம்வணங்கிச்
சொல்லார்சீர்ச் சோமாசி
மாறர்திறஞ் சொல்லுவாம்.
[12]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
12.330   சோமாசி மாற நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சூதம் பயிலும் பொழில்அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்செற்றவர்க் கன்பர் வந்தால்
பாதம் பணிந்தா ரமுதூட்டுநற் பண்பின் மிக்கார்.
[1]
யாழின் மொழியாள் தனிப்பாகரைப் [2]
எத்தன் மையரா யினும்ஈசனுக் கன்பர் என்றால்
அத்தன் மையர் தாம்நமையாள்பவர் என்று கொள்வார்
சித்தந் தெளியச் சிவன்அஞ்செழுத் தோது வாய்மை
நித்தம் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்.
[3]
சீருந் திருவும் பொலியுந்திரு வாரூர் எய்தி
ஆரந் திகழ்மார்பின் அணுக்கவன் தொண்டர்க் கன்பால்
சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும்பதம் பற்றி யுள்ளார்.
[4]
துன்றும் புலன்ஐந் துடன்ஆறு தொகுத்த குற்றம்
வென்றிங் கிதுநன் னெறிசேரும் விளக்க மென்றே
வன்றொண்டர் பாதந் தொழுதான சிறப்பு வாய்ப்ப
வென்றும் நிலவுஞ் சிவலோகத்தில் இன்ப முற்றார்.
[5]
பணையும் தடமும் புடைசூழும்
ஒற்றி யூரிற் பாகத்தோர்
துணையுந் தாமும் பிரியாதார்
[6]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool